"பரிசேலோர் எம்பாவாய்" [4]
"பரிசேலோர் எம்பாவாய்" [4]
4.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4
தோழியர்: முத்துப் போன்ற ஒளிவீசும் புன்னகை உடைய பெண்ணே!
உனக்கு இன்னுமா பொழுது விடியவில்லை?
படுத்திருப்பவள்: கிள்ளை மொழி பேசும் நம் தோழியர் அனைவரும்
வந்து சேர்ந்தனரோ? கொஞ்சம் எண்ணிப் பார்த்துச் சொல்லுங்களேன்!
தோழியர்: உள்ளவரை உள்ளபடி எண்ணித்தான் சொல்கின்றோம்
ஏதேதோ கள்ளம் சொல்லி வீணாகக் காலத்தைப்
போக்காமல் எழுந்திடுவாய் அவ்வளவினிலே!
விண்ணவரும் தம் துயருக்கு மருந்தெனவே போற்றிடும்
அனைத்து வேதங்களுக்கும் மேன்மையாய் விளங்கிடும்
முழு முதற் பொருளாகி, காட்சிக்கு இனியவனாம் சிவனாரை
முறையாகப் பாடி, கண்ணீர் மல்கி, எங்கள் உள்ளம் உருகிடப்
பாட வந்திருக்கும் நாங்களோ இது போலும் கள்ளமெலாம் செய்வோம்!
எங்கள்மேல் நம்பிக்கை இல்லையெனில், எழுந்து வந்து நீயே
எண்ணிப் பார்த்துக் கொள்! அப்படி எண்ணிக்கை குறைந்திருப்பின்
மீண்டும் உன் மலர்ப்படுக்கை சென்று வேண்டுமானால்
திரும்பவும் தூங்கச் செல்லடி! என் பெண்ணே!
அருஞ்சொற்பொருள்:
ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்); அவமே - வீணாக
23 பின்னூட்டங்கள்:
எஸ்கே ஐயா,
நானும் எண்ணி பார்த்தேன். தோழிகளோ, தோழர்களோ பொய் சொல்லமாட்டார்கள் !
மார்கழி திங்கள் மதிநிறை நன்னாள் !
ஆஹா ! மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடல்கள் , பொருளுடன்.
விண்ணுக்கு ஒருமருந்தை, வேத விழுப்பொருளைக்,
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துருக இது தருணம் , 'கண்ணைத் துயின்று (அறியாமையில் உழன்று) அவமே காலத்தைப் போக்காதே மனமே ! என் அறிவு மனதுக்கு அறிவுறுத்துவதாகக் கொள்ளலாம்.
இனிதே தொடருங்கள் !!
கள்ளம் சொல்லாதே- இந்த சொல் இன்னும் சில கிராமங்களில் வழக்கில் உள்ள சொல்.
"கள்ளம் பறையண்டா"- இது மலையாளத்தில் கூட உள்ளது.
கேட்டு ரொம்ப நான் ஆகிறது.
எண்ணினாலும், எண்ணினாலும் இதுதான் உண்மை கோவியாரே!
இது இப்போது புரிந்தது எனக் கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது!
//மார்கழி திங்கள் மதிநிறை நன்னாள் ! //
அடுத்த வரி.....??
"இது கண்ணன் வரும் நேரம் அல்லவா?"
கண்ணனும் வந்தாச்சு!
:))
தத்துவ விளக்கம் சொல்லும் பொறுப்பை,உங்களிடமும், ரவியிடமும், குமரனிடமும், இன்னும் மற்றவரிடமும் விட்டு விட்டு, நேரே பொருள் சொல்லிப் போகிறேன்!
மனம் கனிந்து, கசிந்துருகி, நீங்களெல்லாம் வந்து சிறப்பிக்க வேண்டும் ....."தினமும்"... எனவும் வேண்டுகிறேன், ஜெயஸ்ரீ!
கள்ளமில்ல உள்ளத்தில் கள்ளம் வருமோ, திரு.குமார்!
மலையாளம்.... தெவிட்டாத இனிய மொழி.
இந்த மார்கழி மாதத்தில் நிகழும் இன்னுமொரு அற்புத நிகழ்வாம் சபரிமலை கோஷத்தை நினைவு படுத்தும் தேன்மொழி!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
இந்தப் பாடலும் ஒவ்வொரு சொல்லும் அமிழ்தாக இருக்கிறது எஸ்.கே.
ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக்கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ?
எண்ணிக்கொண்டுள்ளவா(று) சொல்லுகோம். அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே - விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப்பொருளை, கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம் உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டேம். நீயே வந்து எண்ணி, குறையில் துயில். ஏலோர் எம்பாவாய்.
சின்ன வயசுலேயே சாமி, கோவில்ன்னு சுத்தணுமா? எல்லாம் வயசான காலத்துல பாத்துக்கலாம். சின்னப் பசங்க எல்லாம் சாமி சாமின்னு வேற வேலையில்லாம சுத்துறதைப் பாத்தா வெறுப்பா இருக்கு.
இந்த மாதிரி மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு கேட்டு சில நேரம் நம் மனமும் நேரம் வரவில்லை; இன்னும் கொஞ்சம் காலம் செல்லட்டும் என்று காத்திருக்கச் சொல்கிறதே! இன்னும் கொஞ்சம் காலம் சின்னப் பூவில் இருக்கும் தேனை உண்டு களிக்கச் சொல்கிறதே; தேன்கடலை வயதான காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறதே. அந்த மனத்திற்கு அறிவின் அறிவுரை இது.
எண்ணிக் கொள். நேரம் ஆகிவிட்டது. கூடி வர வேண்டியவை எல்லாம் வந்துவிட்டது. நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். அப்படி யாராவது குறைந்தால் (ஏதாவது குறைந்தால்) மீண்டும் உலக இன்பத்தில் மூழ்கிவிடலாம்.
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடி - மண்ணில்
எண்ணற்ற உயிர்வாழ ஏற்றம் தந்தோனை
கண்ணால் பணிவோம் கனிந்து!
//விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்//
அருமையான வார்த்தைகள், அதுவும் இன்றைய மருத்துவர் இதனை சொல்வது சாலவும் நன்றே......யாரென்ன என்ன மருந்தளித்தாலும் அப்பன் வைத்தீஸ்வரனல்லோ தீர்க்கிறான் நமது பிணிகளை.....
அவனன்றி, அவனளித்த வேதமன்றி ஏதளிக்கும் அவனுணர்வை?.
பதம் பிரித்து, பாடலைப் புரிந்து கொள்ளும் வகையில் மீண்டும் சொல்லும், தங்களது மௌனச் சேவைக்கு என் நன்றிகள், குமரன்!
:))
பதம் பிரித்து, பாடலைப் புரிந்து கொள்ளும் வகையில் மீண்டும் சொல்லும், தங்களது மௌனச் சேவைக்கு என் நன்றிகள், குமரன்!
:))
கண்ணால் பணிந்தாலே போதும் என்கிறீர்கள், ஆசானே!
அதுவும் சரிதான்!
:))
//அவனன்றி, அவனளித்த வேதமன்றி ஏதளிக்கும் அவனுணர்வை?.//
வேறெதுவும் தேவையில்லை, திரு. மௌல்ஸ்.
ஆசான் சொன்ன கண்ணால் பணிதலுக்கே அவன் வந்து ஆட்கொண்டுவிடுவான்!
அவன் மட்டுமே போதும்!
//கண்ணால் பணிந்தாலே போதும் என்கிறீர்கள், ஆசானே!
அதுவும் சரிதான்!
:)) //
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கோடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழித்துணையே!
- அபிராமி பட்டர்
துணையிலேயே பெரிய துணை விழிக்குத்துணையாக வருவதுதான். அன்னை அபிராமி நான் விழித்திருக்கும் போதெல்லாம் எனக்குத் துணையாக வருவாள் - என்கிறார் அபிராமி பட்டர்
அது போல கண்ணால் பணிவோம் கனிந்து! எனும்போது இறைவன் நமக்கு கண் போகின்ற பாதையிலெல்லாம் துணையாக வரவேண்டும் என்று ஒரு (நைப்) ஆசையில்தான் அப்படி எழுதினேன் திரு.எஸ்.கே அவர்க்ளே!
SP.VR.SUBBIAH
நானும் அதையேதான் 'சரி' என்று சொன்னேன், ஆசானே!
பேருந்தில், ரயிலில் செல்லும் போது, வழியில் தெரியும் கோபுரத்தையோ, அல்லது கோவிலையோ பார்த்து கண்ணால் பணிவதில்லையா?
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கிய பொருள் கைப்படவேண்டும்
மனமும் குணமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்!!
ஆகவே, அது [நைப்] ஆசை அல்ல, ஆசானே; நல்லாசையே!
SK
அடியேன் மீண்டும் வந்தேன். அடடா இரண்டு நாள் மிஸ் பண்ணி விட்டேனே, பாஸ்டனில்!
//கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே//
தூங்காதே தம்பி தூங்காதே...பாட்டு போலவே இருக்கு!
எழுப்புவதில் தான் எத்தனை டெக்னிக்?
//நீயே வந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்//
எண்ணுவதற்கு எழுந்து விட்டால், மீண்டும் துயில் கொள்ளப் போகத் தான் முடியுமோ? தூக்கம் போய் விடாதா?...எப்படியெல்லாம் எழுப்புகிறார்கள் பாருங்கள்!
"எல்லாரும் போந்தாரோ
போந்து எண்ணிக் கொள்"
என்று திருப்பாவையிலும் வரும்!
நல்லன எல்லாம் தரும் நாரணன்
தங்கையை மணந்த நாயகனை எண்ண,
மார்கழிப் பனி மூட்டம் விலகி,
ஞான விளக்கம்
எய்தலாம்.
நன்றி எஸ்கே சார்.
//எழுப்புவதில் தான் எத்தனை டெக்னிக்?
//நீயே வந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்//
எண்ணுவதற்கு எழுந்து விட்டால், மீண்டும் துயில் கொள்ளப் போகத் தான் முடியுமோ? தூக்கம் போய் விடாதா?...எப்படியெல்லாம் எழுப்புகிறார்கள் பாருங்கள்!//
எப்படியும் அவளையும் எழுப்பிக் கூட்டிக் கொண்டு போய்விட வேண்டும் என்னும் அவாவில், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற கதையாய், "நாங்களா கள்ளம் பேசுவோம்" என்று சொல்லிக் கொண்டே இப்படி ஒரு கள்ளம்!
இது நல்லெண்ணத்தில் விளையும் கள்ளம்!
//நல்லன எல்லாம் தரும் நாரணன்
தங்கையை மணந்த நாயகனை எண்ண,
மார்கழிப் பனி மூட்டம் விலகி,
ஞான விளக்கம்
எய்தலாம்.//
நல்லன எண்ணினால் எய்தலாம்!
அருமை!
ஒண்ணித்திலநகை...என்ன அருமையான சொற்றொடர். நித்திலம் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒரு திரைப்பாடலில் கூட "நீலக்கடல் கொண்ட நித்திலமே" என்று வரும். இன்றைக்கு நித்திலங்கள் குறைந்து போயின. திரைப்பாடல்களில் தமிழே குறைந்த பொழுது நித்திலங்கள் குறைவதில் வியப்பென்ன.
சில சமயங்களில் வீட்டில் விசேஷம் இருந்தால் காலையில் எழுந்திருத்துக் கிளம்ப வேண்டியிருக்கும். அப்பொழுது எழுப்பினால்...அவங்க எந்திரிச்சாச்சா..இவங்க எந்திரிச்சாச்சான்னு கேள்வி எழுப்புவோம். எல்லாரும் எந்திரிச்சிக் கெளம்பியாச்சு. நீதான் மிச்சம்னு சொல்லி எழுப்புவாங்க. அந்த நிகழ்வைக் கவிதையில் கொண்டு வந்துள்ளார் திருவாதவூரார். வாழ்க்கையை வாழ்ந்த ஊரார்.
பல வேலைகள் காரணமாக இந்தப் பக்கம் வருவதற்கு வாய்க்கவில்லை.
// இந்தப் பாடலும் ஒவ்வொரு சொல்லும் அமிழ்தாக இருக்கிறது எஸ்.கே.//
குமரன், எல்லா பாடல்களிலும் எட்டு அடிகளிலும் ஒரே எதுகை அமைந்திருப்பதைப் பாருங்கள். இது மிகப் பெரிய விஷயம்.
// நித்திலம் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒரு திரைப்பாடலில் கூட "நீலக்கடல் கொண்ட நித்திலமே" என்று வரும். //
ஜிரா, அம்பிகாபதிப் படப் பாடல்களில்
"அமராவதியே.." என்ற பாடலில் கட்டழகே நித்திலமே என்று வரும். TMS பாடிய இந்த அருமையான சந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.
மிக அழகான ஒரு தமிழ்சொல்லையும்,
எட்டடியிலும் ஒரே சந்தத்தில் அமைந்த திறனையும்,
மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், ஓகையாரே!
எனக்குத் தெரிந்த ஒரு நித்திலம் இதோ!
"நித்திரைதான் போதாதோ
நித்திலமே நீ எழுவாய்
இத்தரையில் உன் பணிகள்
எத்தனையோ எழுவாய்!"
படம்- நாணல்
பாடியவர்- சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
பாடுபவர்- சௌகார் ஜானகி!
இந்த மார்கழிப் பதிவில் இது பொருத்தமான பாடல் என நினைக்கிறேன்!
Post a Comment