"பரிசேலோர் எம்பாவாய்" [5]
"பரிசேலோர் எம்பாவாய்" [5]
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5
தோழியர்: திருமாலும், பிரமனும் காணாமல் தவித்த மாமலையினை
நாமெல்லாம் நன்கறிவோம் எனப் பொய்யாகப் பிதற்றும்,
பாலும், தேனும் குழைத்தது போலும் இனிய சொல் பேசிடும்
ஏமாற்றுக்காரியே! கதவைத் திறந்திடுவாய்!
இவ்வுலகும், விண்ணுலகும்,பிறவேறு உலகங்களும், அறிவதற்கும்
அரிதான சிவனாரின் திருக்கோலத்தையும், நம்மையெல்லாம்
ஆட்கொண்டு குற்றங்களை அழித்திடும் பெருமையினையும், பாடி
"சிவனே சிவனே" என்று இங்கு நாங்கள் ஓலமிட்டுக் கதறுவதைக்
கேட்ட போதிலும், உணர்வொன்றும் நெகிழாமல், உணர்ச்சியற்று
இருப்பது எப்படியோ? மணம் நிறை கூந்தலுடையாளே !
இதுவோ உன் தன்மை? சொல்லடி என் பெண்ணே!
அருஞ்சொற்பொருள்:
பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்;
ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.
12 பின்னூட்டங்கள்:
அதற்குள் நேரமாகிவிட்டதா? எழுப்புவதில் கடிய சொற்கள் வரத்தொடங்கிவிட்டனவே?!
//நம்மையெல்லாம்
ஆட்கொண்டு குற்றங்களை அழித்திடும் பெருமையினையும், பாடி
"சிவனே சிவனே" என்று இங்கு நாங்கள் ஓலமிட்டுக் கதறுவதைக்
கேட்ட போதிலும், உணர்வொன்றும் நெகிழாமல், உணர்ச்சியற்று
இருப்பது எப்படியோ? மணம் நிறை கூந்தலுடையாளே !
இதுவோ உன் தன்மை? சொல்லடி என் பெண்ணே!
//
எஸ்கே ஐயா !
எல்லாம் தெரிந்து,
தூங்குவது போல நடிப்பவர் ஒருவரை
திட்டுவது போல இருக்கு !
:)
'கடிய' என்று னீங்கள் எந்தப் பொருளில் சொல்லுகிறீர்களோ தெரியவில்லை, குமரன்;
ஆனால், கள்ளம் என்று வந்த பின்னர் சற்று கடிந்து சொல்ல சற்று அவசியமாகுமோ??
:))
அட, நீங்களும் இன்னொரு கடிதலைப் பார்த்து விட்டீர்களே, கோவியாரே!!
:))
அரி, அயனும் காணா அரிய சோதியை, ஆதி அந்தமில்லா பரமநாதியான ஈசன் போற்றுவோம்....
மெளலி.....
திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலுமே வெளியில் நின்று கொண்டிருக்கும் தோழிகள் தூங்குபவளை...அல்லது அது போல் நடிப்பவளை...கடிந்து கொள்வது இறையனுபவத்தை நாங்கள் அடைய முடியாமல் பொழுதை (எங்கள் நேரத்தையும் சேர்த்து)வீணடிக்கிறாயே..சீக்கிரம் வா...என்பதாய் இருக்கும் என்று எப்போதோ கேட்ட ஞாபகம்.
ஆதியும் அந்தமில்லா அருட்பெருஞ்ச்சோதியை நாம் அறிந்துகொண்டு விட்டோம் என்று நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கும் மனமே !
மாலும் நான்முகனுமே அடிமுடி காண இயலாத மாமலையினை அறிந்துணர்வது அவ்வளவு எளிதா?
'ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
மனமுருகி அரற்றுபவர்களுக்கே அவனை உணரமுடியும் "
எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.
http://www.musicindiaonline.com/music/devotional/s
//எழுப்புவதில் கடிய சொற்கள் வரத்தொடங்கிவிட்டனவே?//
கொடிய வல் வினைகளை
கடிய சொல் கணைகளால்
தானே விரட்ட வேண்டும்? :-))
விரட்டட்டும; பக்தி உள்ளங்களைத்
திரட்டட்டும்!!
முதலில் குமரன் 'கடிய சொற்கள்' என்றதும், கடினமான சொற்களோ என நினைத்தேன்.
பின், கோவியாரும் அதையே சொன்னதும், புரிந்தது!
இப்போது நீங்கள் அதற்கொரு நியாயத்தைக் கற்பிக்கிறீர்கள், ரவி!
"முள்ளை முள்ளால் எடுப்பது போல!"
"வைரத்தை வைரத்தால் அறுப்பது போல!"
இன்னும் மற்றவர் வேறு "வந்து" என்ன சொல்லப் "போகிறார்களோ"?
[இன்னும் மற்றவர் வேறு என்ன சொல்லப் "போந்தாரோ?"}
குமரன் கவனிக்க!!
கவனித்தேன் எஸ்கே. மற்றவர் என்ன சொல்லப் போந்தாரோ என்பது என்ன சொல்லப் போகின்றாரோ என்ற பொருளில் வருமா சொல்ல வந்தாரோ என்ற பொருளில் வருமா?
எனக்கென்னமோ சொல்லப் போந்தார் என்றால் சொல்ல வந்தார் என்ற பொருள் தான் தோன்றுகிறது. சொல்லப் போகின்றார் என்ற பொருள் தோன்றவில்லை.
//எனக்கென்னமோ சொல்லப் போந்தார் என்றால் சொல்ல வந்தார் என்ற பொருள் தான் தோன்றுகிறது. சொல்லப் போகின்றார் என்ற பொருள் தோன்றவில்லை.//
ஆனால், எனக்கென்னவோ, நான் காட்டிய மற்ற சில உதாரணங்களைப் போல இதிலும் இந்த 'வந்து போகுதல்' ஏதேனும் ஒரு சொல்லின் முதலிலும், அடுத்தும் வருவதாக உணர்கிறேன், குமரன்!
அதாவது, "இன்னும் மற்றவர் வேறு என்ன "வந்து" சொல்லப் "போகிறார்களோ"?" என்னும் பொருளில்!!
Post a Comment