Wednesday, December 27, 2006

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்


தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த


பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்


கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 13
[[காலைக் கருக்கலில், இன்னும் பொழுது விடியா நேரத்தில், இப்பெண்கள் குளத்தைக் காண்கின்றனர். அது சிவனாரும், உமையவளும் வீற்றிருக்கும் இடமாகத் தெரிகிறது இவர்களுக்கு! மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். இப்போது ஆட்டமும், ஆரவாரமும் சற்று அதிகமாகிறது!! இப்பெண்களின் கற்பனையும் விரிகிறது!!]

கருத்த குவளை மலர்க் கூட்டம் ஒரு பக்கம்
சிவந்த தாமரை மலர்க் கூட்டம் இன்னொரு பக்கம்


இவற்றினை நாடி வந்து தேன் அருந்த வரும்
சிறிய உடலை உடைய வண்டுகள் எழுப்பிடும் ஒலிகள் நிறைய,


தங்கள் குறைகளை, குற்றங்களை நீக்க வேண்டி
ஆலயம் சென்று தொழும் அடியாரும் ஒரு பக்கம்


இப்போது இவ்விடமே எம் தலைவியாம் உமையவளும்
எம்பிரானாம் சிவனாரும் வீற்றிருக்கும் ஆலயமோ இத்திருக்குளம்!

அத்தகைய நீர் நிறை மடுவில், உட்புகுந்து,
பின்னர் வெளிவந்து, பரவி, அளைந்து இதன் வேகத்தால்,


நாம் அணிந்திருக்கும் சங்குகளும் சலசலக்க,
அவற்றுடன் இணைந்து கால்களில் இருக்கும்


சிலம்புகளும் கலகலக்க, நீரின் ஓட்டத்தால்
நம் மார்பகங்கள் விம்மித் தணிய, அதனைத் தாளாது


இக்குளத்து நீரும் மேலும் விம்மி மேற்பொங்க,
இவ்வண்ணம் களிப்புடனே தாமரை மலர்கள்


நிறைந்திருக்கும் இத்திருக்குளத்தில்
விரைந்து, பாய்ந்து நீராடடி என் பெண்ணே!அருஞ்சொற்பொருள்:

கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்;
பங்கயம் - தாமரை; புனல் - நீர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இதே பாடலுக்கு இன்னுமொரு அருமையான விளக்கம் படித்தேன். முடிந்தால் அதனை இன்றிரவு இடுகிறேன்!

5 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, December 27, 2006 8:00:00 PM  

அந்தக் காலத்தில் youtube video இல்லாத குறையை எப்படி எல்லாம் நிறைவு செய்கிறார் பாருங்க மணிவாசகப் பெருமான்!:-)

இதை வர்ணனை என்பதா இல்லை வர்ணஜாலம் என்பதா?

நீரில் இறங்கினால் சாதாரணமாகத் தோன்றி மறையும் ripples என்கிற அலைகள். அது //சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பப் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்// என்பது என்ன ஒரு இயற்கை ரசனை!

VSK Wednesday, December 27, 2006 11:23:00 PM  

ஆமாம், ரவி!

இந்தப் பாடல் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்று!

அதிலும் அந்த "எங்கள் பிராட்டியும், எங்கோனும் எப்படி எல்லாம் இசைந்தார்கள்" என்ற விளக்கத்தைப் படித்த பின்னர், மனம் தமிழ்க்களிப்பில் ஆடிக் கொண்டிருக்கிறது!

இன்னும் கொஞ்சம் கூட்டம் சேரட்டும்; சொல்கிறேன்!

:))

SP.VR. SUBBIAH Wednesday, December 27, 2006 11:50:00 PM  

சங்குகள் சலசல்க்கும், சத்தம் காதைநிறைக்கும்
பொங்கும்புனல் உடல் தழுவும் - மங்கை
நல்லாளே வருக! நீராடி மகிழ்க!
எல்லாம் தருவான் ஈசன்!

Anonymous,  Thursday, December 28, 2006 1:31:00 AM  

நான் கூட்டத்தில் சேர்ந்துவிட்டேனய்யா....

கோவி.கண்ணன் [GK] Thursday, December 28, 2006 11:22:00 AM  

எஸ்கே ஐயா...!

தோழிகள் எழுந்து நீராடி தயாராகும் நிகழ்வு அருமையாக வருணனை செய்து எழுதி இருக்கிறீர்கள் ஐயா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP