Saturday, December 30, 2006

"ஆடேலோர் எம்பாவாய்" - 6 [16]

"ஆடேலோர் எம்பாவாய்" - 6 [16]

முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்


மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

[குளத்து நீரின் குளுமை போதவில்லை இந்தப் பெண்களுக்கு! கூடவே மழையும் வேண்டுமாம்! அந்த மழையை அழைக்க மாயவளை உவமை சொல்லி அழைக்கின்றனர்! இன்னொரு தமிழ்ச்சுவைப் பாடல்! வாங்க அனுபவிக்கலாம்! இறுதியில் எழுதி இருப்பதையும் படியுங்கள்!]

நீலக்கடலினை நெருங்கி அதனை முகர்ந்து
கடலினைக் குறைத்து கார்மேகமாய் எழும்பி
மலைமகளாம் உமையவளை ஒத்த மேகம் போல் திகழ்க!

எங்களை ஆட்கொண்டு அருள் பாலிக்கும்
பார்வதியின் சிற்றிடையைப் போல
மெலிதாய் மின்னும் மின்னலாய்ப் பொலிக!

திருப்பிராட்டியின் திருவடியில் பொலிவாய்
திகழ்ந்திருந்து, திருநடனத்தின் போது பேரொலிபோல்
முழங்கிடும் சிலம்பு போன்ற இடிபோல் ஒலிக்க!

பிறைநுதல் போல வளைந்து நிற்கும்
வில்லென விளங்கிடும் எம் தாயின் புருவம் போல
பொலியும் வானவில்லாய் வளைந்திடு!

எம்மை விட்டு என்றும் விட்டகலா எந்தாயோடு
என்றும் இணைந்திருப்பதால் அவரன்பும் கூட்டி
நம்போன்ற அன்பர்க்கெல்லாம் விரைந்து வந்து

நாம் கேளாமலே, கேட்கும் முன்னே நம்மீது
அருள் புரியும் அன்னையவள் அருள் போல எம்மீது
பொழிக மழையே! எனச் சொல்லி ஆடடி என் பெண்ணே!

[மேகத்தை, மின்னலை, இடியை, வானவில்லைப் பார்க்கையிலும், அன்னையையே காணும் இவர் நிலை நமக்கெல்லாம் வர இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ!]

அருஞ்சொற்பொருள்:
இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;
முன்னி - முற்பட்டு.

13 பின்னூட்டங்கள்:

SP.VR. SUBBIAH Sunday, December 31, 2006 7:21:00 PM  

மேகத்தை, மின்னலை, இடியை, வானவில்லை
ஏகததை, அவையாளூம் சுந்தரியை - அகமதிற்கொண்ட
பாவையர் போற்பிறவி கொள எத்தனைபிறவி
தேவையெனச் சொல்வீர் தெரிந்து!

VSK Sunday, December 31, 2006 11:15:00 PM  

எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.

http://www.musicindiaonline.com/music/devotional/s/album.374/diety.8/

VSK Sunday, December 31, 2006 11:25:00 PM  

தெரிந்துவிட்டால் ஏனிந்தத் தொல்லை ஐயா!
புரிந்துவிட்டால் பொன்னம்பலவன் நாமே
ஐயா!
தெரியாமல் விழிக்கின்றோம்
புரியாமல் கழிக்கின்றோம்
வாழ்நாளை வீணே இங்கு!
பாழாகாமல் பணிவோம் சிவனை!

SP.VR. SUBBIAH Sunday, December 31, 2006 11:29:00 PM  

//தெரிந்துவிட்டால் ஏனிந்தத் தொல்லை ஐயா!
புரிந்துவிட்டால் பொன்னம்பலவன் நாமே
ஐயா!
தெரியாமல் விழிக்கின்றோம்//

நாங்கள்தான் விழித்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் வழி தெரிந்து கொண்டுவிட்டீர்கள் -
உங்கள் பதிவுகளைப் பார்க்கும்போது தெரிகிறது. :-)))

ஜெயஸ்ரீ Monday, January 01, 2007 12:11:00 AM  

புத்தாண்டு னல்வாழ்த்துக்கள் SK அவர்களே!!


இந்தப் பாடலின் பொருள்

"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழி உள்புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிந்தேலோர் எம்பாவாய் "


இந்த திருப்பாவைப் பாடலை மிகவும் ஒத்திருப்பதைப் பாருங்கள்

ஓகை Monday, January 01, 2007 12:20:00 AM  

இனியதாம் ஆண்டு இரண்டாயிரத்து ஏழில்
நனி சிறந்து நற்றிறம் மிகப்பெற்று வாழ்க!

தேன்கூடு உங்களுக்கு அளித்த புத்தாண்டு பரிசில் அகமிக மகிழ்ந்தேன்.

தொடரட்டும் உங்கள் வெற்றிகள்.

VSK Monday, January 01, 2007 12:24:00 AM  

ஆமாங்க! நீங்க சொன்னவுடந்தான் இது உறைக்கிறது!

சமய நல்லிணக்க்த்தோடு நீங்கள் தொடங்கி வைத்த இச்செய்தி, பதிவுலகத்தில் தொடர்ந்து பொலிய நானும் உங்களுடன் இப்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஜெயஸ்ரீ!

VSK Monday, January 01, 2007 12:26:00 AM  

உங்கள் பெருந்தன்மைக்கு எனது நன்றி ஆசானே!

ஆனால், இன்னும் வழி தேடித்தான் விழிக்கிறேன் ஐயா!

VSK Monday, January 01, 2007 12:29:00 AM  

மிக்க நன்றி தங்கள் வாழ்த்துகளில் திரு ஓகை!

உங்கள் வேகம் இன்னும் என் கண்ணில் நிற்கிறது!

தொடரட்டும் தீ!

புத்தாண்டு வாழ்த்துகள்!

Anonymous,  Tuesday, January 02, 2007 12:20:00 AM  

பாடலுக்கு நன்றி.....

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.....

மெளலி....

கோவி.கண்ணன் [GK] Tuesday, January 02, 2007 11:16:00 AM  

//மேகத்தை, மின்னலை, இடியை, வானவில்லைப் பார்க்கையிலும், அன்னையையே காணும் இவர் நிலை நமக்கெல்லாம் வர இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ!]//

எஸ்கே ஐயா,

கவலையை விடுங்கள் !

தூய அன்பில் இறைவன் இருப்பதாக மதங்களும் சொல்கின்றன, மகான்களும் சொல்கிறார்கள். ஜடப் பொருள்களில் இறைவனைத் தேடுவதைவிட தூய அன்பால் தேடுவது சிறந்ததாக தெரிகிறது ! தூய அன்பு செலுத்துபவரையே இறைவனாக நானும் நினைக்கிறேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதாக தமிழறிஞர் ஒருவர் சொல்கிறார் !

VSK Tuesday, January 02, 2007 11:41:00 AM  

நன்றிக்கும், வாழ்த்துக்கும் என் நன்றிகள், மதுரையம்பதியாரே!

VSK Tuesday, January 02, 2007 11:48:00 AM  

// ஜடப் பொருள்களில் இறைவனைத் தேடுவதைவிட தூய அன்பால் தேடுவது சிறந்ததாக தெரிகிறது ! //

ஜடப்பொருள்களின் மேலேயே இத்துணை அன்பு செலுத்துபவர், உயிர்களின் மீது எவ்வளவு அன்பு கொண்டிருப்பார்!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

கேள்வி அமைப்பு முறையாக இல்லையே, கோவியாரே!

'ஜடப்பொருள்களில், அன்பில்' அல்லது, 'ஜடப்பொருள்களால், அன்பால்' என்றால் சரியாக இருக்குமோ?
:))

//ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதாக தமிழறிஞர் ஒருவர் சொல்கிறார் !//

ஒருவர் அல்ல, எத்தனையோ தமிழறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள், நமக்கெல்லாம் நன்கு தெரிந்த திரு. அண்ணாதுரை உட்பட!
:)

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP