Tuesday, December 19, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [7]

"பரிசேலோர் எம்பாவாய்" [7]

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்


சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்

என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7

தோழியர்: அடி பெண்ணே! அலுப்பாய் இருக்குதடி உன்னோடு! இதுவும் நீ கொண்ட
குணங்களில் ஒன்றோ? எத்தனையோ பல தேவர்களால் நினைப்பதற்கும் கூட
அரிதானவனாம், பண்பாளனாம் சிவபெருமானின் சங்கொலிகள் முதலான
சிவச் சின்னங்களைக் கேட்ட மாத்திரமே 'சிவ சிவ" எனச் சொல்லிடுவாய்!

"தென்னாடுடைய சிவனே" எனும் சொல் சொல்லி முடிக்கும் முன்னரே
தீயிலிட்ட மெழுகு போல உருகிடுவாய்!


எங்கள் பெருமானை, "என் அரசே! அமுதம் போலும் இனியவனே!"
என்றெல்லாம் ப்ல்வேறு விதமாய்ப் போற்றிச் சொல்லுகிறோம்!

இன்னமும் எழுந்திராமல் தூங்குகிறாயே! வீம்பாக கண்ணை மூடிக்கொண்டு
தூங்குவது போல் நடிக்கும் கடுநெஞ்சம் கொண்டவர் போன்று
ஓரசைவும் இன்றிக் கிடக்கின்றாயே! அப்படியாகிய உன் தூக்கத்தின்
தன்மைதான் என்னவோ? சொல்லடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:
உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்
- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்;
வாளா - சும்மா; பரிசு - தன்மை.

7 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Thursday, December 21, 2006 7:58:00 PM  

//தூங்குவது போல் நடிக்கும் கடுநெஞ்சம் கொண்டவர் போன்று
ஓரசைவும் இன்றிக் கிடக்கின்றாயே! அப்படியாகிய உன் தூக்கத்தின்
தன்மைதான் என்னவோ? சொல்லடி என் பெண்ணே!
//

எஸ்கே ஐயா,
பசி இல்லாதபோது தான் மற்றவற்றை (செவிக்கு) நினைக்க முடியும். அது போல தூக்கம் இல்லாத போதுதான் துணைவனை நினைக்க முடியும் போல !
:)

Anonymous,  Friday, December 22, 2006 12:00:00 AM  

தென்னாடுடைய சிவனே போற்றி,
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.

மெளலி....

VSK Friday, December 22, 2006 10:38:00 AM  

மதுரையம்பதியானே போற்றி!
மார்கழியில் மகிழ்வோனே போற்றி!!

:))

VSK Friday, December 22, 2006 11:11:00 AM  

இதென்ன குறளை மாற்றிச் சொல்லுகிறீர்களே, கோவியாரே!

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் [412]

என்பதுதானே வள்ளுவன் இயற்றியது!

சிவனை நினைக்கையில் தூக்கம் எப்படி வரும்?

என்னமோ போங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, December 22, 2006 10:28:00 PM  

//சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்//

இதுவல்லவோ உண்மைப் பக்தி! காதல்!!
காதலன் சம்பந்தமான எதுவும் காதலிக்கு இனிக்கும்!
அவன் ஊர், மரம், அவன் பேர் கொண்ட பொருட்கள், அவன் விரும்பும் பாட்டு...

அதே போல சின்னங்களைக் கண்டு கேட்டுச் சிலிர்க்கிறாள்!

அருமை! அருமை!!

குமரன் (Kumaran) Sunday, December 24, 2006 8:51:00 PM  

இந்தப் பாடலையும் பாடிப் பார்த்தேன் எஸ்.கே. மிக அருமை.

இருஞ்சீர் என்றால் அளப்பதற்கரிய பெருமை என்று பொருள் வரும் என்று எண்ணுகிறேன். ஆழ்ந்தகன்ற நுண்ணியனின் பெருமைகள் சொல்லி மாளாது என்பதால் இருன்சீர் என்கிறார்.

VSK Monday, December 25, 2006 12:41:00 AM  

//இருஞ்சீர் என்றால் அளப்பதற்கரிய பெருமை என்று பொருள் வரும் என்று எண்ணுகிறேன்.//

நான் படித்த விரிவான உரையில்,

அப்பக்கம், இப்பக்கம் வழுவாது, ...இரு பக்கமும் போகாமல்... சீராக நேரிய தன்மையில் செல்பவன்...இருஞ்சீரான்

என வந்திருந்தது, குமரன்!

"வேண்டுதல், வேண்டாமை இலான்" அல்லவா அவன்!

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்" அன்றோ இவன்!

நீங்கள் சொல்வதும் ஏற்கத்தக்கதே!

"தனக்குவமை இல்லாதவனும்" இவன்தானே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP