Monday, September 11, 2006

அ.அ. திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய'

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய"


"ஆவி பிரியுங்கால் மயில் மீது வந்து எனையாள்!"

.............பாடல்.............

தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன -- தனதான

தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி

தொண்டுகிழவ னிவனாரென இருமல்
கிண்கிணெனமு னுரையே குழறவிழி
துஞ்சுகுருடு படவே செவிடுபடு -- செவியாகி

வந்தபிணியு மதிலே மிடையுமொரு
பண்டிதனுமெ யுறுவே தனையுமிள
மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்றிசருவ மலமே யொழுகவுயிர்
மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும்

எந்தைவருக ரகுநா யகவருக
மைந்தவருக மகனே யினிவருக
என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம

இங்குவருக அரசே வருகமுலை
யுண்கவருக மலர்சூ டிடவருக
என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன்

சிந்தைமகிழு மருகா குறவரிள
வஞ்சிமருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -- அதிதீரா

திங்களரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே.
00000000000000000000000000000000000000000000000000000000000
சைவம், வைணவம் இவற்றில் பேதம் ஒன்றுமில்லை எனப் பகரும் அற்புதக் கவிதை இது!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


...........பொருள்.................

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம் !]

"எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனது ஆருயிர் வருக
அபிராம இங்கு வருக அரசே வருக
முலைஉண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினோடு கோசலை புகல
வருமாயன்சிந்தை மகிழு மருகா"

பலவாறு தவம் செய்துவேண்டியதின் விளைவாய்
மன்னு புகழ் கோசலைதன்மணிவயிறு வாய்த்த
ரகுகுலம் தழைக்க வந்தஎந்தையே வருக!

'மைந்த வருக' வென அழைத்ததற்கோர்
காரணமும் இங்குண்டு!

தனக்குரிய வயது வந்தும்
தன் கையை நம்பாமல்
தந்தையின் வருவாய் அறியாமலும்,
அவர் அணைப்பில் இருக்கிறவன் 'பாலன்'.

வயதான தந்தையங்கு
வருவாயைக் கொன்டுவர,
தானதற்கு உதவிடாமல்
தான் தோன்றியாய் இருப்பவன் 'பிள்ளை'.

தந்தைக்கே ஞானம் உரைக்கும்
அறிவு பெற்றவன் 'குமாரன்'.

தந்தை தாயின் நலம் பேணி
அவர்க்குக் கருமம் செய்தங்கே
நற்கதிக்கு அனுப்புபவன் 'புத்திரன்'.

இருக்கும் காலத்தில்
பெற்றவர் நலம் பேணி
நற்செயல்கள் புரிபவன் 'புதல்வன்'.

தன் குடும்ப நலன் பேணி
தந்தையவன் கடனேற்று
ஆலமரம் போல் காப்பவ்னே 'மகன்'.

தன் குடும்பம், தன் தாய்
தந்தையர் குடும்பம்
குருவின் குடும்பம் மற்றும்தம்
நண்பரின் குடும்பம்
இவையனைத்தும்
தன் குடும்பம் போல்காப்பவனோ 'மைந்தன்'!

இராமனோ தன் குடும்பம் மட்டுமின்றி
குகன், சுக்ரீவன், விபீடணன்குடும்பமதையும்
காத்திடுவான் நாளை என அறிந்து
'மைந்த வருக' வென வழைத்து,
பின், தன் குடும்ப மானமும்
காப்பவனும் இவனெனத் தெளிந்து
'இனி மகனே வருக' வெனவும்
அழைத்திட்டாள் மாதரசி கோசலை!

எனது கண்ணின் மணியே வருவாய்!
என் ஆருயிர்க்கு நிகரானவனே வருவாய்!
அழகிற் சிறந்தவனே வருவாய்!
இம்மாநிலத்தின் அரசனே வருவாய்!

தான் அந்தக் குண நலன்கள்
தன்னங்கே கொண்டதனால்,
தாயின் முலைப்பாலைக் குடிக்கின்ற
அவனுக்கும் அந்நலங்கள் வரட்டுமென
'முலையுண்க வருக'
வெனவும் அழைக்கின்றாள்!

மணக்கும் இந்த நறுமலரைச்
சூடிடவே வருவாய்!

என அன்னையாம் கோசலையும்
மகிழ்ந்து கொண்டாடி
மனம் குளிர அழைக்கின்ற
மாயவனாம் இராமனெனும்
அவதாரமாய் வந்த அந்தநாராயணனும் ,

தானங்கு மாயத்தால் கோசலையின் அன்பிற்குக்
கட்டுண்டு கிடந்த நிலை போலே
இங்கிந்த சரவணனும் கார்த்திகைப்
பெண்டிர் அழைத்திடவே அறுமுலையுண்ணும்
காட்சியினைக் கண்டே மனம் மகிழும் படி
திருவிளையாடும் முருகா!

"குறவர் இளவஞ்சி மருவும் அழகா"

அழகன் இவனே எனத் தெளிந்து
உனை அணைக்க வருகின்ற
குறவள்ளியின் மணாளனே!

"அமரர் சிறை சிந்த,
அசுரர் கிளை வேரொடு மடிய அதிதீரா"

பல யுகமாய் சிறையில் உழன்று
நெடுந்துயர் அடைந்திட்ட
தேவரெனும் நற்குணங்கள்
அசதி, சோம்பல் எனும்
தாமச குணம் என்னும்
அசுரரால் வருந்தி நிற்க
அயர்வை அகற்றி, நல்லுணர்வை அளிக்க,
அசுரரை வாட்டி, தேவரை சிறை மீட்ட
பெருவீரம் படைத்த முருகா!

"திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர"

நீயே சரணமெனத் தனை
நாடி வந்த சந்திரனையும்,
உனைக் கொல்வேன் எனச் சபதம் செய்து
ஓடி வந்த பாம்பினையும்,
ஒரு சேர அன்பு கொண்டு அபயமளித்து,
பாய்ந்து வந்த கங்கையின்
சீற்றமடக்கிக் கருணையினால்,
தன் தலையில் இன்பமுடன்
சூடிக்கொண்ட சிவனாரின் திருக்குமரா!

"அலையே கரை பொருத செந்தில் நகரில்
இனிதே மருவி வளர் பெருமாளே"

பல்வகையாம் எண்ணமெனும்
பெருஅலைகள் ஓடிவந்து
தன்னடியில் கலந்தங்கே
தாம் அமைதி எய்துமாறு
செந்திலம்பதியினிலே
உறைகின்ற பெரிய கடவுளே!

"தொந்தி சரிய, மயிரே வெளிற,நிரை தந்தம் அசைய,
முதுகே வளைய,இதழ் தொங்க, ஒரு கை தடி மேல் வர
மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவன் ஆர் என"

என் வயது ஏறிடும் காலத்தே
வயிறங்கே பெருத்து முன்னே
தொந்தியெனச் சரியவும்,

கருநிறமாய் நான் காத்த
முடியங்கு வெளுத்துப் போய்
நரைமுடியாய் ஆகிடவும்,

உறுதியாய் நான் தேய்த்து
நிதம் வளர்த்த பற்களும்
அங்கங்கே அசைந்திடவும்,

வீரமாய் நிமிர்ந்தங்கு காட்டிய முதுகும்
பல்லக்கு போலின்று வளைந்திடவும்,

பவழம் போல் விரிந்திருந்த
உதடதுவும் தொங்கிடவும்,

இருகரம் வீசி நடந்த நான் இன்று
ஒருகரத்தில் தடி ஒன்றை ஊன்றி
நடக்கவே நேர்ந்திடவும்,

அதைக்கண்டு இளவயது
மங்கையரெலாம் 'யார் இந்தத்
தொண்டு கிழவன் இங்கே' என நகைத்திடவும்,

"இருமல் கிண்கிணென
முன் உரையே குழற
விழி துஞ்சு குருடு படவே
செவிடுபடு செவியாகி
வந்த பிணியும்
அதிலே மிடையும் ஒரு பண்டிதனும்
மெய் உறு வேதனையும்"

இருமல் எனும் கொடும்பாவி
'கிண் கிண்' எனஓசையுடன் வெளிக்கிளம்பி,

இதுகாறும் திருத்தமாய்ப்
பேசிய பேச்சுகளும் குழறிப்போய்,

ஒளியுடன் விளங்கிய கண்பார்வை
இன்று தூங்குதல் போலே மங்கிடவும்,

துல்லியமாய் இதுவரையில்
கேட்டுவந்த காதுகளும்இன்று
பஞ்சடைத்து செவிடாகவும்,

மிடுக்கென வாழ்ந்த தேகம் இன்று
நொடிக்கொரு நோயென ஆட்பட்டு,

அதனாலதை அகற்றவே ஒரு வைத்தியனும்
நிதம் எந்தன் வீடு தேடி வந்திடலும்,

நோயின் துயரால் என் மேனி வாடுதலும்,

"இள மைந்தர் உடைமை கடன் ஏதென,
முடுகு -- துயர்மேவி, மங்கை அழுது விழவே,
யமபடர்கள் நின்று சருவ,
மலமே யொழுக,உயிர் மங்குபொழுது,
கடிதே மயிலின் மிசை வரவேணும்."

என்னுயிர் போதல் நிச்சயமெனத் தெளிந்து,
தன் தந்தை இன்னுமென்ன கடன் விட்டுச் செல்கிறான் என
என் இளவயது மக்களும் கணக்கிட்டு நின்றிடவும்,

வாய் பேச வழியின்றி, இதனை நான் கேட்டே
மனது துயர் பெருகி மயங்கிடவும்,

என் மனையாள் ஓவெனக் கதறி
என்மீது விழுந்து அழுதிடவும்,

எமதூதர் வந்தங்கு என்னுயிர் பற்றிடவே
எதிர்பார்ப்பாய் வந்திடவும்,

என் மலம் அங்கு நீர் போல் ஒழுகிடவும்,
என் உயிர் சற்றே எனை விட்டுப் போகின்ற

நேரமதில் முருகா நீ
அழகான மயில் மீதேறி
எனை வந்து காத்திட வேண்டுகிறேன்!
0000000000000000000000000000000000000000000000000000000000000000

அருஞ்சொற்பொருள்:

தந்தம்= பல்
துஞ்சு= தூங்குதல்
மிடையும்= நெருங்கும்
முடுகு= இதனால் ஆகிய
கடிதே= விரைவாக
அபிராம= அழகிற் சிறந்தவன்

------------------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!


**************************************************************************

24 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Monday, September 11, 2006 12:56:00 AM  

பிள்ளையின் உறவுக்கு வேறு வேறு பெயர்கள்... அதற்கு வேறு வேறு விளக்கங்கள் சிறப்பாக இருக்கிறது...
முழுவதும் படித்துவிட்டு ...

மீண்டும் ஒரு பின்னூட்டம் போடுகிறேன் !

தொந்தி கணபதிக்கு வந்தனம் !
:)

VSK Monday, September 11, 2006 1:10:00 AM  

முதன் முதலாய், கோவியார்!!

நம்பமுடியவில்லை!

மிக்க நன்றி!

கோவி.கண்ணன் [GK] Monday, September 11, 2006 1:20:00 AM  

//முதன் முதலாய், கோவியார்!!

நம்பமுடியவில்லை!

மிக்க நன்றி! //

நல்லன சொல்வதில் நடுக்கமில்லை !
:))

SP.VR. SUBBIAH Monday, September 11, 2006 1:23:00 AM  

ஆகா, மனதை நெகிழச் செய்து விட்டீர்கள்!

அமெரிக்காவில் இருந்து கொண்டு இதையெல்லாம் எழுதுவதற்கு எப்படி ஸ்வாமி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?

பாராட்டுக்கள்

வாரியார் ஸ்வாமிகள் சொல்லுவார் - மனிதனாகப் பிறந்தவன் படிக்க வேண்டிய நூல்கள்
மொத்தம் மூன்று

1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது (பகவத் கீதை)
2.மனிதன் கடவுளுக்குச் சொன்னது (திருப்புகழ்)
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது (திருக்குறள்)

ஜெயஸ்ரீ Monday, September 11, 2006 9:37:00 AM  

//திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர"

நீயே சரணமெனத் தனை
நாடி வந்த சந்திரனையும்,
உனைக் கொல்வேன் எனச் சபதம் செய்து
ஓடி வந்த பாம்பினையும்,
ஒரு சேர அன்பு கொண்டு அபயமளித்து
தன் தலையில் இன்பமுடன்
சூடிக்கொண்ட சிவனாரின் திருக்குமரா!//

மிக நுட்பமாக ஆராய்ந்து பொருள் எழுதியிருக்கிறீர்கள். அருமை.
கல்லார்க்கும், கற்றவர்க்கும் , நல்லார்க்கும், பொல்லார்க்கும் பொதுவாக நிற்கும் சிவமல்லவா?
கங்கை நதியை விட்டுவிட்டீர்கள்... ))

கவிதை நடையில் பொருள் சொல்லியிருப்பது மிக அழகு.

VSK Monday, September 11, 2006 10:09:00 AM  

பாரட்டனைத்தும், முன்னம் உரை எழுதிய பல அறிஞர்களையே சாரும்.

விட்டுப்போனதைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி, ஜெயஸ்ரீ !

இப்போது சேர்த்திருக்கிறேன்.

சரியாக வந்திருக்கிறதா எனப் பார்க்கவும்.



"திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர"

நீயே சரணமெனத் தனை
நாடி வந்த சந்திரனையும்,
உனைக் கொல்வேன் எனச் சபதம் செய்து
ஓடி வந்த பாம்பினையும்,
ஒரு சேர அன்பு கொண்டு அபயமளித்து,
பாய்ந்து வந்த கங்கையின்
சீற்றமடக்கிக் கருணையினால்,
தன் தலையில் இன்பமுடன்
சூடிக்கொண்ட சிவனாரின் திருக்குமரா!

VSK Monday, September 11, 2006 10:13:00 AM  

இரவுதான் எண்ணங்களின் தாய் என ஒரு மேலை நாட்டு அறிஞன் சொன்னது போல, இரவு நேரத்தில்தான் எழுத முடிகிறது, சுப்பையா அவர்களே!

வாரத்தில் ஒரு முறையாவது நீங்கள் சொன்ன அந்த மூன்றினையும், ஓரிரு பக்கங்கள் புரட்டினாலே போதும், வாழ்வின் வழி தெளிவாகிவிடும்.

நன்றி!

குமரன் (Kumaran) Monday, September 11, 2006 1:17:00 PM  

அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்
என்றாற் போல இருக்கிறது இந்தத் திருப்புகழ்.

கோசலை தன் மைந்தனை அழைப்பதைப் படிக்கும் போது இந்தப் பாடலை ஏற்கனவே படித்தது போல் தோன்றினாலும் முழுதும் படிக்கும் போது இப்போது தான் முதலில் படிப்பதாகத் தோன்றுகிறது. ஒரு வேளை பெரியாழ்வாரும் குலசேகராழ்வாரும் இப்படியே பாடியிருப்பதால் ஏற்கனவே படித்திருப்பதாய்த் தோன்றுகிறதோ என்னவோ?

இலவசக்கொத்தனார் Monday, September 11, 2006 8:46:00 PM  

வழக்கம் போல் அருமையான விளக்கம் எஸ்.கே.

வயது ஏற ஏற என்னவெல்லாம் எதிர்பார்க்க வேண்டும் என பட்டியல் இட்டுவிட்டாரே!

ஒரு சந்தேகம் "மன்னு புகழ் கோசலை" அப்படின்னா என்னங்க?

VSK Monday, September 11, 2006 9:35:00 PM  

மன்னு எனும் சொல் உலகம் என்பதை குறிக்கும்.

வடமொழியில் இந்த உலகை மன்வந்த்ரம் என்பார்கள்.

பாரதியும், 'மன்னும் இமய மலை' என்று பாடினார்.
உலகத்தில் சிறந்த மலை என்ற பொருளில்.

அது போல, மன்னு புகழ் = இவ்வுலகமே புகழத்தக்க வகையில், இறைவனையே கர்ப்பத்தில் சுமக்கும் பேறு பெற்றவள் ஆதலால், மன்னு புகழ் கோசலை என்று வருகிறது.

அதிலும். கோசலை கூட அல்ல!

அவளது மணி வயிறு தான் பேறு பெற்றதாம்!

அதனால், மன்னு புகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே! என இராமனைக் கொண்டாடுவர்.

நன்றி, கொத்தனாரே!

இலவசக்கொத்தனார் Monday, September 11, 2006 9:49:00 PM  

ஐயா,

இந்த மன்னுவிற்கும் நம்ம மண்ணிற்கும் எதாவது தொடர்பு உண்டா? ஒன்றுதான் மற்றொன்றாக மருவியதா?

மண்ணை ஆள்பவனை மன்னன் எனத்தானே சொல்கிறோம். மண்ணன் எனச் சொல்வதில்லையே.

கோவி.கண்ணன் [GK] Monday, September 11, 2006 10:33:00 PM  

//நீயே சரணமெனத் தனை
நாடி வந்த சந்திரனையும்,
உனைக் கொல்வேன் எனச் சபதம் செய்து
ஓடி வந்த பாம்பினையும்,
ஒரு சேர அன்பு கொண்டு அபயமளித்து,
பாய்ந்து வந்த கங்கையின்
சீற்றமடக்கிக் கருணையினால்,
தன் தலையில் இன்பமுடன்
சூடிக்கொண்ட சிவனாரின் திருக்குமரா!
//
எஸ்கே ஐயா !
இந்தக் கதை புதிதாக இருக்கிறது ... இந்த பின்னூட்டத்தில் விளக்குவீர்களா ! நீளம் கருதினால் தனிப் பதிவு போடமுடியுமா ?

குமரன் (Kumaran) Tuesday, September 12, 2006 10:33:00 AM  

எஸ்.கே. மன்னு என்பதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கத்தில் சில கேள்விகள்.

மன்னுதல் என்பது தமிழ்ச் சொல்லே. உலகம் என்று பொருள் இல்லை. மன்னுதல் என்றால் நிலைத்து நிற்றல். மன்னிய, மன்னு புகழ் என்பதெல்லாம் அந்த 'நிலைத்து' என்ற பொருளில் வரும் சொற்கள். மன்னு புகழ் என்றால் நிலைத்த புகழ் என்று பொருள் தரும்.

வடமொழியில் மன்வந்த்ரம் என்று சொல்வது ஒரு கால அளவினைத் தானே ஒழிய உலகத்தை இல்லை. உலகை மன்வந்த்ரம் என்று சொல்லி எங்கும் படித்ததாக நினைவில்லை. மன்வந்த்ரம் என்றால் 'ஒரு மனுவின் காலம்' என்ற கால அளவைக் குறிக்கும் சொல்.

பாரதி பாடிய 'மன்னும் இமய மலை' என்பதும் 'நிலைத்த இமய மலை' என்ற பொருளில் தான். மன்னும் என்பது உலகைக் குறிக்கும் என்றால் சிறந்த என்ற சொல் இங்கே தொக்கி நிற்கிறதா? :-)

கோசலைக்குத் தான் மன்னு புகழே ஒழிய அவளின் மணிவயிற்றுக்கு இல்லை. :-) இவன் அந்த வயிற்றில் வாய்த்ததால் அந்த வயிறு மணிவயிறு ஆனது. அவளும் மன்னு புகழ் கொண்டாள்.

VSK Tuesday, September 12, 2006 11:33:00 AM  

நான் எனக்குத் தெரிந்த அளவில் சொன்னேன், குமரன்.
நீங்கள் சொல்வது ஏற்புடையதாக இருக்கிறது.
மேலும், மன்னு தமிழ்ச்சொல் அல்ல என நான் சொல்லவில்லை.
ஒரு சில பாடல்களில், மன்னு எனும் சொல், 'சிறந்த' எனும் பொருளில் வந்திருப்பதையும் காண்கிறேன்.
நன்றி.

G.Ragavan Wednesday, September 13, 2006 2:21:00 AM  

கதம்பம் தெரியுமா எஸ்.கே? மதுரைக்கிக் கீழே மிகவும் பிரபலம். மருக்கொழுந்து மல்லி கனகாம்பரம் முல்லை வைத்துக் கட்டியது. அப்படிக் கட்டிய ஒரு மாலைதான் இந்தப் பாட்டுக்கான உங்களது விளக்கம்.

மைந்த என்ற அழைப்பில் மருக்கொழுந்து. கந்தன் பெருமை சொல்வதில் மல்லி. முதுமையின் கொடுமையினை விளக்குகையில் வாசமில்லாக் கனகாம்பரம். சிறியதானாலும் அருஞ்சொற்பொருளில் முல்லை. இப்படித் தொடுத்த மாலையை மல்லே புரி பன்னிரு வாகுவில் உம் சொல்லே புனையும் சுடர் வேலவனே என்பது பொருத்தம்.

தி. ரா. ச.(T.R.C.) Wednesday, September 13, 2006 9:35:00 AM  

ஸ்கே, நன்றாக ஆராய்ந்து அனுபவித்து எழுதிய பதிவு.அருண்கிரியார் ஒரு சிறிய பாட்டில் எவ்வளவும் கதைகளை வைத்து இருக்கிறார்.நீங்களும் சளைக்காமல் முத்து முத்தாக அள்ளிக்கொடுத்துள்ளீர்கள்.மகன்களைவிவரித்தவிதம் அருமை.

VSK Wednesday, September 13, 2006 9:58:00 AM  

ஆமாம் ஜி. ரா. !
சுடர் வடிவேலனைச் சொல்வது எவ்வளவு இன்பம்!

கடம்பனை வணங்குபவர்க்கு, கதம்பம் தெரியாமல் இருக்குமா?!!

VSK Wednesday, September 13, 2006 9:59:00 AM  

மிக்க நன்றி, திரு. தி.ரா.ச.!

முருகனருள் முன்னிற்கும்!

VSK Wednesday, September 13, 2006 10:25:00 AM  
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) Wednesday, September 13, 2006 10:26:00 AM  

//கந்தன் பெருமை சொல்வதில் மல்லி. //

இராகவன். எந்த மல்லியைச் சொல்கிறீர்கள்? எனக்குத் தெரிந்து ஒருவர் தன் பெயரிலேயே மல்லியை வைத்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சொல்கிறீர்களா? :-)

VSK Wednesday, September 13, 2006 10:30:00 AM  

ஆமான்னு நினைக்கிறேன்!
அந்த மணக்கும் மதுரை மல்லியைத்தான் சொல்லியிருப்பார் ஜி.ரா.!!

தி. ரா. ச.(T.R.C.) Friday, September 15, 2006 9:00:00 AM  

மன்வந்தரம் என்பது ஒரு கால வரையறை.
நான்கு யுகங்கள் முடிந்தால் ஒரு மகாயுகம்.
71 மகாயுகம் முடிந்தால் ஒரு மன்வந்தரம்

G.Ragavan Friday, September 22, 2006 2:26:00 PM  

// குமரன் (Kumaran) said...
//கந்தன் பெருமை சொல்வதில் மல்லி. //

இராகவன். எந்த மல்லியைச் சொல்கிறீர்கள்? எனக்குத் தெரிந்து ஒருவர் தன் பெயரிலேயே மல்லியை வைத்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சொல்கிறீர்களா? :-) //

பெயரில் இருந்தால் என்ன....பொருளில் இருந்தால் என்ன...மல்லி மணக்கத்தான் செய்யும். :-)

VSK Friday, September 22, 2006 2:38:00 PM  

ஆஹா! மயில் வந்து மல்லி மணம் நுகர்ந்து போற்றுகிறது!

இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது!

:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP