Saturday, December 30, 2006

"ஆடேலோர் எம்பாவாய்" - 5 [15]

"ஆடேலோர் எம்பாவாய்" - 5 [15]

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர


நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 15


{"இதோ இப்படி இழுத்துப் பிடித்து, எழுப்பி அழைத்து வந்திருக்கிறோமே, இந்தப்பெண்! இவள் எத்தன்மையாயவள் தெரியுமா" எனச் சொல்லி மற்றவர்க்கு உரைக்கும் பாடல்!}

எம்பெருமான், எம்பெருமான் எனச் சொல்லி எப்போதும்
நம்பெருமானின் பெருமையினை வாய் ஒயாமல்
உள்ளமெல்லாம் சொல்லி மகிழ்ந்து கொண்டிருப்பவள்!

அவனையே நினைத்திருந்து விடாது வழிந்திடும்
தாரை தாரையென கண்ணீரில் தோய்ந்து
இவ்வுலக நினைப்பினையே மறந்தவள் இவள்!

வேறோர் தேவரையும் பணிவதில்லை இவள்!
பேரரசனாம் நம் சிவனாரின் மேல் இவ்வாறு
பித்துப் பிடிக்கின்ற தன்மையினையும் செய்ய வல்ல

அவ்வாறு செய்ய வைக்கும் சிவனாரின் திற்ம் மிக்க
சிவந்த திருப்பாதங்களையும் நம் வாயாரப் பாடி
அவர்தம் திறனை வியந்திங்கே போற்றிப் போற்றி

கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்டிர்களே!
நேர்த்தியான மலர்கள் நிறைந்த இப் பைங்குளத்தில்
ஆட்டிடுவோம் நீயும் ஆடடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:

ஓவாள் - ஓயமாட்டாள்; தாரை - கண்ணீர்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்;
பார் - உலகம்; அரையர் - அரசர்; வார் உருவப் பூண் முலையீர் - கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்டிர்.

6 பின்னூட்டங்கள்:

Unknown Saturday, December 30, 2006 5:37:00 PM  

எஸ்.கே

நல்ல பொழிப்புரையை அளித்தமைக்கு நன்றி. தங்கள் திருப்பணி தொடரட்டும்.

VSK Saturday, December 30, 2006 5:42:00 PM  

எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.

http://www.musicindiaonline.com/music/devotional/s/album.374/diety.8/

VSK Saturday, December 30, 2006 5:44:00 PM  

அடடே! யாரது நம்ம செல்வனா?

ரொம்ப நாளாச்சு பார்த்து!

பரிட்சை எல்லாம் நன்கு முடிந்ததா?

இனியாவது ஒழுங்காக வரவும்!!
:))

SP.VR. SUBBIAH Saturday, December 30, 2006 9:14:00 PM  

எம்பெருமான், எம்பெருமான் எனநினைத்து எப்போதும்
நம்பெருமான் பெருமையினைச் சொல்வீர் - நம்முள்ளம்
நம்பெருமை, நம்வீடு, நலமெல்லாம் காப்பான்
நமச்சிவாய சொல்க நாளும்!

VSK Saturday, December 30, 2006 9:31:00 PM  

முப்பதும் முடிந்த பின்னர், ஒரு
"பாடி, ஆடி, எழுப்பி சுப்பாவாய்" போடலாம் போலிருக்கிறதே!

தொடருங்கள் ஆசானே!

Anonymous,  Monday, January 01, 2007 5:41:00 AM  

எஸ்.கே சார்,
புத்தாண்டு வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும்.

என்றும் தொடரட்டும் உங்களது இறை தொண்டு.

மெளலி....

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP