Sunday, August 19, 2007

"இயலாமை எனக்கில்லை"


"இயலாமை எனக்கில்லை"

உலகமெனும் மேடை இதில்
ஒவ்வொருநாளும் நடிப்பதே
வாழ்வெனப்போனபின்னர்
நான் நானென்பதை மறந்து
என் பாத்திரம் எதுவெனவுணராமல்
என்னை மட்டுமே நினைத்து
நடிக்கத் தொடங்கினால்
வழுக்கி மட்டும் போக மாட்டேன்
கல்லெறியும் கூடவே கிடைக்கும்

நேற்றைய நாடகத்தில் நானே ராஜா
கைப்பற்றிய ராணி தவிரவும்
எனைப்பற்றிய பெண்டிரும் அங்கிருந்தார்
இன்றோ எனக்குப் பிச்சைக்காரன் வேடம்
நேற்றைய நினைப்பில் நான் நடித்தால்
இன்றும் கல்லெறி நிச்சயமே.

பிரபஞ்சமெனும் ஒரு கோட்டில்
பலகோளுக்கு நடுவே நானும்
ஒரு புள்ளியாய் பால்வெளியில்
மிதக்கின்ற வேளையினில்
பரமன் ஆட்டிவிட்ட பம்பரம்போல்
புள்ளிகளில் புள்ளியாய்
சுவாசத்தில் சுவாசமாய்
பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும்
வயதான ஓநாயாய் என் நினைவுகள்
இன்னமும் சென்றதையே எண்ணி இன்றும்
புண்ணாகிப் போன புண்ணாக்கு நிகழ்வுகளை
எண்ணியே இன்று இன்றைய சுகங்களைத்
தொலைத்தலைந்து புலம்புகிறேன்

எனைத் தாங்க எவர் வருவார் என நானும்
உனைக் கேட்டே வாழ்கின்றேன்
எனை நானே நம்பாத போது
எனைக்காக்க நீ வருவாயென
உனை நினைத்து நான் வாழுவதும்
கனியிருப்பக் காய் கவருவது போலவேயென
இன்னும் எனக்குப் புரியாததேனோ!

எனது முட்கள் நானே ஏற்றவை
நானே சூடிக் கொண்டவை
பிடித்தோ பிடிக்காமலோ
விரும்பியோ விரும்பாமலோ
சம்மதமின்றியோ சம்மதித்தோ
அந்தரங்கங்களே அந்தரத்தில் இன்று
தொந்தரவாய் ஆடுது என் முன்னே
இதிலே சுயமென்ன அசலென்ன

பிறக்குமுன்னமேயே சொல்லிவிட்டான்
ஆழ்கடலில் நீந்தித்தான் வெளிவருவாயென
தாயின் கருவில் ஒருகடலில் இருந்தேன்
வாயின் வழியே வந்தவுடன் ஓர் புதுக்கடல்
எவராலும் ஆளப்பட்ட இளமைக்காலம் ஒரு கடல்
இடையிலே சிலகாலம் காதலெனும் தீவினிலே
மீண்டும் என் வாழ்வை முடிவெடுக்க படிப்புக் கடலில்
சம்சார சாகரத்தில் மூழ்கி பல கடமைகள் ஆற்றி
இக்கடலினின்று மீண்டு பேரின்பக் கடல் நோக்கி
இப்போது செய்கின்றேன் என் பயணம்

இதற்கிடையில், என் இதயம்
நிற்கும் போது நிற்கட்டும்
என்றும் தொடரும் என் பயணம்
மூச்சிருப்பதும் நிற்பதுவும்
என்கையில் இருக்குதடா
உன்னைக் கேட்டா முடிவெடுப்பேன்
எனக்கில்லை இயலாமை!

9 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Sunday, August 19, 2007 11:55:00 PM  

//பிறக்குமுன்னமேயே சொல்லிவிட்டான்
ஆழ்கடலில் நீந்தித்தான் வெளிவருவாயென
தாயின் கருவில் ஒருகடலில் இருந்தேன்
வாயின் வழியே வந்தவுடன் ஓர் புதுக்கடல்
எவராலும் ஆளப்பட்ட இளமைக்காலம் ஒரு கடல்
இடையிலே சிலகாலம் காதலெனும் தீவினிலே
மீண்டும் என் வாழ்வை முடிவெடுக்க படிப்புக் கடலில்
சம்சார சாகரத்தில் மூழ்கி பல கடமைகள் ஆற்றி
இக்கடலினின்று மீண்டு பேரின்பக் கடல் நோக்கி
இப்போது செய்கின்றேன் என் பயணம்
//

எனதருமை எஸ்கே ஐயா,

'வாழ்கை வாழ்வதற்கே' என்று அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
பிறந்தது எதற்கென்று தெரியாது வாழ்வது நம்கையில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது உங்கள் கவிதை.

ஐயா நீர் ...வாழ்க என்றும் நலமுடன் !

VSK Monday, August 20, 2007 12:01:00 AM  

எனக்கும் மிகவும் பிடித்த வரிகளை எடுத்து அதனைப் பாராட்டிய உங்களுக்கு என் நன்றி, கோவியாரே!!

SurveySan Monday, August 20, 2007 2:07:00 AM  

நல்ல கவிதை.

what is the context? சும்மா அதா வருதுன்னு எழுதிட்டீங்களா?
:)

btw, இங்க எங்க ஊரு லைப்ரரீல 'launch of thiruvasagam' DVD கண்ணுல பட்டுது. உடனே வாங்கி பாத்தேன். அட்டையில உங்க பேர பாத்ததும், புல்லரிச்சு போச்சு டாக்! :)

ஆனா, DVD black&whiteலு தெரிஞ்சது. ஏதோ டீகோடர் ப்ரச்சனை போலருக்கு.

ராஜாவோட சுத்தின நிகழ்வெல்லாம் பதிவா போடலியா? லிங்க் தாங்களேன்.

நன்றி!

VSK Monday, August 20, 2007 7:17:00 PM  

அதெல்லாம் தானா எப்படீங்க வரும்?

ஒரு சிசுவேஷனை வெச்சித்தான்.

அதை விலாவாரியா இங்க சொல்ல முடியாதுங்க, சர்வேசன்!

திருவாசகம் பற்றிய உங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி.

இதை ஒரு தொடராக எண்ணி, வெகுநாட்களாக ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

விரைவில் எழுதுகிறேன்.

:)

VSK Monday, August 20, 2007 8:34:00 PM  

அதெல்லாம் தானா எப்படீங்க வரும்?

ஒரு சிசுவேஷனை வெச்சித்தான்.

அதை விலாவாரியா இங்க சொல்ல முடியாதுங்க, சர்வேசன்!

திருவாசகம் பற்றிய உங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி.

இதை ஒரு தொடராக எண்ணி, வெகுநாட்களாக ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

விரைவில் எழுதுகிறேன்.

கோவி.கண்ணன் Tuesday, August 21, 2007 10:57:00 PM  

கவிதையின் படம் 'அமைதியாக' அழாகாக இருக்கு கவிதையைப் போலவே,

மீண்டும் ஒரு பாராட்டு !

VSK Tuesday, August 21, 2007 11:01:00 PM  

மனம் திறந்து, நட்சத்திர அலுவல்களுக்கிடையேயும் மீண்டும் வந்து பாராட்டிய நல்ல உள்ளத்துக்கு நன்றி, கோவியாரே!

அன்புத்தோழி Thursday, August 23, 2007 4:56:00 PM  

//பிரபஞ்சமெனும் ஒரு கோட்டில்
பலகோளுக்கு நடுவே நானும்
ஒரு புள்ளியாய் பால்வெளியில்
மிதக்கின்ற வேளையினில்
பரமன் ஆட்டிவிட்ட பம்பரம்போல்
புள்ளிகளில் புள்ளியாய்
சுவாசத்தில் சுவாசமாய்
பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும்
வயதான ஓநாயாய் என் நினைவுகள்
இன்னமும் சென்றதையே எண்ணி இன்றும்
புண்ணாகிப் போன புண்ணாக்கு நிகழ்வுகளை
எண்ணியே இன்று இன்றைய சுகங்களைத்
தொலைத்தலைந்து புலம்புகிறேன்//

என் விஷயத்தில் இவை நூற்றுக்கு நூறு உண்மை. ஆட்டோகிராப் படம் போல், நமது ஆழ்மனதில் என்றுமே பழைய ஞாபகங்களுக்கு நிறைய இடம் உண்டு. மறப்பதேது. பின் புலம்ப வேண்டியது தான்.

VSK Thursday, August 23, 2007 10:08:00 PM  

அவரவர்க்குப் பிடித்த வரிகளை எடுத்துப் பாராட்டுகையில், இந்த வரிகள் உங்களுக்குப் பிடித்தது குறித்து மிகவும் மகிழ்கிறேன்.

இதை எழுதத்தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது.

மிக்க நன்றி, அன்புத்தோழியே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP