"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 10
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 10
முந்தைய பதிவு இங்கே!
8. "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். [517]
மதுரை ஜங்ஷன்!
கந்தன் வந்த பாஸஞ்ஜர் வண்டி அவனை அங்குதான் இறக்கி விட்டது.
அமைதியான கிராமத்தில் தன்னிச்சையாகத் திரிந்த கந்தனுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.
இவ்வளவு பரபராப்பான ஒரு இடத்தை இதுவரை தன் வாழ்நாளில் கண்டதே இல்லை.
சாமான்களைத் தூக்கிச் செல்லும் போர்ட்டர்களும், எதையெதையோ விற்றுக் கொண்டிருக்கும் ஆட்களும், அடுத்தவரைப் பற்றி சற்றும் லட்சியம் இல்லாமல், இடித்துத் தள்ளிக் கொண்டு, முண்டியடித்து முன்னே செல்லும் மனிதக்கூட்டமும்,நெரிசலும் அவனுக்கு ஒரு பயத்தை உண்டுபண்ணியது.
கைப்பையில் இருந்த பணத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
வயிறு பசித்தது.
ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தான்.
கூட்டம் அதிகமில்லாத ஒரு சின்னக் கடையாகப் பார்த்து நுழைந்தான்.
"வாங்க தம்பி! உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க?" அன்பான குரலில் கடைக்காரர் வரவேற்றார்.
குளித்து, தலைவாரி, நெற்றி நிறைய விபூதி பூசி, பெரிய குங்குமப்பொட்டு வைத்த முகம்.
அடர்த்தியான முறுக்கு மீசை.
வெள்ளை வேட்டி, அரைக்கை கதர்ச் சட்டை.
கல்லாவுக்கு மேலே பிள்ளையாரும் முருகனும் அழகாக இரு பக்கமும் சிரித்திருக்க, நடுவில் மீனாக்ஷி கையில் கிளியோடு அருள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
மேஜை மேல் ஒரு சிறிய அழகான நடராஜர் சிலை.
ரெண்டு இட்லி, ஒரு காப்பி எனச் சொன்னான்.
வட்டமான தட்டில், வாழை இலை அதே அளவுக்கு வெட்டப்பட்டு, அதன் மேல் சூடாக இரண்டு இட்டலியும், சட்னி, சாம்பார் பக்கத்தில் ஊற்றி, அவன் முன்னே வைத்தார்.
'சாப்பிடுங்க தம்பி! காப்பி வருது!' என்றார் சிரித்த முகத்துடன்.
கந்தனுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது, உணவைப் பார்த்ததும்.
இன்னும் கொஞ்ச நாள்ல புதையல் இருக்கற இடத்துக்குப் போயிறலாம். மார்ல தங்க மாலை போட்டிருந்த கிழவர் பொய் சொல்லியிருக்க மாட்டார்என்ற ஒரு நம்பிக்கை மனதில்.
சாப்பிட்டுக் கொண்டே, அவர் சொன்ன நல்ல சகுனம் எதுனாச்சும் தெரிகிறதா எனச் சுற்றுமுற்றும் பார்த்தான்.
"தம்பி ஊருக்குப் புதுசா?" என ஒரு குரல் பின்னாலிருந்து வர, 'ஆகா. சகுனம் போல!' என நினைத்தபடியே குரல் வந்த திசையில்திரும்பினான்.
கட்டம் போட்ட லுங்கியும்,பனியன் தெரிகிற மாதிரி ஒரு மல் ஜிப்பாவும், கழுத்தில் சுற்றிக் கட்டிய ஒரு கர்ச்சீப்புமாய் ஒரு இளைஞன்!
'ஆமாங்க! நாகர்கோயில் பக்கம் ஒரு கிராமம்' என வெள்ளந்தியாகச் சொன்னான், பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்.
'என்ன சோலியா வந்திருக்கீஹ?' எனப் பேச்சைத் தொடர்ந்தான் அந்த இளைஞன்.
'சென்னைக்குப் போகணும். அதுக்கு முன்னால கொஞ்சம் சாப்பிட்டுட்டு போலாமேன்னு வெளிய வந்தேன். மத்தியானத்துக்கு மேலதான் வண்டியாம்' என அவனிடம் சொல்ல ஆரம்பித்தவன், உடனே சற்று உஷாராகி, புதையலைப் பற்றி இவனிடம் சொல்ல வேண்டாம்னுமுடிவு செய்தான்.
'சொன்னா, இவனும் அதுல பங்கு கேப்பான். இல்லாத ஒண்ணுல பங்கு தராதேன்னு அந்தப் பெரியவர் வேற சொல்லியிருக்காரு.' என எண்ணி, தன் புத்திசாலித்தனத்தை தனக்குள்ளேயே மெச்சிக் கொண்டான்.
'எப்படி அங்கே போவணும்னு உனக்குத் தெரியுமா?' என அந்த இளைஞன் வினவினான்.
'ரெயில்ல ஏறினா, கொண்டு போயி விடப் போறான். இதுல தெரிய என்ன இருக்கு?' என அவனை மடக்கினான் கந்தன்!
'அதெல்லாம் சரித்தான்! அங்கன எறங்கி, பொறவால எங்க போவணும்னு தெரியுமா?' என பதிலுக்கு அவனை மடக்கினான் இளைஞன்.
கந்தனுக்கு குழப்பம் வர ஆரம்பித்தது.
'இவன் சொல்றதும் சரியாத்தான் இருக்கு. மெட்ராஸ் பக்கத்துல இருக்குன்னு தெரியுமே தவிர, மஹாபலிபுரத்துக்கு எப்படிப் போவணும்னு தெரியாதே!'என எண்ணியவன், அந்த இளைஞனைப் பரிதாபமாகப் பார்த்தான்.
இவர்கள் பேசிக்கொள்வதை ஓட்டல்காரர் கவனிக்க ஆரம்பித்தார்!
'சென்னை இங்கேருந்து முன்னூறு மைல் தொலவுல இருக்கு. அது இந்த ஊரைப் போல பத்து பங்கு பெருசு! அதுல நீ போக வேண்டிய எடம் எங்கே இருக்கோ? அங்கே ஆளுங்கள்லாம் ரொம்ப மோசமானவனுக! ஒன்னைப் போல அறியாப்புள்ளைங்களை சுளுவா ஏமாத்திருனுவாங்க!காசு வேற நெறைய செலவளியும். பணம் எம்புட்டு வெச்சிருக்கே?' என்றான் இளைஞன்.
சட்டென இப்படி ஒருகேள்வி வந்ததும், கந்தன் கொஞ்சம் தயங்கினான்.
.......'நீ எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்.".......
கிழவரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது கந்தனுக்கு.
பையில் இருந்த பணத்தை எடுத்துக் காட்டினான் அந்த இளைஞனிடம்.
ஓட்டல்காரரும் எட்டிப் பார்த்தார் அதை!
'எலே! இங்கே வா நீ!' என அந்த இளைஞனை அழைத்தார்.
அவனிடம் தணிந்த குரலில், ஆனால், சூடாக எதுவோ பேசினார்.
இளைஞன் திரும்பி வந்தான்.
'இந்தாளு சுத்த மோசம். நம்மள சந்தேகப்படறாரு. நாம போவலாம் வா' என்றான்.
கந்தனுக்கு நிம்மதியாயிருந்தது.
எழுந்தான்.
பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு கிளம்புகையில்,'அவனை நம்பாதே! நல்லவனில்ல அவன்' என்றார் ஓட்டல்காரர்.
[தொடரும்]
*************************
அடுத்த அத்தியாயம்
33 பின்னூட்டங்கள்:
சென்னையில் கந்தன் மயிலை மன்னாரை சந்திப்பாரா?
ஒவ்வொரு நாள் "குறளுடன்" வருதே! அதான் சந்தேகம்.
இது வரை நல்லவர்களை மட்டுமே பார்த்து வந்த கந்தனுக்கு இப்பொழுதுதான் நிஜ உலகின் தரிசனம் போல! நடக்கட்டும்!!
குறளையும் இதில் சம்பந்தப்படுத்திச் சொல்லலமே என்ற ஒரு ஆசையில்தான் அப்படி வருகிறது, திரு. குமார்!
:))
//கந்தனுக்கு இப்பொழுதுதான் நிஜ உலகின் தரிசனம் போல! //
எல்லாரும் ஒருநாள் சந்தித்துத்தானே ஆகணும், கொத்ஸ்!!
முருகா,
கந்தனைக் காப்பாத்து.
ரொம்ப சஸ்பென்சா இருக்கே சார்.
ஆனால் இதுதான் யதார்த்தம்னு நினைக்கிறேன்.
தொடருங்கள்.
கந்தனைக் கந்தன் காப்பாத்துவாரா?
என்ன நடக்குதுன்னு பார்க்கலாம், வல்லியம்மா!
:)
வருகைக்கு நன்றி..
கதை எந்த வருஷத்துல நடக்குதுன்னு ஏக்கயாவது சொல்லியிரூக்கீங்களா?
கழுத்துல கர்ச்சீப் கட்டி கொத்ஸ் கெட்டப்ல இருக்கரதெல்லாம் பழே காலம்மாச்சே ;)
இப்ப ஏமாத்தரவங்க டிப்-டாப்பா இருப்பாங்க்ய.
கந்தன் இம்புட்டு வெள்ளேந்தியா ....
//கழுத்துல கர்ச்சீப் கட்டி கொத்ஸ் கெட்டப்ல இருக்கரதெல்லாம் பழே காலம்மாச்சே ;)//
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட கொத்ஸ் கெட்டப்பில் ஆட்களை மதுரையில் பார்த்திருக்கிறேன், சர்வேசன்.
விஜய் டிவியில் வரும் 'மதுரை' தொடரில் கூட இப்படிப்பட்ட அட்களைக் காட்டுகின்றனர்.
ஒரு சின்ன தத்துவம் சொல்லட்டுமா!
இந்த உலகின் பெருமையே, எந்த ஒரு கால கட்டத்திலும், எல்லா தரப்பு மக்களையும் நாம் காண முடியும் என்பதே!
இந்த நிமிஷம் இந்த உலகை ஃப்ரீஸ் பண்ணிப் பார்த்தா இது புரியும்!
இரண்டாம் வகுப்புப் பெட்டியில் கந்தன் பயணித்ததாகவும் எழுதியிருக்கிறேன்.
எனவே, ஒரு 15 - 20 ஆண்டுகளுக்கு முன் எனக் கொள்வோமா?
:))
நன்றி.
//கந்தன் இம்புட்டு வெள்ளேந்தியா ....//
ஆமுங்கோ நாகைப்புலி!
தென்கோடி மாவட்டத்தில், ஒரு ஒதுக்குப்புற கிராமத்தில், இருந்த ஒரே ஆத்தாவும் போனபின்னர், தனியே, தானுண்டு, தன் ஆடுகள் உண்டு என வாழ்ந்தவனுக்கு சூது வாது தெரியாது!
அத்தியாயம் எட்டிலிருந்து:
//மெட்ராஸுக்குப் போவ எப்ப ரெயிலு?"
"இங்கேருந்து நேராப் போக முடியாது. ஒரு ரயில் பிடிச்சு ராமேஸ்வரம் போகணும். அங்கே போற அடுத்த ரயில் வர்ற நேரந்தான். பத்து ரூபா பணத்தை எடு." என்றார்.//
அத்தியாயம் பத்திலிருந்து;
\\'ஆமாங்க! நாகர்கோயில் பக்கம் ஒரு கிராமம்' என வெள்ளந்தியாகச் சொன்னான், பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்.\\
நாகர்கோயில் பக்கத்துலேந்து ராமேஸ்வரத்துக்கு போய் அங்கேந்து எதுக்கு சென்னைக்கு போகணும்.
ஒண்ணுமே புரியலையே. கந்தனும் வெள்ளந்திப்பயலாத்தான் இருக்கான். ஆரம்பத்திலயே யாராவது ஏமாத்திப்புட்டாங்களோ?
அது சரி எங்கேந்து கிளம்பினா என்ன போகவேண்டிய இடம் தான் முக்கியம்.
-சத்தியா
கையிலிருக்குற பணமும் போயாகணும்!
இல்லாட்டி அதுவரைக்கும் பணத்து மேல பற்று இருக்கும்!
எதை எதை எப்படி பிடுங்குறது என்பதை ஆண்டவன் பார்த்துக்குவான்!
தன்னோட அணைச்சிக்கணும்னு ஆண்டவன் நினைச்சிட்டா ஒருத்தர்கிட்டே இருக்குற எல்லாத்தையும் பிடுங்கிட்டு நிராதரவா நிக்க வெச்சி "ஆண்டவா! இனிமே நீதான் எனக்கு எல்லாமும்"னு சரணடைய வைப்பான்!
அப்படித்தான் கதை போகுதுன்னு நினைக்கிறேன்!
//எதை எதை எப்படி பிடுங்குறது என்பதை ஆண்டவன் பார்த்துக்குவான்!//
அப்படிச் சொல்வதைவிட, போவதும், வருவதும் உலக இயல்பு எனப் புரியவைக்கவும் இருக்கலாமில்லையா, சிபியாரே!
ஞானம் வரணும்னா சிலதை இழக்கவும், சிலதைப் பெறவும் தயாராத்தான் இருக்கணும்1
நன்றி.
குறிப்பு: கவனிக்கவும்! ஞானம் பற்றித்தான் பேச்சு. ஆண்டவனை அல்ல!]
மதுரைல எறங்குனானே...அங்க ஜங்சன் பக்கத்துல பிரேம விலாஸ் கடைல அல்வா வாங்கித் தின்னிருக்கலாமே. ஓ அது சாந்தரந்தான கெடைக்கும். மதுரை சாப்பாட்டுக்குக் கவலையே இல்ல. நல்ல சாப்பாடு நெறைய எடத்துல கெடைக்கும்.
//ஞானம் வரணும்னா சிலதை இழக்கவும், சிலதைப் பெறவும் தயாராத்தான் இருக்கணும்1//
:)
ஞானம் கூட செலவு செஞ்சாத்தான் கிடைக்கும்னு சொல்றீங்க!
//மதுரைல எறங்குனானே...அங்க ஜங்சன் பக்கத்துல பிரேம விலாஸ் கடைல அல்வா வாங்கித் தின்னிருக்கலாமே. ஓ அது சாந்தரந்தான கெடைக்கும். மதுரை சாப்பாட்டுக்குக் கவலையே இல்ல. நல்ல சாப்பாடு நெறைய எடத்துல கெடைக்கும்.//
பிரேமவிலாஸ் அல்வா நானும் சுவைத்திருக்கிறேன்.
பக்கத்துலியே மங்கம்மா சத்திரம் கூட இருக்கு!
போய் தங்கியிருக்கலாம்!
ஓ! அவந்தான் தங்கறதுக்கு வரலியே!
:)
நன்றி, ஜி.ரா.
சரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா?
//குறிப்பு: கவனிக்கவும்! ஞானம் பற்றித்தான் பேச்சு. ஆண்டவனை அல்ல!]//
இதை ஏன் தனியாச் சொன்னீங்கன்னு தெரியலையே!
ஞானம் என்பது ஆண்டவனை அடையும் வழின்னு சில பேர் சொல்றாங்க!
தன்னை உணர்வதே ஞானம்! ஏனென்றால் கடவுள்/ஆண்டவன் வெளியில் கிடையாது. நமக்குள்ள இருக்கிற ஆத்மாதான் கடவுள்/ஆண்டவன் னும் சிலபேர் சொல்றாங்க!
ஆண்டவன் - தன்னை அடக்கி ஆட்சி செய்தவன்! (ஆள்பவன்)
எவனொருவன் தன்னை அடக்கி ஆளத் தெரிந்திருக்கிரானோ அவனே ஆண்டவனாகவும் ஆகிறான்
- அப்படின்னு பித்ஸ் வேற சொல்றாரு!
ஞானம் - ஆண்டவனை முழுமையாக உணர்தல். அவனை முழுமையா உணரணும்னா முழுசா அவன் பக்கத்துல போயி, அவனோடவே இருந்தாதான முடியும்!
:)
//சரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா?//
அதை நீங்க கதைல சொல்லலையே!
நல்ல சஸ்பென்ஸ்!
(இது சும்மா..லுலூங்காட்டி)
/சரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா?//
முதல்ல எடுத்தானானு பார்க்கிறேன்!
எங்க கந்தன்! எங்க கந்தன்!
//அப்படிச் சொல்வதைவிட, போவதும், வருவதும் உலக இயல்பு எனப் புரியவைக்கவும் இருக்கலாமில்லையா, சிபியாரே!//
இயல்புதான்!
அப்புறம் எதுக்கு காவல் துறைன்னு ஒரு டிபார்ட்மெண்டு?
பிராக்டிகல் லைஃப்ல இந்த ஃபிலாசபி இடிக்குதே!
கன்யாகுமரி எக்ஸ்ப்ரெஸ் வரும்வரை 'ரயில் ஓடாமாவட்டம்' என ஒரு பெருமை நாகர்கோயிலுக்கு இருந்தது.
அது ஒரு காரணம்.
நாகர்கோயில் பக்கம் எனத்தான் முதலில் ஆரம்பித்தேன்.
முட்டம் ராமேஸ்வரம் பக்க்கம் இருப்பதால் ராமேஸ்வரம்போய் என மாற்றினேன்.
சுட்டியமைக்கு நன்றி, சத்தியா.
வேண்டுமானால், இதிலும் அப்படியே திருத்தி விடுகிறேன்.
:))
//ஞானம் - ஆண்டவனை முழுமையாக உணர்தல். அவனை முழுமையா உணரணும்னா முழுசா அவன் பக்கத்துல போயி, அவனோடவே இருந்தாதான முடியும்!//
தன்னை உணர்ந்தாலே ஞ்ஜனம் வந்தாலே பின்னர் ஆண்டவன்கூடத் தேவைப்பட மாட்டான்.
ஆன்மீகம் என்றவுடன், இது கடவுள் பற்றிய கதையோ என இருப்பவர்க்காக அப்படி சொன்னேன், சிபியாரே!
சிபியார், டி.டி.ஆர். கேட்ட டிக்கட் பற்றிய கேள்விக்கு ஜி.ரா.வுக்குச் சொன்ன பதிலில் இருக்கிறதே!
ஆடு வித்த பணம்!
:))
ராசாகிட்ட கொடுத்தது மூணுதான். மிச்சத்தை உறவினன் ஒருத்தன் விலைக்கு வாங்கிட்டுப் போனதா சொல்லியிருக்கேனே!
:))
//அப்புறம் எதுக்கு காவல் துறைன்னு ஒரு டிபார்ட்மெண்டு?
பிராக்டிகல் லைஃப்ல இந்த ஃபிலாசபி இடிக்குதே!//
தனி மனிதத் தேடலில் வரும் இழப்புகளையும், பொதுவாழ்வில் இழப்பவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள், சிபியாரே!
//தனி மனிதத் தேடலில் வரும் இழப்புகளையும், பொதுவாழ்வில் இழப்பவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள், சிபியாரே!//
ஓஹோ!
அப்போ மார்க்கெட்டுக்குப் போறப்போ ஒருத்தன் பணப் பையை பறிச்சிகிட்டு ஓடுறதும், அதே கோவிலுக்குப் போறப்போ பறிச்சிகிட்டு ஓடுறதும் வேற வேறன்னு சொல்கிறீர்களா?
:)
ஒருத்தர் கையில பணதோட வங்கிக்குப் போறார். அப்ப பணம் திருடப் படுது. அதுக்கு போலீஸ் வேணும்.
இன்னொருத்தர் காணாம போன பையனைத்(தனி மனிதத் தேடல் !?) தேடிட்டுப் போறார். அப்ப அவரோட
பணம் காணாம போகுது! இதை அவரு இயல்புன்னு விட்டுடணுமா?
தனிமனிதத் தேடல் என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.
அல்லது நான் சரியாக விளக்கவில்லை என நினைக்கிறேன், சிபியாரே!.
தனி ஒரு மனிதன் தன் லட்சியத்தை நோக்கிப் பயனிக்கையில், இடையில் சில இழப்புகளும், வரவுகளும் வரலாம் எனவே சொல்லுகிறேன்.
ஒருவனது மன உறுதியைச் சோதிக்க இதுபோன்ற சில நிகழ்வுகள் நடக்கலாம் எனவே சொல்லப் புகுந்தேன்.
நீங்கள் சொல்லும் நிகழ்வு ஒரு திருட்டு. தொலைத்தவனுக்கு இதுவும் ஒரு இழப்புதான் என்ன்றாலும், கந்தனுக்கு வருவதுபோல், ஒரு சோதனை அல்ல.
தொடர்ந்து படியுங்கள்!
காணாமல் போன பையனைத் தேடிக் கொண்டு போகையில், இந்த இழப்பினை அவர் பொருட்படுத்த மாட்டார்.
எப்படியாவது பையனைக் கண்டுபிடிக்கணுமே எனவே சிந்திப்பார்.
போலீஸிடம் போகலாம் என்ற அளவிற்கு இந்தத் தந்தைக்குத் தெரிந்த விஷயம், ஒரு அப்பாவிச் சிறுவனுக்குத் தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது.
தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கும்.
//தன்னை உணர்ந்தாலே ஞ்ஜனம் வந்தாலே பின்னர் ஆண்டவன்கூடத் தேவைப்பட மாட்டான்.//
நாத்திகர் ஆகிவிடுவார்களா ?
//நாத்திகர் ஆகிவிடுவார்களா ?//
அப்படி இல்லீங்க அனானியாரே!
தான் வேறு ஆண்டவன் வேறு என உணர மாட்டார்கள்.
ஆண்டவன் என்பதன் பொருள் விளங்கிவிடும் அவர்களுக்கு.
நன்றி.
தொடர், அதன் பின்னூட்டங்களும் அருமையோ அருமை.
தொடரும், தொடரின் பின்னூட்டங்களும் சரியான வழியில் சென்று கொண்டிருக்கின்றன. வாசகர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் படிக்கிறார்கள். ஐயங்களை எழுப்புகிறார்கள். ஆசிரியரும் சிறப்பாக, பொறுமையாக, பதில் அளிக்கிறார்.
நன்று ! நன்று !!
//தொடர், அதன் பின்னூட்டங்களும் அருமையோ அருமை. //
//தொடரும், தொடரின் பின்னூட்டங்களும் சரியான வழியில் சென்று கொண்டிருக்கின்றன. வாசகர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் படிக்கிறார்கள். ஐயங்களை எழுப்புகிறார்கள். ஆசிரியரும் சிறப்பாக, பொறுமையாக, பதில் அளிக்கிறார். //
பொறுப்பான பின்னூட்டங்கள் அளிக்கும் உங்களனைவருக்கும்தான் இதில் முழுப்பெருமையும்.
மிக்க நன்றி, திரு. ம. சிவா, திரு. சீனா.
Post a Comment