மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 5
"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 5
"இன்னா, டல்லா இருக்கே?" என்று வாஞ்சையுடன் தோளில் கை போட்டான் மன்னார்!
"ஒண்ணும் இல்லை; ஒரு காரியம் தொடங்கணும். அதைச் செய்யலாமா, வேண்டாமா என்று ஒரு சஞ்சலம். என்ன பண்றதுன்னு தெரியலை! ஒரே யோசனையா இருக்கு!கூடவே, எதிரிங்க தொந்தரவு வேற. சரி, உன்னைக் கேட்டா ஒரு தெளிவு வருமேன்னு இங்கே வந்தேன்" என்றேன்.
"இன்னா விசயம் ? நம்ம கையில சொல்லு! அல்லாத்தையும் முடிச்சுறலாம்! ஏன் கெடந்து பம்மற இதுக்கு? இன்னா, இன்னா?" எனக் கேட்டான் மயிலை மன்னார்.
"ஒரு புதுத் தொழில் தொடங்கலாம்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன். திட்டமெல்லாம் தயாராக இருக்கிறது. நடுவில் சிலர் பிரச்சினை பண்ணுகிறார்கள். அதனால, செய்யலாமா விட்டுறலாமான்னு குழப்பமா இருக்கு. நீ என்ன சொல்றே?" என ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தேன்.
"இதுக்கா இம்மாந் தயக்கம். சரி, நீ ஒண்ணும் சொல்ல வேணாம். இது மாரி கொயம்பறது எனக்கு புடிக்காது. கொயம்பறவங்களையும் புடிக்காது. நீ ஒண்ணும் சொல்லத் தாவயில்ல. இதப்பத்தி ஐயன் இன்னா சொல்றார்னு சொல்றேன் கேட்டுக்கோ. பொறவால, ஒனக்கு இஸ்டமிருந்தா, " மன்னாரு, இது பலான பலான விசயம்னு சொல்லு. எதுனாச்சும் பண்ணுவம். சரியா" என்றான்.
68ல இன்னா சொல்றருன்னா, என நீட்டி முழக்கியவாறு அவன் ஆரம்பித்ததும், "அட, நாம கேக்காமலேயெ ஒரு பதிவுக்கு விஷயம் கிடைக்கிறதே" என்ற அற்ப சந்தோஷம் மனதைத் தழுவ, அவசர அவசரமாக பேப்பரையும், பேனாவையும் எடுத்தேன்!!
இனி வருவது, அவன் சொன்னதும், நான் எழுதியதும்!!
அதிகாரம் - 68 "வினை செயல்வகை"
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. [671]
ஒரு காரியம் பண்ணனும்னு நெனச்சு, அல்லா ப்ளானும் பண்ணி ஒரு முடிவுக்கு வந்துட்டேன்னா, அதுக்கப்புறம் இப்ப பண்ணலாமா, அப்ப பண்ணலாமா, இவன் கை கொடுப்பானா, அவன் கால வாருவான, அந்த லைசென்ஸுக்கு எம்மாம் துட்டு செலவாகும், அப்டீன்னுல்லாம் யோசனை பண்ணிக்கிட்டு காலத்த கடத்தினேன்னு வயி, மவனே, அத்தப்போல மகா தப்பு ஒலகத்துலியே கெடையாது. இந்தா யோசனையெல்லாம் மொதல்லியே முடிச்சுறனும். முடிச்சுட்டா, பொறவு தயங்கக் கூடாது. ஆம்மாம்!
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. [672]
நம்ம ஐயனுக்கு இது ஒரு வெள்ளாட்டு! ஒரு வார்த்த புடிச்சுப் போயிடுச்சுன்னா, சும்மா அத்தயே போட்டு பின்னி பின்னி எடுப்பாரு! இதுல கூட பாரு, இந்த 'தூங்கு' அப்ப்டீங்கற வார்த்தய இன்னா சொளட்டு சொளட்டறாரு! சரி, விசயத்துக்கு வருவோம்!
ஒரு திட்டம் போட்டுட்டே நீ. அது மெதுவா ஆற அமர பண்ன வேண்டிய காரியமா, அப்போ, மெதுவா பொறுமையா அல்லா ஆங்கிளையும் கவர் பண்ணிட்டு, அப்பறந்தான் அத்த செய்ய வரணும். அதுவே சட்டுன்னு ஒரு மூணு மாசம், ஆறு மாசம் ப்ராஜெடா,.... டப்பு டப்புன்னு முடிக்கணும். மெதுவா செய்யறத மெதுவா செய்யு. வெரசலா செய்யறத வெரசலா பண்ணி முடி! ஓகேவா!
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். [673]
ஒரு காரியம் பண்ண ஆரம்பிக்கறே நீ. நீ இப்ப இன்னா பண்ண போறியோ எதுவோ, எனக்கு ஒண்ணும் தெரியாது. ஏதோ ஒரு காரியம் பண்ணலாம்னு நெனச்சுக்கிட்டு இங்க வந்துருக்க. அத ஆரம்பி தயங்காம.
நீ நெனச்ச மாரியே டக்கு டக்குன்னு ஒண்ணொண்ணும் நடக்குதா, போயிக்கினே இரு.
இல்ல ஒரு எடத்துல டொக்கு விளுதா.? தாண்டிப் போவாதே! நில்லு. ஷ்டாப்!நிதானி. இப்ப எதுக்காவ இங்க ஒரு தடங்கல் வந்துச்சுன்னு யோசி. அத்த ஸால்வ் பண்ணு. பொறவு அடுத்த படிக்கு போ! ஒன் காரியம் கெலிச்சுரும்.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். [674]
ஒரு காரியத்த ஆரம்பிச்ச பின்னால, பாதில வுட்டதும்,
ஒனக்கு இருக்கற ஒரு எதிராளிய அப்பறம் பாத்துக்கலாம்னு வுட்டுடறதும், ரெண்டும் சரி,
நீ ஒரு நெருப்ப கொளுத்திட்டு கவனிக்காம போயிட்டேன்னா, எப்படி அது தானே வளந்து பெருசாயி ஊரையே அளிச்சிடுமோ, அப்படி ஒன்னைக் கெடுத்துரும்!
ரெண்டையும் ஒண்ணு, வெட்டிறணும்; இல்ல முடிச்சிறணும்.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். [675]
ஒரு காரியம் செய்யறதுக்கு இன்னா வேணும்? ஒரு அஞ்சு விசயத்த மனசுல வெச்சுக்கணும்.
1.இத்த செய்யறதுக்கு ஒன்னிட்ட தேவையான பணம் இருக்கா,
2.இதுக்குத் தேவையான மெஷின்லாம் கெடைக்குமா,
3.இப்ப அதுக்கு சரியான நேரமா, போட்டா போணியாவுமா,
4.செய்யறதுக்கு ப்ளானு, ஆளுல்லாம் ரெடியா,
5.அதுக்கு எடம் தோதா இருக்கா
இதெல்லாத்தயும் கவனமா, சந்தேகமில்லாம முடிவு பண்ணிறனும். அப்பாலதான் அத்த செய்யறதுக்கே போவணும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். [676]
இந்த காரியத்த பண்றதுக்கு ஒனக்கு இன்னா செய்யணும், அதுக்கு எங்கேர்ந்தெல்லாம் போட்டி, ப்ளாக்கெல்லாம்[Block] வரும்,
சரி, இத்தனையும் தாண்டி முடிச்சா அதுல இம்மாம் லாபம் வரும்? அத்தினையும் தெரிஞ்சு வெச்சுக்கிட்டுத்தான் அதுல எறங்கப் போவணும்.
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். [677]
ஒண்ணு பண்ண ஆரம்பிச்சேன்னா,
இதுமாரி செஞ்சவனோட, செய்யறவனோட,.... இது மாரி ஒரு நூறு பேரு கெடைப்பான் ஒனக்கு,.....
அவனுங்களை கலந்துகிட்டு அப்பாலதான் செய்யவே ஆரம்பிக்கணும்.
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. [678]
இப்ப ஒரு காரியம் பண்ணும் போதே, அத வெச்சி, அதேமாரி அடுத்த ஒரு காரியத்த ரெடி பண்ணி வெச்சுக்கணும்.
இப்ப, ஒரு யானைய வெச்சுத்தானே இன்னோரு யானையக் கட்றாங்க, பளக்கறாங்க; அதுமாரின்னு வெச்சுக்கோயேன்!அப்பத்தன் ஒனக்குஒரு கன்டினிடி[Continuity] இருக்கும்!
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். [679]
இப்ப சொல்றதத்தான் நீ ரொம்ப கவனமா கேக்கணும்.
ஒனக்கு வேண்டியவங்களுக்கு நீ இன்னா செஞ்சாலும் சரி, செய்யாட்டாலும் சரி, ஒனக்கு இந்தத் தொளில்ல போட்டியா இருக்கறவனோட சேராம இருக்கான் பாரு, அவுனுகளையெல்லாம், டக்கு டக்குன்னு போயி ஃப்ரெண்ட்சிப் பண்ணிக்கணும். அப்பத்தான் அவன் ஒனக்கு துரோகம் பண்ண மாட்டான். அவனோட போய் சேர மாட்டான்!
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. [680]
இப்ப நீ ஒரு காரியம் பண்ண ஆரம்பிக்கற.
ஒன்ன விட ஒர்த்தன்,.... பிஸ்தா,... வர்றான்,
இந்த தியேட்டரை 35 எம்மெம் எதுக்கு, நான் 70 எம்மெம்ல கட்டித்தர்றேன்னு. இப்ப நீ இன்னா பண்ணனும். ஒன்கிட்ட ஒரு 30 - 40 பேரு தொளில் தெரிஞ்சவன் இருக்கான்.
நீ. "அடடா, இன்னாது இப்படி இவன் வந்து காரியத்த கெடுத்துட்டானேன்னு" ஒக்காந்தேன்னு வையி, மவனே அவ்ளோதான்! நீ திரும்பிப் பாக்கரச்செ ஒரு பய ஒன்னோட இருக்க மாட்டான்.
இப்ப நீ இன்னா பண்ணனும்? கலங்கக்கூடாது. ஒன் பயலுவ எவனும் சுதாரிச்சுக்கரதுக்குள்ள நீ போயி அந்த பிஸ்தாவ பாத்து,
"ராசா! நீயே பண்ணு! ஆனக்க பாதி வேலைய எனக்குக் கொடுத்துரு. 70எம்மெம்மை நீயே போட்டுக்க! எனக்குகீளே இத்தினி ஆளுங்க இருக்காங்க. என்னால இதுல பேர்பாதி பண்ணிக் கொடுக்க முடியும்"னு ஒரு டீல் போட்டுக்க.
அவனுக்கும் லாபம்; ஒனக்கும் லாபம்; ஒன் ஆளுன்ஙளும் ஒன்னிய வுட்டுப் போவ மாட்டங்க!
புரியுதா? நா சொல்றது?
இது எப்படீ இருக்குன்னா, ஒரு பெரிய ராசா ஒன் நாட்டு மேல படை எடுத்து வர்றான்னா, அவனோட சண்டை போட்டு நீ சாவறது முக்கியமா, இல்ல சமாதானமாப் போயி நீயும் லாபம் சம்பாதிக்கறது முக்கியமா; அது போலத்தான் இதுவும்.
என்று சொல்லிய பின், "இப்போ ஒன்னோட ப்ராஜெக்ட் இன்னா, இன்னா கேக்கணும்னு நெனச்சே? எனக் கேட்டான் மன்னார்.
கலக்கம் நீங்கியவனாக, "நீ ஒண்ணும் சொல்ல வேணாம், எல்லாம் ஐயன் சொல்லி விட்டார்" எனச் சொல்லி நடையைக் கட்டினேன் நான்.
கடகடவெனச் சிரித்த மன்னாரின் குரல் கேட்டுத் திரும்பினேன்.
"நீ புத்திசாலிப் புள்ள. சொன்ன பக்குன்னு புடிச்சுப்பேன்னு தெரியும்!
அதான் 68 -ஐ சொன்னேன் " எனச் சொல்லிக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்.
"நாயர்! ரெண்டு டீ என் கணக்குல!" என்று திமிராகச் சொல்லியபடியே மன்னாரின் தோளில் கை போட்டேன் நான்!!
46 பின்னூட்டங்கள்:
:) :)
//சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. [671]
ஒரு காரியம் பண்ணனும்னு நெனச்சு, அல்லா ப்ளானும் பண்ணி ஒரு முடிவுக்கு வந்துட்டேன்னா, அதுக்கப்புறம் இப்ப பண்ணலாமா, அப்ப பண்ணலாமா, இவன் கை கொடுப்பானா, அவன் கால வாருவான, அந்த லைசென்ஸுக்கு எம்மாம் துட்டு செலவாகும், அப்டீன்னுல்லாம் யோசனை பண்ணிக்கிட்டு காலத்த கடத்தினேன்னு வயி, மவனே, அத்தப்போல மகா தப்பு ஒலகத்துலியே கெடையாது. இந்தா யோசனையெல்லாம் மொதல்லியே முடிச்சுறனும். முடிச்சுட்டா, பொறவு தயங்கக் கூடாது. ஆம்மாம்!//
எஸ்கே ஐயா...!
மன்னாரின் குறள் விளக்கம் நன்று ...!
எண்ணித் துணிக கருமம் துணித்த பின்
எண்ணுவோம் என்பது இழுக்கு !
இந்த குறளுக்கும் மேற்கண்ட குறளுக்கும் எதாவது வேறுபாடு உள்ளதா ?
//மெதுவா செய்யறத மெதுவா செய்யு. வெரசலா செய்யறத வெரசலா பண்ணி முடி! ஓகேவா!//
கடகடன்னு படிச்சாச்சு, இப்போ மெதுவா தூங்கப் போறேன். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி.
//ஒரு யானைய வெச்சுத்தானே இன்னோரு யானையக் கட்றாங்க, பளக்கறாங்க;//
அப்ப அந்த முத யானையை எப்படி கட்டி இருப்பாங்க நைனா?
முதலாவது எப்படிச் செய்யணும்ங்க்றதைப் பற்றி.
இரண்டாவது செய்ய ஆரம்பித்த பின்.
வினை செயல் வகை
தெரிந்து செயல் வகை
புரியுதா?
வெவகாரமான கேள்வியாத்தான் கேட்டுருக்கீங்க, கொத்தனாரே!
தெரிஞ்சுதான் கேட்டீங்கன்னு நெனச்சுக்கறேன்!!:)
மொத யானையை மட்டுமில்லை எல்லா யானையுமே ஒரு குழில விழ வெச்சுத்தான் பிடிக்கிறாங்க!
அப்புறம்தான் பழக்கறது எல்லாம்.
அப்படீன்னா, மொதல் யானைக்கு கொஞ்சம் அதிக நேரம் செலவழிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறென்!
சரியா!
// SK said... வினை செயல் வகை
தெரிந்து செயல் வகை
புரியுதா? //
எஸ்கே ஐயா...!
விளக்கம் ஒன்று போல் இருந்தது...!
தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினேன்.
நன்றி !
எஸ்கே, நனைகவுள்- பொருள் என்ன?
யானையால் யானையாத்தற்று.. ம்ம்ம்ம் இருக்கட்டும் :) யானையைக் கட்டுவது பற்றி இயற்கை நேசியிடம் போட்டுக் கொடுத்துவிட்டுத் தான் மறுவேலை :)
நனை கவுள் யானையால்= நன்றாகப் பழக்கிய யானையால்
யானை யாத்தன்று= யானையைக் கட்டுதல் [பழக்குதல்] போல
ஸோ! படிக்கிறீங்க இதையும் நீங்க!
ஓ! யானை வந்துருக்கே அதனாலையா!
மகிழ்வா இருக்கு!
பதிவைப் படித்தவுடன் நமக்கும் "மன்னாரு" போல ஒரு நண்பர் இல்லையே என்ற ஏக்கம்தான் மிஞ்சுகிறது!
என்னங்க, இப்படி சொல்லிட்டீங்க, ஆசிரியர் ஐயா?
மன்னார் எல்லாருக்கும் நண்பனே!
உங்களைக்கூட தெரியும், உங்க பதிவெல்லாம் தவறாம படிப்பேன்னு சொன்னானே!
என்ன, கொஞ்சம் அறிவுபூர்வமான கேள்வியெல்லாம் கேக்குறீங்களா, அதான் பயந்துகிட்டு இருக்கான்!
சென்னையில் கூட யானை கவுளின்னு ஒரு இடம் இருக்குன்னு நினைக்கிறேன், பொன்ஸ்!
யானையெல்லாம் அங்கே கட்டி வெச்சு பழக்கியிருக்கலாம், ஒரு காலத்துல!
Elephants gate!
// என்ன, கொஞ்சம் அறிவுபூர்வமான கேள்வியெல்லாம் கேக்குறீங்களா, அதான் பயந்துகிட்டு இருக்கான்! //
எஸ்.கே.அய்யா, வணக்கம்!
வலைப்பூ வட்டம் சராசரியாக 33 வயதினரையே படிக்க வைக்கிறது என்ற கணிப்பில் அவர்களுக்குத்தகுந்த மாதிரி எழுதிக் கொண்டிருக்கிறேன்
அறிவுபூர்வமெல்லாம் ஒன்றுமில்லை!
"கற்றது கை மண் அளவு கல்லாதது உலக அளவு - என்று அவ்வைப் பாட்டி எழுதியதுதான்
என்றும் என்னுடைய நிலைப்பாடு ஆகும்
அங்கே உங்களூரில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் - முகப்பில் இதைஎழுதி வைத்திருக்கிறார்களாமே - என் நண்பர் சொன்னார்
எனக்குப் பட்டினத்தடிகளையும், தயானந்த சரஸ்வதி அவர்களின் சொற்பொழிவுகளையும் பதிவிற்குள் கொண்டுவர ஆசை படிப்பதற்கு யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள் - உங்களைப்போல பக்குவப்பட்டவர்கள் இரண்டொருவர்களைத்தவிர!!!!!!
எல்லாம் சரியாச் சொல்லிட்டு, கடைசியில இவ்வளவு பெரிய உ.கு. வைத்து விட்டிர்களே!
பக்குவமெல்லாம் இன்னும் படலீங்க!
அப்படி இருந்தா, இப்படி அடி வாங்குவேனா, இங்கே!
:))
//ரெண்டையும் ஒண்ணு, வெட்டிறணும்; இல்ல முடிச்சிறணும்.//
இன்னா சார். இந்த தாதா வேலை ஐயன்தா? இல்லாங்காட்டி மன்னார்தா?
இந்த தாதா கண்ணோட்டம் ஐயனுக்கும் இல்லை, மன்னாருக்கும் இல்லை.
அரைகுறையா விட்ட வேலையையும், பகையையும் முழுசா முடிச்சிரு, இல்லேன்னா வேணாம்னு வெட்டிவிட்டுருன்னு சாதாரணமாகச் சொன்னதை இப்படியும் பார்த்த நீங்கதான் ஒரு தாதான்னு நினைக்கிறேன், திரு.சுல்தான்!
என்ன, ஆட்டோ அனுப்பிட்டீங்களா?!!
:))
//நனை கவுள் யானையால் = நன்றாகப் பழக்கிய யானையால்//
கவுள் என்றால் கன்னம்
நனை கவுள் = கண்ணில் மத நீர் பொழிய, அதனால் நனைந்த கன்னத்தை உடைய யானை!
SK
கலக்கிட்டீங்க! அது எப்படிங்க 35mm 70 mm எடுத்துக்காட்டு எல்லாம் புடிக்கிறீங்க?
//எல்லாம் சரியாச் சொல்லிட்டு, கடைசியில இவ்வளவு பெரிய உ.கு. வைத்து விட்டிர்களே!//
வாத்தியார் அய்யா உண்மையத் தானே சொல்லி இருக்கார் :-)
உ.கு என்றால் உதாரணக் குறிப்பு ன்னு பொருள்படும். அர்த்தம் ஆயிந்தா?
எஸ்.கே. ஐயா,
இரண்டு சமீபத்திய தமிழ்ப்படம் பார்த்த பாதிப்போ என்னவோ தெரியலை.
இருந்தாலும் கொஞ்சம் வெளக்கமா சொன்னாத்தானே....
நீங்களும் அந்த தமிழ்ப்படங்கள் பார்த்திருப்பீர்கள் போலுள்ளது. ஆட்டோலாம் அனுப்ப சொல்றீங்க.
மீட்டருக்கு மேல போட்டு கொடுப்பீங்களா?
நீங்க ஆட்டோ அனுப்பி, அதுக்கப்புறம் நான் கொடுக்கற நிலையில இருந்தா, மீட்டரைப் பத்தி எல்லாம் யோசிக்கலாம்! :))
முதல் வரியில என்னுடைய பக்குவமற்ற பதிலை சரிப்படுத்தி, பின் உ.கு.வுக்கு ஒரு விளக்கமும் கொடுத்த .....இந்த உ.கு. மிகவும் அருமை, திரு. ரவி.!
அப்போ, செவுள் = செவி, கவுள் = கன்னம், நுதல் = நெற்றி, இதழ் = உதடு, .....!!!
நன்றி!
இந்த தபா மசால் வடை இல்லீங்களே!
வெறும் டீதான்!
நாயர் கடை டீயை ஒரு முறை சாப்பிட்டீங்கன்னா, அப்புறம நீங்களே சொல்வீங்க, நான் ஏன் அப்படிச் சொல்லுகிறேன் என்று.
வாரத்துக்கு ஒரு நாள், 10 நாளைக்கு ஒரு நாள் அங்கே போறேன்.
அந்த டீ, மசால் வடையை விட மனமில்லை!!
அதான்!
எஸ்.கே. ஐயா,
நம்ம சார்பாக வணக்கமும் வாழ்த்துக்களை சொல்லீருங்க மன்னார் கையிலே....:-)
இப்படியே எந்த க்ளாஸுக்குப் போனாலும், வெறும் அட்டென்டென்ஸ் மட்டும் கொடுத்துட்டுப் போறது நல்லால்லே, சொல்லிட்டேன், ராம்!
:))
// Mr.S.K Said: பக்குவமெல்லாம் இன்னும் படலீங்க! //
அய்யா!
வலைப்பதிவில் நான் ஆசிரியர் பணியில் உள்ளேன் எதையும் உதாரணத்துடன் விளக்குவதுதானே அழகு
எல்லாம் அவன் செயல்!
நீங்கள் பக்குவப்பட்டவர் என்பதற்கு 2 உதாரணங்களைத் த்ருகிறேன்
1. உங்கள் வலைப்பூவின் தலைப்பு (ஆத்திகம்)
2. வலைஞர் விவரத்திலுள்ள படம் (யாமிருக்க் பயமேன் என்று ஆறுதல் சொல்லும் வேலவனின் படம்)
இப்போது சொல்லுங்கள் நீங்கள் சுட்ட பழமா? இல்லை சுடாத பழமா?
- பக்குவப்பட்டவரா - பக்குவம் பெறவேண்டியவரா?
//SP.VR.SUBBIAH said... இப்போது சொல்லுங்கள் நீங்கள் சுட்ட பழமா? இல்லை சுடாத பழமா?
- பக்குவப்பட்டவரா - பக்குவம் பெறவேண்டியவரா? //
சுப்பைய்யா ஐயா...!
எஸ்கே ஐயா ஒரு சுட்ட பழம் !
அதான் எல்லோரும் போட்டு சுடுறாங்களே !
கோவியாரும் சளைப்பதில்லை வாய்ப்புக் கிடைத்தால் சேர்ந்து கொண்டு சுடுவதில் !
:))
இறுதியில், என் வழிக்கே வந்து, ஒத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி, ஆசிரியர் ஐயா!
நன் சுடாத பழம் அல்ல; எல்லாராலும் சகட்டு மேனிக்கு 'சுடும்', சுட்ட பழம்தான் எனச் சொன்னதற்கு!
அதுதான் நானும் சொல்லியிருந்தேன்!
இப்ப கோவியாரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்!
:))))
எஸ்.கே அய்யா,
எனக்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிறது -
சிரமத்திற்கு மன்னிக்கவும்
கோவி அவர்கள்
இந்திய நேரப்படி காலை 5 மணிப் (என்னுடைய) பதிவிற்கும் உள்ளே வருகிறார்
இரவு 10 மணிப் (உங்களுடைய) பதிவிற்கும் உள்ளே வருகிறார்
அவருக்குத் தூங்காமை வரம் கிடைத்ததும் அவன் செயல்தானா?
அப்படித்தான் நானும் எண்ணுகிறேன், ஆசானே!
அவர் உண்மையிலேயே மாயக்கண்னன் தான்!
:))
// SP.VR.SUBBIAH said...
எஸ்.கே அய்யா,
எனக்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிறது -
சிரமத்திற்கு மன்னிக்கவும்
கோவி அவர்கள்
இந்திய நேரப்படி காலை 5 மணிப் (என்னுடைய) பதிவிற்கும் உள்ளே வருகிறார்
இரவு 10 மணிப் (உங்களுடைய) பதிவிற்கும் உள்ளே வருகிறார்
அவருக்குத் தூங்காமை வரம் கிடைத்ததும் அவன் செயல்தானா?
//
சுப்பைய்யா ஐயா...!
தூங்காவரம் மற்றும் ஏனைய வரங்கள் எல்லாம் சங்கரன் மகன்கள் கொடுக்கும் அளவற்ற அருள் தான் காரணம் !
:))
//சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. [671]
//
உண்மை தாங்க.
//தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. [672]
//
இது அருமையன குறள் எஸ்கெ. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இது மிக முக்கியமான அறிவுரை. இந்தக் குறளோடு ‘செய்யக் கூடாததை செய்வதாலும் கெடுதி; செய்யவேண்டியதைச் செய்யாததாலும் கெடுதி’ என்று சொல்லும் குறளையும் சேர்த்து ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். மேலாண்மைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இது ஒரு உயிர்க்காக்கும் மருந்து போன்ற அறிவுரை.
//ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். [673]
//
ம்ம்ம்… இது தானே மேலாண்மைப் பயிற்சியில் சொல்லிக் கொடுக்கப்படும் முக்கியமான ஒரு பயிற்சி. என் பணியிட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடப்பது இது.
//வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். [674]
ஒரு காரியத்த ஆரம்பிச்ச பின்னால, பாதில வுட்டதும்,
ஒனக்கு இருக்கற ஒரு எதிராளிய அப்பறம் பாத்துக்கலாம்னு வுட்டுடறதும், ரெண்டும் சரி,
நீ ஒரு நெருப்ப கொளுத்திட்டு கவனிக்காம போயிட்டேன்னா, எப்படி அது தானே வளந்து பெருசாயி ஊரையே அளிச்சிடுமோ, அப்படி ஒன்னைக் கெடுத்துரும்!
ரெண்டையும் ஒண்ணு, வெட்டிறணும்; இல்ல முடிச்சிறணும்.
//
அம்மாடி. ரொம்பப் பயமுறுத்துறாரே. நான் இரண்டையுமே செய்திருக்கிறேன். வினையின் எச்சமும் பகையின் எச்சமும் இரண்டுமே இருந்ததுண்டு. ஏன்ன பகையின் எச்சம் இல்லாமல் போக ஐயன் இன்னொரு அறிவுரை சொல்லியிருககார் – இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ன்னு – அதைக் கூடச் செய்யாம விட்டதுண்டு. அதனால இரண்டுமே திரும்பி வந்து தொல்லை கொடுத்ததும் உண்டு.
//பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். [675]
ஒரு காரியம் செய்யறதுக்கு இன்னா வேணும்? ஒரு அஞ்சு விசயத்த மனசுல வெச்சுக்கணும்.
1.இத்த செய்யறதுக்கு ஒன்னிட்ட தேவையான பணம் இருக்கா,
2.இதுக்குத் தேவையான மெஷின்லாம் கெடைக்குமா,
3.இப்ப அதுக்கு சரியான நேரமா, போட்டா போணியாவுமா,
4.செய்யறதுக்கு ப்ளானு, ஆளுல்லாம் ரெடியா,
5.அதுக்கு எடம் தோதா இருக்கா
இதெல்லாத்தயும் கவனமா, சந்தேகமில்லாம முடிவு பண்ணிறனும். அப்பாலதான் அத்த செய்யறதுக்கே போவணும்.
//
இதுவும் மேலாண்மைப் பயிற்சியில படிச்ச மாதிரியே இருக்கே… அருமை.
//முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். [676]
இந்த காரியத்த பண்றதுக்கு ஒனக்கு இன்னா செய்யணும், அதுக்கு எங்கேர்ந்தெல்லாம் போட்டி, ப்ளாக்கெல்லாம்[Block] வரும்,
சரி, இத்தனையும் தாண்டி முடிச்சா அதுல இம்மாம் லாபம் வரும்? அத்தினையும் தெரிஞ்சு வெச்சுக்கிட்டுத்தான் அதுல எறங்கப் போவணும்.
//
ம்ம்ம். முடிவு, இடையூறு, படுபயன் எல்லாத்தையும் எடை போட்டு அப்புறம் தான் ஒரு செயலில் இறங்க வேண்டும். அருமையான அறிவுரை.
//செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். [677]
ஒண்ணு பண்ண ஆரம்பிச்சேன்னா,
இதுமாரி செஞ்சவனோட, செய்யறவனோட,.... இது மாரி ஒரு நூறு பேரு கெடைப்பான் ஒனக்கு,.....
அவனுங்களை கலந்துகிட்டு அப்பாலதான் செய்யவே ஆரம்பிக்கணும்.
//
ஆமாங்க. இது தாங்க ஒவ்வொரு நாளும் வீட்டுலயும் வேலையிடத்திலயும் செய்யறேன். முழுக்க முழுக்க செய்யறேன்னு சொல்ல முடியாது. செய்யாம எப்ப எப்ப விடறேன்னு பாத்து அந்த இடைவெளியையும் மூடணும் – எல்லா நேரத்துலயும் இந்த அறிவுரையை மனசுல வச்சுக்கணும்.
//வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. [678]
இப்ப ஒரு காரியம் பண்ணும் போதே, அத வெச்சி, அதேமாரி அடுத்த ஒரு காரியத்த ரெடி பண்ணி வெச்சுக்கணும்.
இப்ப, ஒரு யானைய வெச்சுத்தானே இன்னோரு யானையக் கட்றாங்க, பளக்கறாங்க; அதுமாரின்னு வெச்சுக்கோயேன்!அப்பத்தன் ஒனக்குஒரு கன்டினிடி[Continuity] இருக்கும்!
//
இந்தக் குறளைப் படிச்சிருக்கேன். சின்னப் புள்ளையில இருந்து எல்லாரும் இதைச் செய்யறாங்கன்னு நெனைக்கிறேன். ஆனா செய்யறோம்ன்னு தெரியாது. அதை முழு அறிவோடு செய்யனும்ன்னு ஐயன் சொல்றாருன்னு நெனைக்கிறேன்.
//நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். [679]
இப்ப சொல்றதத்தான் நீ ரொம்ப கவனமா கேக்கணும்.
ஒனக்கு வேண்டியவங்களுக்கு நீ இன்னா செஞ்சாலும் சரி, செய்யாட்டாலும் சரி, ஒனக்கு இந்தத் தொளில்ல போட்டியா இருக்கறவனோட சேராம இருக்கான் பாரு, அவுனுகளையெல்லாம், டக்கு டக்குன்னு போயி ஃப்ரெண்ட்சிப் பண்ணிக்கணும். அப்பத்தான் அவன் ஒனக்கு துரோகம் பண்ண மாட்டான். அவனோட போய் சேர மாட்டான்!//
இந்தக்குறள் புரியலிங்களே. இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்துக் காட்டோட விளக்கம் கேட்டுச் சொல்றீங்களா?
//உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. [680]
இப்ப நீ ஒரு காரியம் பண்ண ஆரம்பிக்கற.
ஒன்ன விட ஒர்த்தன்,.... பிஸ்தா,... வர்றான்,
இந்த தியேட்டரை 35 எம்மெம் எதுக்கு, நான் 70 எம்மெம்ல கட்டித்தர்றேன்னு. இப்ப நீ இன்னா பண்ணனும். ஒன்கிட்ட ஒரு 30 - 40 பேரு தொளில் தெரிஞ்சவன் இருக்கான்.
நீ. "அடடா, இன்னாது இப்படி இவன் வந்து காரியத்த கெடுத்துட்டானேன்னு" ஒக்காந்தேன்னு வையி, மவனே அவ்ளோதான்! நீ திரும்பிப் பாக்கரச்செ ஒரு பய ஒன்னோட இருக்க மாட்டான்.
இப்ப நீ இன்னா பண்ணனும்? கலங்கக்கூடாது. ஒன் பயலுவ எவனும் சுதாரிச்சுக்கரதுக்குள்ள நீ போயி அந்த பிஸ்தாவ பாத்து,
"ராசா! நீயே பண்ணு! ஆனக்க பாதி வேலைய எனக்குக் கொடுத்துரு. 70எம்மெம்மை நீயே போட்டுக்க! எனக்குகீளே இத்தினி ஆளுங்க இருக்காங்க. என்னால இதுல பேர்பாதி பண்ணிக் கொடுக்க முடியும்"னு ஒரு டீல் போட்டுக்க.
அவனுக்கும் லாபம்; ஒனக்கும் லாபம்; ஒன் ஆளுன்ஙளும் ஒன்னிய வுட்டுப் போவ மாட்டங்க!
புரியுதா? நா சொல்றது?
இது எப்படீ இருக்குன்னா, ஒரு பெரிய ராசா ஒன் நாட்டு மேல படை எடுத்து வர்றான்னா, அவனோட சண்டை போட்டு நீ சாவறது முக்கியமா, இல்ல சமாதானமாப் போயி நீயும் லாபம் சம்பாதிக்கறது முக்கியமா; அது போலத்தான் இதுவும்.
//
இதுல எடுத்துக்காட்டு புரியுது; ஆனா குறள் புரியலை – ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன பொருள்ன்னு கேட்டுச் சொல்ல முடியுமா?
உங்கள் தயவாலும் மன்னாரின் தயவாலும் திருக்குறளைப் படிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. மனப்பாடச் செய்யுளாக எத்தனையோ குறட்பாக்களைப் படித்திருந்தாலும் உங்கள் பதிவுகளில் மன்னாரின் விளக்கத்துடன் வரும் குறட்ப்பாக்களைப் படிக்கும் போது நிறைய புதுக்குறள்களைப் படிக்கிறேன். நல்ல தொண்டு. மிக்க நன்றி.
சிரிப்பான் போட்டுச் செல்வர் சில நேரம்
குறிப்பால் உணர்த்திச் செல்வர் சில நேரம் -ஆயின்
விருப்பாய்ப் படித்தே பல்பொருள் சொல்வதே
குமரன் வரும் நேரம்!
இது போல எப்பவாவது தன் வர்றீங்க குமரன்.
ஆனால், இதுதான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று உங்களிடம்!
அக்கக்கா அலசி கருத்துகள் சொல்லும் இன்பம் உணர்பவருக்கே தெரியும்.
மிக்க நன்றி!
//இந்தக்குறள் புரியலிங்களே. இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்துக் காட்டோட விளக்கம் கேட்டுச் சொல்றீங்களா? //
உங்க பாராட்டு பின்னுட்டங்களுக்கு நன்றி சொல்லி, நீங்க கேட்ட சில கேள்விகளுக்கு மட்டும் சொல்லாலாம்னு நினைக்கிறேன்.
தவறாக எண்ண வேண்டாம்.
பில் கேட்ஸைக் கேட்டா, இதுக்கு நல்லா விளக்கம் கொடுப்பாருன்னு நினைக்கிறேன், குமரன்!
மைக்ரொசாஃப்டுக்கும், ஆப்பிளுக்கும் இடையே ஆரம்பத்தில் நடந்ததைப் படிச்சிருந்தீங்கன்னா இது இன்னமும் சுலபமாப் புரியுமே!
இரண்டு வலுவான போட்டி நிறுவனங்கள்.
இரண்டும் ஒரே பொருளைத்தான் விற்பனைக்குத் தருகிறது.
இதில் ஒருவர் என்ன செய்கிறார் என்றால், தன் போட்டி நிறுவனத்துடன் சேராத, மற்ற சில குட்டி நிறுவனங்களை, அல்லது இத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்களைத் தயாரிக்கும் உப நிறுவனங்களைத் தன் பக்கம் இழுத்து, நட்பாக்கிக் கொள்ளுகிறார் எனக் கொள்வோம்.
இப்படிச் செய்வதன் மூலம், அவர்களை சிறு, மற்றும் உப, நிறுவனங்களாகவே வைப்பது மட்டுமின்றி, எதிர்க் கம்பெனிக்கும் உபயோகம் இல்லாமல் செய்து விடுகிறார் அல்லவா?
இந்த முறையைத்தான், சொல்கிறார் வள்ளுவர் இந்தக் குறளில்.
இன்னும் நல்ல விளக்கம் வேண்டுமெனில், அடுத்தவரிடம் போய்விடக்கூடாதே என்பதற்காகவே, ஓரிரு சீட்டுகளைக் கொடுத்து உதிரிக் கட்சிகளை தங்களுடன் வைக்க முயலும் இரு கழகக் காவலர்களைக் கேளுங்கள்!
ஆட்டோவில் வந்து சொல்லிக் கொடுப்பார்கள்,
என்று மன்னார் சொல்லச் சொன்னான்!!
:))
//680.
ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன பொருள்ன்னு கேட்டுச் சொல்ல முடியுமா? //
உறை = இருக்கும் இடம், நாடு
சிறியார் = அளவில் குறைந்தவர்
உறை சிறியார் = சிற்றரசன், சிறிய நாட்டின் தலைவன்
உள் = அவன் கீழ் வசிப்பவர்
நடுங்கல் = அஞ்சும்போது
ஒரு அரசனுக்கு பலமே அவ்ன் மக்கள்தான். அவர்கள் உதவியுடன் தான் இவன் போர் செய்ய முடியும். பேரரசனின் படைகளைக் கண்டு இம்மக்கள் பயப்பட்டால், அவன் மட்டும் எங்ஙனம்,... தனியே சென்றா போரிட முடியும்?
அதைத்தான், 'உறைசிறியார் உள் நடுங்கல்' என்கிறார் இங்கு.
அஞ்சி = இப்படி அந்த மக்கள் நடுங்குவதைக் கண்ட மன்னனும் அஞ்சுவானாம்.
அப்போது என்ன செய்வான் அவன்?
'குறை பெரினும், பெரியார்ப் பணிந்து கொள்வர்'
இங்கே, அங்கே கொஞ்சம் விட்டுக் கொடுத்தாவது,
"சரி, நீ இந்த ஊர்தானே உன் நாட்டோட சேரணும்கிற, எடுத்துக்கோ"
எனச் சொல்லியாவது பெரிய அரசனுடன் இணக்கமாகப் போய்க் கொள்வர் என்கிறார்.
மறுபடியும் நா சொன்னா, நம்ம மதுர மல்லிக்கு பிரியுமோ இன்னாமோ, நா சொல்றத சொல்லிட்றேன். நீ அவர்க்கு பிரியற மாரி எளுதிக் காட்டிருன்னு மன்னார் சொன்னான்.
இதோ உங்கள் பார்வைக்கு!
:))
நல்லா பிரிஞ்சது. டாங்க்ஸ்ன்னு மன்னார்கிட்ட சொல்லிடுங்க எஸ்.கே.
SK ஐயா,
மிக அருமையான பதிவாக இருக்கிறது. விடாமல் படித்தாலும், பலமுறை பின்னூட்டம் இடாமல் குற்றம் செய்துள்ளேன். இப்போது பிடியுங்கள் என் ஒரு நன்றி நவிதலை.
நீங்கள் இப்படி மயிலைக்கு பெருமை சேர்ப்பது குறித்து சந்தோஷம்.
ஒரு சந்தேகம்.
ஒரு காரியம் குறித்து முடிவெடுத்த பிறகு தாமதிக்காது செய்து முடி என்கிறீர்கள். சரி!! அந்த காரியம் குறித்து எல்லாவற்றையும் யோசித்தாகி விட்டது, முடிவெடுத்தாகி விட்டது என்று எப்படி தெரிந்து கொள்வது?
மேலும், நிதானமாக செய்ய வேண்டிய பணிகளை நிதானமாகவும், விரைவாக செய்ய வேண்டிய பணிகளை விரைவாகவும் முடி என்கிறீர்கள். எந்த பணியை எப்படி செய்ய வேண்டும் என்று எவ்வாறு தெரிந்துகொள்வது.
கொஞ்சம் மன்னாரிடம் கேட்டு சொல்லுங்களேன்.
நன்றி
SK ஐயா,
இப் பதிவை இன்னும் படிக்கவில்லை. பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். இன்றிரவு படித்திவிட்டுக் கருத்துச் சொல்கிறேன்.
மிக்க நன்றி, திரு. ஜயராமன்.
மயிலையில் வாழ்ந்த வள்ளுவனின் குறளை மயிலை மன்னார் சொல்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?!!:))
உங்கள் கேள்விகளை மன்னாரிடம் காண்பித்தேன் அதற்கு அவன்,
"இன்னாபா, இப்டிக் கேட்ட்ருக்காரு நம்ம சயராமன்! அத்தான் 675ல தெளிவா சொல்லிருக்காரே ஐயன்! அந்த அஞ்சும் சரின்னா முடிவெடுக்கறதுல இன்னா யோசனை வேண்டியிருக்குன்றேன்? அப்டியே சல்ல்லுன்னு போய்க்கினே இருக்க வாண்டியத்தானே.
அப்பறம் இன்னா அது அட்த்தது? எத்த மெதுவா செய்யணும், எத்த வெரசாலா செய்யணும்னா?
இப்ப நீ ஒரு கட்டடம் கட்றே. மேல தளம் போடறே! அது காயறதுக்கு ஒரு 10 - 15 நாளு புடிக்கும். இல்லியா. இல்ல, இல்ல, எனக்கு சீக்கிரமா முடிக்கணும்னு, அது மேலியே வூடு கட்டினேன்னு வையி, மவனே, அப்பிடியே அப்பளம் கணக்கா நொறுங்கி வுளுந்துரும். அதுக்கு குடுக்க வேண்டிய டயத்த நீ குடுத்தாத்தான் கட்டடம் ஷ்ட்ராங்கா நிக்கும். சரியா?
அதே, மேல் தளம் போடற அன்னிக்கி நடக்கிற கூத்த பாத்துருக்கியா நீ? ஒர்த்தன் கலவை கலப்பான். ஒர்த்தன் அசராம பாண்டுல அத்த வாரி, வாரிப் போட்டுக்கினே இருப்பான், ஒர்த்தன் அத்த தூக்கி ஒரு சித்தாளு தலல வெப்பான்; ஒரு பத்து பதினஞ்சு சித்தாளுங்க அந்த பாண்டை சட்டு சட்டுன்னு மாத்தி மேல அனுப்புவாங்க; மேல ஒர்த்தன் அத்த வாங்கி, வாங்கி கம்பிக்குள்ளே போட்டுக்கினே இருப்பான். அந்த காலி பாண்டையெல்லாம் ஒர்த்தன் மேலேர்ந்து கீள வீசுவான். திருப்பி இதே நடக்கும். சும்மா பம்பரம் மாரி ஒரு 50 - 60 பேரு வேல செய்வாங்க.
பாத்திருக்கேல்ல!
ஏன்? பொளுது சாயறதுக்குள்ள கலக்கின கலவைய மேல ஏத்திறணும். அப்பதான் அது செட்டாவும். இல்லேன்னா கலவையும் வேஸ்டு, தளமும் ஆவாது.
இப்ப, அத்தெல்லாம் தாவையில்ல, பொறுமையா பண்ணுன்னு எந்த கொத்தனாராவது சொல்வானா? எலவசக் கொத்தனார் கூட அப்டி சொல்ல மாட்டாரு!
அதான், வெரசலா செய்யறத, வெரசல செய்யணும்; பொறுமையா செய்யறத நின்னு நெதானமா செய்யணும்.
அப்பத்தான், செய்யற காரியம் கெலிக்கும்!
இன்னா, வர்ட்டா"
என்றவாறே, நடையைக் கட்டினான் மன்னர்.
விளங்குதுங்களா, திரு. ஜயராமன்?
Post a Comment