Wednesday, December 13, 2006

அ.அ.திருப்புகழ் -- 15 - " செகமாயை உற்று"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 15 " செகமாயை உற்று"

குழந்தை வரம் வேண்டும் என ஏங்குவோர் தவறாது படிக்க வேண்டிய ஒரு பாடல் இது!

சுவாமிமலை குருநாதன் மீது பல பாடல்கள் அருணையார் பாடியிருக்கிறார். இதுவே நான் பதியும் முதல் ஏரகப் பாடல்!

-------------------பாடல்-------------------------

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
********************************************************

------------------- பொருள் ----------------------

[வழக்கம் போல் பின்பாதி பார்த்து முன் பார்க்கலாம்.]

"முகமாயம் இட்ட குறமாதினுக்கு முலைமேல் அணைக்க வரும் நீதா"

அழகுறு முகவசீகரம் கொண்ட
குறவள்ளிதனை அணைத்து
இகசுகம் அருளிட எண்ணியே
தினைப்புனம் வந்த நீதியரசே!

"முது மாமறைக்குள் ஒரு மா பொருட்கு
உள் மொழியே உரைத்த குருநாதா"

வேதநாயகனை அன்றொருநாள்
வேதத்தின் பொருள் கேட்க
ஓமெனத் துவங்கிய பிரமனை நிறுத்தி
பிரணவத்தின் பொருள் கேட்க,
தயங்கிய பிரமனை உதைத்து,
தலையில் குட்டி, சிறையில் தள்ள,
தடுத்துக் கேட்ட தந்தை சிவனாரை
பொருளுரைக்க துணிந்து கேட்டு
அவரறியாப் பிரணவப் பொருளை
பணிந்து நின்ற சிவனாரின் காதில்
ஓம எனும் சொல்லுக்குப்

பொருளுரைத்த என் குருநாதா!

"தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே"

கடவுளர்க்கு அளித்திட்ட
சிரமங்கள் ஏதுமின்றி,
ஒருவிதத் தடையுமின்றி
அடியவனான எனக்கு
தங்கத் திருவடி தரிசனம்
காட்டி அருளிச் செய்த
ஏரகம் எனும் சுவாமிமலையில்
விருப்புடன் வீற்றிருக்கும்
திருமுருகப் பெருமானே!

"தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேல் எடுத்த பெருமாளே"

சூரனை மாய்த்திட அருள் கொண்டு
வீரனாம் மகனுக்கு சக்திவேலை
தாயவளும் வழங்கிடவே,
காவிரிக்கு வடபுலத்தில்
ஏரகமெனும் திருத்தலத்தில்
போர்புரிய ஆயத்தமாகி
வீரவேலைத் தாங்கிய
பெருமைக்கு உரியவரே!

"செகமாயை உற்று, என் அக வாழ்வில் வைத்த,
திருமாது கெர்ப்பம், உடல் ஊறித்,
தெசமாதம் முற்றி, வடிவாய் நிலத்தில்
திரம் ஆய் அளித்த, பொருளாகி,"


உலகெனும் மாயையில் சிக்குண்டு
இல்லறமெனும் கட்டில் அகப்பட்டு
அவளுடன் உறவாடி அவள் கருவுறவும்
பத்து மாதம் நிறைவாய்ச் சுமந்து
குறையா அழகுடன் புவியில் உதித்த
மகவு போல பெருமானே நீவிரும்
எம் குலத்தில் அருளிச் செய்து,

"மக அவாவின் உச்சி, விழி, ஆநநத்தில்,
மலைநேர் புயத்தில் உறவாடி,
மடிமீது அடுத்து விளையாடி"

தேவரீரே எனக்கு உதிக்க
அவா மிகுதியினால் நானும்
குழந்தைப் பாசம் மிகுந்திடவே
கண்களில் எடுத்து ஒத்தியும்,
முகத்தோடு முகம் சேர்த்தும்,
மலை போலும் புயங்களில்
உம்மைத் தவழவிட்டும்,
என் மடி மீது அமர்ந்து
விளையாடி மகிழ்ந்தும்,

"நித்தம் மணிவாயின் முத்தி தரவேணும்!"

ஒவ்வொரு நாளிலும்
உம் மணிவாயினால்
எனக்கு முத்தம் தந்து
அருளிடல் வேண்டும்!
---------------------------------------------------

---------அருஞ்சொற்பொருள்---------------


தெச மாதம் = பத்து மாதங்கள்
திரம் ஆய் = சிறந்த குழந்தை
ஆநநத்தில் = முகத்தோடு முகத்தில் [அநம் என்றால் முகம்][அநம்+அநம்=ஆநநம்]
முத்தி = முத்தம்
முக மாயம் = முக வசீகரம்
முது மா மறை = ஆதி வேதம்
ஒரு மா பொருட்குள் மொழி = ஓம் என்னும் பிரணவம்
தகையாது = தடையின்றி
ஏரகம் = சுவாமி மலை
பாரிசம் = பக்கம் [side]
சமர் = போர்
--------------------------------------------------


வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!
---------------------------------------------------

12 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Wednesday, December 13, 2006 10:59:00 PM  

//ஒவ்வொரு நாளிலும்
உம் மணிவாயினால்
எனக்கு முத்தம் தந்து
அருளிடல் வேண்டும்!
//
எஸ்கே ஐயா !

பிள்ளைத்தமிழ் போல துள்ளி இருக்கிறது பொருள்விளக்கம் !

பாராட்டுக்கள் !

SP.VR. SUBBIAH Wednesday, December 13, 2006 11:09:00 PM  

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்றான் ஒரு கவிஞன்
நீங்கல் எழுதியுள்ளதப் படித்தால் படித்தவைகள் மனதிற்குள் மணக்கின்றனவே -
எல்லாம் அவன் (சுட்ட பழத்திற்கு விளக்கம் சொன்னவன்)
விளையாட்டா?

SP.VR. சுப்பையா

இலவசக்கொத்தனார் Wednesday, December 13, 2006 11:12:00 PM  

நல்ல பாடல் ஐயா. ஏரகச் செல்வ என படித்திருந்தாலும் அதற்குப் பொருள் இன்றுதான் தெரிய வந்தது. அதே போல் அநம் என்றால் முகமெனப் பொருள் கூறி இருக்கிறீர்கள், அந்த அநம் தமிழ்ச் சொல்லா? அல்லது வடமொழிச் சொல்லா?

இந்த பாடலைத் தந்ததுக்கு ஒரு தனி நன்றி. இது யாரலாவது பாடப்பட்டு இணையத்தில் இருந்தால் சுட்டி தாருங்களேன்.

VSK Thursday, December 14, 2006 12:11:00 AM  

//பிள்ளைத்தமிழ் போல துள்ளி இருக்கிறது பொருள்விளக்கம் !

பாராட்டுக்கள் !//

பாராட்டுக்கு மிக்க நன்றி, கோவியாரே!
பிள்ளைத்தமிழ் போல அல்ல, பிள்ளைத்தமிழேதான்!!
:))

VSK Thursday, December 14, 2006 12:12:00 AM  

//எல்லாம் அவன் (சுட்ட பழத்திற்கு விளக்கம் சொன்னவன்)
விளையாட்டா?//

பல உரைகளைப் படித்து, அவற்றிலிருந்து "சுட்ட பழம்தான்" ஆசானே!
:))
நன்றி!

VSK Thursday, December 14, 2006 12:15:00 AM  

அநம் தமிழ்ச்சொல்தான் என நினைக்கிறென், கொத்ஸ்!

அணங்கு,

வட சொல்லகவும் இருக்கக் கூடும்!

நய+அநம்= நயனம்= [முகத்தில் இருக்கும்] விழிகள்

குழப்பியாச்சா?
:))

பாடலின் சுட்டி தேடிப் பார்க்கிறேன்.
பகலவனே துணை!

கோவி.கண்ணன் [GK] Thursday, December 14, 2006 12:38:00 AM  

SK said...
//பிள்ளைத்தமிழ் போல துள்ளி இருக்கிறது பொருள்விளக்கம் !

பாராட்டுக்கள் !//

பாராட்டுக்கு மிக்க நன்றி, கோவியாரே!
பிள்ளைத்தமிழ் போல அல்ல, பிள்ளைத்தமிழேதான்!!
:))

எஸ்கே ஐயா!

சங்கரன் பிள்ளைத்(குமார்) தமிழை பிள்ளைத் தமிழ் போல் என்று சொல்லிவிட்டேன். உங்கள் தமிழ் பிள்ளைத் தமிழ் மட்டுமள்ள தூய வெள்ளைத் தமிழும் கூட !

:)

VSK Thursday, December 14, 2006 8:39:00 AM  

//சங்கரன் பிள்ளைத்(குமார்) தமிழை பிள்ளைத் தமிழ் போல் என்று சொல்லிவிட்டேன்//

உங்கள் சிலேடையை மிகவும் ரசித்தேன்!

அது மட்டுமன்று, கோவியாரே!

இது 'பிள்ளை வரம்" வேண்டுவோர்க்கான பாடலானதால், இதனை 'பிள்ளைத் தமிழ்' என்றும் சொல்லலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, December 15, 2006 6:48:00 PM  

பிள்ளை வரப் பாட்டு மிகவும் அருமை SK ஐயா!
ஒன்று கவனித்தீர்களா?

பொதுவாக அருணகிரியின் பல பாடல்களில் வரும் உலக நிலையாமை கருத்துகளும் இப்பாடலில் தூக்கலாக இல்லை! மேலும் வடிவேல் எறிந்த என்று அவன் போர்க்கோலம் எல்லாம் காட்டாது, வேல் எடுத்த பெருமாளே என்று அருள் கோலம் தான் காட்டுகிறார்!

முழுக்க முழுக்க வரப்பிரசாதியாய் முருகனைக் காட்டும் இப்பாடல், மிக அருமை! நித்தம் மணி வாயின் முத்தி தரவேணும், சுவாமி மலை முருகனுக்கு!

VSK Saturday, December 16, 2006 12:01:00 AM  

மிக நுணுக்கமாகக் கவனித்து, முருகன் போர்க்கோலத்தில் வராததைச் சொல்லிக் களித்ததற்கு மிக்க நன்றி, ரவி!

முத்தமிடும் முருகனுக்கே முத்தமா! மிக அருமை!

குமரன் (Kumaran) Sunday, January 28, 2007 4:53:00 PM  

எஸ்.கே. இந்தத் திருப்புகழ் இதுவரை நான் படித்து/கேட்டு அறியாதது. மிக நன்றாக இருக்கிறது. உங்கள் பொழிப்புரையுடன் படிப்பதற்கு அருமை.

VSK Sunday, January 28, 2007 10:21:00 PM  

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, இதைப் படித்து, ரசித்து, சொன்னது எதையோ எனக்கு நினைவூட்டத்தானே, குமரன்!

இந்த வாரம் மீண்டும் திருப்புகழ் தொடங்கும்!

:))

நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP