Friday, December 15, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [2]


"பரிசேலோர் எம்பாவாய்" [2]


2.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2


தோழிகள்: "பாசமென்னும் எனது உணர்வெல்லாம் பரஞ்சோதியாம் சிவனாருக்கே"என
இரவும் பகலும் எப்போது சொல்லித் திரிவாயே, ஏ சீரான உடல் கொண்ட பெண்ணே!
பேசியதெல்லாம் மறந்துபோய் இப்போது இந்த மணம்தரும் மலர்ப் படுக்கைக்கே
உன் அன்பையெல்லாம் காட்டி ஆசையும் வைத்துவிட்டாயோ நேரிழையே!

படுத்திருப்பவள்: ஏ பெண்களே! சீ! சீ! இவையெல்லாமா நீவிர் பேசுவது?

தோழியர்: விளையாடி உன்னை பழிப்பதற்கோ நாங்கள் வந்தோம்? அதற்கான இடம்
இதுவோ?
விண்ணவரும் கண்டு தம் சிறுமையும் இதன்தன் பெருமையும் எண்ணி
வணங்கிடக் கூசுகின்ற மலர்ப்பாதங்களை நமக்குத் தந்தருளிட வருகின்ற
ஒளியுருவான, சிவலோகத்தை ஆளுகின்ற தில்லைச் சிற்றம்பலத்தே ஆடுகின்ற
ஈசனுக்கு அன்பு செலுத்துவது எவர்? இங்கே உறங்கும்,
உறங்கும் உன்னை எழுப்பும் நாமெல்லாம் யார்? சொல்லடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

நேரிழை - சீரான உடல் கொண்ட பெண்; போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.

26 பின்னூட்டங்கள்:

VSK Saturday, December 16, 2006 6:23:00 PM  

எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.

http://www.musicindiaonline.com/music/devotional/s/album.374/diety.8/

வல்லிசிம்ஹன் Saturday, December 16, 2006 7:53:00 PM  

Thank you SK.
sorry to write in english.

thanks especially for the link.

SP.VR. SUBBIAH Saturday, December 16, 2006 7:57:00 PM  

//உறங்கும் உன்னை எழுப்பும் நாமெல்லாம் யார்?
சொல்லடி என் பெண்ணே!//

ஈசனை மறந்து - அந்த
நேசனை மறந்து
மாயையில் உறங்கும் - இந்த
மனிதர்களை எழுப்புவ்து யார்?

சொல்லுங்கள் எஸ்.கே அய்யா - உண்மை
சொல்லுங்கள் எஸ்.கே அய்யா
சிவனடியார்கள் அன்றோ - உமைப்பொன்ற
சிவனடியார்கள் அன்றோ!

SP.VR. SUBBIAH Saturday, December 16, 2006 8:07:00 PM  

சங்கரன், குமரன், சாந்திகொடுக்கும் உமை
பங்கனிருக்கும் பாடல் உண்டு - கங்கையும்
மங்கையும் வருவார் மனமே துவளாதே
எங்கும் அவனுண்டு ஏற்க!

கோவி.கண்ணன் [GK] Saturday, December 16, 2006 9:06:00 PM  

சந்திரா சூடிய பிறைசூடன் நீ,
மந்திர மகத்துவம் அறிந்தவன் நீ,
தந்திரம் வஞ்சகம் அறியாதவன் நீ,
எந்தையாய் நாளும் நான் நினைப்பவன் நீ !

சங்கரனுக்கான எனது இரண்டாவது போற்றிப் பாடல் !

எஸ்கே ஐயா ! வளர்க உம் இறைத்தொண்டு !

VSK Saturday, December 16, 2006 9:34:00 PM  

நன்றிக்கும், சிறப்பு நன்றிக்கும் எனது நன்றி திருமதி.வல்லி!

இதுதான் உங்களது முதல் வருகை என நினைக்கிறேன்!

VSK Saturday, December 16, 2006 9:37:00 PM  

மனிதனை எழுப்ப மானுடம்தான் துணை வரும்!
இனியதைச் சொல்ல கண்ணதாசனையன்றி வேறு யார்?
தனியொரு மனிதனாய் அவன் சொன்ன வரிகளன்றோ இன்னும் வாழுகிறது!
மணிமணியாய் மாணிக்கவாசகரை
உணர்ந்தவர் அவரே!

VSK Saturday, December 16, 2006 9:41:00 PM  

//சங்கரன், குமரன், சாந்திகொடுக்கும் உமை
பங்கனிருக்கும் பாடல் உண்டு - கங்கையும்
மங்கையும் வருவார் மனமே துவளாதே
எங்கும் அவனுண்டு ஏற்க!//

எங்கும் அவனுண்டு ஏற்க எனச் சொன்ன பின்னர்
தங்கு தடையுண்டோ ஏற்பதற்கு இங்கே
மங்கு புகழ் விளங்கிட நிற்கும் ஒருவனாம்
சங்கரனைப் பாட இங்கு உண்டோ தடை!

VSK Saturday, December 16, 2006 9:49:00 PM  

//சந்திரா சூடிய பிறைசூடன் நீ,
மந்திர மகத்துவம் அறிந்தவன் நீ,
தந்திரம் வஞ்சகம் அறியாதவன் நீ,
எந்தையாய் நாளும் நான் நினைப்பவன் நீ !//

எந்தை எனச் சொன்ன பின்னர்
பிந்தை ஒன்றும் சொல்ல வழியுண்டோ!
முந்தை வினையெல்லாம் அழிக்கும்
கந்தன் உனைக் காப்பான் என்றும்!

நாமக்கல் சிபி Saturday, December 16, 2006 9:57:00 PM  

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

Sridhar V Saturday, December 16, 2006 10:07:00 PM  

எஸ் கே ஐயா அவர்களுக்கு,

பொழிப்புரைக்கும், பாடல் சுட்டிகளுக்கும், மிக நன்றி!!!

வாழ்க உங்கள் ஆத்திகப் பணி!

Sridhar V Saturday, December 16, 2006 10:12:00 PM  

சொல்ல மறந்துவிட்டேன். ஒரு index page வைத்துக் கொள்ளுங்களேன். எல்லாப் பக்கத்திற்கும் அதற்கு சுட்டி கொடுத்துவிட்டீர்கள் எங்களுக்கு தொடர்ந்து படிக்க இலகுவாக இருக்குமே. பின்னர் நீங்கள் இதைத் தொகுப்பாகவும் பதிப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நாமக்கல் சிபி Saturday, December 16, 2006 10:15:00 PM  

மார்கழி மாதந்தனில்
சங்கரனை நினைவு கூர்ந்து
உள்ளத்தைத் தூய்மையாக்கும்
சங்கரனக்கெனது நன்றி!

வல்லிசிம்ஹன் Saturday, December 16, 2006 10:53:00 PM  

ஆமாம். இதற்கு முன்னமும் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்,.
காணாமல் போய் விட்டது,.:-0)
சென்னையில் இப்போது இருக்க முடியாத குறையை உங்கள் எல்லோரின் மார்கழிப் பதிவுகளும் கொஞ்சம் போக்குகிறது.
எம்.எல்.வி அவர்களைத் தவிர மற்றவர்களின் பாவைப் பாடல்கள் ஈர்க்காததன் காரணம் சிறிய வயது நினைவுகள்தான்.
நன்றி. திருமதிடி.எஸ்.ரத்தினம்
அவர்கள் திருவெம்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும் பாடியிருப்பார் என்று ஞாபகம்.

VSK Saturday, December 16, 2006 11:33:00 PM  

//மார்கழி மாதந்தனில்
சங்கரனை நினைவு கூர்ந்து
உள்ளத்தைத் தூய்மையாக்கும்
சங்கரனக்கெனது நன்றி!//

கவிஞரிடமிருந்தே ஒரு வாழ்த்துப்பா கிடைத்த மகிழ்ச்சியில் ஒன்றும் புரியாமல் திகைத்து நிற்கிறேன் நான்!

நன்றி, கவிஞர் கோமேதகனாரே!

[இதையே இரு பின்னூட்டங்களுக்கும் பதில் நன்றியுரையாய்க் கொள்வீர்!]

VSK Saturday, December 16, 2006 11:35:00 PM  

வந்திருந்து வாழ்த்து சொன்னதற்கு மிக்க நன்றி, திரு. ஸ்ரீதர் வெங்கட்!

:)

VSK Saturday, December 16, 2006 11:39:00 PM  

எம்மெஸ்ஸுக்கு போட்டியாக நினைத்த வசந்த கோகிலம் கூட இதைப் பாடியிருக்கிறார் என நினைக்கிறேன், வல்லி அவர்களே!

வெற்றி Sunday, December 17, 2006 1:30:00 AM  

என்னே தமிழ்!!!

மாணிக்கவாசகர் சுவாமிகள் இயற்றிய பாடல்கள் அல்லவா இவை?

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்"
எனும் திருமந்திரம் போல்

தமிழும் சைவமும் இரண்டென்பர் அறிவிலார்
என்று சொல்லத் தோன்றுகிறது.

தமிழைக் கட்டிக்காத்த சைவத் தொண்டர்கள் புகழ் வாழ்க!!!

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்!!!!

SK ஐயா, திருவெம்பாவைக்கு விளக்கம் அளித்து தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றியுள்ளீர்கள். மிக்க நன்றிகள்.

குமரன் (Kumaran) Sunday, December 17, 2006 8:36:00 AM  

திருப்பாவையில் தோழியர்களுக்கிடையே ஆன உரையாடல் 15ம் பாட்டில் தான் வரும். திருவெம்பாவையில் 2ம் பாடலிலேயே வந்துவிடுகிறதே.

எழுப்பும் தோழியை அறிவென்றும் எழுப்பப்படும் தோழியை மனமென்றும் சொல்வார்கள். அந்த வகையில் இந்தப் பாடலைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.

அறிவு: மனமே. நம் அன்பெல்லாம் பரஞ்சோதியாம் இறைவனுக்கே என்பாயே. இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம் எப்போதும் இதனையே சொல்வாய். இப்போதோ உலக இன்பங்களில் மனம் வைத்தனையோ (அமளி - படுக்கை - உலக இன்பங்கள்) அழகிய குணங்களை உடையவளே (நேரிழை - அழகிய அணிகளை அணிந்தவள் - அழகிய குணங்களை உடையவள்).

மனம்: அழகிய குணங்கள் கொண்டவளே. சீச்சீ. என் நிலை புரியாமல் என்ன பேசுகிறாய்? (மனம் இறைவன் நினைவில் மயங்கி இருப்பது அறிவிற்கு மனம் உலக இன்பங்களில் மூழ்கி - படுக்கையில் வீழ்ந்து கிடப்பது - போல் தோன்றுகிறது)

அறிவு: உன்னுடன் விளையாடி உன்னை இகழ்வதற்கு இது தான் நேரமா? இது தான் இடமா? விண்ணவர்கள் பணிந்து வணங்குதற்கும் கூசும் மலர்ப்பாதத்தைத் தந்தருள வந்தருளும் தேஜஸ் மிக்கவன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசன் அன்பர்கள் நாம். வேறு யார். (நீ மட்டும் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு அவனை அனுபவிக்காமல் - நீயும் நானும் - மற்ற எல்லோரும் சேர்ந்து அனுபவிக்கும் படியாய் வெளிப்படையாகப் பேசி அனுபவிக்கலாம் வா).


இதனை எழுப்பும் தோழியை குருவாகவும் எழுப்பப்படும் தோழியை சிஷ்யையாகவும் சொல்வதும் உண்டு.

மெளலி (மதுரையம்பதி) Sunday, December 17, 2006 8:37:00 AM  

நன்றி ஸ்கே சார்,

வேயிறு தோழிபங்கன் எல்லோருக்கும் அருளட்டும்.

VSK Sunday, December 17, 2006 9:02:00 AM  

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் திரு.வெற்றி.

சைவமும், தமிழும் இரண்டறக் கலந்து நமக்கெல்லாம் ஆற்றிய தொண்டினை மறக்கப் போமோ?

வருகைக்கு நன்றி!

VSK Sunday, December 17, 2006 9:04:00 AM  

//திருவெம்பாவையில் 2ம் பாடலிலேயே வந்துவிடுகிறதே.//

இது பற்றிய என் கருத்தை உரிய சமயத்தில் சொல்லுகிறேன், குமரன்.

ஒரு நிகழ்வாய் நான் சொல்லி வரும் பொருளுக்கு, தத்துவவிளக்கமாய் நீங்கள் சொல்லுவது மிக மகிழ்ச்சியைத் தருகிறது, ஆன்மிகச் செம்மலே!

தொடர்ந்து சொல்லி வரப் பணிக்கிறேன்!
:))

VSK Sunday, December 17, 2006 9:09:00 AM  

//வேயிறு தோழிபங்கன் எல்லோருக்கும் அருளட்டும்.//

சிவன் பெருமையை நான் சொல்ல நான் வணங்கும் குமரன் அருளட்டும் எனக் குறிப்பால் உணர்த்தியதற்கு மிக்க நன்றி, திரு. மௌல்ஸ்!

வேயுறு தோளி பங்கனிடம் [புலித்தோலை ஆடையாய்ப் புனையும், தன் உடலில் பாதியை உமைக்கு அளித்த சிவன்] வேண்ட அந்த வேயிரு தோழி பங்கன் [வள்ளி தெய்வானையுடன் விளங்கும் முருகன்]அன்றி வேறு எவர் பொருத்தமானவர்?

G.Ragavan Tuesday, December 19, 2006 11:26:00 PM  

வெளியே கடுங்குளிர். பனி மூட்டம் வேறு. படுக்கையும் சுற்றிய போர்வையும் சுகம் சுகம் என்று எழவொட்டாமல் சுகிக்கின்றன. ஆனாலும் எழ வேண்டும் என்ற ஆவலில் நேற்றே தோழியரிடம் சொல்லியாகி விட்டது. அவர்கள் வந்து எழுப்புகிறார்கள். ஆனாலும் ஓரிருமுறை மறுத்து விட்டு பிறகுதான் எழ முடிகிறது. அலாரம் வைத்தாலும் அதைத் தட்டித் தூங்குவது போலத் தோழியர்க்குக் காரணம் சொல்கிறாள். ஆனால் அவர்களும் விடவில்லை. ஈசன் திருவடி புகழ்ந்து அவளது தூக்கத்தை விரட்ட படாதபாடு படுகிறார்கள்.

ஓகை Wednesday, December 20, 2006 12:39:00 PM  

// சந்திரா சூடிய பிறைசூடன் நீ,
மந்திர மகத்துவம் அறிந்தவன் நீ,
தந்திரம் வஞ்சகம் அறியாதவன் நீ,
எந்தையாய் நாளும் நான் நினைப்பவன் நீ !

சங்கரனுக்கான எனது இரண்டாவது போற்றிப் பாடல் !

எஸ்கே ஐயா ! வளர்க உம் இறைத்தொண்டு ! //



தூற்றுவரை போற்றத் துணிந்தாரை என்சிவனைப்
போற்றவும் செய்தனை நீ

VSK Wednesday, December 20, 2006 12:46:00 PM  

ஆஹா! சிவனாருக்கான போற்றிப்பாடல் தொடருதா?

அதுவும் நன்றே, ஓகையாரே!
அனைத்து அவன் அருள் அல்லவா?

அவனைப் போற்றத் தடையேது?

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP