Saturday, August 04, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --15[இரண்டாம் பகுதி] "புணர்ச்சி மகிழ்தல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --15[இரண்டாம் பகுதி] "புணர்ச்சி மகிழ்தல்"


வஸந்தபவனில் என்னென்ன ஆர்டர் பண்ணினோம் என்பதெல்லாம் கேட்க உங்களுக்குப் பொறுமை இருக்காது எனத் தெரியுமாதலால், மிச்சமிருக்கும் ஐந்து குறள்களுக்கு மயிலை மன்னார் என்ன சொன்னான் எனத் தெரிந்து கொள்வதில்தான் உங்கள் ஆர்வம் இருக்குமென்பதால்,
நேராக அதற்கே வருகிறேன்!

[முதல் ஐந்து குறள் விளக்கம் சென்ற பதிவில் பார்த்தோம்.]

நடு நடுவே மன்னாரின் உபசரிப்பையும் காணலாம்!

அதிகாரம் 111. "புணர்ச்சி மகிழ்தல்" [1106-1110]

"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்." [1106]

"நம்ம நாயர் கடை டீ, மசால்வடைக்கு, இங்கே சாப்படற மசால்தோசையும், பூரி மசாலாவும் எவ்வளவோ மேலுன்னு நெனக்கற நீ! பொறு, பொறு!

இப்பத்தானே ஆர்டர் பண்ணிருக்கோம்! இன்னும் வரல!

நீசொல்வியே அந்த தேவலோகம்... அங்கே ஆரும் சாவறதே இல்லியாம்!

அல்லாரும் அமிர்தம் குடிச்சிட்டாங்களாம்!

அப்டீன்னு சொல்றாங்க!

ஆனா, ஐயன் அதையே எப்டி உல்ட்டா பண்னி சொல்றார்னா, ..

இவன் ஒரு பொண்ணை லவ் பண்றானாம்!

அதுவும் இவன டீப்பா லவ் பண்ணுதாம்.

எப்பலாம் இவன் அந்தப் பொண்ணோட தோளைத் தொடறானாம்.
அவ்ளோதான்!

இவனுக்கு புதுசா இன்னொரு ஜென்மம் எடுத்தாப்பல, அவன் உசிரு தளைக்குதாம்!


அதுனால, இவனுக்கு இவளோட தோளே அமிர்தம் மாரித் தோணுதாம்!

தொடறப்பவெல்லாம் புது உசுரு வர்றதுனால!


"தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு." [1107]


சரி, சரி! தோசை வந்திருச்சு! சாப்டு!

இப்படி இந்த ஓட்டல்ல ஒக்காந்து ஒனக்கு வாங்கிக் கொடுத்து, நானும் சாப்டறதுக்கே எனக்கு இம்மாம் சந்தோசம் வருதே.... சரி, சரி!... நீதான் பில்லுக்கு பணம் கொடுக்கப் போறேன்னாலும்!....

சரி, குறளுக்கு வருவோம்!

ஒன் பர்ஸுலேர்ந்து பணத்தை எடுத்து இப்ப எனக்கும் சேர்த்துக் கொடுக்கறே இல்ல?


அது மாரி, தன்கிட்ட இருக்கற ஒரு பொருளை இன்னோர்த்தனுக்கும் கொடுத்து தானும் சந்தோசப்படற இந்தப் பொண்ணோட சேர்றது அவனுக்கு இன்பமா இருக்காம்!

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு." [1108]


இப்ப சொல்லப் போறது கொஞ்சம் சூட்சுமமான மேட்டரு!

சாப்டறத நிப்பாட்டிட்டு கவனமாக் கேளு!

ரெண்டு பேரு ஒர்த்தர ஒர்த்தர் விரும்பறாங்க!

பாக்கறாங்க! பேசறாங்க, தொடக் கூடத் தொடறாங்க!

அதெல்லாம் ரொம்பவே இன்பமாத்தான் இருக்கும்.

ஆனா, ஒர்த்தர ஒர்த்தர் கட்டிப் பிடிச்சு, இறுக்கமாக் கட்டிக்கும் போது....

அதாவது, காத்துக் கூட நடுவுல பூராத மாரி இறுக்கக் கட்டிக்கறாங்களாம்!...

அப்படிக் கட்டிப் பிடிச்சு இருக்கக் கொள்ள, அவங்களுக்கு வர்ற சந்தோஷம் இருக்கு பாரு!

அதுக்கு ஈடு இணையே கிடையாதாம்!!!

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்." [1109]

இந்தக் காதல் பண்றவங்களுக்கு, வெறுமன காதல் பண்றது மட்டுந்தான் வேலைன்னு நெனைக்காதே!

சும்மா காதல் மட்டுமே பண்னினா அதுல ஒரு த்ரில்லு இல்லியாம்!

சின்ன சின்னதா சண்டை போடணுமாம்!

அது பெருசாவறதுக்கு முன்னாடியே சமாதானம் ஆயிறணுமாம்!

அப்பத்தான், மனசுல ஒண்ணும் வெச்சுக்க மாட்டாங்க!

பெரிய சண்டை ஆயிருச்சுன்னு வையி!

அது கொஞ்சம் பேஜாராயிடும்.

அதனால... இன்னா பண்ணனும்னா.... சின்னச் சின்னதா சண்டை போடணும்....அப்பப்ப!

அத்த ஆரு போட்டாலும், ஆராவது ஒர்த்தர், விட்டுக் கொடுத்து ராசியாயிடணும் வெரசலா!

அதுக்கப்பறம், ரெண்டு பேரும் சேரணும்!

அது ரொம்பவே ஜாலியா இருக்குமாம்.

இதெல்லாம் காதலால வர்ற நல்ல விசயமாம்!

சரி, சரி, பூரி கிளங்கு வந்தாச்சு, எடுத்துக்கோ!

அப்டியே ரெண்டு டீ சொல்லிடு!


"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு." [1110]


இப்போ ஒரு புக்கு படிக்கறே! நல்ல நல்ல விசயம்லாம் அதுல இருக்கு!

படிக்கக் கொள்ள ஒனக்கே புரியுது.... இதெல்லாம் இத்தினி நாளு தெரிஞ்சுக்காம இருந்திட்டோமேன்னு!

ஒன்னோட அறிவு இன்னும் ஜாஸ்தியாவுது!

அதே மாரித்தான் இந்த காமம்ன்றதும்!

ஒவ்வொரு தபாவும் புதுசு புதுசா ஒண்ணொண்னு தெரியுமாம்!

சரி, பில்லைக் கொடுத்திட்டு வா!

நான் வாசலாண்ட நிக்கறேன்"

எனச் சிரித்தவாறே கிளம்பினான், மயிலை மன்னார்!


அவ்ளோதாங்க!

பிறகு சந்திக்கலாம்!

10 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Sunday, August 05, 2007 4:42:00 AM  

//
இவனுக்கு புதுசா இன்னொரு ஜென்மம் எடுத்தாப்பல, அவன் உசிரு தளைக்குதாம்!


அதுனால, இவனுக்கு இவளோட தோளே அமிர்தம் மாரித் தோணுதாம்!

தொடறப்பவெல்லாம் புது உசுரு வர்றதுனால
//

எனதருமை எஸ்கே ஐயா,

காதலை தொடதா இலக்கியங்கள் முற்றுபெறுமா ? இல்லையே !

இறையனாரும் 'கூந்தலில் நறுமணம்' கூடல் இன்பத்தில் கண்டுகொண்ட உன்மை குறித்து பாடினார்.

ஐயன் திருவள்ளுவரும் எல்லாவற்றையும் தொட்டு இருக்கிறார்.

இன்பத்துப்பால் பருகியவருக்கு திகட்டாத அமிழ்து.

:)

உங்கள் விளக்கம் சுவையாக இருக்கிறது இன்பத்துப் பாலில் ஏலம் தட்டிப் போட்டது போல.

பாராட்டுக்கள் !

VSK Sunday, August 05, 2007 2:47:00 PM  

புணர்ச்சி மகிழ்ந்த பின்னர், பதறிச் செல்லும் பலபேர் அல்லாமல், முழுதும் படித்து, இன்பம் துய்த்து,
ஏலம் இட்டுச் என்ற கோவியாரே!

மிக்க நன்றி

வடுவூர் குமார் Sunday, August 05, 2007 8:54:00 PM  

அதாவது, காத்துக் கூட நடுவுல பூராத மாரி இறுக்கக் கட்டிக்கறாங்களாம்!...
சூராவளி அடிச்சா கூட வா?
காலங்கார்த்தாலா இந்த பக்கம் வந்திருக்கக்கூடாது. :-))
இனி என்ன வேலை ஓடப்போகுதோ!!

VSK Monday, August 06, 2007 1:10:00 PM  

என்ன வேலை ஓடிச்சுன்னு கொஞ்சம் அவசியம் வந்து சொல்லுங்க, குமார்!
:))

Unknown Friday, August 10, 2007 7:28:00 AM  

Arputham.. Arputham.!!

ThodarungaL ungaL thamizh thondu.

Anbudan.. Anand

Unknown Friday, August 10, 2007 10:03:00 PM  

//"தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு." [1107]//

இது ஆண்களுக்கும் பொருந்துமே :-)

ஊடலின் பின் கூடல் இன்பம் - உண்மையோ உண்மை :-)

VSK Saturday, August 11, 2007 11:36:00 AM  

மிக்க நன்றி, திரு. ஆனந்தகுமார்.

முடிந்த வரைக்கும் எழுதத்தான் எண்ணம்!

VSK Saturday, August 11, 2007 11:44:00 AM  

சரியாகச் சொன்னீர்கள் தஞ்சாவூராரே!
[நம்ம ஊரும் அதான்!]

அதுதான் வள்ளுவரின் சிறப்பு.

ஒருவரைக் குறித்து எழுதியது போலத் தோன்றினாலும், அனவருக்கும் பொருந்துமாறு அமையும் அது!

அதனால்தான் இது உலகப் பொது மறை!

வருகைக்கு நன்றி!

சிவபாலன் Saturday, August 11, 2007 2:54:00 PM  

அயயா

நீங்க ரொம்ப பிஸியா? அதிகம் உங்களைப் பார்க்கமுடிவதில்லையே!

மற்ற பதிவுகள் எதிலும் உங்களைக் காண முடிவதில்லை.

நலம்தானே!?

நன்றி!

VSK Saturday, August 11, 2007 10:21:00 PM  

அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி, சிபா!

அலுவலில் ஒருமுறை கணினியில் ஏற்பட்ட சொட்டப்பலால், தமிழ்ப்பதிவுகள் எதையும் பார்க்க முடிவதில்லை.

மாலையில் தான் பார்க்கிறேன்.

கூடவே ஒரு ஆன்மீக நாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

எல்லாமாகச் சேர்ந்து பிற பதிவுகளில் பின்னூட்டம் இடமுடியாத நிலை!

முக்கியமானவற்றைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

மீண்டும் நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP