"அலையும் ஒருவன்" [ஒரு உருவகக் க[வி]தை]
"அலை"யும் ஒருவன்" [ஒரு உருவகக் க[வி]தை]
கடலில் குளிக்க மறுத்து ஒருவன் கரையினில் கத்தி நின்றான்!
"அலையே! நீ நில்லு! உன் பேயலைகளின் சத்தம் என் காதைக் கிழிக்கிறது!
அவற்றின் சீற்றம் என்னைப் பயமுறுத்துகிறது!
நான் குளிக்கவேண்டும்!நீ நில்லாமல் நான் குளிக்க முடியாது!"
அலைகள் கேட்கவில்லை!
அவை பாட்டுக்கு அடித்துக் கொண்டே இருந்தன!
இவன் சத்தமும் நிற்கவில்லை!
கத்திக் கொண்டே இருந்தான்!
ஒரு சிற்றலை வந்து அவ்ன் காலைத் தொட்டது!
சிலீரென்று எழுந்து நின்றான்!
"இதோ பார்! அலைகளின் சீற்றம் இப்போதைக்கு அட்ங்காது!
அடங்கியதாகவும் வரலாறு இல்லை!"
"அப்போது ஏன் என்னிடம் வந்து அதைச் சொல்லுகிறாய்!
நான் தான் அவைகளின் சத்தம் நிற்காமல் குளிப்பதில்லை எனச் சபதம் செய்திருக்கிறேனே!"
"அவை நின்று, நீ குளிக்கவேண்டுமென ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்?
நீ குளிக்க வேண்டுமா, இல்லையா, சொல்!"
"அதெப்படி? அவை நிற்க வேண்டும்!
இல்லாவிடில் நான் குளிக்க முடியாது!"
"ஏனப்படிச் சொல்லுகிறாய்?அவை நிற்பதற்கும்,
நீ குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்?"
"என் பாட்டன் அலை அடித்து மாண்டான்.
என் அப்பனைக் கடல் இழுத்துச் சென்றது!"
கலங்கி நின்றான் அந்த மானுடன்!
சிற்றலை அவனைப் பார்த்துக் கனிவுடன் சொன்னது
"கடலில் குளிக்க ஆசையிருந்தால் என்னிடம் வா!
மணல்களைக் குவித்து, மரபை உடைத்து, மேடு கட்டியிருக்கிறேன்.
அலைகளின் சீற்றம் அங்கே செல்லாது.
கவலையின்றிக் குளிக்கலாம் நீ!"
"ஏமாற்றுகிறாயே, நீயும் கடல்தானே!
உன்னை எப்படி நான் நம்புவது!?"
அவன் மீண்டும் கத்தினான்!
சிற்றலை பரிவுடன் அவனைப் பார்த்தது.
"என்னிடம் ஆழம் இல்லை, அலையும் மெல்லவே வீசும்.
உன்னை விழுங்க மாட்டேன்! உல்லாசமாய் என்னுடன் இருக்கலாம்!"
"அதெல்லாம் சரிதான்! ஆனால் நீ மாறி வருவாயா?
அலைகளைத் துறந்து என் போல ஆவாயா?"
அலை நான்; உன்னை அணைக்கத் தயக்கமில்லை!
என்னை ஏன் மறுத்து ஒதுங்குகிறாய்?"
மனிதன் திரும்பினான்; மணலை நோக்கினான்.
"மக்களே யாரும் கடலில் குளிக்கப் போக வேண்டாம்.
அலைகளின் சீற்றம் உங்களுக்குத் தெரியாது
சிற்றலை நாடகத்தை நம்பவேண்டாம்."
கடலலை எப்போதும்போல் ஆர்ப்பரித்து நின்றது
மகிழ்வுடன் சென்று மக்கள் குளித்தனர்
பேரலைபக்கம் பயமின்றி சிலர் சென்றனர்
சிற்றலை மேட்டில் குழந்தைகள் குதூகலித்தன!
சிற்றலை மீண்டும் அவனிடம் வந்தது
"நாடகம் எனச் சொல்லி எத்தனை நாள் மயங்குவாய்?
கடலில் குளிக்க ஆசையிருந்தும், வழியுமிருந்தும்,
மனது மயங்கி மகிழ்வை ஏன் துறக்கிறாய்?"
அவன் கேட்காமல் கத்திக் கொண்டிருந்தான்
"மனிதர்களே அலை நில்லாமல் கடலில் குளிக்க வேண்டாம்"
மனிதர்கள் மகிழ்வுடன் குளித்துத் திரும்பினர்
கடலில் குளிக்க மறுத்து அவன் மட்டும் கரையினில் கத்தி நின்றான்!
சிற்றலை அவனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
13 பின்னூட்டங்கள்:
//அலையே! நீ நில்லு! உன் பேயலைகளின் சத்தம் என் காதைக் கிழிக்கிறது!
அவற்றின் சீற்றம் என்னைப் பயமுறுத்துகிறது!
நான் குளிக்கவேண்டும்!
நீ நில்லாமல் நான் குளிக்க முடியாது!
//
எஸ்கே ஐயா !
கடலுக்கு மிக அருகில் (வீடு - நாகை கடற்கரை) இருந்தாலும்,
அலைகளைப் பார்த்து பயப்படுபவர்களில் நானும் ஒருவன்.
அலைகளைப் பற்றி இங்கு படிக்கும் போது என் நினைவுக்கு வருவது இது. ஆழிப்பேரலைகள் எத்தனையோ சங்ககால தமிழ் நூல்களையும், தமிழர்தம் வாழ்வையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது.
அலைகள் எப்போதும் நிற்காது என்ற பேருண்மையை அழகாக விளக்கியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள் ஐயா ! சிலருக்கு ஏன் பலருக்கு புரிவதே இல்லை !
//
மனிதர்கள் மகிழ்வுடன் குளித்துத் திரும்பினர்
அவன் மட்டும் இன்னும் குளிக்காமல் இருந்தான்.
//
பாவம் அவன் தான், அலைகள் நிற்கும் என்று நினைத்தால் ஏமாறவேண்டியது தான். கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போட அவனும் அலையில் மூழ்கி இருக்கலாம் !
மிக தெளிவான வரிகள் மீண்டும் பாராட்டுக்கள் ஐயா !
அனைவரும் சேர்ந்து ஒன்றெனக் குளிக்கலாம், பயமின்றி எனச் சொல்ல முயன்றிருக்கிறேன்.
முதல் பின்னூட்டமே புரிதலோடு வந்தது மன நிறைவாய் இருக்கிறது, கோவியாரே!
மிக்க நன்றி.
எஸ்.கே அய்யா,
நீங்கள் சொல்வது மகிழ்ச்சி என்னும் கடலைத்தானே?
நாட்டில் இப்படித்தான் சிலபேர் முரண்டு பண்ணிக் கொண்டு ச்ந்தோசம் என்னும் கடலில் தானும் குளிக்காமல், குளிக்கப்போகும் மற்றவர்களையும் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்
ஞானம் வரும்போது (?) அவர்களும் குளிக்கத்தொடஙிவிடுவார்கள். எல்லாம் அவன் செயல் அல்லவா?
ஆஹா, இன்னொரு பின்னூட்டம் அதே புரிதலோடு!
இன்று நிம்மதியாய் தூங்கப் போவேன்!
அதேதான் திரு. சுப்பையா ஐயா!
மன மாசுகள் இல்லாத மகிழ்ச்சிக் கடல் தான் நான் சொல்ல வந்தது!
மிக்க நன்றி!
அருமையான கவிதை.அழகான பொருள்.
நடந்ததையே நினைத்திருந்தால்
நிம்மதி எதுவுமில்லை
என்ற கவியரசரின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன
SK ஐயா,
ஹிஹி....
உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது.
//அலை நான்; உன்னை அணைக்கத் தயக்கமில்லை!
என்னை ஏன் மறுத்து ஒதுங்குகிறாய்?"//
ஐயா, உங்களின் பதிவுகளிலிருந்தே உங்களின் நல்ல மனதை நான் அறிவேன். உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாக முடியும். தற்போது உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளும் காலம் வரும். கவலைப்படாதீர்கள். மாற்றம் என்பது உடனடியாக நடக்காது. காலம் எடுக்கும்.
காலம் வரும்வரை,
என் காலம் முடியும் வரை
இதற்கெனக் காத்திருப்பேன்
எழுதி வருவேன், திரு. வெற்றி.
நன்றி, இதயத்திலிருந்து.
அதே பாடலில்,இன்னும் சில வரிகள்!
வந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை
எனவும்,
தொடர்ந்த கதை முடிந்துவிடும்
பயணம் தொடர்ந்து விடும்
எனவும் சொல்லியிருக்கிறர் கவியரசர்!
நன்றி! செல்வன்!
//அவன் கேட்காமல் கத்திக் கொண்டிருந்தான்
"மனிதர்களே அலை நில்லாமல் கடலில் குளிக்க வேண்டாம்"
மனிதர்கள் மகிழ்வுடன் குளித்துத் திரும்பினர்
கடலில் குளிக்க மறுத்து அவன் மட்டும் கரையினில் கத்தி நின்றான்!//
ஆம் ஸ்கே அவர்களே, அவனுக்கு கேட்க மனமில்லை....ஆனால் மற்றவர்களை மாற்றும் சக்தி இருப்பதாக நம்பிக்கொண்டு காலம் கடத்துகிறான்.....தலைமுறை, தலைமுறையாக.....ஆனால் இவனுடன் இருந்த மற்றவர்கள் குளிக்கிறார்கள், அதிலும் சிலர் அந்த கடலில் முழ்கி முத்தும் எடுக்கிறார்கள்...அவர்களை பார்த்து இவன் கண்களை முடிக்கொண்டு மேலும், மேலும் கத்துகிறான் போகாதீர்களென்று.
:-)
//ஆழிப்பேரலைகள் எத்தனையோ சங்ககால தமிழ் நூல்களையும், தமிழர்தம் வாழ்வையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது.
//
:-)
"கேட்க மனமில்லை" என பொத்தாம் பொதுவாகப் பேசுவதுதான் தவறு என எண்ணுகிறேன், திரு. 'மௌல்ஸ்'!
மாறாக , மாறியிருக்கும் மன நிலையைக் காட்டும் மிதமான சொற்களைக் கையாண்டாலே, நம்பிக்கை தானே வரும்.
மனமில்லை என்ரு சொல்லி முடித்துவிடுவது சரியாக எனக்குப் படவில்லை.
சொற்களில் எண்ணங்களில், நச்சு கலக்காமல் பேசப் பழகினால் தானே மாற்றம் தெரியும், இருவரிடமும்.
மூடியவர் கண்களைத் திறக்க நம்மால் ஆன எதுவும் செய்ய வேண்டும் என்பதே என் நிலை.
நன்றி.
நான் காட்டுவது மணல் மேடு கட்டி மெல்லென அடிக்கும் சிற்றலையை!
நீங்கள் சொல்வதோ, தரம் பாராமல் அனைவரையும் அடித்துச் செல்லும் பேரலையை!
நன்றி, குமரன்!
Post a Comment