"பரிசேலோர் எம்பாவாய்" [3]
"பரிசேலோர் எம்பாவாய்" [3]
3.
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3
தோழியர்: முத்தையொத்த ஒளியுடைய புன்னகையை வீசும் பெண்ணே!
அனைவர்க்கும் முன்பாக எழுந்திருந்து வாயினிக்க
"அப்பன், ஆனந்தமளிப்பவன், இனிப்பவன் என்று இனிக்கப் பேசுவையே
இன்றென்ன ஆயிற்று உனக்கு? வந்து உன் வாசல் திறப்பாய்!
படுத்திருப்பவள்: பத்து குணம் உடைய என் தோழியரே! இவற்றினால் இறைவனின்
அடியவராய் ஆனவரே! என்னிடம் அன்புடையீரே!
பாவை நோன்புக்குப் புதியவளாம் என்னிடம் குற்றமிருப்பின்
என்னையும் அடியவாராக்குதல் உமக்கு சம்மதமில்லையோ?
தோழியர்: எம்மிறைவன் மேல் உனக்குள்ள அன்பெமக்குத் தெரியாதோ?
பத்தும் நிறைந்த சித்தம் உள்ள உன் போன்ற அழகியர்
பாடாமல் போவாரோ சிவானாரை? எங்களுக்கு இதுவும் வேண்டும்
இன்னமும் வேண்டும்! சரிதானே என் பெண்ணே!
அருஞ்சொற்பொருள்:
அத்தன் - அப்பன்; பத்து - தசகாரியம்[விளக்கம் மேலே காண்க!]; பாங்கு - நட்பு;
புன்மை - கீழ்மை.
17 பின்னூட்டங்கள்:
எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.
http://www.musicindiaonline.com/music/devotional/s/album.374/diety.8/
பத்து குணங்கள் என்னவென ஒரு கேள்வி கண்டிப்பாக வரும்!
இதோ அவை!
சிவனடியார்களின் பத்து வித வெளிப்பாடுகள்:
1. சிவனைப் பாடுகையில் குரல் தழுதழுத்தல்
2. நாக்குழறல்
3. உதடு துடித்தல்
4. மெய்[உடல்] சிலிர்த்தல்
5. மயிர்க் கூச்செறிதல்
6. வியர்த்தல்
7. நடை தள்ளாடல்
5. கண்ணீர் விடல்
9. அழுதல்
10.தன் உணர்வு இழத்தல்
சிவனாரைப் பற்றி பேசும்போதும், அவர் புகழ் பாடும்போதும் ஏற்படும் நிகழ்வுகள் இவை!
படிச்சு முடிச்சிட்டு வலது பக்கம் பார்த்தால் "அன்மையில் வருகை தந்தவர்கள்" என்ற பகுதியில் "அடி & அங்குலம்" என்று காட்டுகிறதே!!
அப்படி என்றால் என்ன?
மாணிக்கவாசக் சுவாமிகளின் தீந்தமிழைப் படிக்கப் படிக்க இன்பமாய் இருக்கிறதே! ஐயா, மாணிக்கவாசகரின் தெவிட்டாத தீந்தமிழுக்கு நல்ல அழகு தமிழில் மிகவும் எளிமையாக பொழிப்புரை தந்தமைக்கு மிக்க நன்றிகள். பொருளை உணர்ந்து படிக்கும் போது இன்பம் இன்னும் பல மடங்காகிறது.
அடுத்த பாடலுக்காக மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அது என்னவென எனக்கும் தெரியவில்லை, திரு.குமார்!
நண்பர் ஒருவர் கௌண்டர்[counter] என்று போட்டுத் தந்தது அது!
எடுக்கணும் அதை.
நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம்!
உங்களை அளக்க அதனால் முடியாது!!
:))
வேண்டும் அத்தனின் வினைதீர்கும் பார்வை
யாண்டும் இடும்பையில் வாழ்விற்கு - மீண்டும்
மீண்டும் பாடுக சித்தத்தில் அவனைவைத்து
மீட்பான் பிறவிப்பிணி மீதிருந்து!
இதனை எழுதுகயில், எனக்கும் அதே உணர்வு ஏற்பட்டது திரு.வெற்றி!
பத்து குணங்கள் வேண்டாம்!
ஒன்றிரண்டாவது கண்டிப்பாக வரும் ஒவ்வொருவருக்கும்!
ஆண்டு முழுவதும் வணங்க வேண்டும்
ஆண்டவனை நாம் மறந்து நம் வழி சென்றாலும்
ஆண்டுக்கு ஒருமுறையாகிலும் இம்மாதத்தில்
ஆண்டவனை வேண்டிடுவோம் ஆசானை நினைந்து!
எஸ்கே ஐயா,
பத்துடையீர் ஈசன் மட்டும் தானா ?
நித்தம் அன்புக்குறியவர் அவருடைய நேச சிவ குமாரனும் அல்லவா ?
:)
நேற்று எனக்கு படித்துக் காட்டிய பாடல் இது. செறிவான விளக்கம் !
பாராட்டுக்கள் !
பாடலுக்கு மட்டுமல்ல, பத்து குணங்களை வரிசைபடித்தியமைக்கும் நன்றி..........நாளைய தினத்திற்க்காக ஆவலுடன்
'பத்துடை அடியவர்க்கு எளியவன் மற்றவர்க்கு அரியவன் நம் அரும்பெறல் அடிகள்' என்று வேறோர் இடத்திலும் படித்திருக்கிறேன் எஸ்.கே. பக்தியுடைய அடியவர்கள் என்றே அங்கு பொருள் கொண்டேன். இங்கே நீங்கள் பத்து குணங்கள் என்றவுடன் அவை யாவை எனக் கேட்க எண்ணியிருந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். :-)
ஆகா, ஒவ்வொரு சொல்லும் இந்தப் பாடலில் தித்திக்கின்றதே.
முத்து அன்ன வெண் நகையாய்! முன் வந்து எதிர் எழுந்து என் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூரித் தித்திக்கப் பேசுவாய்! வந்து உன் கடை திறவாய்! பத்துடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்குடையீர்! புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ? எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை! இத்தனையும் வேண்டும் எமக்கு! ஏலோர் எம்பாவாய்.
ஆமாம், குமரன்!
ஒவ்வொரு சொல்லும் அமுதென இனிக்கும் சொல்லே!
பத்து குணங்கள் என்னவென்று நானே கேட்க இருந்தேன். வந்து பார்த்தால்..நீங்களே அனைத்தையும் எழுதியிருக்கின்றீர்கள். சிறப்பு. மிகச் சிறப்பு.
இந்தப் பத்தில் எத்தனை நமக்கு என நினைத்துப் பார்த்தேன். ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. :-( அவற்றில் ஒன்றையாவது ஆண்டவன் அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத்தான் முடியும்.
// பத்துடையீர் ஈசன் மட்டும் தானா ?
நித்தம் அன்புக்குறியவர் அவருடைய நேச சிவ குமாரனும் அல்லவா ?
:)
நேற்று எனக்கு படித்துக் காட்டிய பாடல் இது. செறிவான விளக்கம் !
பாராட்டுக்கள் ! //
அத்தனுடன் வேலனை ஆரதிக்க நண்பரின்
சித்தத்தை மாற்றினை நீ
சித்தம் மாறுதல்
சிவன் செயல் அன்றோ
நித்தம் பாடுதல்
ஒன்றே அதன் வழி!
சிவனாரைப் போற்றுதல்
சீலத்துக்கின்பம்!
//சித்தம் மாறுதல்
சிவன் செயல் அன்றோ
நித்தம் பாடுதல்
ஒன்றே அதன் வழி!//
சித்தத்தில் மாறுதல் செய்தல் கருவியாய்
பித்தனுக்(கு) ஆனதும் நீ
// சிவனாரைப் போற்றுதல்
சீலத்துக்கின்பம்! //
சிவனடியார் போற்றுதல் சீவனுக்(கு) இன்பம்
இவனுக்கும் அவ்வடியாய் நீ
சித்தத்தில் சிவனை மட்டும் வைப்போம்.
மத்தவரை மறப்போம்
Post a Comment