Sunday, August 26, 2007

"ஈக்களின் வழக்கு"

[காற்றின் வேகம் தாளாமல் பறந்திடும் பறவை]


"ஈக்களின் வழக்கு"


மன்னவன் முன்னால் முறையிட்டு நின்றன
முறையீட்டு மணியைப் பலமாக அடித்தன
ஈக்கள் வந்து மணியடிப்பதைப் பார்த்து
அதிசயத்தில் ஆழ்ந்தான் மன்னவனும்!

'அருந்தகை அரசே அடியவர்க்கெளியவா
எவர்க்கென்ன குறையெனினும் தீர்ப்பவா
சிறியவர்க்கும் துணை வருபவா
எமைவிடவும் எளியார் இங்குண்டோ
இன்றோ நாளையோ எனவிருப்போர் யாம்
எமையொருவர் வருத்துகின்றார்
எங்களைக் காத்தருள்வாய்' என்ற ஈக்களை
இரக்கத்துடன் பார்த்தான் மன்னவனும்!

"யாரும்மைத் துன்புறுத்தியது?
எவருமக்குத் தீங்கிழைத்தது?
தண்டிக்காமல் விடமாட்டேன்"
சினத்துடன் கேட்டான் மன்னவனும்!

"காற்றின் மீதே எம் வழக்கு
எமை அலைக்கழிப்பதே அவர் செய்கை
நிலைகொள்ள விடாமல் துரத்துகிறார்"
என்றவரைப் பார்த்து சொன்னான் மன்னவனும்!

"நும் சொல்லில் பொருளுளது
உம் வேதனை புரிகின்றது என்றாலும்
அடுத்தவர் தரப்பின் நியாயத்தைக்
கேளாமல் தீர்ர்ப்பளிக்க ஒப்பாது என் மனமும்
காற்றின் கருத்தினையும் கேட்டிடுவோம்"
எனவுரைத்தான் மன்னவனும்!

"அப்படியே ஆகட்டும்" என்றிட்டார் ஈக்களும்
'கூப்பிடுங்கள் பருவக்காற்றை
இப்போதே வரச் சொல்லுங்கள்'
ஆணையிட்டான் மன்னவனும்!

ஆணையின்னும் செல்லவில்லை
அதற்குள் சுழன்றது ஊழிக்காற்று
பேரிரைச்சலோடு விரைந்து வந்தது
தாங்காமல் திகைத்திட்டான் மன்னவனும்!

சட்டெனத் திரும்பிப் பார்த்தான்
'சொல்லுங்கள் உங்கள் வழக்கை'
ஈக்களை அங்கே காணவில்லை
சிரித்திட்டான் மன்னவனும்!


இதுபோல்தான் இறைமறுப்பாளரும்
இறைமாட்சி எதிர்வருகையில்
காணாமல் போய்விடுவார்
அதுவரையில் குறைசொல்வார்
மாமன்னன் வரும் போதோ
மறைந்தே போய்விடுவார்!

[ரூமியின் ஒரு கவிதையைத் தழுவி!]

8 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Sunday, August 26, 2007 10:25:00 PM  

//இதுபோல்தான் இறைமறுப்பாளரும்
இறைமாட்சி எதிர்வருகையில்
காணாமல் போய்விடுவார்
அதுவரையில் குறைசொல்வார்
மாமன்னன் வரும் போதோ
மறைந்தே போய்விடுவார்!//

வீஎஸ்கே ஐயா,

இறைவனின் பெயரால் மோசடி, பஞ்சமா பாதகங்கள் செய்யும் கொலைகாரர்களெல்லாம், இறைவன் முன்பு வந்தால் அப்படியே நிற்பாங்களா ? இல்லை இறைவனையே தூக்கி சாப்பிடுவாங்களா ?

இறைமறுப்பாளன் கேடுகளை செய்தால் அதை இறைவனின் பெயரால் செய்ய மாட்டான் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

VSK Sunday, August 26, 2007 10:47:00 PM  

இப்படி ஒரு பின்னூட்டம் முதலாவதாக வரும் என நிச்சயமாக நம்பினேன்!

அதைப் பொய்யாக்காமல் உங்களது அரைவேக்காட்டுத்தனத்தைக் காண்பித்ததற்கு மிக்க நன்றி, கோவியாரே!

இறைமாட்சியை நம்பாது, அதனைக் குறை கூறும் எவருமே... அவர் இறைமறுப்பாளர்தாம் எனப் புரியாமல் உங்களுக்குப் போனதில் எனக்கு வியப்பே இல்லை!

:)

கோவி.கண்ணன் Sunday, August 26, 2007 10:58:00 PM  

//VSK said...
இப்படி ஒரு பின்னூட்டம் முதலாவதாக வரும் என நிச்சயமாக நம்பினேன்!

//

வீஎஸ்கே ஐயா,

உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றியதற்காக பாராட்டி இருக்கலாமே.

நாத்திகன் இறைமறுப்பாளன் என்பதை விட ஆத்திகர் செய்த இறைகோட்பாடுகளைதான் மறுப்பவன்.
நான் சொன்னதும் உங்களுக்கு புரியாமல் போனது வியப்பில்லை.

பின்னூட்டத்திற்கு மறுமொழிந்ததற்கு நன்றி !

இன்னிக்கு பதிவை ஹிட் பண்ணிடுவோமா ?
:))))

Unknown Sunday, August 26, 2007 11:02:00 PM  

தமிழும் ஆன்மிகமும் துள்ளி விளையாடும் அருமையான கவிதை

நன்றி

VSK Sunday, August 26, 2007 11:07:00 PM  

இறைமறுப்பாளன் என்பதற்கு புது விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி, கோவியாரே!

நாத்திகன் என்பவர் யார் என்பதற்கு நீங்கள் இட்ட விளக்கம் உங்கள் அறியாமையையே காட்டுகிறது!

மிக்க நன்றி.

VSK Sunday, August 26, 2007 11:11:00 PM  

தமிழும், ஆன்மீகமும் ஒன்றறக் கலந்தது என்பதை உங்களது அருமையான பின்னூட்டத்தின் மூலம் அற்புதமாகச் சொல்லாமல் சொல்லியதற்கு மிக்க நன்றி,செல்வன்!

அன்புத்தோழி Tuesday, August 28, 2007 5:11:00 PM  

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இறைவன் பெயரைச் சொல்லி தவறு செய்வார்கள். ஆகவே இவன் நிச்சயமாக ஆத்திகன் இல்லை. இறைவன் இல்லை என சொன்னாலும், அவன் தவறு செய்ய பயந்தாலோ அல்லது தயங்கினாலோ, அவன் கடவுளுக்கும், மனசாட்சிக்கும் தன்னை அறிந்தோ அல்லது அறியாமலோ உட்பட்டவன் ஆவான்.ஆகவே அவன் நாத்திகனும் இல்லை. ஆகவே கடவுளை அவர்கள் எண்ணம் வெருத்தாலும், அவர்கள் உள்ளம் கடவுளை நம்பும், என்பது என் கருத்து.

ஆக ஆத்திகர்களிலும் சரி, நாத்திகர்களிலும் சரி நல்லவர்களும் கெட்டவர்களும் இருபட்சத்திலுமே இருக்கிறார்கள்.

VSK Wednesday, August 29, 2007 7:59:00 AM  

கலக்கறீங்களே, அன்புத்தோழி!

மிக அருமையான கருத்து விளக்கம்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP