Thursday, December 28, 2006

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"இரண்டாம் பகுதி

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]" இரண்டாம் பகுதி

அடுத்த திருவெம்பாவைப் பாடல் எழுதி முடித்தாலும், இந்த 13-ம் பாடலை விட்டு மனம் இன்னும் அகல மறுக்கிறது!

என்னவொரு கவி நயம், இலக்கியநயம், தமிழ்மணம்!

உங்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்ளாமல் அடுத்த பாடலுக்கு செல்லப் போவதில்லை!

தமிழறிந்த நல்லோர் இங்கிருக்கும் வேளையில், இதையும் கொஞ்சம் கேட்டு, எனக்கும் விடையளித்து...... ஆம்... இதற்கு நீங்கள்தான் முதலில் சொல்ல வேண்டும்!... பிறகு 14-ம் பாடலுக்கு நாளை செல்லுவோம்! சரியா!

பாடலை முதலில் மீண்டும் ஒரு முறை பார்ப்போம்!

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"

"பைங்குவளைக் கார்மலரால், செங்கமலப் பைம்போதால்,
அங்கம் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,

தங்கண் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எங்கோனும், போன்று இசைந்த

பொங்குமடு"
வில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


முதல் 5 வரிகளில்தான் இந்த விளையாட்டை மாணிக்கவாசகர் செய்திருக்கிறார்!

அவற்றைக் கீழே தருகிறேன்.

ஒவ்வொருவரும் வந்து கருத்து சொல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்!

1. பைங்குவளைக் கார்மலரால், எங்கள் பிராட்டி போன்று இசைந்த பொங்குமடு.

2. செங்கமலப் பைம்போதால், எங்கோன் போன்று இசைந்த பொங்குமடு.

3. அங்கு அம் குருகு இனத்தால் பொங்குமடு.

4. அங்கம் குருகினத்தால் எங்கள் பிரட்டி போன்று இசைந்த பொங்குமடு.

5. அங்கு அங்கு உருகு இனத்தால், எங்கள் பிராட்டியும், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

6. அங்கு அம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால், தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் பொங்குமடு.

7. பின்னும் அரவத்தால், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.


8. அங்கு அம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால் பொங்குமடு.

9. தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் பொங்குமடு.

10. தம் கண்மலம் கழுவுவார், எங்கள் பிராட்டியும், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

[இவற்றை விளக்குவதுதான் உங்கள் வேலை! எத்தனை கற்பனைகள் விரிகின்றன எனப் பார்த்து மகிழலாம்!]

இவை அனைத்தாலும் பொங்குகின்ற பொங்கு மடுவில், இப்பெண்களும் பாய்வதால், இவர்களின், சங்குகளாலும், சிலம்புகளாலும், கொங்கைகளாலும் மேலும் இந்தப் பொங்குமடு பொங்க, அதனால் இப்புனல் பொங்க, இப்பங்கயப் பூம்புனலில் பாய்ந்தாடும் காட்சியினை சற்று கண்களை மூடிய வண்ணம் எண்ணிப்பாருங்கள்!

ஆகா! தமிழே! நீ வாழி!

18 பின்னூட்டங்கள்:

VSK Thursday, December 28, 2006 5:57:00 PM  

எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.

http://www.musicindiaonline.com/
music/devotional/s/
album.374/diety.8/

Anonymous,  Thursday, December 28, 2006 7:51:00 PM  

முயல்கிறேன் எஸ்.கே சார்:

தடாகத்தில் இயற்கையின் இரு மலர்கள் - ஒன்று குவளை மலர் - எம் பிராட்டி - சக்தி.

மற்றொன்று - தாமரை மலர் - எம் பிரான் - ஈசன்
சிறிய உடல் கொண்ட வண்டுகள் போல 

கால்கள் குறுக்கி - ராஜ யோகத்தில் அமர்ந்து - குவளை மலர் போலவுமாகி

தடாகத்தில் அங்கும் இங்கும் அலைந்து ஈசனையும், சக்தியையும் போற்றிப்பாடி

ஞான யோகம் மற்றும் பக்தி யோகம் கொண்டு தம் அக அழுக்கை நீக்க வேண்டி

தடாகத்தில் நீராடுவோம்.

ஜெயஸ்ரீ Thursday, December 28, 2006 8:03:00 PM  

சிலேடையாகக் குளம் அம்மையும் அப்பனும் இணைந்த திருக்கோலம் போல் காட்சியளிப்பதாகக் வெகு
சுவையுடன் கூறும் பாடல்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் (நீல நிறமான குவளை மலரும் இளம் சிவப்பான தாமரை மொட்டும் அருகருகே பூத்து நீல நிற மேனியளான அன்னையும் சென்னிற மேனியனான இறைவனும் இணைந்த கோலம்போல் தோன்றுகின்ற) குளம்

அங்கம் குருகினத்தால் - (குளத்துக்கு அழகான வெண்ணிற நாரைகள் இருப்பதால்
அன்னைக்கு - அங்கங்களில் வளையல் முதலிய அணிகலன்கள் இருப்பதால்)

பின்னும் அரவத்தால் -
இறைவனுக்கு - கழுத்தைப் பாம்பு சுற்றியிருப்பதால்

அங்கங்குருகினத்தால் பின்னும் அரவத்தால்
அம்மைக்கும் அப்பனுக்கும் -ஆங்காங்கு உருகி அவன் பெயர் பாடிப் பன்னும் மக்களின் அரவத்தால் (ஒலியால்)


தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்

குளத்துக்கு - தங்கள் உடல் அழுக்கைக் களைய மக்கள் வந்து சூழ்வதினால்

அம்மையப்பனுக்கு - தங்கள் மனத்திலுள்ள ஆணவம், கன்மம் முதலியவற்றைக் களைய வேண்டி அடியார் வந்து சூழ்வதினால்

ஆகா ! தமிழுக்கும் அமுதென்று பேர் !!

SP.VR. SUBBIAH Thursday, December 28, 2006 8:29:00 PM  

நீர்நிறை மடுவிற்கு நிறைவிளக்கம் கண்டேன்
பார்புகழும் தில்லைப் பரமனையுமதில் கண்டேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, December 28, 2006 9:35:00 PM  

//பைங்குவளைக் கார்மலரால், எங்கள் பிராட்டி போன்று இசைந்த பொங்குமடு//

குவளைப்பூ கரும் பச்சை!
உமையன்னையின் திருமேனி நிறம்!
பொங்கு மடுவில் உமை அன்னை கொலுவிருப்பது போல் குவளை பூத்துள்ளது!

//செங்கமலப் பைம்போதால், எங்கோன் போன்று இசைந்த பொங்குமடு//

செந்தாமரை சிவந்த நிறம்.
எரி போல் மேனி கொண்ட ஈசனின் நிறம்! பொங்கு மடுவில் ஈசன் கொலுவிருப்பது போல் தாமரை பூத்துள்ளது!

இப்படி அம்மையும் அப்பனும் மடுவின் நடுவே உட்கார்ந்துள்ளனர்!
வரும் சிறு குழந்தைகளை நீராட்ட!

//செங்கமலப் பைம்போதால்//
செம்மை+கமலம்+பசுமை+போது.

ஒரே தாமரைப்பூ, செம்மையும் பசுமையும் சேர்த்துச் சொல்லியதால், அம்மையப்பன் ஓருடல் ஓருயிராய் அர்த்தநாரி ரூபத்தில், மாதொரு பாகனாய் இருப்பதையும் குறிக்கிறதே!

VSK Thursday, December 28, 2006 10:16:00 PM  

ஜீவ, ஜெயஸ்ரீ,ஆசான், ரவி அனைவரின் விளக்கங்களும் மிகச் சிறப்பாக இருக்கின்றன!

அந்த பத்துக்கும் பத்து விளக்கங்கள்!

இன்னும் ஒரு நாள் பொறுத்து சொல்கிறேன்.

எல்லாமும் எல்லாருக்கும் தெரிந்ததுதான்!

நான் ஒன்றும் புதிதாகச் சொல்லப் போவதில்லை.

ஞானவெட்டியான் ஐயா, குமரன், ஜி.ரா. கோவியார், மதுரையம்பதி,கொத்ஸ், ஓகையார் இன்னும் மற்றவரும் வருவார்கள் என நம்புகிறேன்!

VSK Thursday, December 28, 2006 10:44:00 PM  

கோவியாரின் கணினி பழுதானதால், சுனாமி அதிர்வின் காரணமாக, அவரது பி.ஊ. இதோ!!

"ஐயா,

நீங்கள் விளக்கம் கேட்டு எழுதி இருக்கிறீர்கள் ! யாராவது விளக்கினால் படித்துப் பாராட்டுவேன். விளக்கமெல்லாம் எழுத தெரியாது !

நல்ல பதிவு, நன்றி...

கோவிகண்ணன்.

சென்ற எனது பி.ஊ.வில் தெரிந்து விட்டுப்போன இன்னும் சில பெயர்கள்,
சேதுக்கரசி, பத்மா அர்விந்த், வல்லி சிம்ஹன், மதுமிதா, ***சிறில்***.

தமிழ் பருகத் தாமதமேன்?!!

!!!!

கோவி.கண்ணன் [GK] Thursday, December 28, 2006 11:20:00 PM  

இதோ வந்துட்டேன்...!

எஸ்கே ஐயா,

பாட்டை ரசிப்பதற்கு இசை தெரிந்திருக்க வேண்டியதில்லை, உணர்விருந்தால் போதும்னு பெரியவங்க சொல்றாங்க. எனக்கும் புரிகிறது.

இந்த பாடலில் இருக்கும் உங்கள் ஆர்வமும், பின்னூட்டமிட்டு விளக்கம் எழுதியவர்கள் அனைவரும் நன்றாக எழுதி இருக்கிறார்கள்.

குறிப்பாக கண்ணபிரான் ரவி, ஜெயஸ்ரீ ஆகியோரின் பின்னூட்ட விளக்கம் மிக நன்றாக உள்ளது.

அனைவருக்கும் பாராட்டுக்கள் !

Anonymous,  Friday, December 29, 2006 2:44:00 AM  

இதோ வந்துவிட்டேன்....நன்றி எஸ்.கே அவர்களே,

ஏதோ எனக்கு தெரிந்ததை கிழே எழுதியுள்ளேன்.

குவளை மலர் கரும்பச்சை - என்னை (என்+அன்னை, சரிதானா?) -- மீனாஷியின் நிறம்.
செங்கழு - ஈசனின், எந்தை - சுந்தரனின் நிறம்.

பக்தர்தம் குரலுக்கு ஓடொடி வரும் அம்மையும் அப்பனும் இணைந்ததுதான் (இணைவதால் மட்டுமே உலகம் இயங்குகிறது)
உலக இயக்கம், அந்த இயக்கத்தின் சா/காட்சிபோல இருக்கும் பொங்கு மடு (இயக்கம் இருக்கும் மடு, பொங்கு மடு)

நான்/எனது என்ற எண்ணம் நீக்கிய/குருகிய இனமான தேவர்களும்
பந்த பாசங்களால் பிணைக்கப்பட்ட மனிதர்களும் (அரவமாக பந்த பாசங்கள்)
வந்து தங்கள் முக்திக்கு வழி சேர்க்கும்விதமாக பொங்கு மடுவொத்த இறைவனிடம் தங்களது பாவங்களை(மலம்) சமர்பித்து,
சரணாகதி செய்து (முழுகி) தூயவராகின்றனர்.

அப்பேர்க்கொத்த பொங்கு மடுவில் நாமும் குதித்து, சரணாகதி பண்ணி அந்த இறையனுபவத்தினை/பூர்ணானுபவத்தை அடைய
அழைகிறார்

மெளலி.......

VSK Friday, December 29, 2006 9:03:00 AM  

கணினி இணைப்பு சரியானது பற்றி மகிழ்ச்சி, கோவியாரே!

உங்கள் பாராட்டுகள் உரியவர்க்குப் போய்ச்சேரும்!

நன்றி!

VSK Friday, December 29, 2006 9:05:00 AM  

பொங்குமடுவிற்குப் பொருத்தமாகத்தான் உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்!

என்ன இருந்தாலும் "மதுரையம்பதி" ஆயிற்றே!

பெயர் வாசனை விட்டுப் போகுமா என்ன!!

:))

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, December 29, 2006 2:46:00 PM  

//எங்கள் பிராட்டியும், எங்கோனும், போன்று இசைந்த//

அப்படிப் போடுங்க! எங்க மணிவாசகர் அம்மையை முதலில் தரிசனப்படுத்தி, பின்னர் தான் ஈசனைத் தரிசனப்படுத்தி வைக்கிறார் பாருங்கள்!

எங்கள் பிராட்டியும் = பைங்குவளை
எங்கோனும் = செங்கமலம்

குவளைப் பூ, தாமரை மலர்வதற்கு முன்னரே மலர்ந்து விடும் அல்லவா sk ஐயா?

சூரியனுக்காகக் காத்திருப்பது எல்லாம் குவளைக்குக் கிடையாது! சரியான வேளையில் தாமே மலர்ந்து விடும்!
அது போல் அன்னையும் அவன் தவம் செய்த பின் தான் வரம் தருவோம் என்பது எல்லாம் அவளுக்குக் கிடையவே கிடையாது!

பார்வை ஒன்றாலே பார்த்து வரம் அருளும் வரப் ப்ரசாதாயினி!

திருவெம்பாவையே "சக்தியை வியந்தது" தானே!

அன்னையே போற்றி!
அன்னைத் தமிழே போற்றி போற்றி!
மங்கையே போற்றி! நாரணன்
தங்கையே போற்றி போற்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, December 29, 2006 3:05:00 PM  

13ஆம் பாட்டில் திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் கிட்டத்தட்ட அதே சொற்கள்/கருத்துக்கள் புழங்குவதையும் பாருங்கள்!

அங்கே புள்ளின் வாய் (கொக்கு) / இங்கே குருகு இனத்தால்
அங்கே பாவைக் களம் புக்கார்/ இங்கே குளம் புக்கார் (பொங்கு மடு)

அங்கே குடைந்து நீராடாதே/ இங்கே குடையும் புனல்பொங்கப்

குடைந்து நீராடாமல், பாய்ந்து நீராட வேண்டும் என்று இருவருமே சொல்கின்றனர். நீர் தான் குடைந்து பொங்கும். நாமும் குடைந்து நீராடலமோ?

விரிந்து நீராட வேண்டும்; கைகளை அகல விரித்து, வணங்கி நீராட வேண்டும்! அப்படி விரிக்கும் போதும் மனமும் விரிந்து பெரிதாக வேண்டும் என்றும் வணங்கி நீராட வேண்டும்!

அதான் ஆண்டாள், குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே என்கிறாள்!
மணிவாசகரும் குடையும் புனல் பொங்கப் பூம்புனல் பாய்ந்து ஆடச் சொல்கிறார்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

அப்பன் நாதன் தாள் வாழ்க!!

VSK Friday, December 29, 2006 3:21:00 PM  

இதிலெல்லாம் ஆண்டாளும், வாதவூராரும் ஒரே பாணியைத்தான் கடைப் பிடிக்கிறார்கள், ரவி!

அப்பாவிடம் செல்ல குழந்தைகள் தாய் வழியே அணுகுவது போல இருவரும் செய்கின்றனர்!

அதிலும், அண்ணனின் தூக்கத்தைப் பார்த்து, தங்கை நல்ல பாடம் கற்றுக்கொண்டு, யாரையும் காக்கவைக்காமல் கேட்பதற்கு முன்னரே, எழுந்து அருளுவதைக் கைக்கொண்டார் போலும்!

"சத்தியை வியந்து பாடியது" என்னும் செய்தியையும் பொருத்தமான நேரத்தில் பதித்ததற்கு நன்றி.

இந்தப் பதிவு மட்டும் இன்னும் பலரும் வந்து கருத்து சொல்லும் வண்ணம் தொடரவேண்டும் என வேண்டுகிறேன்!

VSK Friday, December 29, 2006 3:53:00 PM  

மிக அழகாக ஒப்புமை செய்திருக்கிறீர்கள், ரவி!

ஒன்றே ஒன்றைத் தவிர!! :)

//அதான் ஆண்டாள், குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே என்கிறாள்!//

திருப்பாவையின் அந்த வரிகள் சற்று tricky [இதற்குச் சரியான தமிழ்ச்சொல் என்ன?:(] ஆனவை.

அடுத்த சொல்லையும் சேர்த்துப் படித்தால்தான் பொருள் சரியாக வரும்.

இல்லையெனில் திடீரெனக் குளியல் பற்றிய பேச்சு இங்கு எப்படி வந்தது என்ற குழப்பம் வரலாம்!

ஒவ்வொருவராக எழுப்பிக் கூட்டிச் செல்கிறாள் சிறுமி ஆண்டாள்!

"இதோ, நாங்களெல்லாம் எழுந்து குளித்துவிட்டு, அரங்கனைச் சேவிக்கச் செல்லப் போகிறோம்!
எங்களுடன் குளிக்க வராமல் நீ இன்னும் படுத்துக் கிடக்கிறாயே"
என்னும் பொருளில் இதனைக் கொள்ள வேண்டும்!

"குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ?" எனப் படிக்க வேண்டும்.

"குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே! பள்ளிக் கிடத்தியோ?"
என இரு தனி வரிகளாக அல்ல!

இதிலும் கண்ணபிரானின் குறும்பு வந்து விட்டது பார்த்தீர்களா?

படிப்பது திருவெம்பாவை.
இங்கு விளங்கிக் கொண்டிருப்பதோ திருப்பாவை!

சமய ஒற்றுமைக்கு இன்னுமொரு சான்று!!

நன்றி, ரவி!

VSK Friday, December 29, 2006 5:52:00 PM  

இதோ என் கருத்து!

1. பைங்குவளைக் கார்மலரால், எங்கள் பிராட்டி போன்று இசைந்த பொங்குமடு.

கருநிற மலர்களால் நிறைந்திருப்பதால், உமையவளைப் போல பொங்கி நிற்கும் குளம்.

2. செங்கமலப் பைம்போதால், எங்கோன் போன்று இசைந்த பொங்குமடு.

சிவந்த தாமரைப் பூக்களால் நிறைந்திருப்பதால், சிவனாரை [அவர் பாதச் சிவப்பை] ஒத்த குளம்.

3. அங்கு அம் குருகு இனத்தால் பொங்குமடு.

அங்கே, அழகிய சிறு வண்டுகள் இம்மலர்களை மொய்க்க வருவதால் நிறைந்திருக்கும் குளம்.

4. அங்கம் குருகினத்தால் எங்கள் பிராட்டி போன்று இசைந்த பொங்குமடு.

உடலில் கருப்பு, சிவப்பு [கார்மலர், செங்கமலம்] வளைகளை அணிந்திருக்கும் உமையவளை ஒத்த குளம்.

5. அங்கு அங்கு உருகு இனத்தால், எங்கள் பிராட்டியும், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

ஆங்காங்கே, கூட்டம் கூட்டமாக அடியவர் வந்து சிவனாரின் பெருமையைப் போற்றி உருகிய வண்ணம் கோயிலுக்கு விரைவதற்கு முன் நீராட வந்திருப்பதால், பொங்கி நிற்கும் குளம்.

6. அங்கு அம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால், தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் பொங்குமடு.

மலரை மொய்க்க வரும் அழகிய பறவை இனங்கள் சேர்ந்து எழுப்பும் ஒலியினால் கண்விழித்தெழுந்து, தங்களைச் சுத்தம் செய்து கொள்ள வந்திருக்கும் அடியவர் கூட்டத்தால் நிறைந்திருக்கும் குளம்.

7. பின்னும் அரவத்தால், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

இவர்களும், பறவைகளும், மலர்களும் பரவி இருப்பது, சிவனாரின் உடலில் பரவி, நெளிந்து கொண்டிருக்கும் பாம்புகளை நினைவுபடுத்தலினால், சிவணே அங்கிருப்பது போன்று தோன்றும் குளம்.

8. அங்கு அம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால் பொங்குமடு.

அங்கு, அழகிய சிறு பறவைகள் எழுப்பும் ஒலியினால் நிறைந்திருக்கும் குளம்.

9. தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் பொங்குமடு.

தங்கள் உடல் அழுக்கினைக் களைய நீராட வந்திருப்பவரால் நிறைந்திருக்கும் குளம்.

10. தம் கண்மலம் கழுவுவார், எங்கள் பிராட்டியும், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் களைய வந்திருப்பவராலும், உமையவளும், சிவனாரும் வீற்றிருப்பது போலத் தெரிவதாலும், இம்மூவரும் இருக்கும் இடம் சிவன் கோயில் என்பதைப் போன்று விளங்கி, பொங்கி நிற்கும் குளம்.

இப்படிப்பட்ட குளத்தில் நீராடும் அப்பெண்களின் களிப்புதான் என்னே!

இதையெல்லாம், ஒரு சில சொற்களிலேயே காட்டி நம்மை மகிழ்விக்கும் மாணிக்கவாசகரின் திறம்தான் என்னே!

இன்னொன்று! இது சிவனாரும், உமையவளும் தனித்தனியே வீற்றிருக்கும் கோலமே அன்றி, அர்த்தநாரீச்வர கோலம் அல்ல எனவும் படித்தேன்!

இதைச் சொல்லும் தமிழின் பெருமைதான் என்னே!

ஜெயஸ்ரீ சொன்னது போல, அமிழ்தே இது!

Anonymous,  Saturday, December 30, 2006 5:11:00 AM  

திரு எஸ்.கே அவர்களே....
தங்கள் விளக்கம் கண்டேன், நன்றி...

திருப்பாவை-திருவேம்பாவையில் முக்தி கருத்துக்கள் உள்ளடங்கியிருப்பதாக பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்...அதனை கண்டுபிடிக்க உங்களது இந்த பதிவினை எடுத்து முயற்சி செய்து பார்த்தேன்...கொஞ்சம் பேராசைதான் என்ன செய்ய...இறையனுபவத்தில் என்பதால் பரவாயில்லை என நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் [GK] Saturday, December 30, 2006 8:58:00 AM  

எஸ்கே ஐயா,

விளக்கம் கேட்டு இருக்கிறாரரே. அவர் விளக்கம் எப்படி விளக்கம் எழுதப் போகிறார் என்று ஆவலாக இருந்தேன்.

பத்தாக வகைப்படுத்தி, முத்தாக கருத்தை கோர்த்து, அழகாக தொடுத்து சிறப்பாக விளங்கும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள், பாராட்டுக்கள் ஐயா !

உங்கள் விளக்கங்கள் முலம் என் தமிழ் அறிவு(ம்) வளர்கிறது ! பாராட்டுக்கள் !

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP