Friday, August 11, 2006

"உறவுக்குக் கைகொடுப்போம்!" [தேன்கூடு போட்டிக்கல்ல!]

"உறவுக்குக் கைகொடுப்போம்!"

[தேன்கூடு போட்டிக்கல்ல!]


நல்லதைச் சொல்லுகிறேன்
நானறிந்ததைச் சொல்லுகிறேன்
நலமெனில் கொள்ளுங்கள்
நச்சுப் பேச்சுகள் வேண்டாம்!

நாசவேலைகள் நடத்தி
நாலாயிரம் பேரைக் கொல்வதென
நெஞ்சில் ஈரமில்லா வன்மத்துடன்
நயவஞ்சகத் திட்டம் தீட்டியதை
நேற்று இங்கு முறியடித்தனராம்!

செய்தியைப் படித்ததும் உறைந்து போனேன்
எய்தவன் எங்கோ இருக்க அம்பைக் கொல்வதா என!
ஒன்றுமறியா அப்பாவிகளை ஒரேயடியாய் கொல்வதா?
என்ன ஒரு வன்மம் இப்பாவிகள் நெஞ்சிலென்று!

மேலும் செய்தியைப் படிக்கலானேன்!
கண்கள் மகிழ்வாலும், வியப்பாலும் விரிந்தன!
பிடித்துக் கொடுக்க உதவியர் நம் அண்டை நாட்டவர்!
யாரை இங்கு வாய்க்கு வந்தபடி ஏசித் திரிகிறோமோ
யாரால் வன்முறை வளர்க்கப் படுகிறது என நம்புகிறோமோ
அந்த அரசுதான், பாகிஸ்தானிய அரசுதான்
இந்தப் பாதகர்களைப் பிடித்திட உதவியதாம்!

மானுடத்தின் மேலுள்ள நம்பிக்கை இன்னும் இறுகியது!
மதங்களைத் தாண்டி மனிதரும் இருக்கிறார்
என்கின்ற உண்மையும் அப்போதே வலுப்பட்டது!
நானறிந்த நல்ல நண்பர்கள்- இஸ்லாமிய நண்பர்கள்
நாள்தோறும் என்னிடம் சொல்லிவந்த மெய்யுணர்வும் புரிந்தது!

'எங்கள் மதம் வன்முறை மதமல்ல!

வன்முறையால் சாதியுங்களென குரானில் சொல்லப்படவில்லை!

மதிகெட்ட சிலபேரின் முறையற்ற செயல்களுக்கு

தினம் தினம் சாகிறோம்,.......

உயிராலும், உள்ளத்தாலும்!

இஸ்லாம் அமைதியையே விரும்புகிறது!

எங்களில் சிலர் இவருக்குத் துணைபோகும்

அவலமெமை அன்றாடம் வாட்டுகிறது'
என

அவர் சொன்ன வார்த்தைகள் அர்த்தமாயின!

மனமகிழ்கிறோம் என் நண்பனே!
பாகிஸ்தானிய சகோதரனே!
மனமார்ந்த நன்றி உனக்கு!
இதோ நாங்கள் கை கொடுக்கிறோம்!
வா! இருவரும் சேர்ந்து
வன்முறையில்லா புத்துலகம் படைப்போம்!

வலைப்பூவில் விஷம் தூவும்
இந்து-இஸ்லாமிய நண்பர்களே!
இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்!
பழிக்குப் பழியென, பதிவுக்குப் பதிவு என
பதிவெழுதிப் பகைக்க வேண்டாம்!
அன்பை வளர்க்க முயலுங்கள்!

மதங்களை மீறியது அன்பு!
உணர்வுகளை மீறியது உறவு!


"உறவுக்குக் கைகொடுப்போம்!
உணர்வுகளைக் கட்டி வைப்போம்!"


இன்னுமொரு பொங்கல் வாழ்த்தெனவே
பாலாவும் சொல்லட்டும் பாஸ்டனிலிருந்து!
போட்டிக்கு அனுப்ப இல்லை இது!
உள்ளதைச் சொல்ல என்றுமே நடுக்கமில்லை!


[பி.கு.: இது தேன்கூடு போட்டிக்கல்ல!]
இதைப் படிப்பவர் அனைவரும் உடனே தங்கள் பதிவில் ஒரு "பாகிஸ்தானுக்கு நன்றி"பதிவு போட்டு தமிழ்மணத்தின் முகப்பு முழுதும் ஒருநாள் முழுதும் நிரப்பச் செய்தால் மிகவும் மகிழ்வேன்!

44 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Friday, August 11, 2006 11:43:00 AM  

//இன்னுமொரு பொங்கல் வாழ்த்தெனவே
பாலாவும் சொல்லட்டும் பாஸ்டனிலிருந்து!
போட்டிக்கு அனுப்ப இல்லை இது!
உள்ளதைச் சொல்ல என்றுமே நடுக்கமில்லை!//

மொத்தப் பதிவும் நல்லா நச்சின்னு இருக்கு :)

பாஸ்டன் பாலா பொங்கல் வாழ்த்தென்று சொல்லமாட்டார்

ஒரு மங்கல வாழ்த்தென்று சொல்லுவார்
என்று நினக்கிறேன் :)

உங்களுடன் சேர்ந்து
இஸ்லாமிய சகோதரர்களுடன் நட்பை நானும் நாளும் போற்றுகிறேன் !

VSK Friday, August 11, 2006 11:50:00 AM  

பதிவை எழுதியதும், நேற்று நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது! அதனால்தான் அதைக் கடைசியில் சேர்த்தேன்!!

மானுடம் போற்றுவோம்!

நீங்கள் முதலில் வந்து 'கை கொடுத்ததற்கு' நன்றி, கோவியாரே!

VSK Friday, August 11, 2006 12:26:00 PM  

இதைப் படிப்பவர் அனைவரும் உடனே தங்கள் பதிவில் ஒரு "பாகிஸ்தானுக்கு நன்றி"பதிவு போட்டு தமிழ்மணத்தின் முகப்பு முழுதும் ஒருநாள் முழுதும் நிரப்பச் செய்தால் மிகவும் மகிழ்வேன்!

Sivabalan Friday, August 11, 2006 12:26:00 PM  

SK அய்யா,

மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்...

இந்த சதியை முறியடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

Sivabalan Friday, August 11, 2006 12:32:00 PM  

SK அய்யா,

நீங்கள் சொல்வதை ஏற்று இன்னும் சில நிமிடங்களில் பதிவிடுகிறேன்...

VSK Friday, August 11, 2006 12:46:00 PM  

மிக்க நன்றி, சிவபாலன்!

மதங்களை மீறிய மானுட நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது.

நம்பிக்கையூட்டும் செயல் இது!

இதனைப் பாராட்டுதல் நம் கடமை எனும் கருத்தில் சொன்னேன்.

உடன் புரிதலுக்கு நன்றி!

Sivabalan Friday, August 11, 2006 12:58:00 PM  

பதிவிட்டுவிட்டேன்.. இது தான் சுட்டி..

http://sivabalanblog.blogspot.com/2006/08/blog-post_11.html

VSK Friday, August 11, 2006 1:39:00 PM  

விவரமான தகவல்களுக்கும், 'நன்றி' பதிவிட்டதற்கும் நன்றி, சிபா!

கோவி.கண்ணன் Friday, August 11, 2006 3:27:00 PM  

//மானுடத்தின் மேலுள்ள நம்பிக்கை இன்னும் இறுகியது!
மதங்களைத் தாண்டி மனிதரும் இருக்கிறார்
என்கின்ற உண்மையும் அப்போதே வலுப்பட்டது!
நானறிந்த நல்ல நண்பர்கள்- இஸ்லாமிய நண்பர்கள்
நாள்தோறும் என்னிடம் சொல்லிவந்த மெய்யுணர்வும் புரிந்தது!//

SK,
நல் உணர்வுடன் எழுதியிருக்கிறீர்கள்... மேலும் உங்கள் கருத்துக்கும் வலுசேர்க்கும் இது தொடர்பான என்னுடைய பதிவின் சுட்டியை இங்கே தருகிறேன்

http://govikannan.blogspot.com/2006/08/blog-post_12.html

VSK Friday, August 11, 2006 3:34:00 PM  

அன்பு வேண்டுகோளை ஏற்று, இரவு 3 மணி என்பதையும் பார்க்காமல் பதிவிட்ட வேகம் நெகிழ வைக்கிறது, கோவியாரே!

அன்பின் மூலம் அனைத்தும் வசப்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

முழுப் பதிவும் உணர்ந்து எழுதப்பட்டது என்பது ஒவ்வொரு சொல்லிலும் தெரிகிறது.
அதிலும் குறிப்பாக,

//இஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கும் மிகவும் வருத்தம் அளிக்கிறது.//

என்பதுடன் நான் முழுதும் ஒத்துப் போகிறேன்.

புது உலகம் பிறக்கும் எனப் பயணிப்போம்!

கால்கரி சிவா Friday, August 11, 2006 3:38:00 PM  

எஸ் கே சார், நானும் நன்றி சொல்வேன் ஆனால் இப்பொதல்ல. அவர்கள் இன்ஸ்டால்மெண்ட் பேசிஸில் தீவிரவாதிகளை பிடிக்க உதவுகிறார்கள். மொத்தமாக முழு மனதாக கொடுக்கட்டும்.

நன்றி எல்லாம் பிறகு நவிலாம்.

இந்த தீவிரவாதிகளுக்கு எத்தனை F-16 கள் பேரம் பேச பட்டனவோ

கால்கரி சிவா Friday, August 11, 2006 4:03:00 PM  

உங்களுக்கும் எஸ்கேக்கும் கேட்கிறேன் அவர்கள் நாட்டிலுள்ள பின்லாடனையும் தாவூத் இப்ராகிமையும் பாகிஸ்தான் என் இன்னும் பிடிக்கவில்லை?

ஒசாமை விடுங்கள் பொந்துக்குள் பதுங்கி வாழும் மிருகம் அது.

சகல் வசதிகளுடன் பங்களாவில் குடி குட்டிகளுடன் வசிக்கும் இப்ராஹிம்க்கு என்ன கேடு?

அவர்களை பிடிக்கட்டும் நன்றி எல்லாம் அதற்கப்புறம் தான்

கால்கரி சிவா Friday, August 11, 2006 4:04:00 PM  

உங்களுக்கும் எஸ்கேக்கும் கேட்கிறேன் அவர்கள் நாட்டிலுள்ள பின்லாடனையும் தாவூத் இப்ராகிமையும் பாகிஸ்தான் என் இன்னும் பிடிக்கவில்லை?

ஒசாமை விடுங்கள் பொந்துக்குள் பதுங்கி வாழும் மிருகம் அது.

சகல் வசதிகளுடன் பங்களாவில் குடி குட்டிகளுடன் வசிக்கும் இப்ராஹிம்க்கு என்ன கேடு?

அவர்களை பிடிக்கட்டும் நன்றி எல்லாம் அதற்கப்புறம் தான்

VSK Friday, August 11, 2006 4:11:00 PM  

ஏதோ மிக மிகக் கசப்பான அனுபவத்தின் விளைவே இவ்வளவு தூரம் நீங்கள் அவனம்பிக்கையுடன் எழுதுவது என நினைக்கிறேன்.
இருப்பினும், வெறுப்பினை ஒதுக்கி வைத்து, பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டினால் இருவரும் நெருங்கி வரக் கூடுமே?
அதை ஏன் உணர மறந்தீர்கள்?

பேரத்தின் மூலமே இவைகள் கிடைக்கின்றன என்னும் உங்கள் வாதம் உண்மையானால்,
அதை ஏன் ஒருவருக்கு மட்டுமே பொருத்த வேண்டும்?
நமக்கும் ஏன் பொருந்தாது?
நாம் மட்டும் என்ன உத்தமர்களா?

நல்லது நடக்கும் போது பாராட்டுவோம்!
வாருங்கள், வெறுப்பை விட்டுவிட்டு என அழைக்கிறேன். சிவா அவர்களே!

VSK Friday, August 11, 2006 4:49:00 PM  

//அவர்களை பிடிக்கட்டும் நன்றி எல்லாம் அதற்கப்புறம் தான்//


உங்கள் கேள்வியிலேயே விடை இருக்கிறதே, சிவா!

நாம் நட்பு நாடாய் மாறுவோம்!
நீங்கள் சொன்னதும் நடக்கும்!

அமெரிக்காவும், இங்கிலாந்தும் நட்பு நாடுகள்.
பிடித்துத் தந்திருக்கிறார்கள்!

தாவூத்தைப் பிடித்துக் கொடுத்தால், காஷ்மீரைக் கொடுத்துவிடுவோமா?
மாட்டோம், கூடாது!
எனவே இது நடக்கவில்லை.
உணமை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்!

முந்தைய கேள்விக்கு தப்பான பதிலெழுதியதால் பூஜ்யம் மதிப்பெண் கொடுத்த ஆசிரியர் அடுத்த நல்ல பதிலுக்கு முழு மதிப்பெண் தருவதில்லையா?

அது போலத்தான் இதுவும்!

இந்த நிகழ்வில் சரியாக பாகிஸ்தான் செய்திருக்கிறது!
உலகமே இப்போதைக்கு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது!
இதனால் தீவிரவாதம் முற்றிலும் அகன்று விட்டதா?
இல்லை.
வேறு வடிவில் வரலாம்; வரும்!

அப்போதும் இது போல உதவி செய்ய இது ஒரு ஊக்கமாய் இருக்கும்.
இல்லையெனில், போன முறை பிடித்துக் கொடுத்ததற்கு பாராட்டுக்குப் பதிலாய் ஏச்சுகள்தாம் கிடைத்தன.
இம்முறை ஏன் செய்ய வேண்டும் என விட்டிடுவர்.

அப்படியெல்லாம் நம்மை நம் பெற்றோர் வளர்க்கவில்லையெனில், நாம் எப்படி இருந்திருப்போம் என ஒரு கணம் நினையுங்கள்!

புரிந்து கொள்வீர்கள் என இன்னமும் நம்புகிறேன்.
நன்றி.

கால்கரி சிவா Friday, August 11, 2006 5:15:00 PM  

//தாவூத்தைப் பிடித்துக் கொடுத்தால், காஷ்மீரைக் கொடுத்துவிடுவோமா?
மாட்டோம், கூடாது!
எனவே இது நடக்கவில்லை.
உணமை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்//

தாவூத் ஒரு குற்றவாளி ஐயா. அவனால் உயிரிழந்தவர்கள் ஆயிரக்கணக்கான பேர். அவனை அவர்கள் நாட்டில் வைத்திருப்பதே குற்றம்.

அதற்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் புரியவில்லை.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்
கொடுப்பார்கள்.

பிறகு அவர்களை வைத்து பேரம் பேசுவார்கள் கொள்ளைக் காரர்கள் அவர்களுக்கு நன்றி சொல்லி நாம் தான் இளிச்சவாயர்கள் ஆகிறோம்.


நல்லாயிருக்கு உங்க உறவுபாலம்

அதற்கு நான் தயாரில்லை ஐயா

கால்கரி சிவா Friday, August 11, 2006 5:31:00 PM  

முள்ளை முள்ளால் எடுத்தபிறகு எடுத்த முள்ளுக்கு நன்றியா சொல்வது.

இரண்டுமே குப்பையில்தான் போகவேண்டும்

VSK Friday, August 11, 2006 5:57:00 PM  

உங்கள் மனநிலையை முற்றிலும் புரிந்து கொள்கிறேன், சிவா!.

பேரம் என்று நீங்கள் சொன்னதால்தான் காஷ்மீர் எனச் சொல்லப் போயிற்று.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த 'முள்ளை முள்ளால்' போன்ற பழைய பல்லவிகளையே பேசிக்கொண்டு இருக்கப் போகிறோம்?

இப்போதெல்லாம் கிராமங்களில் கூட 'சேஃப்டி பின்' மூலம்தான் முள்ளை எடுக்கிறார்கள்!

நான் எடுக்க உதவிய உப்கரணத்தை நன்கு அலம்பி, ஸ்டெரிலைஸ் செய்து, ராசியானது என்று மீண்டும் உபயோகப்படுத்தும் மூட மருத்துவன்!

குப்பையில் போட மாட்டேன்!

ஆகி வந்த ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்தமானி எல்லாம் இன்னும் வைத்திருக்கிறேன்!!!:))

சற்று நிகழ் உலகத்திற்கு வந்து வாழ்த்தி விட்டுப் போங்கள்!

பாபாவும், ஓஷோவும் சொல்வது கூட இதுதான்!

சிறில் அலெக்ஸ் Friday, August 11, 2006 6:03:00 PM  

கெட்டதை தூற்றுவதுபோல நல்லதைப் புகழ்வதும் நன்றே..

கவிதையிலே நட்புக் கரம் நீட்டிய
SKவுக்கு வாழ்த்துக்கள்.

VSK Friday, August 11, 2006 7:18:00 PM  

நீங்கள் சொல்வதுதான் என் கருத்தும் cஇறில் அவர்களே!

சரியாகப் புரிந்து கொண்டீர்கள்!

நீங்களும் ஒரு பதிவு போட்டுவிடுங்கள், என்ன?! :)

அதற்குப் பயந்தோ என்னவோ, பலரும் படித்துவிட்டு, மறுமொழி இடாமலேயே போகின்றார்கள்!!

சிவா, நீங்கள் கூட உங்கள் கருத்தைக் கூறி ஒரு பதிவிடலாமே!

சிறில் அலெக்ஸ் Friday, August 11, 2006 9:31:00 PM  

//உறவுக்குக் கைகொடுப்போம்!" [தேன்கூடு போட்டிக்கல்ல!] //

தேன்கூடு போட்டிக்கும் கை கொடுபோங்க..

பதிவா..ம் நான் தீவிரவாதத்த எத்ரித்துப் போடல அதனால பாராட்டியும் போடவேணான்னு பாத்தேன் ஆனா நீங்கெல்லாம் சொன்னா போடாம இருக்க முடியாதே...

போட்டுட்டா போச்சு.

VSK Friday, August 11, 2006 10:11:00 PM  

மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசுதான்!
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்று சொல்வார்கள்!
அதுபோல சுருக்கமா, ஆனா 'நச்'- சுன்னு ஒரு பதிவு!
பதிவுக்கு நன்றி!

http://theyn.blogspot.com/2006/08/blog-post_11.html

உங்கள் நண்பன்(சரா) Saturday, August 12, 2006 1:38:00 AM  

//மனமகிழ்கிறோம் என் நண்பனே!
பாகிஸ்தானிய சகோதரனே!
மனமார்ந்த நன்றி உனக்கு!
இதோ நாங்கள் கை கொடுக்கிறோம்!
வா!//

அண்பர் SK அவர்களே...
கை கொடுத்து , வா என்று வாஞ்சையுடன் தாங்கள் அழைக்கும் ஒலியில் என்னையும் இணைத்துக் கொள்கின்றேன்,

//வலைப்பூவில் விஷம் தூவும்
இந்து-இஸ்லாமிய நண்பர்களே!
இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்!//

//பழிக்குப் பழியென, பதிவுக்குப் பதிவு என
பதிவெழுதிப் பகைக்க வேண்டாம்!//

பாவம் நீங்கள்..
உங்களின் வேண்டுகோள் விழல் நோக்கி விரைந்த நீர் ஆனது,

அந்நீர் நல்ல நிலம் நோக்கும் என்ற உங்களின்
நல்லெண்ணம் நிறைவேற நானும் உங்களின் பிரார்த்தனையில்..


//நச்சுப் பேச்சுகள் வேண்டாம்!//

ஆமாம், நாம் வந்திருப்பது சகோதரன் செய்த நற்காரியத்திற்க்கு நன்றி சொல்ல, இங்கும் நமது "பங்காளி சண்டை" அரசியல் வேண்டாமே...


அன்புடன்...
சரவணன்.

Anonymous,  Saturday, August 12, 2006 3:27:00 AM  

நல்லவை எங்கு நடந்தாலும் பாராட்டுவோம்; தீயவை எங்கு நடந்தாலும் எதிர்ப்போம்;

விரிந்த சிந்தையுடன் உறவுகளுக்கு பாலம் அமைக்கும் சகோதரர் எஸ்கே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

உலகம் தற்போது "தீவிரவாதம்" எனக்கருதும் உலக அமைதிக்கு எதிரான பயங்கரவாதம், அது தானாகவே உருவாவதில்லை; அது உருவாக்கப்படுகிறது.

உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கும் இந்த தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க அதனை உருவாக்கும் சக்திகளை அடையாளம் கண்டு எதிர்ப்போம்.

அன்பே மட்டுமே உருவான ஓர் அமைதி உலகத்தை உருவாக்க உறுதி கொள்வோம்.

நல்ல ஓர் ஆக்கத்தினை தந்த சகோதரர் எஸ்கே அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
இறை நேசன்

VSK Saturday, August 12, 2006 8:51:00 AM  

நோக்கத்தினைப் புரிந்து கொண்டு, வந்து வாழ்த்தி, உடன் கை கோர்த்ததற்கு மிக்க நன்றி, திரு. இறைநேசன்!

அனைவரும் ஒன்றெனப் புரியும் காலம் வர அந்தப் பரம்பொருளிடம் வேண்டுவோம்!
மனமாற்றம் எல்லாரிடமிருந்தும் வரவேண்டும்!
இது போன்ற திடமான செயல்கள் தொடர வேண்டும்!
நன்றி.

VSK Saturday, August 12, 2006 8:54:00 AM  

நான் சொல்லவந்த கருத்துகளை, திறம்பட அன்றே சொல்லி, உங்கள் ஆதங்கத்தை அழகுற வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!

ஒரே 'ந.தி'யின் ரத்தம் அல்லவா?
ஒத்த கருத்துகள் இருப்பதில் ஆச்சரியமில்லை! :)

நன்றி, திரு. ஜோ!

நாகை சிவா Saturday, August 12, 2006 9:36:00 AM  

எஸ்.கே. கைய கொடுங்க மிக அருமையான கவிதை. நல்லா இருக்கு. பாக். வாழ்த்துவதில் எந்த தவறு இல்லை. கண்டிப்பாக இந்த விசயத்திற்கு பாராட்டப்பட வேண்டியது தான். இங்க கால்கரி சிவா கூறுவதை முற்றிலும் மறுப்பதற்கு இல்லை. இது வரை பாக் நம்மை முதுகில் தான் குத்தி உள்ளது. கவனிக்க. இங்கு நான் மதத்தை பற்றி பேச வில்லை.

நான் தான் ஏற்கனவே பாக் குறித்து ஒரு பதிவு போட்டு விட்டேனே. அப்ப நான் தான் ஆரம்பம்.
சரி தானே எஸ்.கே
:)

VSK Saturday, August 12, 2006 10:06:00 AM  

நீங்கதான் முதல் பதிவு என்னும் போது நாந்தான் உங்களுக்கு கை கொடுக்க வேண்டும், நாகை சிவா!
எனவே பிடியுங்கள் என் வாழ்த்துகளை!
[பார்த்தீங்களா, நான் நேர்மையாத்தானே இருக்கேன்! எங்கே பாராட்டு போகணுமோ அங்கே சொல்லத் தயங்க மாட்டேன்!!:))]

பாக். பற்றிய எனது எண்ணம் இதனால் பெரிதும் மாறிவிடவில்லை; ஆனால் அசைக்கப் பட்டிருக்கிறது என்பதே உண்மை!

கா. சிவாவுக்கு இன்னும் அழுத்தமான காரணங்கள் இருக்கலாம், நம்பிக்கை வராததற்கு.
அவரை நான் குறை சொல்லவில்லை.
ஆனால், நல்லது நடக்கும் போது பாராட்ட வில்லையெனில் நான் என் முகப்பில் போட்டிருக்கும் வாக்கியங்களுக்கு பொருள் இன்றிப் போகும்!

பாக். செய்திருப்பது ஒரு நல்ல தொடக்கம்.
பாராட்ட வேண்டிய நிகழ்வு.
தொடரும் என நம்புவோம்!

VSK Saturday, August 12, 2006 12:47:00 PM  

சரியான முறையில் புரிந்து கொண்டு, சரியான அடைமொழியுடன் இப்பதிவினை உங்கள் பதிவிலிட்டுப் பெருமைப் படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றியையும், அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மானுடத்தின் மேல் நம்பிக்கையுள்ள மக்களைப் பார்க்கையில் மேலும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்.

அன்பெனும், நல்லதைப் பாராட்டுதல் எனும், நோன்பினை விடாது செய்வோம்!
பலன் நிச்சயம் கிடைக்கும்!

மீண்டும் நன்றி, மா.சிவகுமார் அவர்களே!

http://masivakumar.blogspot.com/2006/08/blog-post_115539658938807385.html

Muse (# 01429798200730556938) Saturday, August 12, 2006 1:17:00 PM  

எஸ் கே,

இதற்கான நன்றிகளை நாம் ஏன் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

இந்த செயலால் பாதுகாக்கப்பட்டது இங்கிலாந்து.

பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெறவிருந்த ஒரு கொடுஞ்செயலைத் தடுத்திருந்தால் பாராட்டியிருக்கலாம். நன்றி சொல்லியிருக்கலாம்.

பாகிஸ்தானை ஏதாவது ஒரு காரணத்திற்கு பாராட்டியே ஆகவேண்டும் என்கிற நோக்கம்தான் எனக்குத் தெரிகிறது. அப்படி ஏதேனும் பாராட்டித்தான் ஆக வேண்டுமென்றால் அது இந்திய மக்கள்தொகை குறைப்பில் செய்துவரும் பணிகளைப் பாராட்டலாம்.

Muse (# 01429798200730556938) Saturday, August 12, 2006 1:21:00 PM  

நல்ல உறவு மலர வேண்டுமென நினைத்தால் எத்தனையோ நல்லவர்கள் இந்தியாவில் முஸ்லீம்களாக இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே உண்மை என்றும், மற்றவர்கள் எல்லாம் நரகத்திற்குப் போவர்கள் என்றெல்லாம் இவர்கள் உளறுவதில்லை.

இவர்களை பாராட்டலாம். அதை விட்டுவிட்டு தவறான மனிதர்களை தவறான காரணங்களுக்காக பாராட்டிக்கொண்டிருக்கிறீர்கள். பாராட்டவும் சொல்லுகிறீர்கள். என்ன ஆயிற்று?

Muse (# 01429798200730556938) Saturday, August 12, 2006 1:51:00 PM  

எஸ் கே ஐயா,

இங்கே பாக்கிஸ்தானுக்கு வரிசையில் நின்று நாம் நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் போது அமெரிக்கா தன்னுடைய நன்றியை எப்படி செலுத்தியது என்பது டிவியில் தெரிந்தது.

"பாகிஸ்தானிலிருந்து நேரடியாக வரும் விமானங்களை அமெரிக்கா தடை செய்துள்ளது."

வஜ்ரா Saturday, August 12, 2006 2:58:00 PM  

எனக்கு இந்த கதை தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

கூடியவிரைவில் பாகிஸ்தான் உங்கள் நல்லெண்ணக்கரங்களை வெட்டி எடுத்துக் கொள்ள தீவிரவாதத் தாக்குதல் நடத்தும்...அப்போது என்ன செய்வீர்கள்?

வேண்டாம் SK, தீய சக்திகளை அழித்தே தீரவேண்டும்...சமரசம் கூடாது....!

All that is necessary for the triumph of the evil is for good men to do nothing.

நீங்கள் என்னவெண்றால் ஒரு படி மேலே போய், சமரசப் பேச்சுக்கும் நன்றிக்கும் வழிவகுக்கவேண்டுகின்றீர்கள்...!!

வஜ்ரா Saturday, August 12, 2006 4:06:00 PM  

//
முள்ளை முள்ளால் எடுத்தபிறகு எடுத்த முள்ளுக்கு நன்றியா சொல்வது.

இரண்டுமே குப்பையில்தான் போகவேண்டும்
//

இல்லை, அதை mumbai குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உற்றார் நெஞ்சில் குத்திப் பொக்கிஷமாகப் பாதுகாக்கவேண்டுமோ?

அதில் தான் மனிதனேயம் உள்ளதோ?

பாக் இப்படிச் செய்வது இது முதல் முறை அல்ல. தன் வெளினாட்டு விசுவாசத்தின் மூலம் அமேரிக்காவின் வாலாக இருந்துவிடலாம் என்று முஷ் அண்ணாத்தெ எண்ணுவது காலங்காலமாக நடந்து வந்துள்ளது.
இப்போது தமிழ் மணத்தில் "பாக்"கைப் பாராட்டி பக்கத்தை நிரப்ப என்ன அவசியம் வந்தது.?

மேலும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப் படப் போவது ஏதோ, வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் தான்.

இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற நோக்கத்தில் தான் பார்க்கப் படுவர் வெள்ளைக்காரன் நாட்டில்.

VSK Saturday, August 12, 2006 4:40:00 PM  

திரு. வஜ்ரா ஷங்கர், திரு. ம்யூஸ் அவர்களே.
நீங்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைச் சொல்லியிருப்பதால், தனித்தனியே பதில் சொல்வதை விடுத்து சேர்த்தே சொல்லலாம் என்று எண்ணுகிறேன், பின்னூட்ட எண்ணிக்கையைக் கூட்டும் எண்ணத்தில் இதை எழுதவில்லை என்பதால்!!

ஒரு நாளில் இங்கிலாந்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையே பயணிக்கும் இந்தியப் பயணிகள் எண்ணிக்கை தெரியுமா உங்களுக்கு?
எப்படி இதை ஏதோ இங்கிலாந்திற்குச் செய்த உதவியாய் எண்ணலாயிற்று உங்களால்?

இந்தச் செயலைச் செய்ய திட்டம் தீட்டியிருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த நாட்டு விமானப் போக்குவரத்தை நிறுத்தியதில், நன்றி கொன்ற செயல் என்ன கண்டீர்கள்?

உங்களின் தேசபக்திக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை, நானோ, கோவி. கண்ணனோ, சிவபாலனோ, சிறிலோ,, மா. சிவகுமாரோ, நாகை.சிவாவோ, இறைநேசனோ, அல்லது பெயர் சொல்ல விருப்பமில்லாது வந்து பார்த்து பதிவிடாமல் போன மற்றவர்களோ!!

பாகிஸ்தான் செய்த இந்தச் செயல் -- இந்தச் செயல் மட்டுமே -- போற்றுதற்குரியது.

உஷா இராமச்சந்திரன் தன் பதிவின் முகப்பாய் பெரியோரைப் போற்றுவதை விட சிறியோரை இகழ்தல் கொடிது என்னும் பொருள் கொண்ட ஒரு சொற்றொடரைப் போட்டிருப்பார்கள்!

இங்கு நான் செய்தது, வழக்கமாக, இழிசெயல்கள் மட்டுமே செய்து வந்த பாகிஸ்தானின் போக்கில் கண்ட மாற்றத்தைப் போற்றியதுதான்!

இதற்கு நீங்கள் வராமலிருந்தால் கூட நான் மகிழ்ந்திருப்பேன்!

பாரதம் என் நாடு!
அது நன்றாக வாழ என்னல் ஆன அத்தனையும் செய்வேன்!

அதில் ஒன்றுதான், இது!

முஷாரஃf என்னும் ஒரு தனி மனிதரா இவர்களைப் பிடித்துக் கொடுத்தார்?

ஒரு பாக். பிரஜை!

அந்தமனிதனுக்கு நான் நன்றி சொல்வதன் மூலம், அது போல நினைக்கின்ற, ஆனல், செயல்படத் தயங்குகின்ற பல மனிதர்களை இதன் மூலம் ஒரு உள்ளுணர்வால், தொட முயற்சிக்கிறேன்.
இது புரிந்தவர்கள் புரிந்து கொள்ளும் செயல்!

நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

ஏனெனில்.......
நீங்கள் புரிந்தவர்கள்!

நன்றி!

வஜ்ரா Saturday, August 12, 2006 6:41:00 PM  

பாகிஸ்தானைத் திட்டினால் தான் தேசபக்தன் என்று உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்தார்களா...?

இந்தியாவில் நிச்சயம் அப்படி இல்லை. வெறுப்பினால் வளரும் தேசியம் தேசீயம் அல்ல.

காந்தி முதல் வாஜ்பாயி வரை செய்த அதே தவறை மீண்டும் செய்யவேண்டும் என்கிறீர்கள்...

Idealism!!

அது உங்கள் தவறு அல்ல. ஆத்திக இந்து மதத்தின் Soft spot.

ஆனால் idealism can be really expensive in practical world. The price can be several hundred innocent lives.

மா சிவகுமார் Sunday, August 13, 2006 12:49:00 AM  

அந்த ஐடியலிசத்தைத் தொலைத்து விட்டு வெறுப்பு உமிழும் அடிப்படை வாதங்களினால் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன ஷங்கர்? ஹிட்லரிடம் அடிபட்ட யூதர்கள் அவர்களது பங்காக வெறுப்பை விதைக்கிறார்கள். தமிழர்கள் மீது சிங்களர், பாகிஸ்தானியர் மீது இந்தியர், ஜப்பானியர் மீது சீனர் என்று சங்கிலித் தொடராக நீண்டு கொண்டே போவதுதான் இன்னொசன்ட் உயிர்களுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறீர்களா?

சென்னைக்கு வந்திருக்கிறீர்கள்தானே? நந்தம்பாக்கத்தில் 'சாம்ராஜ்ய யுத்தக் கல்லறைகளைப் போய்ப் பாருங்கள். இவ்வளவு சின்ன உலகில் இவ்வளவு உயிர்களை இருபது வயதுகளில் பறிக்கத் தூண்டியது ஐடியலிசம் என்றா நம்புகிறீர்கள்?

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா Sunday, August 13, 2006 3:59:00 AM  

சிவகுமார்,

இந்த idealistic view ல் ஆரம்பித்த சத்யாகிரகம் நிச்சயம் இந்தியாவை பலப்படுத்தியது...உண்மைதான். காந்தியின் ஒத்தழையாமை கூட ஐடியலிசம் தான். அது யாரிடம் செல்லுபடியாகும் என்றரிந்து செயல் படவேண்டும்.

British காரனிடம் செல்லுபடியாகும்...இஸ்லாமியரிடம் போய் சத்யாகிரகம் செய்தீர்கள் என்றால் உங்களை போட்டுத்தள்ளிவிடுவான்...idealism த்தை எங்கே செயல்படுத்தவேண்டுமோ அங்கே தான் செயல்படுத்த வேண்டும்...எல்லோரிடமும் ஒரே மாதிரி பேச முடியாது. ரவுடியிடம் போய் உண்ணவிரதம் இருந்து சாதிக்கமுடியுமா? ரவுடியுடன் பேசி சமாதானம் செய்து கொள்ள முடியுமா? என்ன உளரல்!!

குரங்கிடம் பூமாலை கொடுக்கவேண்டும், பாக்கிடம் சமரசம் பேசவேண்டும் ...இரண்டிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

Muse (# 01429798200730556938) Sunday, August 13, 2006 5:07:00 AM  

எஸ் கே ஐயா,

ஒரு நாளில் இங்கிலாந்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையே பயணிக்கும் இந்தியப் பயணிகள் எண்ணிக்கை தெரியுமா உங்களுக்கு?
எப்படி இதை ஏதோ இங்கிலாந்திற்குச் செய்த உதவியாய் எண்ணலாயிற்று உங்களால்?


ஸத்யமாகத் தெரியாது. தெரிந்ததெல்லாம், அமெரிக்கா எந்த அளவு பாக்கிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது என்பதே. அமெரிக்காவுக்கு நன்றிகள். இது ஓரிரு

நூற்றாண்டுகள் தொடர்ந்தால் பாக்கிஸ்தானிலுள்ள நல்ல மனிதர்களின் கைக்கு அந்நாடு மாறலாம். அப்போது ஒற்றுமை வளரும்.

ஆனால், தற்போது பாக்கிஸ்தான் செய்துள்ள இந்த விஷயம் இந்தியர்களையோ, மற்ற நாட்டு மனிதர்களையோ காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இல்லை. அப்படி செய்யாவிட்டால்

அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும் என்பதாலேயே.

பாக்கிஸ்தான் ஒரு நல்ல வேலையாள். மோசமான நண்பன் (இதுவரை).


இந்தச் செயலைச் செய்ய திட்டம் தீட்டியிருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த நாட்டு விமானப் போக்குவரத்தை நிறுத்தியதில், நன்றி கொன்ற செயல்

என்ன கண்டீர்கள்?


அமெரிக்கர்களின் ஜாக்கிரதை உணர்வை சுட்டிக்காட்டியிருந்தேன். அவர்கள் பாக்கிஸ்தானை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்துள்ளதை சுட்டிக் காட்டினேன். பாக்கிஸ்தான் அரசாங்கம்

உண்மையில் நன்றிக்குகந்ததாக அவர்கள் கருதியிருந்தால் யோக்கியன் வருகிறான் என்று சொல்லிக்கொண்டே சொம்பை உள்ளே வைத்துக்கொண்டிருக்கிற வேலையை ஏன் செய்கிறார்கள்?

ஒருவேளை பாக்கிஸ்தானியருக்கும், பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் நீங்கள் வித்யாஸம் காணலாம் - மோசமான மக்கள், நல்ல அரசாங்கம் என்று. இதை பாக்கிஸ்தானியரே

ஏற்கவில்லை. அரசாங்கங்கள் மாறலாம். வரலாற்று வெறுப்பு மாறுவது கடினம். இந்த வெறுப்பை அழிக்க பாக்கிஸ்தானிலேயே ஒரு நல்ல அரசாங்கம் வர வேண்டும். அதற்கு அங்கிருக்கும்

மக்கள் மாற வேண்டும். அப்போது நாம் நமது நன்றிகளைச் சொல்லுவோம் என்பது என் கருத்து. மேலும், தற்போதைய காரணத்திற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பாக்கிஸ்தானுக்கு நன்றி தெரிவிக்க இந்தியர்களுக்கு வேறு நியாயமான காரணங்கள் உண்டு. அந்த காரணங்களை வைத்து தாங்கள் நன்றி தெரிவித்திருந்தால் அது எனக்கு நியாயமாகத்

தோன்றியிருக்கும்.

உங்களின் தேசபக்திக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை, ....

நான் உங்கள் எல்லாருடைய தேசபக்தியைப் பற்றி சந்தேகம் தெரிவித்திருந்தேனா?

இல்லை. என் கேள்வி வேறு. சரியான காரணங்கள் பல இருக்க தவறான காரணத்திற்கு ஏன் நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதே அது.

எதற்காக தேசபக்தியை இங்கே இழுக்கிறீர்கள். பாக்கிஸ்தானை புகழ்வது தேசபக்திக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்று கூற நான் என்ன அரசியல்வாதியா?

உங்களின் என்று நீங்கள் கூறியிருப்பது வஜ்ரா ஷங்கரையும், என்னையும் சேர்த்து என்றால் தயவு செய்து என்னை அவருக்கிணையாயோ, அல்லது மற்றவர்களுக்கு இணையாயோ

தேசபக்தியில் வைக்கவேண்டாம். எனக்கு என்னுடைய தேசபக்தியின்மேல் கேள்விகள் உண்டு. சந்தேகங்களும்.

இங்கு நான் செய்தது, வழக்கமாக, இழிசெயல்கள் மட்டுமே செய்து வந்த பாகிஸ்தானின் போக்கில் கண்ட மாற்றத்தைப் போற்றியதுதான்!

1 பாக்கிஸ்தான் அரசு பல நல்ல செயல்களையும் செய்துள்ளது. ஒரு அரசு இழிசெயல்களை மட்டும் செய்யமுடியாது.

2 இதுபோன்ற நல்ல செயல்களை பாக்கிஸ்தான் இதற்கு முன்னாலும் செய்துள்ளது. அதனாலேயே அது அங்குள்ள தீவிர இஸ்லாமியர்களின் கண்டனத்தைப் பெற்று வருகிறது.

இதற்கு நீங்கள் வராமலிருந்தால் கூட நான் மகிழ்ந்திருப்பேன்!

படிக்கும்போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. என் வீட்டிற்கு இனி நீ வரவேண்டாம் என்று கூறுவது போல கேட்கிறது. ஒரு நல்ல காரியத்தை செய்யும்போது தடங்கல்

விளைவிக்கிறார்களே என்ற தங்கள் ஆதங்கம் புரிகிறது. தங்களுடைய அருமையான கட்டுரைகளை படித்து மகிழ்கின்ற எனக்கு இனி அந்த பாக்யமில்லை. இந்த பதில்களைக் கூட என்

பக்கத்து நியாயங்களை தங்களுக்குத் தெரிவிக்கத்தான் எழுதுகிறேன். இதை பின்னூட்டமாக வெளியிடுவதும், வெளியிடாததும் தங்கள் விருப்பம்.

ஆனல், செயல்படத் தயங்குகின்ற பல மனிதர்களை இதன் மூலம் ஒரு உள்ளுணர்வால், தொட முயற்சிக்கிறேன்.

தங்களின் நல்ல இயல்பை, மனத்தை இது காட்டுகிறது. இது வெற்றி பெற வேண்டும் என்பதே எனது அவாவும். இறையிடமும் வேண்டுவோம்.

நாமக்கல் சிபி Sunday, August 13, 2006 6:17:00 AM  

//நல்லவை எங்கு நடந்தாலும் பாராட்டுவோம்; தீயவை எங்கு நடந்தாலும் எதிர்ப்போம்;

விரிந்த சிந்தையுடன் உறவுகளுக்கு பாலம் அமைக்கும் சகோதரர் எஸ்கே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி//

//
உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கும் இந்த தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க அதனை உருவாக்கும் சக்திகளை அடையாளம் கண்டு எதிர்ப்போம்.

அன்பே மட்டுமே உருவான ஓர் அமைதி உலகத்தை உருவாக்க உறுதி கொள்வோம்//

என்று கூறிய இறைநேசனாரை நான் அப்படியே வழிமொழிகிறேன்.

VSK Sunday, August 13, 2006 8:50:00 AM  

தங்களது நேர்மையான, ஆத்திரமற்ற பதில் கண்டு மனமகிழ்கிறேன், திரு. ம்யூஸ் !

நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் நான் எழுதியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நான் சொன்னது, நீங்கள் இனிமேல் என் வலைப்பூவுக்கு வரவேண்டாம் என்னும் பொருளில் அல்ல!

இந்தக் குறிப்பிட்ட பதிவைப் பற்றியே!

உங்கள் நிலை, உணர்வு இதில் என்ன என்று எனக்குத் தெரியும்.

சில வலைப்பூ பதிவர்கள் மனதில் ஒரு நல்லெண்ணம் உருவாக இயலுமோ என்ற ஆசையில் எழுதப்பட்டது இந்தப் பதிவு.

குறையும், குற்றமும் மட்டுமே சொல்பவர்கள் அல்ல இந்தியர்கள்; நல்லது நடந்தால், அது பகைவன் எனக் கருதப்படுபவன் ஆனாலும் சரி, பாராட்டும் உள்ளம் இந்தியனது என்பதை எடுத்துக் காட்டவே எழுதியது.

அவர்களிடம் மாற்றம் விளையுமோ என்று எண்ணும் நேரத்தில், இதில் மாற்றுக் கருத்து கொண்டவர்கள் சொல்லுவது தவறாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்ற அச்சத்தாலேயே "இந்தப் பதிவுக்கு வராமல் இருந்திருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன்" எனச் சொன்னேன்.

அதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டதற்கு மீண்டும் வருந்துகிறேன்.

மீண்டும் வருவீர்கள் என்றும் நம்புகிறேன்.

மறுபடியும் சொல்லுகிறேன்; இந்தச் செயல் பாரட்டப் பட வேண்டிய ஒன்று.
உலகில் எங்கு, யார் அநியாயமாகத் துன்பப் பட்டாலும் வருந்துபவன் நான்!

நீங்களும் அப்படியே எனக் கருதுகிறேன்.
அந்த வகையில், ஒரு பேரிழப்பு தவிர்க்கப்பட்டிருப்பது நிறைவைத் தருகிறது; பாராட்டுதற்குரியது என்றே இன்னமும் நம்புகிறேன்.
இது ஒன்றும் சமாதானம், சமரசம் என்ற பொருளில் அல்ல!

அது நடைபெற இன்னும் எவ்வளவோ நடக்க வேண்டும் முதலில்!

இது ஒரு நம்பிக்கைக் கீற்று! அவ்வளவே!

நன்றி. மீண்டும் வருக!

VSK Sunday, August 13, 2006 8:53:00 AM  

பல்வேறு அலுவல்களுக்கிடையிலும், நேரம் ஒதுக்கி, வந்து, படித்து, மறுமொழி இட நான் செய்த பாக்கியத்தை எண்ணி நன்றி சொல்லுகிறேன், சிபியாரே!!

:)

நவீன பாரதி Sunday, August 13, 2006 10:16:00 AM  

//இது ஒரு நம்பிக்கைக் கீற்று! அவ்வளவே!
//

உண்மைதான் வேலுடையோரே!

இது அப்படியே தொடர்ந்து உலகெங்கும் உள்ளவர்கள் மனதில் சகோதரத்துவம், சமத்துவமும் மலரவேண்டும். மனிதநேயம் பூக்கவேண்டும்.

அதற்காக பிரார்த்திப்போம்.

VSK Sunday, August 13, 2006 11:52:00 AM  

உங்கள் பிரார்த்தனையில் நானும் சேர்ந்து கொள்கிறேன், நவீன பாரதி அவர்களே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP