Saturday, February 17, 2007

ஆத்திகச் சுடர்!

ஆத்திகச் சுடர்!

இந்தச் சுடரை ஏற்றி வலையுலகில் பரவவிட்டு, இன்று சுடராகிப் போன கல்யாணுக்கு அஞ்சலி செலுத்தி இதனைத் தொடர்கிறேன்.

நண்பர் விடாது கருப்பு சதீஷ் இதை எனனிடம் அனுப்பி வைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே!

அவர் சொன்னது போல என் கருத்தை மற்றவரிடம் திணிக்க அல்ல: ஆனால் சொல்லிடவே நான் வலைப்பூவை ஆரம்பித்தேன்.

எதையும் யாரிடமும் திணிக்க எவராலும் முடியாது என்பது என் கருத்து.

நம் கருத்துகளை நம்மால் சொல்லத்தான் முடியுமே தவிர, எவரையும் அதனை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது.

முடிந்தால் மற்றவரைக் கோபப்பட வைக்க முடியும்; வருத்தப்படவைக்க முடியும்; அவர் கவனத்தை ஈர்க்க முடியும்.

ஆனால், புரிவது அவரவரிடமே நிகழ முடியும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்...........

' குதிரையை தண்ணீர்த்தொட்டிக்கு கொண்டு செல்லத்தான் நம்மால் முடியும்; குதிரைதான் குடிக்க வேண்டும்.... முடியும்.'

இதனை உணர்ந்து, தம் கருத்துகளை அடுத்தவரைப் பழிக்காமால், அவர் மனதை நோக வைக்காமால் தம் கருத்துச்சுடரை ஒவ்வொருவரும் ஏற்ற வேண்டும், வலைப்பூவிற்கு வருவது ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வைப்பது வலைப்பதிவார்களின் தலையாய பொறுப்பு எனக் கூறி, இனி எனக்கு அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு வருவோம்!!


அதற்குமுன், சிவாராத்திரியை முன்னிட்டு, சில "ஆத்திக" நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், உடனே இந்தச் சுடரைத் தொடர முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!

இப்போது என் பதில்!

1)ஆன்மீகத்தினை நீங்கள் அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது. உலகில் இவ்வளவு இந்துக் கடவுள்கள் இருக்க அதிலும் குறிப்பாக முருகனைத் தாங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

இது மிகவும் சுலபமான கேள்வி!

நான் பிறந்தது ஒரு தெய்வ நம்பிக்கை உள்ள குடும்பத்தில்! என் தந்தை ஒரு முருக பக்தர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது முருகன், வள்ளி, தெய்வானை உருவச்சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்வார்.

பூஜைக்கு வர வேண்டும்; அனைவரும் அருகில் உட்கார்ந்து கலந்து கொள்ள வேண்டும் என ஒருபோதும் வற்புறுத்தியதில்லை.

ஆனால், பூஜை முடியும் சமயம், ஒரு மணி அடிப்பார்! யார் எங்கு இருந்தாலும், என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அப்படியே அதை விட்டுவிட்டு, தட தடவென ஓடி அவரிடமிருந்து விபூதி பெற்றுக் கொள்ள மட்டும் மறந்துவிடக் கூடாது! வராதவருக்கு அன்று தர்ம அடி நிச்சயம்!

நான் ஒரு நாளும் அடி வாங்கியதில்லை! ஏனென்றால், நான் ஒருவன் தான் அவர் பூஜை ஆரம்பித்த முதல் கடைசி வரைக்கும் அவரருகே அமர்ந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவேனே!

ஆம்! அவர் பூஜை செய்யும் அழகும், முருகனை ஆராதிக்கும் பாங்கும் என் மனதைக் கவர்ந்தது. முருகன் என் மனதை ஆட்கொண்டான்! நான் முருகன் அடிமை ஆனேன்!

எல்லாத் தெய்வங்களும் எனக்குப் பிடிக்கும் என்றாலும், முருகனே என் சொந்தக் கடவுள்!

ஒரு சின்ன தகவல்!

அந்த முருகன் இப்போது என்னிடம்தான் இருக்கிறது! சஷ்டி, கிருத்திகை என பூஜை அவருக்கு கோலாகலாமாய் நடந்து வருகிறது!

2)வலைப்பதிவு உலகில் தற்போது எங்கு பார்த்தாலும் போராக இருக்கிறது. முதலில் பார்த்தீர்கள் என்றால் பார்ப்பனர் - திராவிடர் பிரச்னை. அதன்பின் விடாது கருப்பு- விட்டது சிகப்பு போர். அடுத்து பார்த்தீர்கள் என்றால் ஆரிய திரட்டி - திராவிட திரட்டி சண்டை. அடுத்து டோண்டுவின் பன்முகங்களை கொசுபுடுங்கி என்பவர் தோலுரித்தது. இதற்கெல்லாம் குழுமனப்பான்மைதான் காரணம் என்கின்றனர் பலர். ஒற்றுமை என்பது இனி இல்லையா? இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மேலும் முகம் மூடி எழுதும் பதிவர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உட்தாரணமாக விட்டது சிகப்பு, முகமூடி, கொசுபுடுங்கி, குசும்பன், இட்லிவடை, வந்தியத்தேவன். இது ஆரோக்கியமான சூழலா?

குழு மனப்பான்மை என்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல். தாவரங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாமே ஒரு குழுவாய்த்தான் வாழ்கின்றன. ஏன்... மனிதனே முதலில் தனித்தனியாய் இருந்து, பின்னர், ஒரு குழுவாய்ச் சேர்ந்து வாழ வேண்டியகட்டாயம் ஏற்பட்டதாகத்தான் வரலாறு சொல்லுகிறது.


புதிதாய்., முன்பின் தெரியாத,அமெரிக்காவுக்கு வந்த போது ஒரு இந்திய முகத்தைப் பார்க்க மாட்டோமா எனத்தான் நான் தேடினேன்.

அதுவே ஒரு தமிழ் முகமாயும் இருந்தபோது, என் மகிழ்ச்சி இன்னும் அதிகமானது. இதுதான் மனித இயல்பு.

இதுவே நம் வலைபூவிலும் நிகழ்கிறது என நினைக்கிறேன்.

இது ஆரோக்கியமான சூழலா, இல்லையா என்பது கேள்வி அல்ல இப்போது.

இதனை உணர்ந்து எவ்வாறு நடந்து கொள்வது என்பதே நம் அனைவரின் செயலாக இருக்க வேண்டும்.

அநேகமாக இங்கு எல்லாரும் ஏதோ ஒரு வகையில் 'முகம் மூடி'த்தான் எழுதுகின்றனர். இதில் இவர், அவர் எனப் பிரித்துப் பார்ப்பது தேவையில்லை எனக் கருதுகிறேன்.

சதீஷ் என்ற நீங்கள் 'விடாது கருப்பு' என்றும், சங்கர்குமார் என்ற நான் 'எஸ்கே' என்று எழுதுவதும், முகத்தை மூடி 'பூனை, முருகன்' போட்டுக் கொள்வதும் இது போல ஒன்றே!

இங்கு எல்லாரும் முகமூடிகள் தான்!


3)சென்ற நூற்றாண்டில் திரிக்கப்பட்ட இந்திய வரலாறுகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? விதிக்கப்பட்ட என்றால் அதன் பொருள் என்ன? படிக்காத உயர்ந்த வகுப்பினர் தலித்துகளைப் பீ அள்ளினால் அது பாவமா?

ஐந்து கேள்விகள்தான் கேட்க வேண்டும் என்பது சுடரின் விதி என்பதால் ஒரு கேள்வியிலேயே மூன்று கேள்விகளைத் "திணித்த" உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன்!:))

இது மூன்றுக்கும் ஒரு பொதுவான பதிலை அளிக்கவே நான் விரும்புகிறேன்.

சென்ற நூற்றாண்டை விட்டு இன்னும் சற்றித் தள்ளிப் போய் பிந்தைய வரலாற்றைப் பார்த்தால், நாம் எல்லாருமே ஒன்றாகத்தான் இருந்திருக்கிறோம்.

அதனைப் பிரதிபலிக்கும் வகையாகவா இன்றையப் பதிவுகள் இருக்கின்றன?

நீங்கள் முந்தையக் கேள்வியில் சொன்னது போல, எங்கு பார்த்தாலும் விருப்பு, வெறுப்பு, குழு, சண்டை... இவைதான்!


திரிக்கப்பட்டவை எல்லா இடங்களிலும், வல்லமை படைத்த எல்லாராலும் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நம் மனமே நமக்கு நிலை!
அதன்படி வாழவே நான் முயற்சித்து வருகிறேன்.

"விதிக்கப்பட்ட" என எதை நீங்கள் கேட்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த "விதிக்கப்பட்ட" சிலவற்றைச் சொல்லுகிறேன்.
உங்களுக்குப் புரிகிறதா எனச் சொல்லுங்கள்.

என் பிறப்பு நான் கேட்டு வந்ததிலை என்பதால், அது 'விதிக்கப்பட்டது'.
எவருக்குப் பிறக்க வேண்டும் என்பதும் நான் கேட்டு வராததால், அதுவும் 'விதிக்கப்பட்டது'.
எந்த ஊரில், நாட்டில், மொழியில் பிறக்க வேண்டும் என்பதும் 'விதிக்கப்பட்டதே'... நான் கேட்டு வராததால்!
'குலம்', 'சாதி', 'இனம்' இவையெல்லாமும் நான் உருவாக்காததால், அதில் எதாவது ஒன்றில் நான் வந்து உதித்ததுவும், 'விதிக்கப்பட்டதே'!
இதில் எதுவும், எவரும் குறைவில்லை என்பது என் கருத்து!

இவ்வளவு பலவும் 'விதிக்கப்பட்டதாய்' இருப்பினும், நான் எவ்வாறு இருக்க வேண்டும், மனிதத்தை, மானுடத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு எவராலும் 'விதிக்கப்படாதது'!


இதனை உருவாக்குவது நான் ஒருவன் மட்டுமே!


மேற்கூறிய இவற்றுக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பினும், என்னளவில் மட்டுமே, எனக்குள் மட்டுமே இவை பெருமை பெறுகின்றன!
இவற்றை நான் போற்றுகிறேன்......எனக்குள் மட்டுமே....என் வீட்டுக்குள் மட்டுமே.... வெளியில் அல்ல!


இவற்றை வெளியில் பாராட்டும் போது, இதனைக் கொண்டு அடுத்தவரை எடை போட நான் முயலும் போது, நான் இந்தப் பெருமைகளை எல்லாம் இழக்கிறேன் என்பதினை நான் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறேன் .

எவர் மலத்தையும் எவர் அள்ளுவதும் பாவமில்லை!
அள்ளாமல் விட்டால்தான் பாவம்!
மனித குலமே நாறிப் போகும்!
யாராவது ஒருவர் அள்ளத்தான் வேண்டும்!

இதில் தலித் என்ன, செட்டியார் என்ன, முதலியார் என்ன, நாடார் என்ன, பார்ப்பான் என்ன?
எல்லாம் ஒரே மலம்தான்!


4)தாங்கள் மருத்துவத் துறையில் இருப்பதாகச் சொன்னீர்கள். ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமுன் கடவுளை வேண்டுவீர்களா? அல்லது தங்களின் தொழிலின் மீதுள்ள திறமையை முழுவதுமாக நம்புவீர்களா?

என் திறமை இறைவன் எனக்குக் கொடுத்தது! எத்தனையோ மருத்துவர் இங்கிருக்க, எனை நாடி வந்த நோயாளி நலம் பெற வேண்டும் என என் முருகனை வேண்டிக்கொண்டு என் திறமையைக் காட்டுவேன்!

5)பிராமனர்கள் பொதுவாக தமிழை விட சமஸ்கிருதம் என்ற தேவபாஷையைத்தான் அதிகமாக வாழ்த்துவதாகவும் பாராட்டுவதாகவும் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. சமஸ்கிருதம் வாழ்க என்று சொல்லும் வலைப்பதிவர்கள் தமிழில் ஏன் வலைப்பதிவு செய்ய வேண்டும்? சமஸ்கிருதத்தில் வலைபதிய வேண்டியதுதானே? எனக்குத் தெரிந்து தாங்கள் நடுநிலையாளர். நல்ல சிந்தனையாளர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ் என்று சொன்னார்கள் பெரியவர்கள். தமிழை நீசபாசை என்பவனின் நாவை அறுக்காமல் பல பதிவர்கள் வடமொழியை உயர்த்திப் பேசுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்கள் கேள்வியே தவறு எனக் கருதுகிறேன்.

ஒருவருக்குத் தாயை விட தந்தையை அதிகமாகப் பிடிக்கும், அல்லது தந்தையை விட தாயை அதிகம் விரும்புவார்கள். இதனால், அடுத்தவரை இழிவாகக் குறிப்பதாக எண்ணுவது மதியீனம்.

ஸம்ஸ்கிருதத்தை ஒருவர் விரும்புவதால் அதனைக் கொண்டு அவரது தமிழ்ப்பற்றை கேள்வி கேட்ட்பது, தாயைச் சந்தேகிப்பதை ஒக்கும் என நான் கருதுகிறேன்.

'நீசபாஷை என்பது வடமொழி........ 'காட்டுமிராண்டி மொழி' என்பது தமிழ். ....அவ்வளவுதான் இதில்!


இப்படிச் சொன்னவர் எல்லாரையும் பார்த்து சிரித்து விட்டு அப்படியே போகக் கற்றுக்கொண்டால் வாழ்வு மகிழ்வாய் இருக்கும்!

உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு முன், சுடரின் விதிமுறைகளைப் பார்த்தேன்.. அதில், ஒன்பதாவது விதியாய் இப்படிச் சொல்லி இருக்கிறது!

ஆனால், கடந்த சில சுடர்கள் இதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.


இச்சுடரை ஏற்றி, நம் மீது நம்பிக்கை வைத்து, இது மனிதநேயம் மலர வழி வகுக்கும் எனச் சொல்லி மறைந்த அம்மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையாய் இசுசுடரை நம் ஆன்மீகச் செம்மலாம் குமரனுக்கு அனுப்பி மனிதம் வாழ வகை செய்ய வேண்டுமாய்க் கேட்டு அனுப்புகிறேன் இந்த சுடர் .... ஆத்திகச் சுடர்....... எங்கும் பரவட்டும்!

அன்பு குமரனுக்கு என் ஐந்து கேள்விகள்!

1. நீங்கள் பார்ப்பனர் அல்ல எனத் தெரியும் எனக்கு. உங்களை ... உங்கள் சாதியினரை ஏன் பார்ப்பனரோடு வைத்து சதிராடுகின்றார்கள்? சௌராஷ்ட்ரர்களுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு?.

2.. திருப்பரங்குன்ற முருகனை வைத்து ஒரு கவி பாடுங்களேன்!

3. கூட்டு வலைப் பதிவைத் தவிர, தனியே வலைபதிவதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

4. சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

5. "ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா! மனம் சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடா" என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?


ஆத்திரச் சுடர் அடங்கி, ஆத்திகச் சுடர் ஒளிரட்டும்!
அன்பே சிவம்!

http://karuppupaiyan.blogspot.com/2007/02/blog-post_16.html
http://www.thenkoodu.com/sudar.php

54 பின்னூட்டங்கள்:

VSK Saturday, February 17, 2007 5:50:00 PM  

ஆத்திகச் சுடர் ஏற்றிடுவோம்!

குமரன் (Kumaran) Saturday, February 17, 2007 6:21:00 PM  

சுடர் என்றால் ஒளி வீச வேண்டும். சுட்டெரிக்கக் கூடாது என்பதை நன்கு காட்டும் சுடர் இது. இந்தச் சுடரைப் படித்தப் பின் இதற்கு முன் வந்த சுடர்களையும் (இதற்கு முந்தையச் சுடரைப் படித்துவிட்டேன். அதற்கு முந்தைய சுடர்களையும்) படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கிறது.

நல்ல கருத்துகள் எஸ்.கே. என்னைக் கேட்ட கேள்விகளைப் பற்றி இனிமேல் தான் சிந்திக்க வேண்டும். என்ன பதில்கள் வருகின்றன என்று பார்க்கிறேன். முருகனருள் முன்னிற்கும்.

குமரன் (Kumaran) Saturday, February 17, 2007 6:22:00 PM  

ஒரு முறை இந்தப் பதிவைப் படித்துவிட்டேன் எஸ்.கே. பல கருத்துகளைக் கூற வேண்டும். ஆனால் இப்போது வேலையாக இருப்பதால் பின்னர் வருகிறேன்.

சிவபாலன் Saturday, February 17, 2007 6:25:00 PM  

SK அய்யா

சுவைபட எழுதியுள்ளீர்கள்!!

இரசித்து படித்தேன்!!

நன்றி!

VSK Saturday, February 17, 2007 6:37:00 PM  

சுட்டெரிக்காமல், சுடர் விடும் எனத் தெரிந்துதானே உங்களிடம் இதை அனுப்பி வைத்திருக்கிறேன், குமரன்!
:))

வடுவூர் குமார் Saturday, February 17, 2007 9:50:00 PM  

அழகான,அருமையான & ஆழமான பதில்கள் மற்றும் உங்கள் கேள்விகள்.
சூப்பர்.

ஓகை Saturday, February 17, 2007 11:39:00 PM  

சுட்டெரிக்கும் தீக்கணைகள் சுடரெனவே வேடமிட்டும்
பட்டறிவின் துணைகொண்டு பாங்குடனே பதில்சொன்னீர்
கட்டவிழ்ந்த சூரனையே களையெடுத்த முருகனருள்
இட்டமுடன் பெற்றவர்நீ இனியசங்கர் குமரவேளே!

VSK Sunday, February 18, 2007 12:51:00 AM  

ரசித்துப் படித்துப் பாராட்டியமைக்கு நன்றி, சிபா!

VSK Sunday, February 18, 2007 12:54:00 AM  

பாராட்டுக்கு நன்றி, திரு.குமார்

VSK Sunday, February 18, 2007 1:00:00 AM  

தீக்கணையும் மலராகும் தமிழ்வேளின் கருணையினால்
தீந்தமிழின் துணையிருக்க தடையேது பதில் சொல்ல
மக்களிலே பேதமில்லை எல்லாரும் நல்லவரே
செந்தமிழ்க் கவிபுனைந்த ஓகையாரே வாழியநீ.

G.Ragavan Sunday, February 18, 2007 1:07:00 AM  

சுடரேற்றி விட்டீரா எஸ்.கே. வாழ்த்துகள். சுடர் செல்லும் வழி வியப்புக்குரியதாய்...மிகப் புதுமையாய் இருக்கிறது. தொடரட்டும் இந்தச் சுடர்.

உங்கள் தந்தையார் பூசித்த முருகன் இப்பொழுது உங்களோடு இருக்கிறான் என்பதறிந்து மெத்த மகிழ்ச்சி. இது எனக்கு வாரியார் பற்றிய செய்தி நினைவிற்கு வருகிறது.

வயலூர் திருப்பணியின் போது மிச்சமிருந்த உலோகங்களை வைத்து வள்ளி தெய்வயானையோடு கூடிய வேலுடை முருகனைச் செய்து வழிபட்டு வந்தாராம். அந்த முருகன் அவரது தமையன் மக்களிடம் இருந்து இன்னும் பூசிக்கப்படுகிறதாம்.

முகமூடியாகவோ முகந்திறந்தியாகவோ இருப்பது தவறில்லை. ஆனால் தான் சொல்வது நன்மையையும் ஒற்றுமையையும் ஓங்குவித்து உதவுகிறதா என்பதே முக்கியம். குறைந்தபட்சம் அது பிரச்சனையை உண்டாக்குவதாகவும் இருக்கக் கூடாது. இது அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது.

குமரனிடம் நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கின்றீர்கள். அவைகளுக்கான குமரனின் விடைகளுக்காகக் காத்திருக்கிறேன்.

இலவசக்கொத்தனார் Sunday, February 18, 2007 1:08:00 AM  

நல்ல பதில்கள் எஸ்.கே.

மூன்றாவது கேள்விக்கான பதிலை மீண்டும் படிக்க வேண்டும். மணி இரவு ஒன்றாகிறது. அவ்வளவு பெரிய பதிலைப் படிக்க ஆயாசமாக இருக்கிறது. ஆனால் கட்டாயம் படிக்க வேண்டிய பதில். நாளை படிக்கிறேன்.

அடுத்தது குமரனா? நல்லது.

நான் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேனே! அவரது நண்பர் என்ற முறையில்.

//3. கூட்டு வலைப் பதிவைத் தவிர, தனியே வலைபதிவதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?//

அவர் தமிழ்மணத்தில் இணைக்கவில்லையே தவிர பதிந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது பதிவை ரசிப்பவர்கள் அவருக்கு தமது மின்னஞ்சல் முகவரியைத் தந்தால் அவர்களுக்கு பதிவுகள் பற்றிய தகவல்களை தருகிறாரே! உங்களுக்கு அத்தகவல் வருமென்றே நம்புகிறேன். அவருக்கு நேர்ந்த சில சம்பவங்களினால் அவர் தமிழ்மணத்தில் இருந்து மட்டுமே விலகிக்கொண்டுள்ளார்.

அவரது பதிலை நான் சொன்ன என் முந்திரிக்கொட்டைத்தனத்தை மன்னிக்கவும்.

Pot"tea" kadai Sunday, February 18, 2007 1:36:00 AM  

ஆத்திகச் சுடர் மிளிர்கிறது!

//கடந்த சில சுடர்கள் இதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.//

இது எனக்கா சொன்னீர்கள்?

:-))

I dont play by rules...and I dont like those games too...

விதிகட்குட்பட்டு தான் எழுத வேண்டுமென்பதை முன்னரே அறிந்திருந்தால் சுடரையே பொசுக்கியிருப்பேன்.

:-))

VSK Sunday, February 18, 2007 1:37:00 AM  

நல்லபடியாகப் பாராட்டி நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்!

//முகமூடியாகவோ முகந்திறந்தியாகவோ இருப்பது தவறில்லை. ஆனால் தான் சொல்வது நன்மையையும் ஒற்றுமையையும் ஓங்குவித்து உதவுகிறதா என்பதே முக்கியம். குறைந்தபட்சம் அது பிரச்சனையை உண்டாக்குவதாகவும் இருக்கக் கூடாது. இது அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது.//


நான் சொல்ல வந்த மையக் கருத்தை நன்கு புரிந்த பதில்.

"2007-ல் நடக்க வேண்டும்" என நான் விரும்புவதும் இதுவே!

நன்றி ஜிரா.

VSK Sunday, February 18, 2007 1:40:00 AM  

முழுசும் படிக்காம, இல்லை,இல்லை, முனைஞ்சு படிக்காம உடனே பின்னூட்டம் இட்ட உங்க ஆர்வத்துக்கு நன்றி, கொத்ஸ்!

குமரனுக்காக பரிஞ்சுவந்து இலவசமா வூடு கட்டிக் கொடுத்ததுக்கும் நன்றி.

சும்மாவா பேரு 'இ.கொ.ன்னு வெச்சுருக்கீங்க!
:))

VSK Sunday, February 18, 2007 1:47:00 AM  

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி, திரு. 'பொட்"டீ"க்கடை'!

நான் எழுதத் துவங்கும் முன், எல்லாப் பதிவுகளையும் படித்தேன். கூடவே திரு. வி.க. அனுப்பிய தேன்கூடு 'சுடர்' விதி முறைகளையும் படித்தேன்.

அதன் அடிப்படையில் எனக்குத் தோன்றிய கருத்தே அது!

தனிப்பட்ட முறையில் தங்களைக் குறித்ததாகக் கொள்ள வேண்டாம்.

நன்றி.

VSK Sunday, February 18, 2007 3:04:00 AM  

திருமதி உஷாவிடமிருந்து வந்த தனிமடல்... அவர் அனுமதியுடன்!

" அன்புள்ள எஸ்.கே,
அருமையாய் எழுதியிருக்கிறிர்கள். தெளிவாகவும் ஆழந்த கருத்துக்களைக்
கொண்ட நடை. சுடர் நின்று, நிதானமாக ஒளிவீசுகிறது. வாழ்த்துக்கள்.
குமரன் என்ன எழுதப்போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
உஷா"

பாராட்டுக்கு மிக்க நன்றி, உஷா அவர்களே.

குமரனும் சுடர் ஏற்றி விட்டார்!
ரொம்பா நேரம் வைத்துக் கொள்ள முடியலையாம்!
சுட்டுது போல!:))

http://solorusol.blogspot.com/2007/02/blog-post_17.html

நெல்லை சிவா Sunday, February 18, 2007 3:27:00 AM  

ஒளிவிடும் ஆத்திகச் சுடர், மிக நிதானமாய், சுடரின் கண்ணியம் காத்து மிளிர்கிறது, அய்யா. வாழ்த்துக்கள்!

VSK Sunday, February 18, 2007 3:37:00 AM  

தங்களது மனந்திறந்த பாராட்டு, நிறைவைத் தருகிறது, திரு. நெல்லைசிவா!

மிக்க நன்றி!

முத்துகுமரன் Sunday, February 18, 2007 4:12:00 AM  

சுடரொளி நன்கு பரவியிருக்கிறது. எளிமையான அதே சமயம் அழகு தமிழில் சுடர்விட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது. சுடரில் வயதின் நிதானம் தெரிகிறது.
//இவ்வளவு பலவும் 'விதிக்கப்பட்டதாய்' இருப்பினும், நான் எவ்வாறு இருக்க வேண்டும், மனிதத்தை, மானுடத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு எவராலும் 'விதிக்கப்படாதது'!
இதனை உருவாக்குவது நான் ஒருவன் மட்டுமே! //

நான் மிகவும் ரசித்து வாசித்த வரிகள் இவை. மானுடத்தை மனித தன்மையோடு எதிர்கொண்டாலே இங்கு புரையோடியிருக்கும் புண்களை களைந்தெறிந்துவிடலாம். சமூகத்தின் மனிதராக உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

சுடர் அவரவர் வெளிச்சத் தேவைக்கேற்பவே சுடர்விடும் என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.

அன்புடன்
முத்துகுமரன்

நாமக்கல் சிபி Sunday, February 18, 2007 4:49:00 AM  

//
எதையும் யாரிடமும் திணிக்க எவராலும் முடியாது என்பது என் கருத்து.

நம் கருத்துகளை நம்மால் சொல்லத்தான் முடியுமே தவிர, எவரையும் அதனை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது
//

யதார்த்தமான வரிகள். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

இராம்/Raam Sunday, February 18, 2007 5:21:00 AM  

ஐயா,

அருமையான பதிவு, சகோதரர் கருப்புவின் கேள்விக்களுக்கு நிதானமான தெளிவான பதில்கள்.....

நம்ம மன்னாரை விட்டு இந்த சிட்டிவேசனுக்கு ஒரு குறளை விளக்கவுரை சொல்ல வைச்சிருக்கலாம் :))

வல்லிசிம்ஹன் Sunday, February 18, 2007 7:21:00 AM  

நன்கு யோசித்து நிதானமாகப் பதில் சுட ஏற்றி இருக்கிறீர்கள் எஸ்.கே சார்.உங்கள்
பேரிலும் முருகன் இருக்கிறான்.
எல்லா எண்ணங்களியும்,சொற்களையும் வாழ்க்கையையும்
பாதுகாப்பான்.
உங்கள் பதிவைப் படித்ததில் நிம்மதி கிடைத்தது.
நன்றி.

Unknown Sunday, February 18, 2007 7:52:00 AM  

//இதனை உணர்ந்து எவ்வாறு நடந்து கொள்வது என்பதே நம் அனைவரின் செயலாக இருக்க வேண்டும்.//

//இவ்வளவு பலவும் 'விதிக்கப்பட்டதாய்' இருப்பினும், நான் எவ்வாறு இருக்க வேண்டும், மனிதத்தை, மானுடத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு எவராலும் 'விதிக்கப்படாதது'!//

//இப்படிச் சொன்னவர் எல்லாரையும் பார்த்து சிரித்து விட்டு அப்படியே போகக் கற்றுக்கொண்டால் வாழ்வு மகிழ்வாய் இருக்கும்!//

அழகான ஆழமான கருத்துக்கள். எஸ்கே ஐயா.

thiru Sunday, February 18, 2007 9:26:00 AM  

சுடர் ஒளிரட்டும். நன்றாக ஒளி சேர்த்தீர்கள் நண்பரே!

VSK Sunday, February 18, 2007 9:44:00 AM  

எழுதுகையில் எனக்கும் பிடித்த அதே வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு மிக்க நன்றி, திரு. முத்துகுமரன்.

வெளிச்சத்தேவை அவரவர்க்கு ஏற்றபடி அமைவது சரிதான்.
ஆனால், வெளிச்சம் ஒன்றுதான்!
தேவைதான் மாறுபடுகிறது.

VSK Sunday, February 18, 2007 9:47:00 AM  

அருமையாகச் சொன்னது இருக்கட்டும்!
அடுத்து குமரன் உங்களிடம்தான் அனுப்பியிருக்கிறார் சுடரை!

http://solorusol.blogspot.com/2007/02/blog-post_17.html

என்னென்னவோ வேறு கேட்டிருக்கிறார்!
படிக்கக் காத்திருக்கிறேன்!

நன்றி!

VSK Sunday, February 18, 2007 9:49:00 AM  

மன்னாரையே இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லச் சொல்லிக் கேட்கலாமா எனத்தான் முதலில் நினைத்தென், ராம்!

ஆனால், திரு. வி.க. கேட்டது என்னை என்பதால் நானே சொல்லி விட்டேன்!
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

VSK Sunday, February 18, 2007 9:50:00 AM  

//உங்கள் பதிவைப் படித்ததில் நிம்மதி கிடைத்தது.//

உங்கள் பின்னூட்டத்தைப் படித்ததில் எனக்கும் நிம்மதி கிடைத்தது, வல்லியம்மா!

மிக்க நன்றி.

VSK Sunday, February 18, 2007 9:55:00 AM  

இந்த உணர்வு வலைபூவெங்கும் பரவி, நல்லெண்ணம் மலர, எல்லாம் வல்ல பரம்பொருளின் அருள் முன்னிற்கட்டும்!

மிக்க நன்றி, நண்பர் சுல்தான்!

VSK Sunday, February 18, 2007 9:58:00 AM  

எனக்குத் தெரியும் ஒளியைக் காட்ட முற்பட்டேன், நண்பர் திரு!

உங்களுக்குப் பிடித்திருப்பது அறிந்து மகிழ்கிறேன்.

மிக்க நன்றி.

jeevagv Sunday, February 18, 2007 10:01:00 AM  

சுடரொளி எங்கெங்கும் பரவட்டும்!
எட்டுத் திக்கும் எட்டெட்டும்!
மிக்க நன்றி.

VSK Sunday, February 18, 2007 10:11:00 AM  

தங்கள் ஆசை மொழிகளை, ஆசி மொழிகளாக ஏற்கிறேன், திரு. ஜீவா!
நன்றி.

கதிர் Sunday, February 18, 2007 12:16:00 PM  

சுவையான பதில்கள்.
மிகவும் ரசித்து படித்தேன்.

மூன்றாவது கேள்விக்கான பதில்களின் ஒவ்வொரு வரியும் அனுபவித்து படித்தேன்.

நல்ல சுடர் வீசட்டும்.

அன்புடன்
தம்பி

VSK Sunday, February 18, 2007 1:39:00 PM  

தம்பீஈஈஈஈஇ!
முதல் முறையாக வந்ததில் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்!

மிக்க நன்றி!

நாமக்கல் சிபி Sunday, February 18, 2007 1:40:00 PM  

//என்னென்னவோ வேறு கேட்டிருக்கிறார்!
படிக்கக் காத்திருக்கிறேன்!//

மிக்க நன்றி எஸ்.கே அவர்களே!
நானும் சுடர் ஏற்றிவிட்டேன்!

http://pithatralgal.blogspot.com/2007/02/200.html

:))

SP.VR. SUBBIAH Sunday, February 18, 2007 2:37:00 PM  

அய்யா, தாமதத்திற்கு மன்னிக்கவும்!
சுடர் பெருமையுற்றது உங்கள் பதிவால்!

VSK Sunday, February 18, 2007 3:38:00 PM  

24 மணி நேரத்தில் 3 சுடர்கள்!
ஒரு கின்னஸ் சாதனை!
வாழ்க! வளர்க!
ஆத்திகச் சுடர் எங்கும் பரவுக!

யோகன் பாரிஸ்(Johan-Paris) Sunday, February 18, 2007 4:29:00 PM  

அண்ணா!
நிதானத்தால் எந்த சிக்கலையும் சமாளிக்கலாம்.
சும்மா இரு சொல் அற போல்; நிதானமான அளவான சொற்பிரயோகமும்; நிம்மதியையும்;வெற்றியையும் தரும்.

VSK Sunday, February 18, 2007 8:58:00 PM  

உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்திருந்தேன் ஆசானே!

ஒருவரிப் பின்னூட்டாத்தால் மனம் அமைதியுற்றது!
:))

VSK Sunday, February 18, 2007 8:58:00 PM  

நன்றி, திரு.யோகன் பாரிஸ்

கோவி.கண்ணன் Monday, February 19, 2007 12:46:00 AM  

எஸ்கே ஐயா,

சுடரின் ஒளி சுயமாய் நன்றாக ஒளிர்ந்திருக்கிறது. அனைவரும் கண்டு ரசித்த ஒளியை தொலைவிலிருந்து (தூரம்) நானும் தரிசித்தேன்.

நன்றி வணக்கம் !

மெளலி (மதுரையம்பதி) Monday, February 19, 2007 1:02:00 AM  

எஸ்கே சார்,

இன்றுதான் படிக்க நேரம் கிடைத்தது...அருமையான பதில்கள், தங்கள் மனத்தை அருமையாக வெளிக்கொணர்ந்த எழுத்து....நன்றி.

கருப்பு Monday, February 19, 2007 1:06:00 AM  

அழைப்பினை ஏற்று சுடரை மிகவும் அற்புதமாக ஏற்றி வைத்தீர்கள்.

தங்கள் பதிலுக்கும் நீண்ட பதில் சொல்ல ஆசை. ஆனால் கடமை(பணி) என்னை தடுக்கிறது.

பிறிதொருநாள் இந்த "விதிக்கப்பட்ட" என்பதன் பொருளையும் அதனால் பட்ட ரணங்களையும் வைத்து பதிவொன்றிட இருக்கிறேன்.

தங்களின் சுடர் சென்ற இடம் குமரன். அதனையும் படிக்கிறேன் நண்பரே.

VSK Monday, February 19, 2007 8:46:00 AM  

kanநாகை, திருச்சியிலும் சுடர் தெரிந்ததா?

வெறும் தரிசனம் மட்டும்தானா, கோவியாரே!

தரிசன அனுபவம் ஒன்றும் சொல்ல வில்லையே!
:))

VSK Monday, February 19, 2007 8:47:00 AM  

மிக்க நன்றி, மதுரையம்பதியாரே!

ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறேன்.

VSK Monday, February 19, 2007 8:50:00 AM  

//பிறிதொருநாள் இந்த "விதிக்கப்பட்ட" என்பதன் பொருளையும் அதனால் பட்ட ரணங்களையும் வைத்து பதிவொன்றிட இருக்கிறேன்.//


ரணங்கள் இல்லையென்றோ, இருக்காதென்றோ நானும் சொல்லவில்லை, நண்பரே!

அதை அனைவருமாகச் சேர்ந்து ஆற்ற முற்படுவோம்; கிளறிக் கிளறி மேலும் பெரிய ரணமாக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

சுடரை என்னிடம் அளித்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி!

ச.சங்கர் Monday, February 19, 2007 9:36:00 AM  

சுடர் பிரகாசித்தது எஸ்.கே அவர்களே

அன்புடன்...ச.சங்கர்

VSK Monday, February 19, 2007 10:35:00 AM  

மிக்க நன்றி, திரு. சங்கர்!

பச்சப்புள்ள Wednesday, February 21, 2007 9:59:00 PM  

ஆஹா, என்ன அருமையான குரல். டாக்டருக்கு பாட்டெல்லாம் வருமா ? சின்ன பிள்ளைகளுக்கு ஊசியெல்லாம் போடக்கூடாது.

http://esnips.com/doc/baed1c74-f701-4d81-9bf5-c8d944d7cfa9/SK_Nan_Oru

VSK Wednesday, February 21, 2007 10:17:00 PM  

என்னங்க பச்சப்புள்ள்தனமா சுடருக்கெல்லாம் வந்து பாடச் சொல்லி தொந்தரவு பண்ணினா ஊசி போடாம எப்படி.....!

கொசு Friday, February 23, 2007 10:52:00 PM  

பார்ப்பனர் மட்டுமே உலகில் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொல்கிறார்களே, அது எதனால் எஸ்கே சார்? ஏன் சார்? எப்படி சார்?

VSK Friday, February 23, 2007 10:57:00 PM  

எனக்குத் தெரிந்து யாரும் இப்படி சொல்லிக் கொல்[ள்]வதில்லை, திரு. கொ.பு.!

தப்பித்தவறி யாரும் சொன்னாலும் அதற்கு ஆப்பு வைக்கத்தான் உங்களைப் போல, என்னைபோல சிலர் இருக்கிறோமே!!

நீங்க சொல்வதெல்லாம் கொஞ்ச காலத்துக்கு முந்தி நடந்திருக்கலாம்.

Kavinaya Tuesday, June 03, 2008 12:28:00 PM  

குமரன் புண்ணியத்துல இப்பதான் படிச்சேன் அண்ணா. அனுபவத்துக்கு தகுந்த பதில்கள். மனித நேயமும் மிளிர்கிறது. வாழ்த்துகள்!

இப்ப போய் குமரன் என்ன சொல்றார்னு பார்க்கிறேன் :)

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP