"பரிசேலோர் எம்பாவாய்" [1]
"பரிசேலோர் எம்பாவாய்" [1]
வழக்கம் போல நண்பர் ரவி கண்ணபிரானின் பதிவிற்குச் சென்றபோது மாதங்களில் சிறந்த மார்கழி பிறப்பதை முன்னிட்டு, தனது சுப்ரபாதம் தொடரை சற்றே நிறுத்தி, கோதை புகழ் பாடப் போவதாகச் சொல்லியிருந்தார்!
அதைப் படித்ததும் நாம் ஏன் சிவனாரை எழுப்பும் திருவெம்பாவையைப் பதிவிடக்கூடாது என ஒரு எண்ணம் எழுந்தது!
இது சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அருளியது.
தினம் ஒரு பாடல் என்னால் முடிந்த அளவு விளக்கத்துடன் வரும்!
இனி பாடலைப் பார்ப்போம்!
1.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். !
முதலும் முடிவும் இல்லா அரிய பெரிய
சோதியை நாங்கள் பாடுவதைக் கேட்டும் வாள் போலும் அழகிய கண்ணுடைய
நீ இன்னும் தூங்குகிறாயே! உணர்வற்றுப் போனதோ உன் செவிகள்?
சிவபெருமானின் சீரடிகளை வாழ்த்துகின்ற வாழ்த்தொலிகள் வந்து
வீதியின் துவக்கத்தில் கேட்டபோதிலேயே விம்மி விம்மி தன் உணர்விழந்து
தானிருக்கும் மலர்ப் படுக்கையிலேயே புரண்டும் எழுந்தும் அதிலே
ஏதொன்றும் செய்வதறியாது தன்னை மறந்து கிடப்பவளின் திறம்தான் என்னே!
என் தோழியே!இதுவோ நீ செய்வது? அதை எமக்குக் கூறுவாய்!
அருஞ்சொற்பொருள்:
மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்;
அமளி - படுக்கை.
33 பின்னூட்டங்கள்:
ஆஹா! திருவெம்பாவையுமா.
மிக்க நன்றி!
திருப்பாவையும் திருவெம்பாவையும் பாடாமல் எப்படி மார்கழி மாதம் செல்வது? நல்ல செயல் எஸ்.கே. போன வருடம் சைவம்.ஆர்க் என்ற பெயரில் ஒரு வலைப்பூ இருந்தது; அதில் திருவெம்பாவை பொருளுரை வந்தது. இந்த வருடம் நீங்கள் செய்கிறீர்கள். மிக்க நன்றி.
//நண்பர் ரவி கண்ணபிரானின் பதிவிற்குச் சென்றபோது //
இதில் 'பதிவிற்குச்' என்பதைக் கிளிக்கினால், திரு. ரவியின் பதிவிற்குச் செல்லலாம்!
அதன் கீழே கோடு எனக்குத் தெரியவில்லை!
அதனால் இதைச் சொல்லுகிறேன்.
மற்றபடி பி.க. எல்லாம் ஒன்றும் இல்லை, கொத்ஸ்!
:))
முதலில் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி, கோமேதகனாரே!
ஆஹா! வந்தாச்சா போன ஆண்டே!
நான் புதியவன் என்பதால் தெரியாமல் போய் விட்டது:(
அப்ப தொடர்ந்து போடலாமா இல்லை அதையே லிங்க் கொடுத்து விடலாமா?
சொல்லுங்கள் நண்பர்களே!
தகவலுக்கு நன்றி, குமரன்!
தொடர்ந்து எழுதுங்கள்.
SK ஐயா
மட்டிலா மகிழ்ச்சி!
"ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ?" :-))
ஈசனையும், பெருமாளையும் இப்படி நாம் எல்லாரும் எழுப்பி, பரிசும் பறையும் வேண்டி நிற்போம்!
மார்கழி சிறக்க, மாயவனும், மகேசனும் அருளேலோ ரெம்பாவாய்!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பவாய்!!
SK ஐயா
சென்ற ஆண்டில் ஏற்கனவே வந்தால் தான் என்ன?
இந்த ஆண்டு, நீங்கள் தமிழால் ஆண்டு, சிறப்பு செய்யுங்கள்!
மணிவாசகரின் ஒரு சொல்லுக்கேனும் நீங்கள் புதிய விளக்கம் தருவீர்களே! தொடருங்கள்!
//ஒலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து//
ஒலிக்காகவே விம்மும் இந்த உள்ளம் தான் பக்தி உள்ளம்; இன்னும் கண்களால் நேரே கண்டு விட்டால் என்னவெல்லாம் செய்யுமோ?
இதன் தத்துவார்த்த விளக்கம், ஒரு வகையில் ஆற்றுப்படை தான்; எழுப்புபவளும் பக்தை; படுத்திருப்பவளும் பக்தை தான்!
முன்னவள் பக்தியால் செயல் செய்கிறாள்; பின்னவள் அன்பு இருந்தாலும் உலக வழக்கமாய்ச் செயல் அற்று நிற்கிறாள்!
பாயும் கங்கையைப் பாத்தி கட்டிப் பிரித்து விட்டுப், பக்திப் பயிர் செய்யும் டெக்னிக் இது; ஆற்றுப்படுத்தும்
திருப்பாவை!
திருவெம்பாவையும் அப்படியே!
பாடுவோம்; பாடி இன்புறுவோம்!!
ரவி அளித்தது போன்ற அற்புத விளக்கங்களை மற்றவரூம் வந்து சொல்லுமறு வேண்டுகிறேன்!
மிக அருமையான தத்துவ விளக்கம் கொடுத்து இதைப் பரிமளிக்கச் செய்திருக்கிறீர்கள், ரவி!
ஆற்றுப்படையோடு இணைத்து, ஆற்றொழுக்கு போல கொடுத்திருக்கிறீர்கள்!
அமளி= தெரு
இந்தப் பொருளும் உண்டே!
ஓங்கார ஒலிகிளம்பியது வீதிவழி. வீதிவழி என்பது மனித உடலின் வாய். வாயினால் கிளப்பிய ஒலிகேட்டு தெருவில் நின்று, கிடந்து புரண்டனள் எனக் கொள்ளலாம் அல்லவா?
நீங்கள் சொல்லும் பொருளும் சரிதான் ஞானவெட்டியான் ஐயா!
ஆனால், இங்கே, போதார் அமளி என்று வருகையில் மலர்ப் படுக்கை என்றுதான் வரும் என எண்ணுகிறேன்.
இதே சொல்லை அடுத்த பாடலிலும் இதே பொருளிலேயே சொல்லுவதாக அமைத்திருக்கிறார் மாணிக்க வசகப் பெருமான்.
வருகைக்கு நன்றி ஐயா!
இதுபோன்றே எப்போதும் வந்து கருத்து சொல்ல வேண்டுகிறேன்!
எங்கும் நிறைந்திருக்கும் ஏகாம்பரனை, சிவனை
தங்கத் தமிழால் எஸ்கேயார் எழுப்புகின்றார் - பொங்கும்
கங்கையுடன், பொதிகை மலைத் தென்றலுடன்
மங்கையுடன் வருவாரவர் நாம்மகிழ!
கங்கை தலையணிந்தோனை சடையன் சிவனை
மங்கை ஒருபாகம் கொண்டானை எழுப்புதற்கு
பொங்கு கவியால் எமை வாழ்த்திய ஆசானே
தங்கம் இங்கில்லை பரிசாய்க் கொடுப்பதற்கு!
மிக்க நன்றி!
த்ங்கம் வேண்டாம் தமிழ்ப்பா இருக்கையில்
பங்கமின்றிப் பரிசாய்க் கொடுத்தவரே - எங்கும்
தங்கம், பெயரால் எம்பெருமான், எமக்காக
மங்களமாய் பாடிவீர் மகிழ்ந்து!
இப்படியெல்லாம் உடனே போட்டால் நான் என் செய்வேன் ஐயா!
நான் ஏதோ கிறுக்குபவன்.
உங்க வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது!
நன்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி,
தோடுடைய செவியா போற்றி,
வீடுபேறு தரும் இறைவா போற்றி,
நாடும் அன்பரின் நற்துணையே போற்றி!
இது சங்கரனுகான என்போற்றி பாடல் !
:)
எஸ்கே ஐயா,
வாழ்க வளர்க்க உம் திருப்புகழ் !
///சிவபெருமானின் சீரடிகளை வாழ்த்துகின்ற வாழ்த்தொலிகள் வந்து
வீதியின் துவகத்தில் கேட்டபோதிலேயே விம்மி விம்மி தன் உணர்விழந்து///
சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய
விம்மும் உள்ளம் தன் நினைவிழக்க
ஆட்கொண்ட பெருமான்
உணர்வெங்கும் நிறைந்திருக்க
எனை ஆட்கொண்ட
சிவனே போற்றி போற்றி
//நான் ஏதோ கிறுக்குபவன்.
உங்க வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது!//
இரண்டுபேருமே நல்லா வேகமாத்தான் இருக்கிங்க ! பாத்துக்கிட்டு இருக்கோம்ல
:)
//உங்க வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது //
எஸ்கே ஐயா, வாத்தியார் வேகமாக கிறுக்குபவர் என்று சொல்லவில்லை தானே !
வாத்தியார் ஐயா தப்பாக புரிஞ்சிக்க மாட்டார் நம்புவோமாக !
:)
//இது சங்கரனுகான என்போற்றி பாடல் !
//
:))
எங்கே மன்னாரு வந்துடுவாறோ என்று பயந்துகொண்டே படித்தேன்.
நல்ல வேளை வரவில்லை.
இதெல்லாம் எனக்கு புதுசு.புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
எஸ்கே அண்ணா!
என் இளமையில் "திருவெண்பாக் காலத்தில்";அதிகாலையில் சங்கொலி எழுப்பிக் கொண்டு சில காவியுடை தரித்த சிவபக்தர்கள்; தெருத் தெருவாகப் பாடிக்கொண்டு செல்வதைக் கேட்டுள்ளேன்;
யுத்த பூமியில் இப்போ இச்வொலி..;துப்பாக்கிச் சத்தத்தால் நிரப்பப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர் இச் செய்தியை நம்பக்கூட மாட்டார்கள்.
மணிவாசகர் தமிழ் பொருளுடன் படிக்க மணியாகத் தான் இருக்கிறது.
யோகன் பாரிஸ்
/* அதைப் படித்ததும் நாம் ஏன் சிவனாரை எழுப்பும் திருவெம்பாவையைப் பதிவிடக்கூடாது என ஒரு எண்ணம் எழுந்தது! */
ஐயா, "நினைவு நல்லது வேண்டும்" எனும் மகாகவியின் வாக்குப் போல் ந்ல்ல எண்ணம் உங்களது. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மாணிக்கவாசகர் சுவாமிகளின் தமிழுக்கு சிவன் மட்டுமல்ல, என் போன்ற பாமரர்கள் மற்றும் குன்றும் சுவரும் திண் கல்லும் உருகி நிற்குமே!!!!
மிக்க நன்றி ஐயா!
ஸ்.கே நல்ல காரியம் செய்கிறீர்கள்.அதில் எங்களையும் பங்கு கொள்ள வைக்கிறீர்கள்.நன்றி.
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி.மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி.
தினம் ஒரு பதிவிடும் புது அனுபவத்தில், உங்களுக்கெல்லாம் [இன்னும் சிலர் பின்னால் வருகிறார்கள்!:))]மறுமொழி இட மறந்து போனேன்.
மன்னிக்கவும் திரு. யோகன் பாரிஸ்!
//மணிவாசகர் தமிழ் பொருளுடன் படிக்க மணியாகத் தான் இருக்கிறது.//
அவரை அதனால்தான் மணிவாசகர் என்றும் அழைக்கிறார்களோ!
தினம் ஒரு பதிவிடும் புது அனுபவத்தில், உங்களுக்கெல்லாம் [இன்னும் சிலர் பின்னால் வருகிறார்கள்!:))]மறுமொழி இட மறந்து போனேன், மதுமிதா!
//விம்மும் உள்ளம் தன் நினைவிழக்க
ஆட்கொண்ட பெருமான்
உணர்வெங்கும் நிறைந்திருக்க
எனை ஆட்கொண்ட
சிவனே போற்றி போற்றி//
அருமையாகச் சொல்லியிருக்கிறீகள்!
உணர்வெல்லம் சிவன்!
அற்புதம்!
தினம் ஒரு பதிவிடும் புது அனுபவத்தில், உங்களுக்கெல்லாம் [இன்னும் சிலர் பின்னால் வருகிறார்கள்!:))]மறுமொழி இட மறந்து போனேன், திரு குமார்!
புதுசெல்லம் இல்லை, இது ரொம்ப பழசு!
அனுபவிச்சுப் பாருங்க, உங்களுக்கே புரியும்!
தினம் ஒரு பதிவிடும் புது அனுபவத்தில், உங்களுக்கெல்லாம் [இன்னும் சிலர் பின்னால் வருகிறார்கள்!:))]மறுமொழி இட மறந்து போனேன்.
மன்னிக்கவும், தி.ரா.ச. அவர்களே!
வந்து வாழ்த்தியமைக்கு நன்றி!
தினம் ஒரு பதிவிடும் புது அனுபவத்தில், உங்களுக்கெல்லாம் [அப்படா! இதுதான் கடைசி!:))]மறுமொழி இட மறந்து போனேன்.
மன்னிக்கவும், திரு. வெற்றி!
உங்கள் 'நினைவும்' மிக நல்லதாகவே இருக்கிறது!
அனைவரும் அவன் அருள் நாடி உருகுவோம்!
தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். தாமதமாக வந்தாலும் தா-மதமாக வந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. :-)
மாணிக்கவாசகர் என்னும் திருவாதவூராரின் திருவாசகத்துக்கு உருகிய உள்ளங்கள் திருவெம்பாவையைப் பருகின. மருகின. அந்தப் பாவைக்கு விளக்கமாக நீங்கள் இடும் தமிழ்க் கவிதைகள் படிக்கக் கிடைத்தது நல்ல வாய்ப்பு. விட முடியுமா?
நமக்குப் பிடித்த ஒன்றைப் பற்றிப் பேசுவதும் கேட்பதும் எவ்வளவு இன்பம். குறிப்பிட்ட திரைப்படத்தையோ புத்தகத்தையோ பற்றி மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கிறோம். அதுவும் உணர்வு மயங்கி முழு ஈடுபாட்டோடு. இந்த மதுரைப் பெண்களும் அப்படித்தான். ஆலவாயண்ணலை நினைத்து நினைத்து அவர் புகழைக் கேட்டும் நினைத்தும் பேசியும் உருகி மகிழ்கிறார்கள். அந்த மகிழ்ச்சி இன்னொருத்தி காதில் எட்டவில்லையே என்று வியந்து துவக்குகிறார்கள் திருவெம்பாவையை. தூங்கிய பாவை நான். எழுப்பிய பாவை எஸ்.கே. :-)
எல்லா பதிவுகளையும் கண்டேன்.
எஸ்.கே. சார். நல்ல விளக்கம்.
மிக்க நன்றி, திரு. சிவமுருகன்!
// தென்னாடுடைய சிவனே போற்றி,
தோடுடைய செவியா போற்றி,
வீடுபேறு தரும் இறைவா போற்றி,
நாடும் அன்பரின் நற்துணையே போற்றி!
இது சங்கரனுகான என்போற்றி பாடல் !
:)
எஸ்கே ஐயா,
வாழ்க வளர்க்க உம் திருப்புகழ் ! //
நாத்திக வாயுமே நற்றமிழில் போற்றிசொல
சூத்திரம் செய்தனை நீ!
சூத்திரதாரி உள்ளே இருக்கிறான்!
அம்பலத்துள் ஆடிக்கொண்டு!
அவனருள் அன்றோ, ஓகையாரே,
அனைத்தும் இயங்குவது!
Post a Comment