Sunday, December 31, 2006

ஆடேலோர் எம்பாவாய் - 7 [17]

ஆடேலோர் எம்பாவாய் - 7 [17]

[இறையை நினைந்ததும், இறைவன் நினைவுக்கு வருகிறான்! மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது! குளியாட்டமும்தான்!]


செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்


கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 17


தாமரை போலும் சிவந்த கண்களையுடைய திருமாலிடத்திலும்,
திசைக்கு ஒன்றென தலைகளையுடைய நான்முகனிடமும்,
இவரைப் பணிந்து நிற்கும் தேவர்களிடமும்
வேறெங்கினுமெ இலாத இன்பப்பெருவெள்ளம்

நமக்கே ஆகுமாறு நலமுடன் நல்கி
ஏ! தேன் உண்ணும் கூந்தலுடைய பெண்ணே!
நாம் செய்திடும் குற்றங்களெல்லாம் போக்கி
நாம் அனைவரின் இல்லங்களிலும் எழுந்தருளி

செந்தாமரை போலும் சிவந்த பொற்பாதங்களை
நமக்கெல்லாம் தந்தருள் செய்யும் பெருங்கருணை
உடையவனை, அழகிய கண்கள் உடைய நம் அரசனை
அடிமையாம் நமக்கெல்லாம் இனிய அமுதமானவனை

நம்முடைய இறைவனாம் சிவனைப் பாட
நல்வளம் பெருகி விளங்கிட எண்ணி
தாமரை மலர் நிறைந்த இத்தடாகத்தில்
பாய்ந்து நீந்தி ஆடடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

செங்கணவன் - செங்கண் அவன், திருமால்; திசைமுகன் - பிரமன்; கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி;
சேவகன் - ஊழியன்; அங்கண் - அழகிய கண்கள்; பங்கயம் - தாமரை.

********************************************************

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

தேன்கூடு போட்டி வெற்றிக்கென வாழ்த்தியவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி!

*******************************************************11 பின்னூட்டங்கள்:

Anonymous,  Tuesday, January 02, 2007 12:23:00 AM  

எஸ்;கே அவர்களே,

பாடலுக்கான விளக்கம் அருமை.நன்றி...

ஒரு சிறிய திருத்தம் செய்ய வேண்டும்...

"அங்கண் - அழகிய கன்கள்"

SP.VR. SUBBIAH Tuesday, January 02, 2007 1:05:00 AM  

எங்கும இல்லாத இன்பப் பெருவெள்ளம்
மங்கை உமைபாகன் தந்தருள்வார் - பொங்கும்
நல்லுணர்வோடு, நாயகன் நமச்சிவாயன் பகழ்பாடு
நல்வளம் பெருகிடுமே நாளும்!

Kannabiran, Ravi Shankar (KRS) Tuesday, January 02, 2007 3:08:00 AM  

//செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை//

இறைவன் பாதமும் தந்து சேவகனும் எப்படி ஆவான்?
முதலாளி பாதம் தந்தால் சேவகன் பிடித்து விடுவான்!
இங்கோ மணிவாசகப் பெருமான் சேவகன் பாதம் கொடுக்கிறான் என்கிறாரே!

வேறு சிறப்பு நோக்கம் இருக்க வேண்டும்! SK ஐயா மீண்டும் இங்கு வந்து, தமிழ் அமுதம் பெய்யுமாறு வேண்டுகிறேன்!

வல்லிசிம்ஹன் Tuesday, January 02, 2007 7:21:00 AM  

பங்கயப் பூம்புனல் பாய்ந்து''

மார்கழிக் குளிர் இவர்களை ஒன்றும்
செய்யாது போல.
அருமையான சித்திரம்.

கோவி.கண்ணன் [GK] Tuesday, January 02, 2007 11:09:00 AM  

எஸ்கே ஐயா,

தாமரை தடாக குளியல், என் அப்பாவுடன் சேர்ந்து குளித்து சபரிமலைக்கு விரதம் இருந்ததை நினைவு படுத்திவிட்டீர்கள் ! அதே மார்கழி மாதம் !

VSK Tuesday, January 02, 2007 11:49:00 AM  

பிழை திருத்தத்துக்கு நன்றி, மதுரையம்பதியாரே!

மாலையில் திருத்தி விடுகிறேன்!

VSK Tuesday, January 02, 2007 11:50:00 AM  

மணக்கும், இனிக்கும் பாமாலை தொடரட்டும், ஆசானே!
நன்றி!

VSK Tuesday, January 02, 2007 11:57:00 AM  

//சேவகனும் எப்படி ஆவான்?//

சேவகன் என்று மட்டும் சொல்லவில்லை, திரு. ரவி!

சேவகனை, அரசை, ஆரமுதை என மூன்று விதமாகப் புகழ்கிறார்கள் இந்தச் செங்கமலப் பொற்பாதம் தருவோனை!

முதலாளி போல் வீட்டுக்குள் ஜம்மென்று அமர்ந்து கொண்டு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு அடியாரை அங்கு வரவழைக்காமல், "இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளுவதால்" சேவகன்!

நம்மையெல்லாம் அருட்பார்வையால் ஆட்கொள்ளுவதால், "அங்கண் அரசன்"!

அடியவர்க்கு இடையறாது இன்பம் கொடுத்து வருதலால், "அடியோங்கட்கு ஆரமுது"

இந்த மூன்று, அடுத்த பாடலிலும் இன்னொரு விதமாகத் தொடருகிறது.

மாலையில் பார்ப்போம்!

VSK Tuesday, January 02, 2007 11:59:00 AM  

//மார்கழிக் குளிர் இவர்களை ஒன்றும்
செய்யாது போல.//


அதானே வல்லியம்மா!

இதில் மழை வேறு வேண்டுமாம், முகத்தில் சுளீர் என்று அடிக்க!
:))

VSK Tuesday, January 02, 2007 12:01:00 PM  

//சபரிமலைக்கு விரதம் இருந்ததை நினைவு படுத்திவிட்டீர்கள் !//

நீங்கள் மட்டுமென்ன, கோவியாரே!

ஒரு சில காரணங்களால் இவ்வாண்டு போக முடியாது போன சபரிமலை விரதத்தை எனக்கும்தான் நினைவு படுத்தி விட்டீர்கள்!
:))

VSK Tuesday, January 02, 2007 12:34:00 PM  

எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.

http://www.musicindiaonline.com/music/devotional/s/album.374/diety.8/

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP