Thursday, August 02, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 15 [வயது வந்தோர்க்கு மட்டும்!]

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 15 "புணர்ச்சி மகிழ்தல்"

வாரா வாரம் எனக்குக் குறளின்பம் தந்து கொண்டிருந்த நண்பனை இப்போதெல்லாம் மாதா மாதம் சந்திக்கும்படியான நிலை
வந்துவிட்டதே என மிக வருத்தம் எனக்கு!

சரி, இதையாவது விடக்கூடாது என்ற ஒரு வெறியோடு, ஆடி வெள்ளி மயிலை கற்பகாம்பாளைத் தரிசித்த பின்னர்,
மயிலைக் குளத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன், அவனைப் பார்க்கும் ஆவலோடு!

கிடைக்கவில்லை!

மனம் தளர்ந்து, கடைசி முறையாக நாயர் கடைக்கு வந்து, 'அண்ணனை எங்கனெயும் நோக்கியோ, சேட்டா?' என
எனக்குத் தெரிந்த அரைகுறை மலையாளத்தில் வினவினேன்.

'இல்லியே ஸாரே! கிட்டில்லா ஆ ஆளு!' என நாயர் சொன்னதும் என் நம்பிக்கை தகர்ந்தது.

சரி, இன்னிக்கு நமக்கு கொடுப்பினை இல்லை என நொந்தவாறே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கலானேன்.

திடீரென ஒரு குரல்!

பரிச்சயமான குரல்!

"நா சொன்னா சொன்னதுதான்! அவனவன் அனுபவிச்சாத்தான் புரியும்! அத்த வுட்டுட்டு, இது எப்டி இருக்கும்னு
கேட்டேன்னு வெச்சுக்கோ, நீதான் ஒலகத்துலியே மஹா முட்டாள்" என யாருடனோ பேசிக்கொண்டு மயிலை மன்னார்
நாயர் கடை வாசலில் ஆஜரானான்!

என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை!

மன்னாரைப் பார்த்தது மட்டுமல்ல; என் நண்பரொருவரைக் குறித்து, என் மனதில் ஓடிக் கொண்டிருந்த அதே விஷயத்தைப் பேசிக் கொண்டும் மன்னார் வந்தது எனக்கு பேராச்சரியம்!

என்னைப் பார்த்தவுடன் இன்னும் அதிகமாகவே குஷியானான் மன்னார்.

'இன்னாப்பா! வா, வா, வா! நீயும் இந்த ஜோதில ஐக்கியமாயிக்கோ! காதல்ண்றதே ரொம்ப குஜாலான மேட்டரு. இதுல காதல் கைகூடி,
அது கனிஞ்சு ரெண்டு பேரு சேர்றதுல இருக்கு பாரு ஒரு குஜாலு!... அட! அட! அட! அத்தச் சொல்ல வார்த்தையேகிடையாது!
ஐயன் இன்னா சொல்றார்ன்னா...."என ஆரம்பித்தவுடன், பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு அவன் சொல்வதை எழுதலானேன்!

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 111. "புணர்ச்சி மகிழ்தல்"

"கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள." [1101]

நல்லாக் கேட்டுக்கோ!

இப்போ நமக்கு அஞ்சு விதமான உணர்வுங்க இருக்கு.

பாக்கறது, கேக்கறது, புவா துண்றது, மோந்து பாத்து வாசனை இன்னான்னு தெரிஞ்சுக்கறது,
தொடறது அப்டீன்னு அஞ்சு!

ஆனாக்காண்டி, இந்த அஞ்சும் சேந்த மாரி ஒரு விஷயம் ஒலகத்துல கிடையாது!

நீ இன்னா ஒரு பொருளை வோணும்னாலும் எடுத்துக்கோ!

ஒதாரணத்துக்கு, ஒரு பூவை எடுத்துக்கோ!

பாக்கலாம், தொடலாம், மோந்து பாக்கலாம், சிலதை பிச்சி கூடத் துண்லாம்.

ஆனா , கேக்க முடியுமோ? முடியாது!

சரி, அது வோணாம்!

டீவி இருக்கு!

பாக்கலாம், கேக்கலாம், தொடலாம் ...அவ்ளோதான்.

இப்டி, இன்னா ஒரு விசயத்த எட்த்துக்கினாலும், அல்லாமும் கூடி வராது.

ஆனா, ஒரு ஆம்பளையும், பொம்பளையும் விருப்பப்பட்டு சேரும் போது....?

ஒர்த்தரை ஒர்த்தர் பாக்கலாம், பேசறதைக் கேக்கலாம், கிஸ் அடிக்கக்கொள்ள துண்ணக்கூட துண்ணலாம், மோந்து பாக்கலாம், தொடவும் செய்யலாம்!

அத்தத்தான் நம்ம ஐயன் சும்மா கணக்கா சொல்லி இருக்காரு இதுல!

ஒரு ஆம்பளை சொல்றான்.... இந்தாமாரி, இந்த அஞ்சு விதமான உணர்ச்சியையும், நல்லா வளையில்லாம் போட்டுகினு இருக்கற
இவகிட்ட எனக்கு கிடைக்குதுன்னு!


"பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. [1102]


ஒனக்கு ஒரு அடி படுது.

கல்லு தடிக்கின்னு வெச்சுக்கோயேன்.
ரெத்தம் கொட்டுது.
இன்னொரு கல்லை எடுத்து,... இல்ல,.... அதே கல்லை எடுத்து அது மேலியே இன்னோரு போடு போட்டா அது சரியாயிடுமா?

சரி, அது வோணாம்.
ஜொரம் வருது! மளைல நனைஞ்சு!
திருப்பியும் ஒன்னியக் கொட்டற மளைல நிக்க வெச்சா ஜொரம் சரியாப் பூடுமா?

டாக்டரைப் பாக்கணும்!
காயத்துக்கு மருந்து போடணும்.
இல்லேன்னா, ஜொரத்துக்கு ஊசி மாத்திரை எடுத்துக்கணும்.
அப்போத்தான் சரியாவும்.
சர்த்தானே நான் சொல்றது?

ஆனாக்க, இந்தப் பொம்பள இருக்கே, அதாம்ப்பா... அளகா வளைல்லாம் போட்டுகிட்டு, நகை நட்டெலாம் போட்டுகிட்டு ஒன்னிய மயக்கி வெச்சாளே,..... அவதான்...!


அவளால ஒனக்கு இப்ப ஒரு நோவு வந்திருக்கு!

அதாம்ப்பா, காதல் ஜொரம்!

அதுக்கு இன்னா மருந்துண்ற?

எந்த டாக்டர் இதுக்கு மருந்து வெச்சிருக்கான்?

ஆனா, ஐயன் சொல்றாரு, இதுக்கு மருந்தும் அந்தப் பொண்ணேதானாம்.
அவளாலதான் இத்த தீக்க முடியுமாம்!

இதுமாரி, நோவும் கொடுத்து, அத்த தீக்கற மருந்தையும் வெச்சிருக்கறது, ஒரு விருப்பப்பட்ட பொண்ணாலதான் முடியுமாம்!


"நாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு." [1103]


நம்ம சங்கர் அடிக்கடி சொல்லுமே, அந்த சொர்க்கம்.... அதாம்ப்பா... பெருமாள் இருக்கற எடம்... வைகுண்டம்.. ... அங்கே
இன்னான்னாமோ கிடைக்குமாம்!


மெத்து மெத்துன்னு படுக்கை விரிச்சு, அப்சரஸுங்கல்லாம் விசிறி வீசுவாங்களாம்!


அத்த ஆரு பாத்திருக்கா?
இன்னாமோ சொல்றாங்க!

ஸரி! அத்த உண்மைன்னே வெச்சுப்போம்!

ஒன்னோட மனசுக்குப் பிடிச்ச பொண்ணோட,.... அதுவும் ஒன்னை விரும்புது.... அத்தோட மெல்லிசான தோள்ல சாஞ்சுகிட்டு
ஒரு பத்து நிமிஷம் கண்ணை மூடற பாரு... அதுக்கு ஈடவுமா, இந்த சொர்க்கலோகம்லாம்னு ஐயன் கேக்கறாரு!


"நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணெண்ணும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்." [1104]


சடாரென ஒரு தீக்குச்சியைக் கிழித்தான் மன்னார்!

அந்த நெருப்பை என் கிட்ட கொண்டு வந்து என் முகத்தருகில் நீட்டினான்!

பட்டென விலகினேன் நான்!

"இப்ப ஏன் தள்ளிக்கினே?

நெருப்பு சுட்டுருமேன்னுதானே!

அதான் நெருப்போட கொணம்.

கிட்ட வந்தா சுடும். தள்ளி நின்னா ஒண்ணும் பண்ணாது!

ஆனா, ஒனக்குப் பிடிச்ச பொண்ணு, ஒம்மேல பிரியமா இருக்கு!

அது ஒரு அஞ்சு நிமிஷம் தள்ளிப் போச்சுன்னு வையி!

மவனே! தக தகன்னு ஒன் ஒடம்பு கொதிக்க ஆரம்பிச்சிடும்!

அதே அவ கிட்டக்க வந்தான்னா... அவ்ளோதான், சும்மா ஐஸுல தூக்கிப் போட்ட மாரி, பல்லு கிட்டிப் போயி,
குளுர்ல நடுங்கி தந்தியடிக்க தொவங்கிடும்!

அப்பிடியாப்பட்ட வினோதமான நெருப்பு இவகிட்ட மட்டும் எப்டி வந்திச்சுன்னு ஐயன் ஒரு கொஸ்சின் கேக்கறாரு!
"

"வேட்டபொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்." [1105]

நாயர் கடையாண்ட நிக்கறே நீ!

இன்னா கிடைக்கும் இங்க?

மிஞ்சி மிஞ்சிப் போனா, டீ, மசால்வடை!

அதிகமாக் கேட்டியானா, பன், ரஸ்க்கு, கடலை மிட்டாய்!

அவ்ளோதான்!

இப்ப நீ இன்னா நெனைக்கற...

மணி 9 ஆச்சு! இன்னும் சோறு துண்ணல.

இப்பமட்டும், ஒரு மசால் தோசையும், கெட்டி சட்னியும், நாலு பூரியும், கூடவே மசால் கிளங்கும் கெடச்சுதுன்னா இம்மாம் ஜாலியா இருக்கும்னு!

பார்றா! இன்னா ஆச்சரியம்!

டக்குன்னு ஒன் முன்னால வந்து நிக்குது அதெல்லாம்!

அதே மாரி, நீ இன்னான்னா நெனக்கறொயோ, அத்தினியும் ஒனக்குக் கிடைச்சுதுன்னா, எம்மாம் சந்தோசமா இருக்கும்?

அப்டி இருக்குமாம, நீயும் நல்லா அடர்த்தியான தலைமுடியில பூவெல்லாம் வெச்சுகிட்டு இருக்கற பொண்னும் ஒர்த்தரை ஒர்த்தர்
விரும்பி, நீ அவ தோள்ல சாஞ்சுகிட்டியானா!

நான் சொல்லலைப்பா... ஐயன் சொல்றதுதான் இது!


என்று சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்!

திறந்த வாயை மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த நான், ' என்னப்பா! இவ்வளவுதானா? மொத்தம் பத்து குறளாச்சே ஒரு அதிகாரத்துல" என
அடக்க முடியாமல் கேட்டேன்!

ஆசையைப் பார்றா!

இருக்கு இருக்கு!
இன்னும் அஞ்சு குறளுஇருக்கு!

ஆனா, இப்ப பசிக்குது!
மசால் தோசை, பூரி கிளங்குன்னதும் வவுறு கபகபான்னு கிள்ளுது!
வா, வஸந்த பவனுக்குப் போயி
சாப்ட்டுகிட்டே மிச்சத்தையும் சொல்றேன்"


என எனை இழுத்துக் கொண்டு சென்றான் மயிலை மன்னார்!

அவன் பேச்சுக்கு மறுப்பேது?

சாப்பிட்டு வந்து மீதி அவன் சொல்லிய மீதி ஐந்து குறள் விளக்கத்தைத் தருகிறேன்!

இப்போதைக்கு இதை "அனுபவியுங்கள்"!


:))
***************************************************


ஒண்டொடி கண்= வளையணிந்த பெண்
பிறமன்= பிற பொருட்கள்
வேட்ட= விருப்பப்பட்ட
தோட்டார் கதுப்பினாள்= பூக்கள் நிறைந்த கூந்தலை உடைய பெண்

11 பின்னூட்டங்கள்:

அன்புத்தோழி Thursday, August 02, 2007 5:30:00 PM  

ஸூப்பரா இருக்கு மன்னாரின் விளக்கம். திருவள்ளுவர் எல்லா அர்த்தங்களையும் எப்படித் தான் இரண்டு வரிகளில் முடித்தாரோ தெரியவில்லை. மீதியையும் கேட்க ஆவலாக இருக்கிறேன்.

VSK Thursday, August 02, 2007 5:58:00 PM  

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தியவருக்கு இதெல்லாம் ஜுஜுப்பி வேலை எனச் சொல்லி சிரிக்கிறான், மயிலை மன்னார்!

மீதியை அவன் சொல்லிட்டான், அன்புத்தோழியே!

நாளை பதிகிறேன்.

தனி ஒருவராக வந்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு என் நன்றி!

:))

நிறையப் பேர் வந்து படிச்சிட்டுப் போயிருக்காங்க!
ம்ம்!

:))

வடுவூர் குமார் Thursday, August 02, 2007 9:34:00 PM  

அய்யன் "கணக்கான" ஆளாகத்தான் இருக்கார்.

வடுவூர் குமார் Thursday, August 02, 2007 9:37:00 PM  

இதுமாரி, நோவும் கொடுத்து, அத்த தீக்கற மருந்தையும் வெச்சிருக்கறது, ஒரு விருப்பப்பட்ட பொண்ணாலதான் முடியுமாம்!
கொல்லுது...விளக்கம்.
மன்னாரு நீ சூப்பருப்பா! என்கேயோ ஸ்துகினு போற.

குமரன் (Kumaran) Thursday, August 02, 2007 9:57:00 PM  

எஸ்.கே. உங்க மன்னார்கிட்ட சொல்லிவைங்க. நான் எம்மாம் கஷ்டப்பட்டு பெருசுங்க சொன்னதையெல்லாம் படிச்சு அருத்தம் எழுதுனா இந்தாளு இம்மாம் சுளுவா சொல்லிவிட்டா நான் எழுதுறதை எல்லாம் யாரு படிப்பா? :-(

http://inbame.blogspot.com/2007/07/1.html

SurveySan Thursday, August 02, 2007 10:50:00 PM  

ஹி ஹி ஹி.
நல்ல கொரலு,
நல்ல வெளக்கம்.

நெறைய சொல்லுங்க.
வெயிட்டிங்! :)

VSK Friday, August 03, 2007 12:32:00 AM  

மிக, மிகக் கணக்கான ஆள், திரு. குமார், நம்ம ஐயன்!

எங்கியோ இஸ்துகினு போனாலும்,திரும்பி வந்துருவீங்கதானே!

:))

VSK Friday, August 03, 2007 12:36:00 AM  

"நம்ம மதுரைத்தம்பி இத்த எளுதியிருக்கார்னு ஒரு வாஅர்த்தை சொல்லிருந்தீன்னா, நான் சும்மா இருந்திருப்பேன்ல?" என என்னை மிகவும் கடிந்தான், மயிலை மன்னார்.

இருந்தாலும், முடிந்தவரை எவ்வளவு அதிகாரங்களுக்கு அவனிடம் இருந்து பொருள் கரக்கனுமோ, அதையெல்லாம் கறக்கணும் என்பது என் ஆசை, குமரன்.

எனவே இதை லூஸ்ல விடுங்க!
:))

உங்க விளக்கமும் வழக்க போலவே பிரமாதம்!

VSK Friday, August 03, 2007 12:38:00 AM  

சும்மா கிரங்கிப் போன மாரி இருக்கே, சர்வேசன்?

நாளைக்கு மிச்சமும் வரும்!

நிறையவும் வரும்.

:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP