Thursday, December 07, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --10 -- "இனியவை கூறல்"





"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 10 -- "இனியவை கூறல்"

"என்ன ரொம்ப சோகமா வரே?" என விசாரித்தான் மயிலை மன்னார்.

"யார் வம்புக்கும் போகாம நல்ல பதிவுகளை எழுதிக்கிட்டிருந்த ஒரு பதிவர் தன்னைப் பத்தியும், தன் குடும்பத்தைப் பத்தியும் தரக்குறைவா எழுதறாங்கன்னு தமிழ்மணத்தை விட்டு விலகறாராம்.
சொல்றது அவர் மனசுக்குப் பிடிச்சதா இருந்தாலும், கொஞ்சம் காட்டம் அதிகமா சொல்றார்னு இன்னொரு பதிவரை விலக்கியிருக்காங்க.
இதெல்லாம் ஒண்ணும் மனசுக்கு சமாதானமா இல்லை. அதான் கொஞ்சம் டல்லா இருக்கேன்." என்றேன்.

"இது ரொம்ப முக்கியமான விசயம். இதைப் பத்தி ஐயன் ரொம்ப தீர்மானவாவே சொல்லியிருக்காரு. இன்னிக்கு அத்தப் பத்தி சொல்றேன். எளுதிக்கோ. ஆனா ஒண்ணு! நான் கொஞ்சம் அவசரமா போவணும். அதனால இன்னிக்கு கொஞ்சம் நாளைக்கு கொஞ்சமாத்தான் சொல்வேன், சரியா? ஒனக்கு வசதிப்படுமா?" என்றான் மன்னார்.

ஏற்கெனவே என் பதிவுகள் ரொம்ப நீளமா இருப்பதாக சக வலைப்பதிவர்கள் குறிப்பிடுவது நினைவுக்கு வர, சட்டென்று,
"அதனாலென்ன? அப்பிடியே செய்துவிடலாம்" என்று உற்ச்சாகமாய்த் தயாரானேன்!

இனி வருவது முதல் ஐந்து குறளும், அதற்கு மன்னாரின் விளக்கமும்!


அதிகாரம் 10 -- "இனியவை கூறல்"

"இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்
செய்பொருள் கண்டார்வாய்ச் சொல்." [91]

இனிய சொல்லுன்னா இன்னா? அதுக்கு இன்னா அளவு? ரெண்டு விசயம் அதுக்கு முக்கியமா இருக்கணும். 'படிறு இலவாம்'- வஞ்சனை இருக்கக் கூடாது நீ சொல்றதுல. அடுத்தவனைத் திட்றதா இருக்கக் கூடாது.அது நேரடியா இருந்தாலும் சரி; இல்லை சில படிச்சவங்க அப்பிடியே தேனொளுகற மாரி பேசி, ஆனா, அத்தினியும் விசம் வெச்சதா இருக்குமே அத்தையும் சேத்துத்தான் சொல்றேன்; ரெண்டுமே தப்பு.
அடுத்தது, 'ஈரம் அளைஇ'- அன்புல தோச்சதா இருக்கணும் அது. இன்னாமோ சொல்ல வரே! சரி. அத்த நல்லபடியா, தன்மையா, அன்பா சொல்லிட்டுப் போயேன். ஒனக்கு இன்னா நஸ்டம் அதுல? அன்பில்லாம, வஞ்சனையா பேசினேன்னு வெச்சுக்க, நீ சொல்ல வந்தது அல்லாமே அடிபட்டுப் போயிரும்.
இது ஆருக்கு வருண்றே! சொல்றதைப் புரிஞ்சிகிட்டு, உணர்ந்து சொல்றான் பாரு அவனால தான் இப்பிடி பேச முடியும். வெறுப்புல பேசறவனுக்கோ, அடுத்தவனைத் திட்டணும்னு நினைக்கறவனுக்கோ இது சொல்ல வராது!


"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்." [92]

ஒங்கிட்ட ஒரு ஒதவி கேட்டு வர்றவனுக்கு, முளு மனசோட நீ அள்ளிக் கொடுக்கறதைக் காண்டியும், அவன் மூஞ்சியைப் பார்த்து நீ தன்மையா பேசறது இருக்கு பாரு, அதுவே ஒசந்தது! இந்த வாயால சொல்ற சொல்லு இருக்கு பாரு; அதுக்கு அத்தினி பவரு இருக்கு. நெனைப்புல வெச்சுக்கோ!

"முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்." [93]

இந்த கொறளு அறத்துப்பால்ல வருது. அறம்னா இன்னா? அதுக்கு ஒரு வெளக்கம் கொடுக்கறாரு ஐயன் இதுல.
தருமம் பண்றதோ, நல்லபுள்ளையா நடந்துக்கறதோ, குடும்பத்தைப் பாத்துக்கறதோ ஒரு வகையான அறம்னு சொன்னாலும், உண்மையான 'அறம்' இன்னா தெரியுமா?
மொகம் சிரிச்சு, அடுத்தவன் மூஞ்சியை நேராப் பாக்க சொல்ல, ஒனக்குள்ள ஒரு சந்தோசம் வருதா? அத்த அப்பிடியே வாய்க்கு கொணாந்து அவன்ட்ட ஒரு நாலு நல்ல வார்த்தை இனிப்பா பேசுறியா? அவ்ளோதான்! அதான் அறமாம்!

"துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல வர்க்கு." [94]

அல்லார்கிட்டயும் எப்பவும் இனிப்பா, தன்மையா பேசத் தெரியுமா ஒனக்கு? அப்பிடீன்னா, ஒனக்கு எந்தக் கொறவும் வராது. நீ தும்பப்பட மாட்டே! ஒனக்கு வறுமைன்றதும் வராதாம். ஆரைப் பாத்தாலும் காட்டமா பேசினீன்னா, ஒங்கிட்ட ஆரும் அண்டமாட்டாங்க! தெரிஞ்சுக்கோ!

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற." [95]

நீ இன்னாதான் தங்கத்திலியும், வைரத்திலியும் மாலையும், மோதிரமும் போட்டுக்க, அத்தெல்லாம் ஒனக்கு ஒரு நகையே ஆவாது.
அதே, பெருசுங்களைப் பார்த்தா ஒரு மரியாதை, ஆரைப் பார்த்தாலும் தன்மையா பேசறது அப்படீன்னு இருந்தேன்னு வெச்சுக்கோ, அத்த விட இந்த தங்கம் வைரம்லாம் ஒண்ணும் பெருசாகாது!
இதான் ரொம்ப முக்கியம்."

என்றவன் சட்டென்று மணியைப் பார்த்துவிட்டு,
"சரி, மிச்சமெல்லாம் நாளைக்கி. சாயந்தரமா வந்துடு" எனச் சொல்லிவிட்டு பறந்து விட்டான்.

அவனில்லாமல், மசால் வடை சாப்பிட மனமின்றி, டீயை மட்டும் குடித்துவிட்டு, நானும் விரைந்தேன்!

மிச்சம் நாளை வரும்!

6 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Thursday, December 07, 2006 8:32:00 PM  

//அடுத்தவனைத் திட்றதா இருக்கக் கூடாது.அது நேரடியா இருந்தாலும் சரி; இல்லை சில படிச்சவங்க அப்பிடியே தேனொளுகற மாரி பேசி, ஆனா, அத்தினியும் விசம் வெச்சதா இருக்குமே அத்தையும் சேத்துத்தான் சொல்றேன்; ரெண்டுமே தப்பு.
//

எஸ்கே ஐயா,

மிக மிக அருமையாக எழுதி இருக்கிங்க. சிறப்பான விளக்கம்.

இனிமையாகவும் சுவையாகவும் நீங்கள் கொடுக்கும் விளக்கம் எல்லோரும் நிச்சயம் பயன் அளிக்கும் !

நெகிழ்ச்சியான பாராட்டுக்கள் ஐயா !

இலவசக்கொத்தனார் Thursday, December 07, 2006 8:38:00 PM  

ரொம்ப டாப்பிகலான பதிவுதான். இருங்க வேலை எல்லாம் முடிச்சிட்டு வரேன்.

குமரன் (Kumaran) Thursday, December 07, 2006 9:21:00 PM  

மிக அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் எஸ்.கே. வழிபட வேண்டிய ஒரு வழிமுறை.

VSK Thursday, December 07, 2006 10:05:00 PM  

பலனளிக்கும் என் என்னுடன் சேர்ந்து இன்னும் பலரும் நினைத்தால் வலிமை கூடும், கோவியாரே!
மிக்க நன்றி!

VSK Thursday, December 07, 2006 10:06:00 PM  

உங்க வேலையை முடிச்சிட்டு, சீக்கிரம் வாங்க, கொத்ஸ்!

VSK Thursday, December 07, 2006 10:06:00 PM  

மிக்க நன்றி, குமரன்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP