Thursday, August 16, 2007

"ஆடி வெள்ளி தேடி உன்னை"


"ஆடி வெள்ளி தேடி உன்னை"



இன்று ஆடி கடைசி வெள்ளி!

அம்மனுக்கு மிகவும் உகந்த நாள்!

இந்த நன்நாளில், கிடைத்தற்கரிதான, படித்தாலே எல்லா நலன்களும் நல்கும் "பாலா திரிபுரசுந்தரி கவசம்" என்னும் பாசுரத்தை இங்கு பதிகிறேன்.

அனைவரும் படித்து அன்னையின் அருளடைய வேண்டுகிறேன்.

[ஒரு சின்ன தகவல். இதை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய 'கந்தகுரு கவசம்' ராகத்தில் பாடிப் பாருங்கள்! மிகச் சரியாக வரும்!]

நேரமிருப்பின், "மாரியம்மன் தாலாட்டையும்" ஒருமுறை படிக்கலாமே!!


பாலா கவசம்



கணபதி துணை




ஓம்கார கணபதி ரீங்கார கணபதி

உன் பாதம் நாடுகின்றேன்

உன்னருள் துணையாலே என்னவள் கவசத்தை

உளமுருகிப் பாடுகின்றேன்

தீங்கேதும் வாராது நீங்காத துணையாக

தும்பிக்கை வேண்டுகின்றேன்

தேனான சுவையோடு தெய்வீக ஒளியோடு

தெய்வமே ஆண்டருள்வாய்.



பாங்கான தெய்வம் பாலா திரிபுர

சுந்தரி திருக்கவசமே

பாலோடு தேனாக பாகோடு தானாக

செய்வதும் நினது வசமே

ஏங்காத நிலையருள் ஏத்திடும் வரமருள்

எந்நாளும் காத்திருப்பாய்

ஏழையேன் என்னுடை அன்பினை வைக்கிறேன்

ஹ்ருதயத்தில் பூத்திருப்பாய்.



கவசம்



அன்னையாம் பாலாதிரிபுரசுந்தரி

அருள்தனை நீ பாடுவாய்

அன்னையைத் தேடுவாய் அன்னையைத் தேடுவாய்

அன்போடு நீ தேடுவாய்

அன்னையை நாடுவாய் அன்னையை நாடுவாய்

அவள் பாதம் நீ நாடுவாய்

அன்னையின் அருகினில் ஆடுவாய் ஆடுவாய்

ஆனந்தமாய் ஆடுவாய்



பாலா எனச் சொல்லு பாலா எனச் சொல்லு

பவவினை யாவும் தள்ளு

பாலா எனக் கூறு பாலா எனக் கூறு

பாதாரவிந்தமே சேரு

பாலா எனப் பாடு பாலா எனப் பாடு

பாலாவின் கருணையைத் தேடு

பாலா என்றே ஓது பாலா என்றே ஓது

பாலாவினால் மறையும் தீது



திரிபுரசுந்தரி திருவடித் தாமரை

தினம் வந்து நமைக் காக்குமே

திரிபுரசுந்தரி திருவிழிப் பார்வையில்

தெய்வீக நிலை பூக்குமே

திரிபுரசுந்தரி திருக்கரம் படுவதால்

தீமைகள் தான் விலகுமே

திரிபுரசுந்தரி திருமுடி காண்கையில்

தேன் வாழ்வுதான் மலருமே



பாலாவை நீ பாடு பங்காரு காமாக்ஷி

பாங்கான உரு தெரியுமே

பாலாவை நீ நோக்கு மதுரையாள் மீனாக்ஷி

புன்னகைதான் புரியுமே

பாலாவை நீ காணும் போதந்த காசியாள்

விசாலாக்ஷியை அறிகுவாய்

பாலாவின் தோற்றத்தில் மயிலையின் கற்பகம்

பலவரம் தான் அருளுவாள்



இல்லையென்று பாலா திரிபுரசுந்தரி

யாருக்கும் சொன்னதில்லை

இன்பத்தினை நாடும் அன்பர்க்கு கருணையை

ஈயாமல் விட்டதில்லை

தொல்லையென்றவள் எல்லையில் வந்தோர்க்கு

துயரேதும் வந்ததில்லை

தூயவள் அவளுக்கு அருளதைப் பொழிவதில்

ஜாதிகள் மதமுமில்லை



அன்னையாம் பாலாதிரிபுரசுந்தரி

அன்புக்கு எல்லையில்லை

அன்னைக்கு செல்வர் ஏழையர் என்கின்ற

பேதங்கள் ஏதுமில்லை

தன்னையே வேண்டிடும் அன்பர்க்கு அருளதை

தாராமல் போனதில்லை

தாயவள் பாசமே பொழிவதில் ஆகாய

மாரியும் இணையுமில்லை



காயத்ரியாகவே கண்களைக் காப்பாள்

சிவசக்தி சிரமே காப்பாள்

காளியாய் வந்து கரங்களைக் காப்பாள்

கௌமாரி கால்களைக் காப்பாள்

மாயையை நீக்கி மஹேஷ்வரி காப்பாள்

மாதாவாய் மனதைக் காப்பாள்

மூகாம்பிகை என்றும் முகத்தையே காப்பாள்

மோகினி மூளை காப்பாள்



தாய் தில்லைக் காளியாள் தலையினைக் காப்பாள்

தர்மாம்பா தோளைக் காப்பாள்

தில்லைச் சிவகாமியாள் தொடையினைக் காப்பாள்

துர்கையாள் தொண்டை காப்பாள்

கைநிலவு அபிராமி கழுத்தினைக் காப்பாள்

வைஷ்ணவி வயிறு காப்பாள்

கருமாரியாய் வந்து குரல்வளம் காப்பாள்

காந்திமதி காது காப்பாள்



அருள்மிகு தேவி அன்னை பாலாதிரிபுர

சுந்தரி பெயர் மந்திரம்

அமைதியைத் தந்திட நெமிலியில் வந்தனள்

அவள் திருவடி எந்திரம்

இருள்தனை நீக்கிடும் தாயவள் விழிகளே

இன் துணை என வந்திடும்

இன்முக தேவியை உன்னகம் வைத்திடு

எல்லாமே தான் தந்திடும்



மருள்தனை நீக்கிடும் மாதாவின் கவசமே

மனமொன்றி நீ கூறுவாய்

மகிழ்ச்சியைத் தந்திடும் மாதாவின் கவசமே

மலரடி நீ சேருவாய்

பொருள்தனைக் கொடுத்திடும் பாலாவின் கவசமே

புவியினைக் காக்கும் நிஜமே

புகழ் நிறை நெமிலியில் பொலிகிறாள் சத்தியம்

புகலிடம் அவள் நித்தியம்



அமைதியைப் பெற்றிட அன்பர்கள் அனைவரும்

அவளையே நாட வேண்டும்

சுமைகளைக் குறைத்திடும் சுந்தரி இல்லத்தில்

சந்ததம் பாட வேண்டும்

இமையது கண்களைக் காப்பது போல் கவசம்

எந்நாளும் காக்க வேண்டும்

நெமிலியில் எழில்மணி பணிவுடன் எழுதிய

கவசமே பூக்க வேண்டும்



பாலாவின் கவசத்தைப் பாராயணம் செய்தால்

பவவினை தான் போகுமே

பாலாவின் கவசத்தைப் பாராயணம் செய்தால்

தவவினை நமைச் சேருமே .



ஓம் ஓம் ஓம் !

7 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, August 16, 2007 9:10:00 PM  

பாலாம்பாளின் கவசம் தந்தமைக்கு நன்றி SK

//நெமிலியில் எழில்மணி பணிவுடன் எழுதிய
கவசமே பூக்க வேண்டும்//

SK, தற்காலக் கவிஞர் ஒருவர் இயற்றிய கவசமா இது?
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய 'கந்தகுரு கவசம்' ராகத்தில் பாடினால் சரியாத் தான் வருகிறது!

கோவி.கண்ணன் Thursday, August 16, 2007 9:12:00 PM  

மார்கழி காலைகள் எப்போதும் பக்தி பாடல்களிலேயே விடிந்திருக்கிறது. ஏனென்றால் ஏழைபிள்ளையார் கோவிலுக்கு அடுத்து இருப்பது எங்கள் வீடு.

சூலமங்களம் சகோதரிகளின் முருகன் பாடல்கள் அனைத்தும் கேட்டிருக்கிறேன். என்றும் நினைவில் நிற்பவை அவை.

நீங்கள் எழுதிய்யிருக்கும் பாடலைக் கேட்டது போல் நினைவில்லை. கந்தகுரு கவசம் கேட்டுருக்கிறேன். அதே ராகத்தில் இருப்பாதாக பாடல்வரிகளும் சொல்கிறது. நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.

கற்பனையில் கேட்டுக் கொள்கிறேன்.

"காக்கட்டும்... காக்கட்டும்" என்று கனீர்குறலில் கந்தகுருகவசம் இன்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருப்பதால் இது எளிது.

:)

வாழ்க உங்கள் ஆத்திக தொண்டு.

உங்களுக்கு என்றும்

முருகன் அருள் முன் நிற்கும் !
குமரன் அருள் கூடவே வரும் !

VSK Thursday, August 16, 2007 11:30:00 PM  

ஆமாம், ரவி!

இவர் தற்காலக் கவிஞர்தான்.

செட்டி நாட்டு மக்கள் இதனை அனுதினமும் ஓதுகிறார்கள்.

ஒரு செட்டியார் நண்பர் எனக்குக் கொடுத்தார் இதனை!

மெட்டு நான் போட்டுப் பார்ர்த்து அவருக்கும் சொன்னேன்!

ஆச்சரியப்பட்டுப் போனார்!

தினமும் படியுங்கள் என என்னை வற்புறுத்தினார்.

படித்து வருகிறேன்.

மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!

VSK Thursday, August 16, 2007 11:33:00 PM  

மிகவும் உண்ணர்ந்து, உணர்ச்சியுடன் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள், கோவியாரே!

இதுவும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!

மிக்க நன்றி!

பதிவில் கொடுத்திருப்பது பாலா யந்திரம்!

//அமைதியைத் தந்திட நெமிலியில் வந்தனள்

அவள் திருவடி எந்திரம்//

அனைவருக்கும் அமைதி கிட்டட்டும்!

jeevagv Sunday, August 19, 2007 11:34:00 PM  

VSK சார், பாலா கவசம் PDF ஆக பதிவுடன் இணைத்தால், அச்சிட்டுக்கொண்டு, கவசத்தை படிக்க விரும்புவோருக்கு ஏதுவாக இருக்குமே?

VSK Monday, August 20, 2007 12:24:00 AM  

ஆலோசனைக்கு மிக்க நன்றி, திரு.ஜீவா.

உண்மையைச் சொல்லப்போனால், எப்படி அதைச் செய்வது என்பது எனக்குத் தெரியாது!

வழக்கமாக நான் அணுகும் கோவி, கொத்தனார், ரவி இவர்களை அணுகி அதைச் செய்ய முயல்கிறேன்!

jeevagv Sunday, August 26, 2007 12:31:00 PM  

VSK சார்,
இதோ நானே PDF ஆக upload செய்து இருக்கிறேன், பாலா கவசத்தை:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP