Friday, December 29, 2006

""ஆடேலோர் எம்பாவாய்"- 4. [14]"

""ஆடேலோர் எம்பாவாய்"- 4. [14]"

[தமிழ்மணம் சென்ற பதிவில் இன்னும் தொடரட்டும்!
திருவெம்பாவையை நாம் தொடரலாம்!]


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்


சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி


சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்


பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

{ஆட்டமும், பாட்டமும் இன்னும் தொடர்கிறது!!}

காதில் பூட்டியிருக்கும் குழைகள் ஆட,
மார்பில் தவழும் பொன் அணிகலன்கள் ஆட,
பூமாலை அணிந்த கூந்தல் ஆட,
பூவில் தேனைக் குடிக்க வரும் வண்டினம் ஆட,


நாமெல்லாரும் இக்குளிர்நீரில் களித்தாடி,
இறைவனின் சிற்றம்பலத்தைப் பாடி,
வேதங்களின் மூலப்பொருளாம் சிவனாரைப் பாடி,
எவ்வண்ணம் அவன் வேதங்களின் பொருளாவான் எனப் பாடி,


சோதிவடிவானவனின் பெருமையைப் பாடி,
அவன் தலையில் அணியும் கொன்றை மலர்க் கொத்தினைப் பாடி,
அனைத்திற்கும் முதலாகும் அவன் வல்லமையைப் பாடி,
அவனே அனைத்திற்கும் இறுதியும் ஆவதை வியந்து பாடி,


மும்மலம் அழித்து,பின் நம்மை வளர்த்தெடுத்த,
இறைவனின் சக்தியின் பாதத் திறத்தினையும்
போற்றிப்பாடியே நீயும் நீராடடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம்
- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

13-ம் பாடலில் சொன்ன பத்து "பொங்குமடு"க்களுக்கும் விளக்கத்தை சென்ற பதிவில் காணலாம்!

8 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் Friday, December 29, 2006 6:39:00 PM  

எஸ்.கே, இந்தப் பாடல் கேட்கும்போதே ஆடத் தோன்றும்.
//ஆதித்திறம் பாடி,
அப்பொருளாமாப்பாடி.//
பாதத் திறன் பாடி ஆட,
போகலாம் என்று ஆவலாக இருக்கிறது.:-)

VSK Friday, December 29, 2006 8:02:00 PM  

ஆடலைக் காண அரிவல்லியும் இங்கே
ஆனாலும் எங்கே கரிமாத கண்ணன்?

கண்ணன் அங்கே படுத்து நின்று
கைலாசன் ஆடல் காணுகிறான்!

வாருங்கள்!அனைவரும் ஆடிடுவோம்
பாருங்கள்! ஆடேலோர் எம்பாவாய்!

SP.VR. SUBBIAH Saturday, December 30, 2006 12:42:00 PM  

ஆடியது:
காதார் குழை, பைம்பூண் கலன், கொதையின் குழல், வண்டின் குழாம்

ஆடவேண்டியது:
சீதப் புனல்

பாட வேண்டியது:
சிற்றம்பலத்தானின் புகழ், வேதப் பொருள், சோதித் திறன், சூழ்கொன்றையணிந்தவரின்
அழகு, ஆதிமுதலானவனும், முடிவில்லாதவனுமாகிய சிவனின் மேனமை, அவரின் பாதம் பணிவதால் உண்டாகும் நன்மை

பாட்டில் வரும் பல ட, டி என்று முடியும் சொற்களால் ஆடிப்போய் (திகைத்துப்போய்)
விட்டேன்.

என்னவொரு புலமை?

அறிய வைத்தமைக்கு ந்ன்றி அய்யா!

அன்புடன்
SP.VR. சுப்பையா

கோவி.கண்ணன் [GK] Saturday, December 30, 2006 1:43:00 PM  

எஸ்கே ஐயா,

ஆடல்வல்லானை பாடி பாடி என முடித்த இப்பாடலும் அதற்கான உங்கள் விளக்கமும் படிப்பவர்களுக்கு நல்ல வரும்படி !

பாராட்டுக்கள் !

VSK Saturday, December 30, 2006 3:01:00 PM  

ஆடி, பாடி, என இரண்டுக்கும் ஒரு புலமை விளக்கம் கொடுத்த ஆசானுக்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்!

VSK Saturday, December 30, 2006 3:03:00 PM  

"வருமபடி" எனச் சொல்லியாவது உங்களை இங்கே 'வரும் படி" செய்த இறையாண்மைக்கு எனது நன்றி, கோவியாரே!

VSK Saturday, December 30, 2006 3:05:00 PM  

ஆடல் வல்லி -- "அங்கே"
பாடல் வல்லி!

பாடலைக் கேட்க இங்கே செல்லவும்!

http://kannansongs.blogspot.com/2006/12/19.html

Anonymous,  Monday, January 01, 2007 5:39:00 AM  

நன்றி எஸ்கே சார்.....லேட்டா வந்தமைக்கு மன்னிக்கவும்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP