Friday, December 08, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 10 -- "இனியவை கூறல் [2]

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 10 -- "இனியவை கூறல் [2]

"மண்சிகோப்பா! நேத்து அவசரமாப் பூட்டேன் பாதியிலியே வுட்டுட்டு! இப்போ மிச்சமும் சொல்றேன், எளுதிக்கோ" என்றான் மயிலை மன்னார்.

இனிமையாக அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டதும், மேலே பேச மனமின்றி அவன் சொன்னதைக் கீழே தருகிறேன்!


அதிகாரம் 10 -- "இனியவை கூறல்" [இரண்டாம் பகுதி]

முதல் 5 குறள்களுக்கான விளக்கத்தை இங்கே படிக்கவும்!

"அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்." [96]

93-வது கொறள்ல அறம்னா அடுத்தவன்கிட்ட இன்பமாப் பேசறதுதான்னு ஸொன்னாரு இல்லியா? இங்கே அந்த அறம் எப்படி வளரும்னு ஸொல்றாரு. இன்னா பேசினா அடுத்தவனை தும்பப்படுத்தாம இருக்கும்னு யோசிச்சு, தன்மையா, அன்பா சொன்னியானா, ஒங்கிட்ட இருக்கற கெட்டதெல்லாம் போயி, நல்லது மட்டும், .....அதாங்காட்டி, அறமே ஒங்கிட்ட ஜாஸ்தியாவுமாம்!

"நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்." [97]

இப்பிடி அல்லார்கிட்டயும் அன்பா, இனிமையா பேசறதுனால ஒனக்கு இன்னா கெடைக்கும்ன்றே? ஒம்மனசு சுத்தமாயிருக்கும்; வாள்க்கை நேர்மையாயிருக்கும்; ஒரு நிம்மதியான வாள்க்கை ஒனக்கு அமையும்! இத்தெல்லாம் நான் ஸொல்லலை கண்ணு! ஐயன் ஸொல்றாரு!

"சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்." [98]

அடுத்தவனுக்கு தும்பம் கொடுக்காத நீ ஸொல்ற ஸொல்லுங்க இன்னும் இன்னால்லாம் தரும்ன்றாரு பாரு!
இந்த சென்மத்துல மட்டும் இல்லியாம்; அடுத்த பொறவிலியும் ஒனக்கு அது நல்லதே பண்னுமாம்!

இதுக்கு மேல இன்னா வோணுன்ற நீ? ஒன்னிய எப்பிடியாவது இனிப்பா பேச வைக்கணுன்றதுக்கோசரம், இன்னால்லாம் ஆசை காட்றாரு பாரு ஐயன்!

ஆனா, இத்தெல்லாம் பொய்யின்னு நெனச்சுராத நீ! அவரு பெரிய சித்தரு. கரீட்டாத்தான் ஸொல்லிருக்காரு.

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது." [99]

இப்ப ஒன்னியப் பாத்து 'அட ஏண்டா வாராவாரம் இப்பிடி தொந்தரை பண்ற நீ? வேற வேலை இல்லியா ஒனக்கு?' அப்பிடீன்னு நான் வுளுந்தேன்னு வெச்சுக்க? நாளைக்கொண்டு இங்க வருவியா நீ?

அதே, "வாய்யா என் ராசா! ஏன்யா ஒன் மொகம் வாட்டமா இருக்கு"ன்னு நான் கேட்டதாக்காண்டியும்தானே நீ இம்மா நேரம் எனக்காவ காத்திருந்து நான் ஸொல்றதையெல்லாம் எளுதிக்கினு போற!

அப்பிடி நான் ஒன்னியப் பார்த்து சொல்றது ஒனக்கு இனிப்பா இருக்கையில, அப்பிடியே நீ பேச இன்னா கசக்குது ஒனக்கு? இன்னா கொறஞ்சி பூடுவே நீ?

இப்ப நீ ஸொன்னதியே எடுத்துக்குவோம். எவனோ ஒர்த்தன் எத்தியோ பத்தி ஏதோ கஸ்மாலமா எளுதிட்டான்றதுக்காவ, நீயும் வேகப்பட்டு வார்த்தையைக் கொட்டினேன்னு வெய்யி. அதுல இன்னா சொகம் ஒனக்கு? அத்தோட ஒன் அரிப்பு தீந்து போச்சா? அதுக்கு அவன் இன்னொண்ணு எளுதப் போறான். இப்பிடியே வளந்துகினே பூறதுல ஆருக்கு லாவம் ஸொல்லு!
அத்த வுட்டு, 'தம்பி, நீ இப்பிடி எளுதறது நல்லாயில்ல. நீ இன்னா ஸொல்லணுமோ அத்த தன்மையா நாலு பேரு படிக்கற மாரி ஸொல்லிட்டுப் போயேம்ப்பா"ன்னு சொல்லிப் பாரு. அந்த ஆளுகிட்டயே ஒரு மாத்தம் தெரியும். வெளங்கிச்சா?" என்றான் மன்னார். நானும் புரிஞ்ச மாரி தலையாட்டி வைத்தேன்!

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று." [100]

என் நைனா ஒரு கத சொல்லும். ஒரு ஆளு வெத்தலை ஒரு கவுளி வாங்கினானாம். வூட்டுக்கு வந்ததும் தண்ணில அத்த அலம்பி வெச்சனாம். அப்போ ஒரு 3 - 4 வெத்தலை கொஞ்சம் வாடின மாரி இருந்திச்சாம். சரி, மத்ததெல்லாம் நல்லா இருக்கே. இத்த எதுக்கு தூக்கி எறியணும்னு சொல்லிட்டு அந்த வாடின வெத்தலையை அப்போதைக்கு போட்டுகிட்டானாம். அடுத்த தபா அந்த வெத்தலைப் பொட்லத்தை பிரிச்சப்போ, இன்னும் ஒரு 4 - 5 வெத்தலை அளுகற மாரி இருக்கச்சொல்லி, அத்த அன்னிக்கு போட்டானா. இப்பிடியே அந்த ஒரு கவுளி வெத்தலையையும் அளுகின வெத்தலையாவே போட்டு தீத்தானாம் அவன்!

மொதல்லியே அந்த 4 வெத்தலையை தூக்கி கடாசிருந்தான்னா, முளுக் கவுளியையும் நல்ல வெத்தலையாவே போட்டு துப்பியிருப்பான். ஆனா, செய்யலை.

அதுமாரி, ஒங்கிட்ட நல்லா பளுத்த பளமா, இனிப்பா, கனிஞ்சு இருக்கறப்ப, அத்த வுட்டுட்டு, காயைப் போயி தின்னேன்னு வெய்யி. அது எப்பிடி இருக்கும்னா, தன்மையா பேசறதுக்கு ஒங்கிட்ட நல்ல வார்த்தையெல்லாம் இருக்கச்சொல்ல, கேக்கறவன்கிட்ட கடு கடுன்னு பேசறது இம்மாம் மோசமோ, அப்பிடீன்றாரு ஐயன்.

இதுக்கு மேல இன்னா சொல்லணுங்கற நீ? இந்த பத்து கொறள்லியும் வரிக்கு வரி ஒனக்கு வரம் கொடுக்கற மாரி , ஒனக்குப் புடிச்ச மாரி, இனிப்பா சொல்லிருக்காரு. இத்தக் கேட்டாச்சும், இனிமேலியாச்சும் நல்லபடியா பேசி பொளைக்கற வளியைப் பாரு. சர்த்தானே கண்ணு!"
என்று கேட்டுவிட்டு,

அது சரி; நேத்து இன்னா வெறும் டீ மட்டும் சாப்ட்டு பூட்டியாமே? நம்ம நாயரு ரொம்ப வர்த்தப்பட்டாரு. நா இல்லேன்னா இன்னா? நீ வளக்கமா சாப்பிடறத சாப்ட்டுட்டு போவ வேண்டிய்துதானே? வா. இன்னிக்கி முளுஸா கட்டிருவோம்!" என்று அன்புடன் தோள் மீது கை போட்டு இழுத்துச் சென்றான் மயிலை மன்னார்!

என்ன என் இனிய பதிவர்களே! இனிக் கொஞ்சம் மாற்றத்தை எதிர்பார்க்கலாமா உங்கள் எழுத்துகளில்? நிச்சயம் செய்வீர்கள் என நம்புகிறேன்!

இதோ என் மன்னார் கூப்பிடுகிறான். பிறகு பார்க்கலாம்!

14 பின்னூட்டங்கள்:

அரை பிளேடு Friday, December 08, 2006 10:52:00 PM  

மயிலாப்பூர் மன்னாரு அவர்களே

நீங்க இங்க நம்ம லாங்குவேஜில, குரளு விளக்கும் கொட்துக்னு கீறது ரொம்ப நல்லா கீது. நம்பளுக்கும் ஈஜியா கீது.

இருந்தாலும் வள்ளுவரு, இரண்டு லைன்ல எயுதுனத நம்ப லாங்குவோஜிலயும் இரண்டு லைன்ல ஷார்ட்டா சொல்லிக்கப்பா..

ரொம்ப பெரிசா பூட்சினாலும் பிரியாம பூடுது..

தாங்ஸ்பா...

VSK Friday, December 08, 2006 11:00:00 PM  

ரெண்டு வரில சொல்றத்துக்கு நா இன்னாத்துக்கு?
அத்தான் ஆளாளுக்கு பொஸ்தவம் போட்டு விக்கறாங்களே!
அதுல ஒண்ணு வான்ங்இப் படிக்கிறதுதானே!

அதுசேரி! முளு ப்ளேடு போடாம அத்லியே அரை ப்ளேடு போட்ற ஆளுதானே நீ!

நீ வேற இன்னா சொல்லுவே!

அப்பால வந்து கண்டுக்கினு போ, சர்யா!
:))

SP.VR. SUBBIAH Friday, December 08, 2006 11:12:00 PM  

//என்ன என் இனிய பதிவர்களே! இனிக் கொஞ்சம் மாற்றத்தை எதிர்பார்க்கலாமா உங்கள் எழுத்துகளில்? நிச்சயம் செய்வீர்கள் என நம்புகிறேன்!//

அய்யா,
அடியேன் எட்டுப் பக்கங்களில் (தொடரில்) எழுதிய செய்தியை நீங்கள்
நான்கு வரிகளில் எழுதிவிட்டீர்களே!

உங்களுக்கு மன்னார் தோழராக (தோள் கொடுப்பவராக ) இருப்பதால் இதெல்லாம் (Just like that என்று சொல்வதற்கு)சாத்தியமாகிறது

என்ன அய்யா இந்த எளியவன் சொல்வது சரிதானே?

SP.VR.SUBBIAH

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, December 09, 2006 1:03:00 AM  

SK ஐயா

நான் ஒண்ணு சொல்லட்டுமா?
செந்தமிழில் எழுதவதை விட இப்படி எழுதறது தான் மிகவும் கஷ்டம்! அவ்வளவு வேகமா வந்துவிடாது! ஆனா அதை எங்களுக்காக நீங்க பொறுமையா மெனக்கெட்டு செய்கிறீர்கள்!

தமிழுக்காக மட்டும் படிக்காது ஜாலிக்காகவும் படிக்கும் அன்பர்களையும் சென்று அடையட்டுமே, என்று நீங்கள் எடுக்கும் முயற்சி! மிக்க நன்றி!!

//பண்பின் தலைப்பிரியாச் சொல்//
இன்றைய நம் தமிழ்மணச் சூழலில், சரியான குறள் அதிகாரம்; பொருத்தமான விளக்கங்கள்!

குமரன் (Kumaran) Saturday, December 09, 2006 7:54:00 AM  

நன்றி எஸ்.கே. போன பதிவிற்குச் சொன்னது தான் இதற்கும். நம் வழி செம்மையாக அமைய நாம் வழி பட வேண்டிய வழி முறை இது.

VSK Saturday, December 09, 2006 7:59:00 AM  

உங்கள் கருத்துக்கு வலு சேர்த்தது இது என்னும் போது மகிழ்வாய் இருக்கிறது ஆசிரியர் ஐயா!

மிக்க நன்றி!

VSK Saturday, December 09, 2006 8:05:00 AM  

நண்பர் சிறிலுக்குத் தான் இதற்கான முதல் மற்றும் முழுப் பெருமையும் சேரும்!

நட்பைப் பற்றி நட்பு வாரத்தில் அவர் எழுத ஆரம்பிக்க, ஒரு மாற்றாக மயிலை மன்னாரைத் துணைக்கழைத்து தொடங்கிய ஒன்று இது!
:))

மிக்க நன்றி!

VSK Saturday, December 09, 2006 8:11:00 AM  

வழிபடும் பொருட்கள் யாவும் வீதியில் வீசப்படும் இந்நேரத்தில், இதை நீங்கள் சொல்லியிருப்பது .......!:))

நன்றி, குமரன்!

வடுவூர் குமார் Saturday, December 09, 2006 9:18:00 AM  

லூஸ் மோகன் அங்கேயா இருக்கார்?
படா டாமாசா இருந்தாலும்,நைசா அறிவுரை மண்டைவரைக்கும் ஏத்திடார்பா!!
வாள்க மன்னார்.

VSK Saturday, December 09, 2006 10:40:00 AM  

இன்னும் பலர் மண்டையில் ஏறணும், திரு குமார்!

மாயவன், வரவனையான், இறைநேசன், குழலி இன்னும் இப்படி பலர் மண்டையிலும் ஏறணும்!

எல்லாரும் நல்ல எழுத்தாளர்கள்!

தங்கள் திறமையை இப்படி அடுத்தவரைப் பழிப்பதிலேயே செலவிடுகிறார்களெ என எண்ணும் போது வருத்தமாயிருக்கிறது.

கோவி.கண்ணன் [GK] Saturday, December 09, 2006 11:01:00 AM  

//இப்பிடி அல்லார்கிட்டயும் அன்பா, இனிமையா பேசறதுனால ஒனக்கு இன்னா கெடைக்கும்ன்றே? ஒம்மனசு சுத்தமாயிருக்கும்; வாள்க்கை நேர்மையாயிருக்கும்; ஒரு நிம்மதியான வாள்க்கை ஒனக்கு அமையும்! இத்தெல்லாம் நான் ஸொல்லலை கண்ணு! ஐயன் ஸொல்றாரு!//

எஸ்கே ஐயா,

நல்ல விளக்கம். எல்லோரிடமும் அன்பாக இருக்கவேண்டும். இதை ஓரளவுக்கு கடைபிடிக்கிறேன். இவர் நமக்கு வேண்டியவர் இவர் வேண்டாதவர் என்று நமக்கு வேண்டியவரே சொன்னாலும் மாற்றிக் கொள்வதே இல்லை. இருவர் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லையென்றால் அது அவர்களுக்கு இடையே புரிந்துணர்வு இல்லை என்பதாக நினைத்துக் கொண்டு இருவரிடமும் தனித்தனியாக நட்பு பாராட்டுவதில் குறைவைப்பதில்லை. கொஞ்சம் சுயபுராணமாக நினைத்தாலும் பரவாயில்லை. இந்த குறள் தொடர்பில் எனது குறளை பத்தித்தேன்
:)

VSK Saturday, December 09, 2006 9:11:00 PM  

உங்கள் குரலை இப்பதிவின் தொடர்பாய் பதித்ததற்கு மிக்க நன்றி, கோவியாரே!

நம் நட்பே அப்படித்தானே!
:))

ஓகை Sunday, December 10, 2006 12:16:00 AM  

இன்னா மன்னாரு, பஸ்ல திருக்குறள எடுத்துட்டு திருக்குவல பொடுறாங்களாமே? இன்னாபா இது இதல்லாம் கண்டிக்க தாவலையா?

பஸ்ல பட்சிட்டு ஒரு தபா நம்ம தோஸ்த் அது இன்னாபா கனி காய்ன்னு ஒரு கேள்வி கேட்டுகினாம் பாரு, எனக்கு அப்பிடியே சகலமும் ஆடி பூட்ச்சி. உன்ன மாரி தெளிவு என்னாண்ட இல்ல பாரு. அத்தொட்டு நம்ம சார் கையில கேட்டு விளக்கம் சொல்லி சமாளிச்சேன்.

இன்னா சொல்ல வந்து இன்னா சொல்லிகினேன் பாரு. பஸ்லல்லாம் குறள் ஏதி வைக்கினும்.

நல்லா வருதுப்பா உனுக்கு எழுத்துல.

வர்ட்டா.

கஜா.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) Thursday, December 14, 2006 11:19:00 PM  

காலை தமிழ் மணத்தை திறந்தவுடன் குறள்களே கண்ணில் பட்டது. மிக இனிமையான இருந்தது நன்றி SK அய்யா.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP