Tuesday, December 19, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [6]

"பரிசேலோர் எம்பாவாய்" [6]


மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்

தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6


6.
தோழியர்: மான் போலும் அழகிய பெண்ணே! நேற்றையதினம் நீ, "நாளைக்கு
நானே வந்து உங்கள் அனைவரையும் எழுப்புகிறேன்" எனச் சொல்லிவிட்டு,
சிறிதும் வெட்கமின்றி இன்று எங்கே நீ சென்றுவிட்டாய்?
உனக்கு பொழுது இன்னமுமா விடியவில்லை?

வானகமும், மண்ணகமும், பிறவுலகும் அறியவும்
அரிதான நம் பெருமான் நமக்கென இரங்கி, தானே வந்திங்கு
கருணையுடன் நோக்குகிறான்! விண்ணுக்கும், மண்ணுக்குமாய் விரிந்து கிடக்கும்
அவனது சீர்ப்பாதங்களைப் பாடி வந்த எங்களுக்கு பதில் சொல்லவாவது
உன் பவளவாயைத் திறப்பாய்! உடலும் உருகாமல் நிற்கின்றாய்!
இந்நிலை உனக்குப் பொருத்தமே! எமக்கும், மற்ற அனைவர்க்கும் தலைவனாம்
பேரரசனாம் சிவனாரைப் பாடடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;
ஊன் - உடல்.

15 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Wednesday, December 20, 2006 11:08:00 PM  

//நானே வந்து உங்கள் அனைவரையும் எழுப்புகிறேன்" எனச் சொல்லிவிட்டு,
சிறிதும் வெட்கமின்றி இன்று எங்கே நீ சென்றுவிட்டாய்?
//

எஸ்கே ஐயா !

நல்ல வரி ! யாருக்குச் சொல்லலாம் ?
:)

VSK Wednesday, December 20, 2006 11:14:00 PM  

விடியலில் எழுந்து, உங்களைப் பார்த்து நீங்களே சொல்லிக் கொள்ளவும்!
:))

SP.VR. SUBBIAH Wednesday, December 20, 2006 11:31:00 PM  

எம்பெருமான், சிவனார் இரங்கி வருகின்றார்
எந்திழையே, நமக்காக இன்முகம் காட்டுகின்றார்
காலைத் தூககம் கண்மணி எதற்கடி
கைலாய நாதரைக் கண்டுநீ பாடடி!

G.Ragavan Wednesday, December 20, 2006 11:35:00 PM  

SK, இந்தப் பாவையிலுள்ள நென்னலை என்ற சொல் எனக்குக் கன்னடத்தையும் தெலுங்கையும் நினைவு படுத்துகிறது. நின்னே என்று கன்னடத்திலும் நின்னா என்று தெலுங்கிலும் வழங்கப்படும் நேற்றின் தொடக்கம் இங்கிருக்கிறதா! நென்னலை விட்டு விட்டோம் நாம். ஆனாலும் நினைவு படுத்துகிறது திருவெம்பாவை.

இந்தப் பாவையில் வரும் பாவையின் பார்வையில் நாமெல்லாருமே அகப்பட்டிருப்போம். நானே செய்றேன்னு சொல்லீட்டு....அவங்க வந்து சொல்ற வரைக்கும் மறந்து போய் இருக்கிறது. இறைவா...அந்த நிலையிலிருந்து காப்பாற்று. சொல்லிய சொல்லும் செய்த செயலும் மறவாது...நன்றாய் இருக்க அருள்வாய்!

VSK Wednesday, December 20, 2006 11:44:00 PM  

//எம்பெருமான், சிவனார் இரங்கி வருகின்றார்
எந்திழையே, நமக்காக இன்முகம் காட்டுகின்றார்
காலைத் தூககம் கண்மணி எதற்கடி
கைலாய நாதரைக் கண்டுநீ பாடடி!//

இரங்கி வரும் எம்பெருமான் நமக்கென
இறங்கியும் வருகிறார் நம் முன்னே!
மறைந்து போகும் முன்னர் பாடிடுவாய்
இறைவன் அவன் திருநாமத்தை!

VSK Wednesday, December 20, 2006 11:47:00 PM  

அடடா! நின்னே, நின்னாவின் தொடக்கத்தையும் எங்களுக்குக் காட்டியிருக்கிறீர்களே, ஜிரா, வாதவூராரைத் துணைக்கழைத்து!

//சொல்லிய சொல்லும் செய்த செயலும் மறவாது...நன்றாய் இருக்க அருள்வாய்!//

சொல்லின் செல்வனின் நாளில் மிக அழகாய்ச் சொல்லி விட்டீர்கள்!

Anonymous,  Thursday, December 21, 2006 12:25:00 AM  

நென்னலை - நேற்று என்பது போல் நித்தலை (நிதம், நித்தியம்) என்பதும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கும் போல...இதனைப் பாருங்கள், (நாவுக்கரசரின் திருத்தாண்டகம்)

நித்தலும் எம் பிரானுடைய
கோயில் புக்குப்
புலர்வதன் முன் அலகிட்டு
மெழுக்கும் இட்டுப்
பூமாலை புனைந்து ஏத்திப்
புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக்
கூத்தும் ஆடிச்
சங்கரா! சயபோற்றி!
போற்றி என்றும்
அலைபுனல் சேர் செஞ்சடை
எம் ஆதி! என்றும்
ஆரூரா! என்றென்றே
அலறா நில்லே.

மெளலி...

VSK Thursday, December 21, 2006 12:56:00 AM  

ஆம்! திரு மௌலி!

இப்படி பல இனிய சொற்கள் வழக்கொழிந்து போயின!

பதிவர்களாகிய நாம் முயன்றால் கொஞ்சம் உயிரூட்ட முடியலாம்!

நித்தல், இப்போது நித்தம் ஆகி நிற்கிறது!!

இதன் மூலம் இன்னுமொரு இனிய பாடலைச் சுட்டியதற்கும் நன்றி!

ஜெயஸ்ரீ Thursday, December 21, 2006 1:10:00 PM  

நெருனை, நெருனல் என்ற சொற்களும் நேற்று என்பதை குறிப்பவையே.

நெருனல் உளனொருவன் இன்றில்லையென்னும்
பெருமை யுடைத்ததிவ் வுலகு" - திருக்குறள்.

"நாதன் நாமம் நீ மறவாதே
நாளை என்றால் யாரே கண்டார் ?"

நாளை நாளை என்று தள்ளிப்போட்டு
மாயயையில் மூழ்கியிருக்கும் மனமே !'தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்'களைப் பாடும் துதிகள் உனக்குக் கேட்கவில்லையா ? அதைக் கேட்டு உன் உள்ளமும் உடலும் உருகவில்லையா ?

அவன் கருணையைப் பெற நீ எந்த முயற்சியும் செய்யாதபோதும் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து பெருங்கருணை புரிந்து உன்னைத் தானே ஆட்கொள்ள வந்துள்ளான்.மனமே இன்னும் உறங்குதியோ ?

இந்தத் திருவாசக வரிகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கவை.


"பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே"

VSK Thursday, December 21, 2006 3:06:00 PM  

இப்படி நீங்களெல்லாம் வந்து இனிமையாகச் சொல்ல, அதை நாள் முழுதும் படித்துக்கொண்டே, சிவனின் நினைவில் திளைத்திருப்பது மனதுக்கு மிகவும் இதமாயிருக்கிறது,ஜெயஸ்ரீ!!

இதைத்தான் சிவாநுபவம் எனச் சொல்வரோ!

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, December 21, 2006 4:30:00 PM  

//இதைத்தான் சிவாநுபவம் எனச் சொல்வரோ!//

இன்னும் சிவாநுபவம் வந்து கொண்டே உள்ளது SK ஐயா! :-)

நாயகனாய் நின்று நந்த கோபாலன் பாசுரத்திலும் இந்த "நென்னல்" வரும்!

ஆயர் சிறுமிய றோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்!

நேத்தே எங்கள் எல்லாரையும் வீட்டாண்ட வரச்சொல்லிட்டான்; நீ என்னப்பா தடுத்துக்கினு என்று வாயிற்காப்போனை ஆண்டாள் கேட்கிறாள்!

நெருநல் உளன் ஒருவன் குறளுக்கு நன்றி ஜெயஸ்ரீ!

நெருநல் கண்டது நீர்மலை இன்றுபோய்
கருநெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே!
-திருமங்கை பாசுரம்

சென்னைப் பல்லாவரத்தில் உள்ள திருநீர்மலை தலத்தில் நேற்று (நெருநல்) தரிசித்த ஆழ்வார்,
இன்று திருவாரூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கையில் தரிசனம் காண்கிறாராம்!

வாகன வசதிகள் இல்லாத அக்காலத்தில், அப்படின்னா அவர் போன ஸ்பீடு என்ன என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்! :-)

குமரன் (Kumaran) Sunday, December 24, 2006 8:46:00 PM  

நெருநல், நென்னல், இவையெல்லாம் நேற்று என்பதோடு மட்டுமின்றி முந்தாநாள், சிறிது நாட்களுக்கு முன்னால் என்ற பொருள்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று எண்ணுகிறேன். அதனால் திருமங்கையாழ்வார் திருநீர்மலையில் எம்பெருமானைச் சேவித்துவிட்டு மறுநாளே திருக்கண்ணமங்கையில் சேவித்தார் என்று சொல்ல வேண்டியதில்லை இரவிசங்கர். ஆனால் அவரும் விட்டால் வகுளாபரணரைப் போல உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா திவ்ய தேசங்களுக்கும் சென்று வந்துவிடுவார். அதிகமான திவ்யதேசங்களைச் சேவித்தவர் அவர் தானே.

VSK Monday, December 25, 2006 12:32:00 AM  

//நெருநல், நென்னல், இவையெல்லாம் நேற்று என்பதோடு மட்டுமின்றி முந்தாநாள், சிறிது நாட்களுக்கு முன்னால் என்ற பொருள்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று எண்ணுகிறேன்.//

அப்படி வழக்கத்தில் வருவதும் பல இடங்களில் நிகழ்வதுதான், குமரன்.

ஆனால், நான் ரவிக்கு சொல்ல நினைத்தது என்னவென்றால்,
திருமங்கை ஆழ்வார் ஒரு மன்னராய் இருந்து அடியவர் ஆனவர்.

அவர் கால்நடையாகத்தான் சென்றிருக்க முடியும் என்றில்லையே!

குதிரையேற்றம் தெரிந்த அவர் குதிரையிலும் பல ஊர்களுக்குச் சென்றிருக்கக் கூடும் அல்லவா?

ஒரு அனுமானம்தான்!
:)

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, December 25, 2006 12:42:00 PM  

//குதிரையேற்றம் தெரிந்த அவர் குதிரையிலும் பல ஊர்களுக்குச் சென்றிருக்கக் கூடும் அல்லவா//

ஆடல் மா என்பது அவர் தம் குதிரையின் பெயர் SK ஐயா!
பரியில் பறந்து ஹரியில் மறந்த ஆழ்வார் ஆயிற்றே! நீங்கள் சொல்வதும் சரி தான்!

VSK Monday, December 25, 2006 3:05:00 PM  

"ஆடல் மா" என்று சத்தமின்றி இன்னொரு தகவலும் தந்து சென்றமைக்கு மிக்க நன்றி ரவி!

ஆக,.. குதிரையிலும் அவர் சென்றிருக்கக் கூடும் என என்னுடன் ஒத்தமைக்கும் நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP