இறுதிப் பரிசு!
"இறுதிப் பரிசு!"
[ஒரு கண்ணீர் அஞ்சலி]
உன்னை எனக்கு முழுதுமாய்த் தெரியாது
உன் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்
மரத்தடியில் சாகரன் என ஒருவர் எழுதுகிறார் எனத் தெரியும்
அங்கங்கே கல்யாண் என பெயர் அடிபட்டிருக்கிறது
அது தவிர உன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாது!
இன்று நீ இறந்து விட்டாயாம்
குளிருது எனச் சொல்லி மாத்திரை சாப்பிட்டவன்
வாந்தி எடுத்துவிட்டு படுத்தாயாம்
அன்பு மனையாள் எழுப்ப கண் விழிக்க மறந்தாயாம்
அவ்வளவுதான் தெரியும்
அடுத்து..........
தேன்கூடு நிறுவனர் கல்யாண் என்பவர் மறைந்ததாகச் செய்தி
அருமையான நண்பரை இழந்தேன் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பதிவுகள்
அடுத்தடுத்து அவை எண்ணிக்கையில் அதிகமாகின்றன
தமிழ்ப்பதிவுலகமே ஒன்று திரண்டு புலம்ப ஆரம்பிக்கிறது
என்னை ஏன் அது இத்தனை அளவு பாதிக்கிறது?
எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?
என் கண்கள் ஏன் குளமாகின்றன?
சாதாரணமாக மரணங்களால் பாதிக்கப்படாத நான் ஏன் அழுகிறேன்?
உன் மரணம் என்னை ஏன் உலுக்குகிறது?
உனக்கு இருபத்தெட்டு வயது என்பதா?
இல்லையே!
முப்பது வயதில் என் அக்கா மகன் மறைந்திருக்கிறானே!
இளம் மனைவியுடன் இரு குழந்தைகளை விட்டு அவன் சென்றானே!
அப்போது கூட இவ்வளவு கலங்க வில்லையே!
சாதனையாளன் ஒருவன் சிறுவயதில் மறைந்ததா?
இருக்கமுடியாது.
வருத்தமளிக்கும் விஷயம்தான் என்றாலும் இது ஒன்றும் புதிதில்லையே
இராமானுஜம் முதல் எத்தனையோ சாதனையாளர்கள் அல்பாயுளில் போயிருக்கிறார்கள்
இதுவும் அதில் இன்னொன்று என ஏன் என்னால் நினைக்க்முடியவில்லை
ஏன் இப்படி உன்னைப் பற்றிய எல்லாப் பதிவுக்கும் சென்று வருகிறேன்?
எல்லாப் பதிவினிலும் ஏன் பின்னுட்டமிட்டு வருகிறேன்?
நீ என்ன எனக்கு சொந்தமா இல்லை பந்தமா?
உனக்கும் எனக்கும் என்ன கணக்கு?
எனக்கு ஏன் இந்தக் கண்ணீரும் கவலையும்?
பரஞ்சோதி உனக்குக் கடன் பட்டிருக்கிறார்
முத்துகுமரனும் அப்படியே சொல்லுகிறார்
அவரைத் தொடர்ந்து இன்னும் பலர் சொல்கின்றனர்
எனக்கு வலைத்தளம் அமைத்துக் கொடுத்தாய்
எனக்கு இன்னின்னது செய்தாய் என!
உன் முகம் கூட எனக்குத் தெரியாதே
உன்னிடமிருந்து ஒரு மடல் கூட வந்ததில்லையே
ஒரு பதிவைக் கூட பாராட்டியோ, விமரிசத்தோ இல்லையே
எனக்கும் நீ பின்னூட்டம் இட்டதில்லையே
பின் ஏன் இப்படிக் கலங்குகிறேன்?
இரண்டு நாட்களாய் யோசிக்கிறேன்
எப்படி எப்படியோ சிந்திக்கிறேன்
எதுவும் புரியாமல் விழிக்கிறேன்
பொருளே இல்லாத சோகம் இதுவென
முடிவெடுக்கும் வேளையில் பொறியொன்று தட்டியது!
பதிவுலகில் என்னைப் பாராட்டியவர் பலர் உண்டு
தூற்றியவரும் 'அதிகப்' பலருண்டு!
எதையும் பெரிதென எண்ணாமல் எழுதி வருகிறேன்
ஆனால், என்னையும் பொருட்டென மதித்து
எனக்களித்தாய் நீ ஒரு பரிசு!
அதுவே நீ அளித்த கடைசிப் பரிசு!
இறுதித் தேன்கூடு போட்டியில் இறுதிப் பரிசு!
ஆம்!முதல், இரண்டாம் பரிசுக்குப் பின்னர்
இறுதிப் பரிசு மூன்றாம் பரிசுதானே!
அதுவே நீ அளித்த கடைசிப் பரிசு!
கடன்பட்டோர் பலர் நடுவே
கைம்மாறு செய்திடக் காத்திருப்போர் நடுவே
கண்ணீருடன் நட்பினை நினைந்திருப்போர் நடுவே
கவினுறு எழுத்தை உணர்ந்திருப்போர் நடுவே
கடைசிப் பரிசுடன் வலம் வருகிறேன் நான்!
செத்தும் கொடுத்தான் சீதக்காதி
கொடுக்காமல் போனவர் பல பேர்
இருந்தும் கொடுக்காதவர் எத்தனையோ
இருக்கும் வரை அனைவருக்கும் கொடுப்பவர் ஒரு சிலரே
அதில் ஒன்று, அதுவும் கடைசி ஒன்று எனக்கு!
இதுதான் உலுக்குதோ என்னை
இதுதான் கலக்குதோ என்னை
இருக்கலாம்; இருக்கணும்!
பார்க்காமலேயே, பழகாமலேயே
உன் பரிசினைப் பெற்றவன் நான்!
இன்று நீ பிரிந்தாலும்
எமை விட்டுச் சென்றாலும்
உன் நினைவு என்றுமே
எனை விட்டு அகலாது
உனை என்றும் மறவாது!
உனை இழந்து வாடுகின்ற
அத்துணை பேருக்கும் என் இரங்கல்!
நான் வணங்கும் முருகனை வேண்டுகிறேன்
உன் குடும்பம் நலம் வாழ வாழ்த்துகிறேன்
முருகனருள் முன்னிற்கும்!
---------------------------------------------------------------------
10 பின்னூட்டங்கள்:
:(
வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை!
முருகக் கடவுள் தான் அவர் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்க வேண்டும்.
எஸ்.கே.சார்,
என் மனதில் ஓடிய எண்ணங்கள் அத்தனையும் எழுத்து மாறாமல் அழகான மனசு நிறுத்தும் கவிதையாக வந்திருக்கிறது.
உங்கள் வழியில் அந்தப் பிள்ளைக்கு நானும் இறுதி வணக்கம் செய்கிறேன்,.
எழுத ஒரு இடம் எனக்குக் கிடைத்ததால் தேன்கூடே அவருடைய வாரிசாக அதை நான் வணங்குகிறேன்,.
உருக்கமான கனக்கும் வரிகள்...
தெரியாதவர்களையும் தெரிய வைத்துவிட்டார் சாகரன்.
:(((
முதலில் வந்து இத்துயரத்தில் பங்கு கொண்ட சிபியாருக்கும், செல்வனுக்கும், வல்லியம்மவுக்கும்....இனி வரும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் மறுமொழியிட மனம் ஒப்பவில்லை.
அருள்கூர்ந்து மன்னிக்கவும்.
உறவினர் இழப்புகளுக்குக்கூட கலங்காத கண்கள் இன்று கலங்குகிறது அய்யா. நாட்கள் நகர நகர இந்த மரணம் இன்னும் இன்னும் அழுத்துகிறது..
கண்ணீர்துளிகளுடன்
முத்துகுமரன்
SK சார்,
உண்மையில் முகம்பாராத ஒருவரின் மரணத்துக்கு இப்படி கலங்குவது லாஜிக்கா தெரியல. அதுவும் வெறும் கூச்சல்களே அதிகமாயிருக்கிற இணையத்தி கிடைக்கும் அறிமுகத்திற்கு..
ஆனா வாழ்க்கையில எல்லாத்துக்குமே லாஜிக் பாக்கமுடியாதுங்கிறதுதான் உண்மை.
என்னை ரெம்ப உலுக்கிய அண்மைக்கால நிகழ்வு.
தனியாவேற இருக்கிறேன். ஆஃபீசில் கூட கண்கலங்கிட்டேன் கொஞ்ச நேரம்.
சோகம். பெரும் சோகம்.
அவர் குடும்பம் எந்த வகையிலும் கஷ்டப்படாமல் இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.
நானும் எனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரது குடும்பத்தாருக்கும், அவருடன் பழகி மகிழ்ந்து இன்று இழந்து தவிக்கும் வலையுலக அன்பர்களூக்கும் எனது பணிவான வருத்தங்கள்...
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அதே உணர்வுகளுடன் எத்தனை கண்ணீர் அஞ்சலியை பின்னூட்டமாய் செலுத்தியும் மீளா துயர் வாட்டுக்கிறது!
:((((
Post a Comment