Wednesday, February 28, 2007

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! 11

மயிலை மன்னாரின் குறள் விளக்கம்! [11]
"படைச் செருக்கு" [771]


இந்த லப்-டப் எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தேன்... இப்பவெல்லாம் மன்னாரைப் போய் பார்க்கவே நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது!

இன்றைக்கு எப்படியாவது பார்த்துடணும்னு முடிவு பண்னி, அவனைத் தேடி 23B பஸ் பிடித்து லஸ் கார்னரில் இறங்கி, சூடான வேர்க்கடலை ஒரு 2 ரூபாய்க்கு வாங்கி, கொரித்துக் கொண்டே வழக்கமான டீக்கடை நோக்கி நடந்தேன்.

திடீரென ஒரு கரம் என்னை இழுத்து ப்ளாட்ஃபாரத்தில் தள்ளியது.
அதே நேரம், "ஸர்"ரென்று ஒரு பஸ் என்னைத் தாண்டிச் சென்றது!

"இன்னாப்பா! வூட்ல சொல்லிக்கினு வண்ட்டியா? என் பஸ்தானா ஒனக்குக் கெடச்சது அதுக்கு.... சாவுக்கிராக்கி" என்ற மாமூல் திட்டுடன் டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

சற்று சுதாரித்துக் கொண்டு யார் நம்மைக் காப்பாற்றியது எனப் பார்த்தால்... சாக்ஷாத் மயிலை மன்னார்!

"ஒரு ஸெகண்டு வுட்ருந்தா இன்னா ஆயிருக்கும்! பாத்து வரக்கூடாது ஸங்கரு! ஸரி ஸரி.. வா! கெதி கலங்கிப் போயிருக்கே! நாயர் கடைல டீயும், வடையும் துன்னியானா அல்லாம் ஸரியாப் பூடும்" என ஆதரவாய்ச் சொல்லிக் கொண்டே என்னைக் கூட்டிப் போனான், மன்னார்.

'ஆமா! அப்டி இன்னா தல போற விசயம் யோஸிச்சிகினு இருந்தே! சொல்லு!' என்றான்.

'ஒண்ணுமில்லேப்பா! உன்னைப் பர்த்து நாளாகி விட்டதே. இன்று எப்படியும் பார்த்து விடணும்னு வந்தேன். கொஞ்சம் அஸால்ட்டா இருந்துட்டேன். ரொம்ப நன்றிப்பா!' என்று மஸால் வடையை கடித்துக் கொண்டே ஸொன்னேன்!

'அதான் நாம ஒனக்கு ஒரு ஸோல்ஜர் மாரி இருக்கோம்ல! எங்ஙன போனாலும் வுட்ட்ருவோமா? சமயத்துல ஸோல்ஜர்! ஆனா நெஸமாலும் ராஸா!' என்று சற்று மிதர்ப்பாக சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்.

இப்படி ஒரு ஆளு எனக்கு நண்பனாய் இருப்பதற்கு, இல்லை இல்லை ராஜாவாய் இருப்பதற்கு, இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே, 'இதே மேட்டர்ல ஒரு குறள் சொல்லி பொருளும் சொல்லேன்' என்றேன் நான்.

'அவ்ளோதானே! என்னிய மாரி ஒர்த்தன் ஒனக்கு இருக்கான்றதை நீ எப்படி போயி மத்தவங்ககிட்ட சொல்லுவேன்னு ஒரு குறள்..... வேணாம்... கதை ஒண்ணு சொல்றேன், எளுதிக்கோ!" என்றான்.


இனி வருவது, அவன் சொல்ல, நான் எழுதி உங்கள் முன் வைப்பது!

"அதியமான், அதியமான்னு ஒரு ராஸா இருந்தானே, தெர்யுமா? அதாம்ப்பா! நம்ம அவ்வைப்பாட்டிக்கு கூட நெல்லிக்கா கொடுத்தன்னு படிச்சோமே நம்ம இஸ்கூல்ல! அவந்தான்!

அவனும், இந்த அவ்வையாரும் ரொம்பவே தோஸ்துங்க. நீயும், நானும் மாரின்னு வெச்சுக்கயேன்!

எதுனாச்சும் ஒண்ணுன்னா, இவன் அந்தம்மாவுக்கு ஒதவி பண்றதும், அவனுக்கு எதுனாச்சும் புத்தி சொல்லணும்னா இந்தம்மாவைக் கேக்கறதும், அவங்க அத்தினி வேலையையும் போட்டுட்டு வந்து இவனுக்கு அட்வைஸ் கொடுக்கறதும் .... அப்படியே ரொம்ம்ம்ம்ப ஃப்ரென்ட்ஷிப்பா இருந்தாங்க.

இந்தம்மா அவனோட வீரத்தைப் பத்தில்லாம் நெறையவே பாட்டெல்லாம் பாடியிருக்கு!

ஒருநாளைக்கு அடுத்த ஊர்ல இருக்கற, தொண்டமான்ங்ற ராஸா ஒர்த்தன்.. இன்னாமோ இவன்ட்ட கோவிச்சுகிட்டு, பலான பலான தேதிக்கு நான் ஒன் நாட்டு மேல படையெடுக்கப் போறேன். ஒன்னால ஆனத செஞ்சிக்கோன்னு ஒரு ஓலை வுட்டான்.

அதியமானும், வலுச்சண்டைக்கு போறதில்லை; வந்த சண்டைய வுடறதில்லன்னு சண்டைக்கு ரெடியாயிட்டு இருக்கான்!

ஆனாக்காண்டி, நாட்டுல கொஞ்சம் நெலமை மோசமாயிருந்திச்சு அப்ப.

கொஞ்சம் பஞ்சம்,
மக்கள்ல்லாம் பசி, பட்டினின்னு பஞ்சம் பொளைக்கப் போயிருக்காங்க!

இந்த சமயத்துல, சண்டை வேணாமேன்னு அவ்வையாரம்மா நெனைக்கறாங்க.

"தா! நீ கொஞ்சம் கம்முனு இரு. ஒன் வீரம்ல்லாம் எனக்குத் தெரியும் நல்லாவே! ஆனா, அது இப்ப வேணாம்! நா போயி இன்னா, ஏதுன்னு கண்டுகினு வரேன்'ன்னு சொல்லிட்டு தொண்டமான் ஊருக்கு வராங்க!

'ஆஹா! எப்பவும் நம்ம ஊருக்கு வராத கெளவி இப்ப நம்மைத் தேடி வந்திருக்காங்களே'ன்னு ராஸாவுக்கு ஒரே குஷியாப் பூடுச்சு!

தடபொடலா விருந்து வைக்கிறான்!

ராஸான்னா, அவனைப் பத்தி எதுனாச்சும் பாடணுமே!

'இன்னாடா பாடறது. நம்ம ஆளை வுட்டுக் கொடுக்காம நாம இவனைப் புகழ்ந்தும் பாடணுமே'ன்னு யோசிக்கறாங்க!

அப்ப, இந்த ராஸா இன்னா பண்றான்; ....அவனோட கத்தி கபடால்லாம் வெச்சிருக்கற எடத்துக்கு கூட்டிகினு போயி காமிக்கறான்.

'பாட்டியும் பாக்கட்டும், பார்த்தா, போயி, அதியமான்ட்ட சண்டை இல்லாம பணிஞ்சுறச் சொல்லிடும் இந்த அம்மா'ன்னு ஒரு கணக்கு போடறான்.

அங்க பாத்தா, வேலு, வில்லு, அம்பு, கத்தி, கேடயம், ஈட்டின்னு அளகா அடுக்கி வெச்சிருக்கு.

பாட்டிக்கு டமார்னு ஒரு ஐடியா கிடைக்குது!
பாடறாங்க!

"இங்கே பார்த்தா, மாலை சூட்டி, பொட்டு வெச்சு, எண்ணை தடவி, சும்மா பளபளான்னு பட்டை தீட்டி, புச்சா, இத்தினி அடுக்கி வெச்சிருக்கே ராஸாவே!

ஆனா, அங்கே அதியமான்ட்ட போயி பார்த்தியானா, சதா சண்டை போட்டு, சண்டை போட்டு, அவன் கத்தில்லாம் ஒடஞ்சி போயி, ஈட்டில்லாம் முறிஞ்சி போயி, காயலான் கடைல கீற மாரி குமிஞ்சு கெடக்கு.

இதுலேர்ந்து இன்னா தெரியுதுன்னா, சண்டைன்னா அவன் ஒரு கை பாக்காம வுட மாட்டான்.

ஆனா, ஒர்த்தன் கிட்ட ஒண்ணும் இல்லியா அவனோட சேர்ந்து போயி இவன், தன் சோத்தையும் வெச்சு அவனோட சாப்பிடுவான்!

ஆகக்கண்டி,....இன்னா....உன் வேலெல்லாம் பிரமாதமாத்தான் இருக்கு"

அப்பிடீன்னு ஒரு பாட்டு பாடறாங்க!

அவ்ளோதான்!

ராஸாவுக்கு புரிஞ்சிடுது!

இப்ப மாரி அடுத்தவன் அசந்திருக்கற நேரம் பர்த்து அடிக்கற எனம் இல்லை தமிளினம்!

ஒனக்கு சரிசமானமா இருக்கறவனோட மட்டுமே சண்டை போடணும்னு தெரிஞ்சு வெச்ச எனம் நம்முளுது!

'இவுஹ சொன்னதுலேர்ந்து, அங்கே நெலமை சரியில்லை; இப்ப நாம சண்டை போடக்கூடாது'ன்னு தொண்டமானும் அப்போதிக்கு நிப்பாட்டிர்றானாம் சண்டைய!

இதுல வள்ளுவரு எங்கே வராருன்னு கேக்கிறியா!?

அவரும் இந்த அம்மா காலத்துல இருந்தவர்தானே!

அவருக்கும் இது தெரிய வருது!

அவரு இதை ஒரு குறள்ல சொல்லணும்னு நெனைக்கறாரு!

"படைச்செருக்கு"ன்னு ஒரு அதிகாரம் எளுதறாரு!

அதுல மொதக் குறளா இதை வைக்கறாரு!

"என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலர் என்னை
முன் நின்று கல்நின் றவர்." [771]

"ஏ எதிரிங்களே! என் தலைவன் முன்னே நின்னு, போர் செஞ்சு, மடிஞ்சு, அவனவனுக்குக் ஸமாதி கட்டிகிட்டவங்க பல பேரு!
ஆனதுனால, என் தலைவன் முன்னே நிக்காதீங்க!"

அப்படீன்னு அம்ஸமா ஒரு குறளு, அதுவும் இது எங்கினாச்சும் நமக்கு மறந்து பூடுமோன்னு நெனச்சி, மொதக் குறளாவே எளுதியிருக்காரு!

அதே மாரி,.....நீயும் போயி, நம்ம பெருமைய ஊருக்கெல்லாம் ஸொல்லு!"


என்று சொல்லியபடி நகார்ந்தான் மயிலை மன்னார்!

'அது ஸரி மன்னார்! அவ்வையார் பாடினது என்னன்னு ஸொல்லவே இல்லியே' எனக் கேட்டேன்!

"அதுவா! பொறநானூறுல 95ஐப் பாருன்னு கண் சிமிட்டியவாறே ஸொல்லிவிட்டுப் போய்விட்டான் மயிலைமன்னார்!

அவசர அவசரமா வீட்டுக்கு வந்து, புஸ்தகத்தைப் புரட்டினேன்!

இதோ அந்தப் பாடல்!"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே, அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றிலமாதோ -- என்றும்,
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே."


இதோ நண்பர்களே! உங்கள் பார்வைக்கும் இது!

நன்றி!6 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Wednesday, February 28, 2007 8:07:00 PM  

இன்று காலை மன்னாருடன் விடிந்தது.
கடைசி நேரத்திலும் "புற நானூறு" என்பதை பொற நானூறு என்று சொல்லும் மன்னாரின் வாக்கு "சுத்தமாக" இருக்கு.
அடுத்ததபா போனா கொஞ்சம் கண்டிகினு வரனும்.

VSK Wednesday, February 28, 2007 8:18:00 PM  

அவ்வளவுதான குமார்!

இவ்வளவு பெருசா எழுதியிருக்கேன்!

அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட எழுதலியே!

ஆனாலும், முதலாக வந்து பதிந்ததற்கு மிக்க நன்றியும் கூட!
:))

கோவி.கண்ணன் Wednesday, February 28, 2007 10:54:00 PM  

எஸ்கே ஐயா !
வஞ்சப் புகழ்ச்சி அணியும், உயர்வு நவிற்ச்சி அணியும் அணிந்துள்ள பாடல். கதை முன்பே கேள்விப் பட்டதுதான் மன்னார் மொழியில் நல்ல நகைச்சுவை துணுக்கு இது !

VSK Wednesday, February 28, 2007 11:52:00 PM  

அட! வாங்க கோவியாரே!

தமிழகப் பயணம் எல்லாம் சுகமே முடிந்து பயணக் கட்டுரையும் தொடங்கி விட்டீர்களே!

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

இதில் ஒன்றும் வஞ்சப் புகழ்ச்சி இல்லை!
:))

ஆமம்! இது 33ஆ இல்லை 3ஆ!
:))

Unknown Thursday, March 01, 2007 6:27:00 AM  

குறளுக்கேத்த புறநானூற்றுப் பாட்டு.
மன்னாரு கதையோடு குறளுக்குப் பொருள் ஸொல்றது இதுல பொருந்தி நல்லாயிருக்கு.

தொண்டைமான், அதியமானைப் போனாப் போகுதென்று விடவில்லை.
அவ்வைப் பாட்டி 'அதியமானுடைய கத்தி கபடா எல்லாம் போர் செஞ்சே உடைஞ்சிருக்கு' என்று சொல்வதன் மூலம், அதியமானுடைய வீரத்தை எடுத்துக் கூறி, வீரத்தை உடைய இரு மன்னர்கள் போர் செய்வதால், வீணாக இரு பக்கமும் ஏற்படவிருக்கும் அழிவைத் தடுத்து, இருவருக்கும் சமாதானம் செய்வித்ததாக எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள். மன்னாரிடம் கேட்டுச் சொல்லுங்க எஸ்கே ஐயா.

VSK Thursday, March 01, 2007 8:17:00 AM  

மன்னாரும் தொண்டைமான் போனாப்போகிறதென்று விட்டுக் கொடுத்ததாகச் சொல்லவில்லையே, திரு.சுல்தான்!

அவ்வைப்பாட்டி அதியமனின் வீரத்தை எடுத்துக் காட்டியதும், அங்கிருக்கும் நிலைமையை சூசகமாக உணர்த்தியதும், தொண்டைமான் மனம் மாறினான் என்பதாகத்தானே சொல்கிறான்.

உங்கள் ஆசிரியர் கருத்தைத்தான் அவனும் தனக்குத் தெரிந்த விதத்தில் சொல்லியிருக்கிறான்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP