Friday, September 22, 2006

"அ.அ.திருப்புகழ்" -- "கருவடைந்து" 10 [2]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் " -- 10 "கருவடைந்து" [2]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதன் விளக்கம் மிகவும் நீண்டதாக இருக்கும்.
நான்கு பதிவாக நான்கு நாட்களில் வரும்!!!
முதல் பகுதி படித்து இங்கு வந்தால் நலமாயிருக்கும்!
இது இரண்டாம் பாகம்.
[ஒவ்வொரு பதிவிலும் பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!
*************************************************************

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்

வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த

முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து

பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி

னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த

அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து

உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

.****************************************************************

.................பொருள்.....................[இரண்டாம் பகுதி]

"அயனையும் புடைத்துச் சினந்து"

வெள்ளிமலையாம் கயிலயங்கிரியில்
விளையாடல் முடித்த குமரன்
இலக்கத்தொன்பான் படை புடைசூழ
ஒளிபொங்க வீற்றிக்குங்காலை ஓர்-நாள்

ஆயிரமாயிரம் தேவர் கூட்டம்
அடிபணிந்து பின்னே வர
படைப்புக் கடவுளாம் பிரமனும்
சிவனை வணங்குதற் பொருட்டு வந்தனர்

யான் எனும் செருக்கின்றி வந்த அனைவரும்
சிவனை வணங்கியபின் சுற்றிவரும் வேளையில்
ஆங்கே வருள்பொழியும் குமரனை வணங்கிச் செல்ல
"இவன் இளைஞனன்றோ"வென செருக்குற்ற பிரமன் மட்டும்

இறுமாந்து தாண்டிச் செல்ல, குமரனும் அவரது
அறியாமைச் செருக்கடக்கி, சிவனும் முருகனும் ஒன்றெனும்
உண்மையினை, அவர்க்குப் புகட்டவெண்ணி, தருக்குடன் செல்லும்
பிரமனைத் தன்பக்கல் வரச் சொல்லவும்,


இன்னும் செருக்கடங்கா பிரமரும் அலட்சியமாய் வந்து
பாவனையாய் வணங்கி நிற்க, கந்தனும் "யாவன்" என வினவ
"படைத்தலினால் யான் பிரமன்" என அச்சங்கொண்ட பிரமரும்
பதிலிறுக்க, "அங்ஙனமாயின் வேதம்வருமோ?" எனக் கேட்க,

"வேதம் பிறந்தது நம்மிடத்தில், எமக்கு வரும்" எனப்
பணிவுடன் தெரிவிக்கலும், "நன்று! அப்படியாயின் முதல் வேதமாம்
இருக்கு வேதம் பகருக" எனப் பணிக்கலும்,"ஓம்" என பிரமன் தொடங்க
இளம் பூரணனாம் எம்பிரான் நகைத்து, திருக்கரமமைத்து,

"பிரமனே! நிற்றி; நிற்றி! முதலிற் கூறிய ஓம் எனும்
பிரணவத்தின் பொருள் கூறி மேலே தொடங்கலாம்"
என்னலும், பிரம்மதேவரும் திகைத்து, கண்கள் சுழன்று
தான் எனும் ஆணவம் அடங்கி, குமரனைப் பணிந்து,

"ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளுணரேன் யான்!" என வணங்க,
"இம்முதலெழுத்தின் பொருள் அறியா நீவிர் எங்ஙனம்
படைப்புதொழிலினைச் செவ்வனே செய்திடல்ஆகும்?" எனப்பகர்ந்து
நான்குதலைகளும் குலுங்குமாறு ஓங்கி குட்டினார்!

அகம் அழியவென அங்கத்தில் தன் திருவடியால்
ஓர் உதையும் கொடுத்தனர்! பிரமனும் மூர்ச்சையாகி
நிலத்தில் வீழ்ந்து பட கருணைக் கடவுளும் தம்
பரிவாரம் அழைத்து அவரைச் சிறையினிலும் இட்டனர்!"

"உலகமும் படைத்துப் பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே."

படைப்புக் கடவுள் இல்லாமையால்
உலகினில் சிருட்டித்தல் நின்றுவிட,
அதனையும் தானே செய்திடத் திருவுளம்
கொண்டு பரிவுடன் பரங்குன்றில் அமர்ந்து
"காத்தும் படைத்தும் கரந்தும்" செயல் புரிந்த
குமரன் எனும் பெயர் கொண்ட பெருமையுடையோனே!



[இதன் தொடர் நாளை வரும்!!]" [2]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!



9 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Saturday, September 23, 2006 2:51:00 AM  

எஸ்கே ஐயா...!

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவைரையும், வணங்குதல் போலே !

பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே !
அவனை சிறையினிலே
அடைத்தான் முருகனே!
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான் !
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான் !
கந்தன் அடியவர்க்கு அவனும் அருளுவான் !
கந்தன் அடியவர்க்கு அவனும் அருளுவான் !

கந்தனிடம் செல்லுங்கள் !
என்ன வேண்டும் சொல்லுங்கள்,
வந்தவினை தீர்ந்துவிடும், மற்றவற்றை
தள்ளுங்கள் !

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவைரையும், வணங்குதல் போலே!

கந்தன் ! கந்தன் !!

என்ற 'திருவருள்' பாடலை நினைவு படுத்தியதன் மூலம், அந்த பாடலை அடிக்கடிப் பாடும் என் அப்பாவையும்
நினைவுப் படுத்திவிட்டீர்கள் !

உங்கள்,
விளக்க கவிதையை வியந்துப் பாராட்ட வார்த்தைகள் இல்லை எனக்கு !

ஐயா !
மிக நன்று !

குமரன் (Kumaran) Saturday, September 23, 2006 4:37:00 PM  

பிரம்மதேவர் அகத்தை அழித்த கதையை மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் எஸ்கே. ஓம்காரத்திற்கு சுவாமிநாதன் சொன்ன பொருள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? எங்கும் படித்ததாக நினைவில்லை. பிரமனுக்கு ஓம்காரத்தின் பொருள் தெரியவில்லை என்று முருகப்பெருமான் தலையில் குட்டியதைப் படித்திருக்கிறேன். உதைத்ததும் செய்தார் என்பது புதியது. இதுவரைப் படித்ததில்லை.

Unknown Saturday, September 23, 2006 10:47:00 PM  

ஓம் என்பது அவும் என உச்சரிக்க வேண்டுமாம்.படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய மூன்றை அ,வு,ம் ஆகியவை குறிக்கும் என்பார்கள்.

வேதத்தை சுருக்கினால் காயத்திரியாம்.காயத்திரியை சுருக்கினால் ஓம் எனும் ஒலியாம்.இதை விட சுருக்கமாக வேதத்தை சுருக்கவே முடியாது என்பார்கள்.ஓம் என சொன்னால் வேதம் முழுவதையும் சொன்ன பலன் கிட்டுமாம்.

ஜீவத்மா,பரமாத்மா,தாயார் ஆகிய மூவருமே அ,வு,ம் என சில வைணவர்கள் சொல்வதுண்டு

VSK Monday, October 02, 2006 10:22:00 AM  

பின்னூட்டம் இடும் சாக்கில், ஒரு நல்ல அழகு தமிழ்ப் பாட்டையும் எங்களுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி, கோவியாரே!

அருமையான பாடல் வரிகள்!

VSK Monday, October 02, 2006 10:27:00 AM  

ஓம்காரத்தின் பொருள் உரைத்துச் சொல்லவல்லதன்று; உணர்ந்து அறியத்தக்க ஒன்று என பல இடங்களில் அருணையாரும், மற்றவரும் சொல்லக் கேட்டிருக்கிறேன், குமரன்.

அப்படி ஒரு விளக்கம் இதுவரை என் கண்ணில் படவில்லை.

முருகனருள் இருக்குமாயின், அதுவும் நிகழக் கூடும்!

குட்டியதோடு நிற்காமல் இன்ன பிறவும் செய்தார் என கந்த புராணத்தில் வருகிறது என நினைவு.

அதை ஒட்டி அமைந்த ஒரு விளக்கத்தைப் படித்தே இதை நானும் எழுதினேன்.

மாலையில் வீடு சென்றதும், மேலும் சொல்ல முடியும் என நினைக்கிறேன்.

VSK Monday, October 02, 2006 10:30:00 AM  

அகார, உகார, மகாரமே ஓம் என்றும், அதற்கு பல வித விளக்கங்களும் பல சமய நூல்களில் பரவிக் கிடைக்கின்றன, செல்வன்.

தங்களது அருமையான விளக்கத்துக்கு மிக்க நன்றி.

G.Ragavan Monday, October 02, 2006 12:05:00 PM  

ஓம் என்பதற்கு விளக்கம் நமக்கு விளங்கியிருக்குமானால் நான் இப்படியா இருப்போம்! அகர உகர மகாரச் சேர்க்கை என்பது சைவ சித்தாந்தம். குடிலை என்று இதற்குத் தமிழில் பெயர்.

ஓங்காரத்துக்குப் பல விளக்கங்கள் பல பொழுதுகளில் பல சமயங்களில் வழங்கப்பட்டன. இருந்தாலும் தமிழின் சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது! அகரம் என்பது துவக்கம். அகரத்தில்தானே தமிழ் துவங்குகிறது. ஆகையால் படைத்தல். உகரம் என்பது மூன்று அடிப்படைத் தேவைகள். உணவு, உடை, உறைவிடம். இவை காத்தலின் பயன்கள். மகரம் தமிழ் எழுத்துகளில் இறுதியானது. ஆக முடிவு. முத்தொழிலும் தந்தொழிலாய்ச் செய்யும் ஆதிசிவனே ஓங்காரம். ஓங்காரம் என்பது ஒலியும் ஒலியின்மையும் கூடியது. அதாவது உளது இலது. அதை ஒலி வடிவில் காட்டுவது சேவல். ஒளி வடிவில் காட்டுவது மயில். அதன் விளைவாகிய ஞானம் வேலின் வடிவம்.

எஸ்.கே. நான்முகனை ஆறுமுகன் குட்டிய கந்தபுராணப் பாடல் நினைவுள்ளதா?

VSK Monday, October 02, 2006 1:46:00 PM  

ஓம்காரத்தின் பொருளை ஒவ்வொருவராய் வந்து உரைக்கக் கேட்பது இவ்வளவு விரைவில் நிகழ்வதும் அவன் அருளே, ஜி.ரா.!
மிக்க நன்றி!
இதோ நீங்கள் கேட்ட பிரமனைக் குட்டி, உதைத்துச் சிறையில் தள்ளியதைச் சொல்லும் அந்தப் பாடல்!

தூம றைக்கெலாம் ஆதியு மந்தமுனை சொல்லும்
ஓமெ னப்படும் ஓரெழுத் துண்மையை யுணரான்
மாம லர்ப்பெருங் கடவுளும் மயங்கினான் என்றால்
நாமி னிச்சில அறிந்தனம் என்பது நகையே. 13

எட்டொ ணாதவக் குடிலையிற் பயனினைத் தென்றே
கட்டு ரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய்
சிட்டி செய்வதித் தன்மைய தோவெனாச் "செவ்வேள்
குட்டி நான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க." 14

மறைபு ரிந்திடுனை சிவனருண் மதலைமா மலர்மேல்
"உறைபு ரிந்தவன் வீழ்தரப் பதத்தினா லுதைத்து"
நிறைபு ரிந்திடு பரிசன ரைக்கொடே நிகளச்
சிறைபு ரிந்திடு வித்தனன் கந்தமானைச் சிலம்பில். 15

அல்லி மாமலர்ப பண்ணவன் றனையருனை சிறையில்
வல்லி பூட்டுவித் தியவையும் புரிதர வல்லோன்
எல்லை தீர்தரு கந்தமால் வரைதனில் ஏகிப்
பல்லு யிர்த்தொகை படைப்பது நினைந்தனன் பரிவால். 16

VSK Monday, October 02, 2006 2:42:00 PM  

Here is an English version!

Once Lord Brahma came to Mount Kailasa and walked in proudly. Lord Murugan called Brahma and asked him for the meaning of the pranava mantra 'OM'.
Brahma replied that "Om means Lord Brahma."

Angered," Murugan gave Brahma a beating on all four heads and kicked him out of the place. "

Murugan then threw Brahma in prison at Kandaverpilai. Then he himself took over the job of creation, protection and destruction of the universe.
Lord Siva came to know about Brahma's imprisonment and sent Nandi to request Murugan to release Brahma. But Murugan ignored the request.
When Narada told Siva about Murugan's refusal to release Brahma, Siva laughed and he himself came to Lord Murugan, released Brahma and gave him back his work of Creation

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP