“மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 4”
“மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 4”
பயந்த மாதிரியே நடந்தது!
கொஞ்சம் கோபம், வருத்தம், மகிழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு பார்வையை என் மேல் வீசிவிட்டு, ‘நாயர், நம்ம ஐயருக்கு ஒரு ஷ்ட்ராங் டீ யும் , ரெண்டு மசால் வடையும் ரெடி பண்ணு’ என்று அதோடு தனது வழக்கமான அன்பையும் விடாமல் சொல்லித் திரும்பினான் மயிலை மன்னார்!
‘என்ன இது? புதுசா ஐயர் என்றெல்லாம் சொல்கிறாயே?’ என்று கேட்டேன்!
‘உன்னை எல்லாம் இப்ப அப்படித்தானே கூப்புடறாங்களாம் நீ எளுதற வலையில! அத்தான் நானும் சொல்லிப் பாக்கலாமேன்னு ….’ என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தான் மன்னார்.
ஏதோ கந்தசாமி புகளை எளுதினே, சரி,; ஐயன் குறளுக்கு விளக்கம் என்னைக் கேட்டு சொன்னே அதுவும் சரி; அப்பொறம் புச்சா ஏதோ கொளந்தங்களுக்கு பெத்தவங்க எத்தையெல்லாம் சொல்லணும்னு வேற ஆரம்பிச்சேன்னு கேள்விப்பட்டேன்!
ஸரி; நம்ம புள்ளையாண்டான் ஏதோ உருப்படியா செய்றானேன்னு இருக்கக்கொள்ளே, இப்போ புச்சா இன்னாமோ ஒர்த்தருக்கு பதில் கவுத எளுதி செமத்தியா வாங்கிக் கட்டிக்கினியாமே! அது இன்னாத்துக்கு ஒனக்குன்னு நெனச்சேன். இப்படி எதனாச்சும் வெவகாரத்துல மாட்டிக்கினு எங்கையில தான் வந்து நிப்பேன்னு நெனச்சேன்.
பொறவால, அத்தைப் படிச்சேன். நல்ல விசயத்த தான் சொல்லியிருக்கே நீ. ஆனா, அது எம்மாம்பேருக்கு புரியுண்ற நீ? ஆனாக்காண்டியும், சொல்லணும்னு நெனச்சத தெகிரியமா சொன்னே பாரு, அத்தான் நமக்கு ரொம்ப புடிச்சுது நண்பா!” என ஒரு நீண்ட சொற்பொழிவே ஆற்றி விட்டு,
“சரி, சரி! டீ ஆறிப்போவுது! சீக்கிரமாக் குடி! அப்பால ஒனக்கு இத்த பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்றதச் சொல்றேன்” எனச் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டினான் மன்னார்.
அவசர அவசரமாக டீயையும் மசால் வடையையும் முடித்துவிட்டு, ஆவலுடன் அவனைப் பார்த்தேன்.
சிரித்தவாறே, “இப்ப ஸொல்லணும்னு நெனச்சத தயங்காம சொன்னேல்ல! அதப்பத்தி நம்ம ஐயன் நிறைய இடத்துல ஸொல்லியிருக்காரு. அல்லாத்தையும் இப்ப ஸொல்ல முடியாது! அந்த 73 – வது அதிகாரத்தப் பொறட்டு! நா ஸொல்றத எளுதிக்கோ!” என்றான் கம்பீரமாக!
இனி வருவது, குறளும், மன்னாரின் விளக்கமும்!
அதிகாரம் எண் 73 “அவை அஞ்சாமை”
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். [721]
கரீட்டா வந்திருக்கும்மா மொதக் குறளே! இப்ப நீ பலான பலான விசயம்லாம் நடந்திச்சின்னு ஒன் பதிவுல சொல்றேன்னு வையி! அதத் தப்பில்லாம சொல்லணும் ஒரு சபையில போயி ஸொல்றப்ப!
எப்படி ஸொல்லணும்னு தெரிஞவன், எந்த ஆளுங்க நடுவுல பேசணும்னு தெரிஞ்சிகிட்டு, தப்பா ஸொல்ல மாட்டான்.
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். [722]
படிச்சவங்கள்லாம் இருக்கற ஒரு எடத்துல போயி, உனக்குத் தெரிஞ்சதை அவங்க ஏத்துக்கற மாதிரி சொல்லணும். அப்போதான் ஒன்னிய படிச்சவன்னு சொல்லுவாங்க.
அல்லாரும் ஏத்துப்பாங்கன்னு நம்பிறாத அதுக்காவ. ! அங்கியும் சிலபேரு வருவாங்க, இது தப்பு, அது நொள்ளையின்னு சொல்லிகிட்டு, மெஜாரிட்டியா ஏத்துக்கறாங்களா, அதப்பாரு!
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். [723]
சண்டை போட்டு சாவறதுக்கு ஆயிரம் பேர் வருவான். ஆனாக்க, ஒரு சபையில நின்னு தெம்பா பயமில்லாம ஸொல்றதுக்கு வர்றவன் கொஞ்சப் பேருதான் கிடைப்பான்.
பின்னாடி நின்னுகிட்டு வீரமா சவடால், பீலாவெல்லாம் வுடுவான். ஒரு மேடைல ஏத்து! ஸும்மா, கிடுகிடுன்னு தொடையெல்லாம் ஆடும்!
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்
கற்றமிக்காருள் மிக்க கொளல். [724]
அப்படி ஒருக்கா, ஒரு சபையில போயி ஒனக்குத் தெரிஞ்சத சொல்லிட்டு அப்டியே அம்பேல் ஆயிடக்கூடாது.
அங்கே இன்னும் ஒன்ன விட ஜாஸ்தியா படிச்சவங்ககிட்டேர்ந்து அல்லா விசயத்தையும் கறந்துக்கணும்!
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. [725]
ஒன் எடத்துல நீ சொல்றது சரி. ஒனக்கு எதுர் கருத்து இருக்கற எடத்துல போயி அங்க, நீ சொல்றத எதுத்து கேள்வி கேட்டாக்கூட, அதுக்கும் பதில் சொல்ற அளவுக்கு தெரிஞ்சு வெச்சுக்கிட்டு போவணும்.
இல்லேன்னா போயி வாயக் குடுக்காதே!
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. [726]
இப்ப, சண்டை போடப்போறேன்னா நீ கத்தியைப் பாத்து பயப்படக்கூடாது! பயந்தீன்னா வேல ஆவுமா? ஆவாது. இல்லியா?
அதேபோல, ஒரு சபைல ஏறி பேசறதுக்கு பயப்படறவனுக்கும், அவன் படிச்ச பொஸ்தவத்துக்கும் என்னா சம்பந்தம் இருக்குன்ற?
ஒண்ணும் இல்லை. பட்சதெல்லாம் வேஸ்டு!
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். [727]
இங்கியும் கிட்டத்தட்ட அத்தையேதான் சொல்றாரு.
சண்டைக்கி நிக்கறப்போ, ஒன் கைல இருக்கற கத்தி வெடவெடன்னு ஆடுச்சின்னா இன்னா பிரயோசனமோ, அத்தேதான், சபைல ஏறிப் பேச தொடை நடுங்கறவனுக்கும் அவன் படிச்ச பொஸ்தகத்துக்கும் இருக்குதாம்!
பல்லவை கற்றும் பயனிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தவர். [728]
நல்ல மனுஷங்கள்லாம்,…. கெவனி …. மனுஷாள்னு சொல்லலை, நல்ல மனுசங்கன்னு சொல்லிருக்காரு!…., இருக்கற மண்டபத்துல அவங்க அதை ஒத்துக்கற மாதிரி சொல்லத் தெர்லைன்னா, அவன் எத்தினி படிச்சும் பிரயோசனமே இல்லை.
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார். [729]
"அதோ போறாரே! அவரு இம்மாம் படிப்பு, எத்தினி பொஸ்தகம்லாம் படிச்சிருக்காரு தெரியுமா? ஆன, கூப்ட்டு கேட்டுப்பாரு! ஒரு தபா நம்ம சங்கத்துல வந்து பேசு ஸார்'னு சொல்லிப்பாரு. அப்படியே ஜகா வாங்கிடுவார்"னு ஒருத்தனைப் பத்தி சொல்லும்படியா ஆச்சுன்னா,
அவனை வுட கேடு கெட்டவன் வேற எவனும் இல்லியாம்.
இவனுக்கு படிக்காதவனே மேலுன்றாரு நம்ம ஐயன்!
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்செல்லா தார். [730]
இங்கியும் அதேதான்! இதுமாதிரி, பொது எடத்துக்கு வந்து சொல்றதுக்கு பயப்படறவன் உசிரோட இருந்தாக் கூட சரி;
செத்தவனுக்கு சமானம்தான்!
*****************************************************
இப்ப ஒன்னக்கூட எனக்கு ஏன் புட்சிருக்கு தெரியுமா?
நீ சும்மா இப்படி அப்படின்னு பம்முறவன் இல்லை.
ஒன் பதிவுல தலப்புல ஏதோ போட்டுருக்கியே; ஆங்… இன்னா அது? …அதான் நல்லது ஸொல்றதுக்கு நடுங்க மாட்டேன், பொல்லாத்த எடுக்கறதுக்கு தயங்க மாட்டேன் அப்படீன்னு ஏதோ ஒண்ணு!
அத மாரிப் போட்டுட்டு சும்மா இருக்காம உனக்கு சரின்னு பட்டத நறுக்குன்னு சொன்னே பாரு!
அதான் எனக்கு பிடிச்சுது!
இன்னோரு டீ போட ஸொல்ட்டுமா”
என வாஞ்சையுடன் கேட்ட மன்னாரை மறுக்க மனமின்றி,
நாயர் டீயும் நல்லாஇருக்கும் என்ற ஆசையும் சேர “சரி” என்றேன்!
23 பின்னூட்டங்கள்:
ஐயர் என்று யார் ஐயா உங்களை அழைத்தது? ஐயா என்று யாராவது சொல்லியிருப்பார்கள். நீங்கள் சரியாகப் பார்க்கவில்லையோ என்னவோ.
'பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே' என்ற பாரதியின் வரிகளை முழுதுமாகப் பின்பற்றுபவர்கள் நாங்கள் மட்டுமே!
**
//பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். [723]
சண்டை போட்டு சாவறதுக்கு ஆயிரம் பேர் வருவான். ஆனாக்க, ஒரு சபையில நின்னு தெம்பா பயமில்லாம ஸொல்றதுக்கு வர்றவன் கொஞ்சப் பேருதான் கிடைப்பான்.
பின்னாடி நின்னுகிட்டு வீரமா சவடால், பீலாவெல்லாம் வுடுவான். ஒரு மேடைல ஏத்து! ஸும்மா, கிடுகிடுன்னு தொடையெல்லாம் ஆடும்!
//
ஹிஹி... என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே?!!
***
இந்த அதிகாரத்தை நான் இதற்கு முன் படித்ததில்லை எஸ்.கே. விளக்கத்துடன் இட்டதற்கு நன்றி.
***
மன்னாரு அண்ணாச்சியைக் கேட்டதாவும் சொல்லிடுங்க.
SK ஐயா,
அருமையாக , எல்லோரும் புரியும் வண்ணம், மிகவும் நகைச்சுவையாகவும் குறளுக்கு விளக்கம் எழுதியுள்ளீர்கள். நீங்கள் மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பதை இப் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். உண்மையில் குறளைப் படிக்கும் போது பெருமையாகவும் அதே நேரம் ஆச்சரியமாகவும் இருக்கிறது. எப்படி வள்ளுவர் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரிய பல விடயங்களை துல்லியமாகச் சொல்லியுள்ளார் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
//வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். [721]//
எடுத்துக்காட்டாக, இக் குறளைப் பாருங்களேன். இன்றைக்கு மேலை நாடுகளில் இதைத்தானே
"Communication skills" என பல்கலைக்கழகங்களிலும் , கல்லூரிகளிலும் கற்பிக்கிறார்கள்!
இன்றைக்கும் அப்படிதான் ஆசையுடன் அழைக்கிறார்கல்.
சென்னையை விட்டு வந்தோ, அல்லது சென்னைக்கிப் போயோ ரொம்ப நாட்களாகி விட்டதோ , குமரன்!!
இது யாரையும் மனதில் கொண்டு எழுதப்பட்ட பதிவல்ல, குமரன்!
ஏன்? உங்களுக்கு மேடையேறிப் பேசுவதென்றால் பயமா?
:))
"மதுரத்" தம்பியை [சிலேடையை கவனிக்கவும்!] மிகவும் கேட்டதாகச் சொல்லச் சொன்னான் மன்னார்!
எனக்கு நகைச்சுவையா?
என்ன சொல்றீங்க வெற்றி?
ஒருவேளை "இடுக்கண் வருங்கால் நகுக" என்பது இதுதானோ?!!
:))
வள்ளுவர் சொல்லாதது எதுவுமே இல்லை!
நாம்தான் மறந்து நிற்கிறோம்! மயங்கி நிற்கிறோம்!
"கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் "
என்று சும்மாவா சொன்னார்கள் ?
மன்னாரின் விளக்கம் அபாரம்.
மிக்க நன்றி, ஜெயஸ்ரீ
ஆமாம், இந்த 'ஸ்ரீ' என்பதை எப்படி சுரதாவில் டைப்புவது?
ஒவ்வொரு முறையும் உங்கள் பெயரை காபி பண்ணித்தான் போடுகிறேன்!!
:))
//ஆமாம், இந்த 'ஸ்ரீ' என்பதை எப்படி சுரதாவில் டைப்புவது?//
ஐயோ! எனக்கும் இந்தச் சிக்கல் இருக்கிறது. அண்மையில் ஒரு வரலாற்றுப் பதிவு எழுதும் போது இந்த எழுத்தை எப்படி எழுதுவது என்று தெரியாமல், சிறி என்று எழுதித் தொலைத்தேன்.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. ஜ725ஸ
ஐயன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். கையிலே சரியான ஆதாரம் வைத்திருக்காமல் நினைவிலிருந்ததை சொல்லி விட்டு ம்யூஸ் கேட்டபிறகு தேடித் தேடி அந்த புத்தகமே கிடைக்க மாட்டேன்னு பேஜார் பண்ணுது. மயிலை மன்னாரின் விளக்கம் எப்போதும் போல் அருமை.
தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
ஆனால்
சபையிலே (மேடையிலே) பேசத்தெரியாத படித்தவன் உயிரோடிருந்தாலும் செத்த பொணம்தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா? மன்னாரிடம் மேலதிக விளக்கம் பெற்றுத் தரவும்.
பல முறை மேடை ஏறிப் பழக்கம் உண்டு எஸ்.கே. வேலை செய்யும் இடத்திலும் சரி, இலக்கிய, ஆன்மிகக் கூட்டங்களிலும் சரி ஒரு கூட்டத்தின் முன் பேசிப் பழக்கம் உண்டு.
ஆனால் அண்மைக் காலமாகச் சொல்வதற்கு கருத்து இருந்தும், அந்தக் கருத்துகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் இருந்தும், முகமறியா முன் பின் தெரியாதவர்களிடம் எதற்கு வாதம் புரியவேண்டும்? எப்படியும் அவர்களும் நம் கருத்துகளை அவை எவ்வளவு உண்மையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; அவர்கள் சொல்லும் கருத்துகளில் உண்மையாக இருப்பவற்றை நாம் ஏற்றுக் கருத்து சொன்னாலும் அதனை 'நாடகம்' என்று இடக்கையால் தள்ளிவிட்டுவிட்டோ 'ஒரு பக்கம் திருப்புகழ், ஒரு பக்கம் விஷம்' என்றோ 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்றோ சொல்லிவிட்டுப் போகப் போகிறார்கள். இதற்கு ஏன் தேவையில்லாமல் நம் நேரத்தையும் உடல் நலத்தையும் மன அமைதியையும் வீணடிக்க வேண்டும் என்று எண்ணி என் கருத்துகளைச் சொல்லாமல் விடுகிறேன். ஐயனின் இந்தக் குறளைப் படித்ததும் கொஞ்சம் சுட்டது. அது தான் அப்படிச் சொன்னேன்.
நானும் யாருடைய பதிவிலிருந்தோ வெட்டி ஒட்டியிருக்கிறேன். கலப்பையில் சரியாக வரும் என நினைக்கிறேன். சுரதாவில் தான் வருவதில்லை.
அருமையான விளக்கம் ஐயா..நன்றி
தோஸ்து எப்பவும் போல கலாசியிருக்காப்ல :)
சுல்தான் அவர்களே,
//சபையிலே (மேடையிலே) பேசத்தெரியாத படித்தவன் உயிரோடிருந்தாலும் செத்த பொணம்தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா? மன்னாரிடம் மேலதிக விளக்கம் பெற்றுத் தரவும் //
தான் கற்றுணர்ந்தவற்றை பலர் முன் பேசத் தெரியாதவன் இறந்தவனுக்கு சமம் என்றும் அவன் கற்ற கல்வியால் பயனில்லை என்றும் வள்ளுவர் சொல்லுவது அவை அஞ்சாமை என்னும் பண்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதை வலியுறுத்தத்தான். நம் தனி வாழ்விலும், பொது வாழ்விலும் எத்தனையோ பேர் மிகச் சிறந்த படிப்பாளிகளாக இருந்தும் பலர் முன் பேசத் தயங்குபவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறோம். இதனால் அவர்களது அறிவு பயனற்றது என்று சொல்ல முடியுமா? அவையில் சிறப்பாகப் பேச முடிந்தால் அந்த அறிவு இன்னும் பலரைச் சென்றடையுமே என்ற ஆதங்கம்தான்.
வள்ளுவர் ஒரு பண்பைப் பற்றிய அதிகாரத்தில் அப்பண்பின் மேன்மையை வலியுறுத்துவதற்காஅக அப்பண்பை மிக உயர்ந்ததாக சொல்வதைப் பல இடங்களில் காணலாம். உதாரணத்துக்கு
பொய்யாமை என்னும் அதிகாரத்தில்
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று"
(ஒருவன் வாழ்வில் பொய் சொல்லாமல் உண்மையைக் கடைப்பிடித்தால் மட்டும் போதும். வேறு அறங்கள் தேவையில்லை)
அதே கொல்லாமை அதிகாரத்தில்
"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று"
(உலகில் மிகச் சிறந்த அறம் கொல்லாமை. வாய்மை(பொய்யாமை) கூட அதற்குப் பிறகுதான்)
என்று கூறியிருப்பார்.
ரொம்ப சரியாகச் சொன்னீர்கள், திரு. சுல்தான்!
எதிர்க் கூடாரத்தில் போய் பேசத்துணிவதற்கு முன், தகுந்த நூல்களைக் கற்று, ஆதாரம் வைத்துக் கொன்டுதான், அங்கு செல்ல வேண்டும்.
அப்படியில்லையெனில், போகாமல் இருப்பதே நன்று.
உங்கள்து இரண்டாவது கேள்விக்கு மன்னாரிடம் போய்க் கேட்டேன்.
அதற்கு அவன்,"நம்ம ஜெயஸ்ரீ
அக்கா கையில ஸொல்லியிருக்கேன்; அவங்க வந்து இதுக்கு சொல்வாங்க போ!" என்று சொல்லி அனுப்பிவிட்டான்.
இங்கு வந்து பார்த்தால், அது போலவே ஜெயஸ்ரீ அவர்கள் மிக அருமையான விளக்கம் ஒன்றை உதாரணங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்!
இதற்கு மேல் நான் என்ன சொல்வது?
கற்றறிந்த ஒருவன், தன் அறிவை மற்றவர்களுக்கும் பயனுறும் படி சொல்ல அஞ்சினால், அவன் இறந்தவர்க்கு ஒப்பாவான் என்று வள்ளுவன் சொன்னதை மிக அழகாக விளக்கியிருக்கிறார்கள்.
இருவருக்கும் நன்றி!
உங்கள் விளக்கமான வேதனை புரிகிறது, குமரன்.
ஆனால், நல்லன என நமக்குப் பட்டதை முதலில் நடுக்கமின்றிச் சொல்லிவிட்டு, பின்,
வரும் கேள்விக்கணைகளில் அல்லனவற்றை தயக்கமின்றி அகற்றி,
நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் வல்லமையைத் தாராய், முருகா!
அதன் மூலம் ஒருசிலர் தவிர மற்ற நானிலமும் பயனுற வேண்டும்
என்பதுதான் என் கோட்பாடாய் வைத்திருக்கிறேன்!
எல்லாக் கேள்விகளுக்கும் விவரித்து பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லையே!
தயக்கமின்றிச் சொல்லத் துவங்குங்கள், குமரன்!!
அடுத்த தபா உருகுவேலேர்ந்து வர்றப்போ கண்டிப்பா வந்து கண்டுகினு போகணும்னு உங்களிடம் சொல்லச் சொன்னான் மன்னார்,... க.ப.!
நன்றி ஜெயஸ்ரீ, அதாவது சொல்ல வந்த கருத்தின் ஆழத்தைக் காட்ட ஐயன் அடித்து ஆடுவது வழக்கம்ன்றீங்க. சரிதான். நன்றி எஸ்.கே.
நபி (அன்னாரின் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அவர்களிடம் 'சிறந்தவர் யார்?' எனக் கேட்கப்பட்டபோது 'யார் கரத்திலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெற்றார்களோ அவர்தான் உங்களிலே சிறந்தவர்' என்றாராம். (அதாவது அடுத்த வீட்டாருக்கு நம்மீதுள்ள அதிகமான உரிமையைச் சுட்டுவதற்கு)
ஜெயஸ்ரீ என்னைப் போலவே இன்னும் ப்ளாக்க ஆரம்பிக்கலையோ. நல்லாதான் எழுதறீங்க. தொடங்கிடலாமே.
அவை அஞ்சாம மனசுல படதை பட்டுன்னு போட்ட் சொல்லிட்டீங்க, திரு. சுல்தான்.!!
இருந்தாலும், அடுத்தவருக்கு ஒரு அலோசனை வழங்கும் முன், கொஞ்சம் நல்லாப் படிச்சிட்டும் வரணும்னு ஐயன் அதே அதிகாரத்தில் சொன்னதைக் கவ்னம் கொள்ளவில்லை போலும்!
அவர்களைப் பற்றி இன்னும் நீங்கள் அறிய வேண்டியது நிறைய இருக்கிறது!
தமிழ்மணத்தை விட்டு, கொஞ்சம் 'மரத்தடி' பக்கமெல்லாம் ஒதுங்குங்கள்!
அவர்களைப் பற்றி நன்கு தெரிய வரும்!!
அவர்கள் எழுதிய விஷயங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இன்னும் நம் மணத்தில் யாரும் எழுதவில்லை என்பதே உண்மை.
:)
திரு எஸ். கே.,
எழுதும்போதே மனதிலே அடித்தது. இப்படி எழுதுறாங்க. ரொம்பப் பெரிய ஆளா இருக்குமோ லூசாட்டம் எழுதுறோமோ என்று. பெயரை கிளிக்கி பார்த்தால் ப்ளாக்ல ஒண்ணும் காணோமேன்னு............ (அசடு வழிகிறது - எனக்கு)
ஜெயஸ்ரீ அக்கா - தவறெனில் வருந்துகிறேன்.
நான் ப்ளாக்குக்கு புதியவன்.
நீங்க அடக்கி வாசிக்கிறீங்க என நினைக்கிறேன்
இருப்பினும், தவறு எனின், வருந்துகிறேன்
ஆனால், நான்...இன்னும் நம்பவில்லை!
:))
சுல்தான் அவர்களே,
அவர்கள் குறிப்பிடும் மரத்தடி ஜெயஸ்ரீ நான் இல்லை. நானும் உங்களைப் போலவே தமிழ்மணத்துக்கு புதுசுதான். வேற எங்கயும் எதுவும் எழுதியது இல்லை.
தமிழ்ப்பாக்களால் ஈர்க்கப்பட்டு ஏதாவது பின்னூட்டம் எழுதுவது உண்டு. அவ்வளவுதான்.
அப்படியெல்லாம் இல்லை. நம்புங்கள். உண்மைதான்.
நீங்கள் சொன்னது சரிதான். மரத்தடியிலே ஒதுங்கிப் பார்த்தால்தான் தெரியுது. அவர்கள் எழுதிய தலைப்புகளே பக்கங்களைத் தாண்டுது. முதல்பரிசு அது இதெல்லாம் இருக்கு.
இதை இப்படியே விட்டுடலாமே....
நீங்களும் நானும் நம்பறோம், சுல்தான்!
அவங்க வேறு முகம் பாக்க விரும்பராங்கன்னு நினைக்கிறேன்!
அதனால, இதை இதோடு விடலாம்!
அவர்கள் எண்ணத்திற்கு மதிப்பளித்து!
:))
அவங்க நான் மரத்தடி ஜெயஸ்ரீ
இல்லைன்றாங்க!
சரின்னு நாமளும் விட்டுறலாம், திரு.சுல்தான்!
Post a Comment