Thursday, December 21, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [8]

"பரிசேலோர் எம்பாவாய்" [8]


கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்


கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ


வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ


ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8

8.
தோழியர்: கோழிகள் கூவிட, பறவைகள் கீச்சிட எங்கும் ஒலிமயம் !
ஏழுசுரங்களாலான இசைக்கருவிகளும் ஒரே சுருதியிலான
வெண்சங்கும் சேர்ந்து ஒலித்திட, எங்கும் இசைமயம்!

தனக்குவமை இல்லாத அருட்பெரும் சோதிவடிவானவனையும்
அப்பெருமானின் தனிப்பெருங்கருணையினையும் , ஒப்பில்லாமணியின்
மேன்மைப் பொருட்களையும் போற்றிப் புகழ்ந்து பாடினோமே

அது உன் செவிகளுக்குக் கேட்கவில்லையா? அதென்ன உன் கூடவே வாழும்
உறக்கமோ, அதை உன் வாய் திறந்து சொல்வாயடி!
ஆழ்கடலில் அரவம் குடைபிடிக்க ஆழ்துயிலில் அயர்ந்தது போல்
நடிக்கும், ஆயினும் அனவரதமும் அரனைத் துதிக்கும்
சக்கரதாரியாம் அரங்கனது அன்பு போன்றதோ உன் பக்தியும்!

ஊழிக்காலங்கள் அனைத்திற்கும் முன் தோன்றி,
இன்னும் அழிவின்றி நிற்கின்ற,
சக்தியாம் மாதொரு பாகம் உடையானைப்
பாடடி என் பெண்ணே!!

அருஞ்சொற்பொருள்:

குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).

11 பின்னூட்டங்கள்:

SP.VR. SUBBIAH Friday, December 22, 2006 8:35:00 PM  

ஆழியான் அன்புடையான்,அறிவோம் சிவனாரை
ஊழி முதல்வனாய் நின்றவனவன் - தோழி
ஏழை பங்காளனைப்பாட எழுந்து வாராய்
வாழியென்று சொல்லி வாய்திறவாய்!

SP.VR.SUBBIAH

கோவி.கண்ணன் [GK] Friday, December 22, 2006 9:41:00 PM  

//தனக்குவமை இல்லாத அருட்பெரும் சோதிவடிவானவனையும்
அப்பெருமானின் தனிப்பெருங்கருணையினையும் , ஒப்பில்லாமணியின்
மேன்மைப் பொருட்களையும் போற்றிப் புகழ்ந்து பாடினோமே//

ஆகா,

தோழியரை எழுப்ப எவ்வாறெல்லாம் நினைவூட்டு உற்சாகப்படுத்துகிறார்.

அருமை அருமை !

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, December 22, 2006 10:07:00 PM  

SK ஐயா
திருவெம்பாவையில் மிக அருமையான பாடல்களுள் இது ஒன்று!

தமிழுக்கே உரித்தான ழகரம் சுழன்று சுழன்று வரும் கவிதை இது!

அருட் பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை என்பது பரஞ்சோதி பரங்கருணை என்று வருவதையும் பாருங்கள்!

ஏழைப் பங்காளன் என்று சதா கூச்சலிடும் இன்றைய அரசியல்வாதிகள் இதைப் படிப்பார்களா? ஏழைப் பங்காளன் உண்மையில் இறைவனே என்று தெரிய வரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, December 22, 2006 10:22:00 PM  

//ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ//

ஆழியான், ஆழி மாயன், பெருமாள் தன் மனதில் ஈசனின் நடனத்தை, எண்ணி எண்ணிப் பார்த்து உவகை உறுகிறான்! இப்படி ஒருவன் திருவுள்ளத்தில் அழகின் ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம்!

இதனால் திடீர் எனப் பெருமாள் கனம் அதிகமாகிறது ஆதி சேடனுக்கு! பெருமாள் மனதில் ஆடும் ஈசனையும் சேர்த்தே சுமக்க வேண்டியதாகிறதே!

காரணம் புரியாமல் சேஷன் சுவாமியை வினவ, உள்ளத்தை உரைக்கிறார் உலகளந்தார்! தானும் நடனத்தைக் காண ஆவல் கொண்ட சேஷன், கொண்டதே பதஞ்சலி ரூபம்; தில்லையில் மன்றுள்ளாடும் மணியைக் காண வேண்டி!

இப்படி ஒன்றுமே செய்யாது, ஈசனை மனதில் எண்ணிப் பெருமாள் போல உருகிக் கொண்டிருந்தால் பாவை நோன்பு என்னாவது! அதனால் பெண்ணே எழுந்து வா என்று அழைக்கப் படுகிறாள்!

பெருமாளைப் போல் உறங்குவதால் தான், இந்தப் பாட்டில் பெருமாளுக்கு உரிய துதியைக் கொடுத்து, "வாழி" என்று சொல்லி, பின் இது என்ன உறக்கமோ என்று கேட்கிறாள்!

முந்தைய பாடல்களில் காணலாகும் கடிச்சொற்கள் காணாமல் போனதற்கான காரணமும் இதுவே!

இது தான் சைவ-வைணவ சித்தாந்தங்கள் தங்களுக்குள் கண்ட பரஸ்பர மரியாதை, ஒற்றுமை, ஒருமைப்பாடு!

VSK Saturday, December 23, 2006 12:49:00 AM  

Friends, As I am leaving for Washington Dc in the next few minutes, Please bear with me for not replying to your nice comments.

I will do so by tomorrow night [US time!!]

Thanks.

Keep the comments coming!!

மணியன் Saturday, December 23, 2006 1:29:00 AM  

மணிவாசகத்தை திருவாசகமாகத் தரும் உங்கள் பதிவை நாளும் படித்து இன்புறுகிறேன்.

அருமை என்பதைத் தவிர வேறெதுவும் எழுத இல்லாததால் பின்னூட்டம் இடாமலே செல்வதுண்டு. வாழ்க உங்கள் பணி!

குமரன் (Kumaran) Saturday, December 30, 2006 10:12:00 AM  

ஆழியான் அன்புடைமைக்கு அழகாக பொருள் சொல்லியிருக்கிறார் இரவிசங்கர் கண்ணபிரான். இந்தப் பாடலில் எங்கே அரனை அரங்கன் துதிக்கிறான் என்று சொல்லியிருக்கிறார்கள்? பதிவிட்டவருக்கு ஏன் அப்படி தோன்றியதோ? ஒருவேளை அவர் மனத்தில் இருக்கும் எண்ணமே சொல்லிலும் வந்துவிட்டதோ? வைணவர் வந்து ஆழியானின் அன்புடைமையை ஆண்டவன் அடியாரின் மேல் வைக்கும் அன்புடைமை என்று சொன்னால் ஐயா ஒத்துகொள்வீர்களா? :-)

(சில இடங்களில் வெளிப்படையாக அப்படி சொல்லியிருப்பார்கள். இந்த இடத்தில் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் வலிய ஏன் அப்படி சொன்னீர்கள் என்றே கேட்கிறேன். அவ்வளவு தான்). :-)

பிரம்ம முராரி சுரார்சித லிங்கம் என்ற வரிக்கும் பிரம்மனாலும் முராரியாலும் வணங்கப்பட்ட லிங்கம் என்று அப்போது பாடலில் உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறேன். ஆனால் இங்கே அப்படி இல்லை என்று தோன்றுகிறது.

VSK Saturday, December 30, 2006 11:21:00 AM  

முன்னுக்குப் பின் முரணே! உன் பெயர்தான் குமரனோ!

ரவி சொன்னதை நங்உ படித்து விட்டுத்தானே இம்மறுமொழியை இட்டீர்கள்?
//ஆழியான் அன்புடைமைக்கு அழகாக பொருள் சொல்லியிருக்கிறார் இரவிசங்கர் கண்ணபிரான். இந்தப் பாடலில் எங்கே அரனை அரங்கன் துதிக்கிறான் என்று சொல்லியிருக்கிறார்கள்? பதிவிட்டவருக்கு ஏன் அப்படி தோன்றியதோ? ஒருவேளை அவர் மனத்தில் இருக்கும் எண்ணமே சொல்லிலும் வந்துவிட்டதோ?//

திரு.ரவியே, அரன் நடனத்தை மனதில் சுமந்ததால், அரங்கன் கனம் அதிகமானதைக் குறிப்பிட்டிருக்கிறார்!

அதே போல, அரனை மனதில் சுமந்து, இன்னமும் உறங்குவதால், அரங்கன் உறக்கத்தோடு, இத்தோழியின் உறக்கத்தை ஒப்பிடுகிறார் வாதவூரார்.

நான் சமய நல்லிணக்கத்தைப் பற்றி பேசுகிறேன்!

// வைணவர் வந்து ஆழியானின் அன்புடைமையை ஆண்டவன் அடியாரின் மேல் வைக்கும் அன்புடைமை என்று சொன்னால் ஐயா ஒத்துகொள்வீர்களா? :-)//

நீங்கள் வந்து சண்டை மூட்டுகிறீர்களே, குமரன்!

:))

VSK Saturday, December 30, 2006 11:30:00 AM  

பிரமனும், மாலனும், சிவன் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தபோது, தம்மில் யார் பெரியவர் என போட்டி போட்டு, சண்டை புரிந்த போது, இருவருக்கும் நடுவே ஒரு ஜோதி லிங்கமாக எழுந்து நின்று, தன் அடிமுடியைக் கண்டறியச் சொன்னபோது, இருவராலும் முடியாமல், அவரை வணங்கித் துதித்து நின்றதையே, தாங்கள் குறிப்பிட்ட அந்த "பிரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம்" குறிப்பிடுகிறது, குமரன்.

அது திருவண்ணாமலை; இது... ஆழியானின் உறக்கம் தில்லை!!

குமரன் (Kumaran) Saturday, December 30, 2006 6:08:00 PM  

:-))

ஆனாலும் எனக்கென்னவோ இங்கே அன்புடைமை என்ற அரங்கனுக்கும் அரனுக்கும் இருக்கும் பரஸ்பர அன்பு தான் பேசப்பட்டிருக்கிறதெ ஒழிய இவர் அவரை வணங்கினார் என்றோ அவர் இவரை வணங்கினார் என்றோ சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். காசிக்குச் சென்றால் காசி விஸ்வநாதர் வேறு தாரக மந்திரம் என்று இராம நாமத்தைச் சொல்கிறார். துளசி இராமாயணத்தில் 'எப்போதும் நீங்கள் தியானத்தில் இருக்கிறீர்களே. நீங்களே தியானிப்பது யாரை?' என்ற பர்வதகுமாரியின் கேள்விக்கு பரமேஸ்வரன் தான் எப்போதும் அரங்கனை தியானிப்பதாகச் சொல்கிறார். அன்புடைமை இருபக்கமும் போவதாகத் தானே பெரியோர்கள் சொல்கிறார்கள்.

VSK Saturday, December 30, 2006 6:34:00 PM  

//அன்புடைமை இருபக்கமும் போவதாகத் தானே பெரியோர்கள் சொல்கிறார்கள்.//

இப்போது பேசப்படும் பொருள் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும், குமரன்!

இருபக்கமும் இல்லை என யார் இங்கே சொன்னார்கள்?

இந்தப் பெண்ணின் தூகம்தான் இங்கே நிகழ்வு!

அதற்கு எழுப்ப வந்திருக்கும் தோழி, தூங்குவது போல் நடித்தாலும், மனதில் அரனின் ஆடலை தியானிக்கும் அரங்கனை உவமை காட்டிச் சொல்கிறாள்.

இதில் பேதமோ, உயர்வு, தாழ்வோ எங்கே வந்தது?

நான் உங்களை வணங்கினால், அதற்கு நான் உங்களை விடச் சிறியவன் என்று பொருளா?

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லை!

அரங்கனைக் குறைத்து மதிப்பிடும் வண்ணம் இப்பாடல் அமையவில்லை.

அரங்கனும், அரனும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் வணங்கிக் கொள்வதுதானே சமய நல்லிணக்கம்!

தில்லைக்கு சென்றால், இப்போதும் அரனின் ஆட்டத்தைப் பார்த்த வண்ணம் ஒயிலாக சயனித்திருக்கும் அரங்கனைக் காணலாமே!

அதுவே "ஆழியான் அன்புடைமை"!

உறங்கினாலும்,எண்னத்தில் வைப்பவன்....உங்களையும், என்னையும், நம் எல்லாரையும்!!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP