Thursday, September 21, 2006

"அ.அ.திருப்புகழ்" -- "கருவடைந்து"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் " -- 10 "கருவடைந்து" [1]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.

இதன் விளக்கம் மிகவும் நீண்டதாக இருக்கும்.

நான்கு பதிவாக நான்கு நாட்களில் வரும்!!!

[ஒவ்வொரு பதிவிலும் பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]

அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி
னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த
அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்......................

[பின் - முன்!!]

"இரவி இந்திரன் வெற்றிக் குரங்கின்அரசர் என்றும்
ஒப்பற்ற உந்தி இறைவன் எண்கு இனக்கர்த்தன் என்றும்
நெடுநீலன் எரியது என்றும் ருத்ரர் சிறந்தஅனுமன் என்றும்
ஒப்பற்ற அண்டர் எவரும் இந்த வர்க்கத்தின் வந்து புனம் ஏவ"

இராவணாதி அசுரரின் கொடுமையால் வருந்தி
பிரமாதிதேவரும் அரவணைச் செல்வனாம்
அச்சுதன்பால் சென்று வணங்கிப் பணிந்து
ஆலிலைச்சயனா! அன்பர்கள் ஏறே!

இராவணாதி அசுரரின் துன்பமழித்து
எங்களைக் காத்தருள வேண்டுமென வேண்ட
அரங்கன்மாலும் அருள்கூர்ந்து அவர்பால் இரங்கி
நானுங்கள் துன்பம் தீர்ப்பேனென வரமளித்து

எவராலும் மரணம் நிகழலாகாதுவெனச் சொன்ன
இராவணன் அற்பமென நினைத்து மனிதரையும்
வானரத்தையும் கேட்க மறந்து போனான்
அதுவே நும்மைக் காக்கும் உபாயம் என்றறிவீர்!

நிருதரை நீறாக்குதற்கு சூரிய குலத்தில்
தயரதன் மகனாய் நாம் பிறப்போம்
எம் கையில் துலங்கிடும் சங்கும் திகிரியும்
யாம் படுத்துறங்கும் ஆதி சேஷனும்

எமக்கு இளையவராய்ப் பிறக்க அருள்கிறோம்
இவருடன் நால்வராய் யாம் பிறந்து
நும் துன்பம் நீக்கும் அருள் புரிந்தோம்
அஞ்சுதல் அகற்றி நும்பணி செய்திடுவீர்

எனவே மொழியவும், பிரமன் ஜாம்பவானையும்
இந்திரன் வாலியெனும் வலியதோர் வீரனையும்
பகலவன் அம்சமாய் சுக்ரீவனெனும் தம்பியையும்
அக்கினியும் தன் பங்கிற்கு அழகிய நீலனையும்

வாயுவும் சிவனைவேண்டி அவனது ஒரு துளியாம்
உருத்திரன் அம்சமும் கலந்து அனுமனையும்
இந்திரனின் தம்பி உபேந்திரன் அங்கதனாயும்
தேவசிற்பி விசுவகர்மா நளனெனும் வானரமாயும்

இவர்களால் உந்தப்பட்டு தேவரும் கந்தருவரும்
மலைபோலும் உடலுடனும், அளவிடா ஆற்றலோடும்
ஆயிரமாயிரம் வானரராய்ப் பிறந்து
மலைசூழும் கிஷ்கிந்தாவினில் அவதரிக்கவும்,

"அரிய தன் படைக்கர்த்தர் என்று
அசுரர்தம் கிளைக்கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே"

இவ்வண்ணம் அங்கிருந்த வானரக் கூட்டங்களை
தன்பணிக்கு உதவிடவே சேனையாக ஏற்று
இரவாணாதி அரக்கரை அழித்து வெற்றிகொண்ட
பாவம் நீக்கி, முக்தியைத் தந்தருளும்

இராமனாய் அவதரித்த இவ்வுலகைக் காப்போனும்
தான் அழித்த இராவணனுக்கு பத்துத் தலையே
ஆயின் என் மருகனோ, ஆயிரம் தலை கொண்ட சிங்கமுகனை அரைநொடியில் வேல்விடுத்து அழித்த தீரத்தினையும்

பாறைகளைப் புரட்டி, தான் கடலினை தாண்டிச் சென்றதுவும்
மருகனோ அக்கடலினையே வற்றச் செய்த மாண்பினையும்
தாம் அம்பெடுத்து அழித்த வீரர் கணக்கினையும்
தன் மருகன் வெறும் பார்வையிலும், சிரிப்பினாலும் மட்டுமே

எரித்தழித்த மேன்மையினை எண்ணி எண்ணி
என்றென்றும் அரிமுகுந்தன் அளப்பரிய
ஆனந்தம் அடைந்து தன் மருகனை
மெச்சுகின்ற பச்சைப் புயலின் மருகோனே!

[இன்னும் வரும்!]" [1]

11 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Thursday, September 21, 2006 10:52:00 PM  

எஸ்கே ஐயா !
இராமயணக் காதை போல் உள்ளது... ஆழ்ந்து, ஊன்றிப் படித்துவிட்டு, திரும்ப வருவேன் !

VSK Thursday, September 21, 2006 11:02:00 PM  

வாங்க, வாங்க! பொறுமையா படிச்சிட்டு வாங்க!

மொத்தப் பொருளும் ஒரு நாலு பதிவுல வரும்!
ஒவ்வொண்ணுக்கும் வாங்க!
நிறைய வாங்க!

Unknown Thursday, September 21, 2006 11:20:00 PM  

இப்போதுதான் அப்பன் வினாயகனைப் பற்றிய கண்ணபிரான் ரவிசங்கரின் பதிவைப்படித்து மனமுருகி வந்தால் இங்கே தம்பியைப் பற்றிய பதிவு.அதிலும் மாலவனின் கதை

இந்த நாள் இனியநாள்

VSK Friday, September 22, 2006 12:06:00 AM  

மீதிப் பதிவுகளையும் படித்து கருத்து சொல்லுங்கள், செல்வன்!
ஏதோ ஒரு ஆர்வத்தில் விரிவாக எழுதி இருக்கிறேன்!
படித்துச் சொல்லவும்!

G.Ragavan Friday, September 22, 2006 2:23:00 PM  

எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ்களில் இதுவும் ஒன்று. சந்தம் நிறைந்த பாடல் நமது வாழ்க்கையை விளக்குகிறது. இதை வாரியார் பாடிக் கேட்க வேண்டும். ஆகா! அடுத்தடுத்த பாகங்களுக்குக் காத்திருக்கிறேன். அதிலும் நீங்கள் மருத்துவர் வேறு அல்லவா!

VSK Friday, September 22, 2006 2:42:00 PM  

எனக்கும் இதைப் படித்ததும் மிகவும் பிடித்துப் போயிற்று, ஜி.ரா.!

மிக அழகிய பாடல்!

இன்று இரண்டாம் பாகம் போடுவேன்!

நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, September 23, 2006 12:12:00 PM  

//ஆலிலைச்சயனா! அன்பர்கள் ஏறே!//

SK, அருணகிரியின் கவிதைக்கு விளக்கமும் கவிதையாகத் தான் தருகிறீர்கள். மிக நன்று. இராம் காதையும் சேர்த்தே படித்த் திருப்தி.

//இதை வாரியார் பாடிக் கேட்க வேண்டும். ஆகா!//
ஜிரா இப்படி சொன்னவுடன் ஆவல் வந்து விட்டது. வாரியார் குரல் இல்லை. திருப்புகழ் AS ராகவன் குரல்.
இதோ சுட்டி.
http://www.kaumaram.com/audio_k/grtp0009.html

குமரன் (Kumaran) Saturday, September 23, 2006 4:36:00 PM  

எஸ்கே. இராமகாதையை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாயுகுமாரன் எப்படி ருத்ராம்சன் என்பதனையும் குறிப்பாக நன்கு எழுதியிருக்கிறீர்கள். வாயுகுமாரன் என்பது தான் பிரசித்தம். ஆனால் அருணகிரியார் இங்கே கூறியது போல் ஹனுமான் சாலீசா போன்ற நூல்களிலும் அனுமன் சிவனின் அம்சம் என்று கூறப்படுகிறது.

அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே என்பதற்கு விரிவான பொருள் நன்றாக இருக்கிறது. பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் என்பதற்கும் இந்த மாதிரி விரிவான பொருள் சொன்னது நினைவிருக்கிறது. :-)

VSK Monday, October 02, 2006 10:33:00 AM  

வருகைக்கும், கருத்துக்கும், சுட்டிக்கும் மிக்க நன்றி, திரு. ரவி [KRS]

மற்ற மூன்று பாகங்களையும் படித்தீர்களா!?

VSK Monday, October 02, 2006 10:37:00 AM  
This comment has been removed by a blog administrator.
VSK Monday, October 02, 2006 10:37:00 AM  

பஞ்ச பூதங்களில், வாயு மட்டும் ஒரு தனி இடத்தை சிவனிடம் பெற்றிருப்பதற்கு, வேதங்களில் சான்றுகள் உள்ளன.

கம்பர் கூட இதனை சொல்லியிருப்பதாக நினைவு.

பார்த்துவிட்டு, சொல்லுகிறேன்.

நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP