Tuesday, December 26, 2006

"ஆடேலோர் எம்பாவாய்"- 2. [12]

"ஆடேலோர் எம்பாவாய்" - 2. [12]

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்


கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12

ஊழிக்காற்றினைப் போல நம்மை இப்படியும் அப்படியுமாய்
அலைக்கழிக்கும் இந்தப்பிறவித்துன்பம் கெட்டழிந்து போவதற்கு
நாம் விரும்பி வழிபடும் நீர்த்தன்மையன்!

இவ்வுலகினைக் காப்பதற்கென தில்லைச் சிற்றம்பலத்தில்
கையில் தீச்சட்டி ஏந்தி ஆட்டம் நிகழ்த்தும் ஆனந்தக்கூத்தன்!

மேலிருக்கும் வானுலகையும், நாம் வாழும் நிலமான இப்பூமியையும்
ஒரு விளையாட்டுப் போலவே காத்தும், படைத்தும், பின்னர்
கவர்ந்தும் இயக்கம் நிகழ்த்தி வருபவன்!

அவனது இத்தகைய புகழினை சொற்களால் பாடிப் போற்றியும்,
கைத்தாளம் போடுவதாலும், நீரில் துழாவுவதாலும்


கைவளைகள் ஒலிக்கவும், இடுப்பினில் கட்டிய மணிகளால் ஆன
மேகலைகள் கலகலவென ஒலிக்கவும், நீரின் மேல் தெரியும்


கூந்தலின் மேல் வண்டுகள் வந்து ரீங்காரமிடவும்,
மலர்களால் நிறைந்த இக்குளத்தில் கைகளாலும்,


கால்களாலும் குடைந்து, குடைந்து, நம் ஈசனின்
பொற்பாதங்களைப் பணிந்து, புகழ்ந்து, வியந்து,


வாழ்த்தியபடியே நீராடடி என் பெண்ணே!

[காற்று, நீர், நெருப்பு, வான், நிலம் என ஐம்பூதங்களும் இப்பாடலில் இடம் பெற்றிருப்பது இப்பாடலின் சிறப்பு!
மேலும், இப்பாடலின் மூலம், பலவித நிகழ்வுகளால் ஏற்படும் இனிய ஆரவாரத்தையும் உணர்ந்து அனுபவியுங்கள்! ]

அருஞ்சொற்பொருள்:

ஆர்த்தல் - ஆரவாரம் செய்தல்; குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; வார்கலைகள் - இடுப்பில் அணியும் மேகலைகள்; குழல் - கூந்தல்.

6 பின்னூட்டங்கள்:

SK Tuesday, December 26, 2006 5:06:00 PM  

எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.

http://www.musicindiaonline.com/music/devotional/s/album.374/diety.8/

SP.VR.சுப்பையா Tuesday, December 26, 2006 6:08:00 PM  

ந்ற்றில்லைச் சிற்றம்பலதில் நின்றாடும் கூத்தன்
உற்றநம் ஊழ்வினை போக்குவான் - பெற்றபிறவிக்கு
நற்கதி வேண்டி நல்லாள் நீயும்
பொற்பாதம் பணிவாய் புகழந்து!

SK Tuesday, December 26, 2006 6:12:00 PM  

அப்படியே பணிகிறேன், ஆசானே!

மிக்க நன்றி!

Anonymous,  Wednesday, December 27, 2006 12:23:00 AM  

நானும் அவன் பொற்பாதம் பணிகிறேன்....

கோவி.கண்ணன் [GK] Wednesday, December 27, 2006 7:00:00 AM  

//இவ்வுலகினைக் காப்பதற்கென தில்லைச் சிற்றம்பலத்தில்
கையில் தீச்சட்டி ஏந்தி ஆட்டம் நிகழ்த்தும் ஆனந்தக்கூத்தன்!//

நடராஜனின் பஞ்ச பூத தத்துவம் நினைவுக்கு வருகிறது.

அருமையாக எழுதி இருகிறீர்கள் ஐயா !

SK Wednesday, December 27, 2006 8:39:00 AM  

ஆடவல்லானின் பொற்பதம் பணியும் "மதுரையம்பதிக்கும்", "கோவியாருக்கும்" என் வணக்கங்களும், நன்றியும்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP