"உறவுகள் ஒரு க[வி]தை!"
என் இனிய, புதிய நண்பர் கோவி. கண்ணனுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன கதை இது!
என்னையே எழுதச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார்.
என் கோணல் புத்தியின் காரணமாய், கதையை, கவிதை நடையில் வடித்திருக்கிறேன்!
போட்டிக்கு வேண்டாம் என்று நான் சொல்லியும், அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இதனையும் போட்டியின் ஆக்கங்களில் ஒன்றாய்ப் படைக்கிறேன்.... பாஸ்டன் பாலா திட்டினாலும்!
இதைப் படித்துப் பிடித்த அன்பர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்!
"கதையும், களமும் அவருடையது! ஆக்கம் மட்டுமே என்னது!இது தேர்வுக்குத் தகுதியென நீங்கள் நினைத்தால், முதல் ஓட்டை கோவி. கண்ணனுக்குப் போட்டு, விருப்பமிருந்தால் [கட்டாயமில்லை!] எனக்கும் அளிக்கவும்!
நன்றி!
"உறவுகள் ஒரு க[வி]தை!"
"சின்னம்மா! சாக்லெட் எடுத்துக்க!"
குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தேன்
"அவரையே" உரித்து வைத்த சிரிப்புடன்
ஆளுயர நின்றிருந்தான் இளமாறன்!
முகத்தில் மீசை மெதுவாக எட்டிப்பார்த்தது !
மழுமழுவென்ற முகத்தில் அங்கங்கே சில பருக்கள்!
ஆசைதீர அவனைப் பார்த்து நான் ,
'என்ன விசேஷம்' எனக் கேட்டேன்!
"பத்தாவது பரிட்சையில் முதல் ரேங்க்கில் பாஸ்!
முதல் ஸ்வீட் உனக்குத்தான்! எடுத்துக்கோ!"
எனச் சொல்லி நீட்டினான் பெட்டியை!
"சித்தப்பா இல்லையா?" எனக்கேட்டவாறே
எட்டி உள் வந்த ஓரகத்தி மகனை
ஆசையுடன் அணைத்து,
அவன் கைகளைப் பாசத்துடன் பற்றி
நெற்றியில் முத்தமிட்டேன்!
உள்ளம் சிலீரென்றது!
கண்ணில் கண்ணீர் துளித்தது!
"என்னங்க! இளா வந்திருக்கிறான்!
பரிட்சையில் பாஸாம்!"
எனச் சொல்லி முடிக்குமுன்னே
பாய்ந்து வந்த என் கணவர்
"ரொம்ப சந்தோசமா இருக்கு!"
என்றவாறே, இளாவின் கையைப்
பாசமுடன் பிடித்துக் குலுக்கினார்!
"வீட்டிலுள்ள அனைவரும்
நாளை போகிறோம் பழனிக்கு!
நான் இன்று பாஸானால்
தான் முடியிறக்கி வேண்டுவதாய்ப்
பிரார்த்தனையும் செய்தாராம் என் அம்மா!
வரச்சொன்னார் உங்களையும் குடும்பத்தோட"
என்று சொன்ன இளாவின் கைகளை,
விட்டுவிட மனமின்றி
அணைத்தவாறு அவனிடம் சொன்னேன்!
"வரத்தான் ஆசை! பழனி முருகனைப்
பார்த்திடவும் ஆசைதான்! கசக்குமா எனக்கு!
அண்ணியும் முடியிறக்கும் நேரத்தில்
நானும் இறக்கிடுவேன் எனச் சொல்லு!
காலையில் பார்த்திடலாம் !
என்றோ ஒருநாள் நான் செய்த வேண்டுதலும்
நாளையே நிறைவேறுதல் நினைத்து
நானும் மகிழ்கிறேன்!" எனச் சொல்லி
அனுப்பி வைத்தேன் அவனை!
இளவயது இளமாறன் இளமைத் துள்ளலுடன்
செல்கின்ற அழகினைப் பார்த்தவாறே
திரும்பியவளைப் பார்த்துச் சிரித்தவண்ணம்
நின்றிருந்தார் என் கணவர்!
"உன் மனதில் ஓடுவது என்னவெனத் தெரிகிறது!
நம் மகனே நமைப் பார்த்து சித்தி, சித்தப்பா
என அழைக்கும் வேதனையை தாங்க முடியாமலன்றோ
தாயின் மனம் தவிக்கிறது ! இல்லையா ?"
என்றவுடன் அழுதிட்டேன் அவர் மார்பில் முகம் புதைத்து!
"கலங்காதே என் கண்ணே! கவலையை விட்டிடு!
கள்ளமில்லா மனத்துடனே நீ செய்த தியாகம்
கலங்குவதால் குறைந்துவிடக் கூடாது!
குடும்பமே எதிர்த்திட்டு கைகழுவி விட்டபோது
கைகொடுத்து நமைக் காத்தார் என் அண்ணன், அண்ணி!"
"கர்ப்பிணியாய் நீ துடிக்க
கண்மலங்கி நான் நிற்க
பெற்றோரும் கை விரிக்க
உற்றாரும் ஒதுங்கி நிற்க
உறுதுணையாய் அன்றங்கு
உடன் வந்து தெய்வம் போல்
கை கொடுத்தாள் நம் அண்ணி
குழந்தையொன்று நீ பெற்றாய்!"
"தனக்கொரு மகவில்லையென
அண்ணியவள் குமைந்தபோது
உற்றாரும் சுற்றாரும் நாவில் நரம்பின்றி
கொட்டவொண்ணா கடுஞ்சொல்லால் கொட்டிய போது,
மலடியென அவளைத் தூற்றிய போது,
மனம்பொறுக்காமல் மாதரசி அவளும்
மரணத்தை தழுவிடவே
முயற்சித்த வேளையினில்,"
"அவள் துயரம் தீர்ந்திடவும்,- நம்
நன்றியினைத் தெரிவித்திடவும்
நல்லதொரு வாய்ப்பெனவே
நாமளித்தோம் நம் மகனை!
மகளொன்று நாம் பெற்றபின்!
நம் பிள்ளைகளும் அறியமாட்டார்
உண்மை இதுவெனவே!"
"இப்பொது நீ அழுதால் அத்தனையும் வீணாகும்!
அப்போது நீ செய்த செயலுக்கும் பொருளில்லை!
எப்போதும் அவனும் நம் மகன் தான்!
இல்லையென சொல்லப்போமோ எவருமிங்கு!"
"நாளை நீ செல்லும் காரணமும் நானறிவேன்
அண்ணியங்கே வேண்டுதலை நிறைவேற்றும் பொழுதினிலே
நீயுந்தான் உன்னுடைய அதே வேண்டுதலை
முருகனுக்கு செலுத்துகிறாய் நம் மகனுக்கென!"
என்று சொல்லித் தேற்றிட்ட என் கணவரைப்
பெருமையுடன் பார்த்து நின்றேன்!
இருவர் கண்களும் விரைந்து சென்றிடும்
இளமாறன் மேல் பாசத்தை பொழிந்தன!
...............
[இது நான் சேர்த்தது!]
முனைக்கோயில் முன்னின்ற முத்தான இளமாறன்
முருகனைப் பார்த்தவண்ணம் மனதுக்குள் வேண்டினான்!
"அவருக்கும் மகன் தான் நானென்ற உண்மையிங்கு
எனக்கொன்றும் தெரியாது என்று எண்ணி இவர்களும்
மனதுக்குள் மருகுகிறார்! மனம் திறக்க மறுக்கிறார்!
என் பெற்றோர் இவரெனவே ஏற்கெனவே தெரியுமெனக்கு!
அவர் வாழ்வும் குறைவின்றி நிறைந்திடவே
முருகா! நீ அருளவேண்டும்! நீயே துணை!"
...........................
ஆம்!
உறவுகள் ஒரு க[வி]தை தான்!
அவரவர் எண்ணங்களில்!
14 பின்னூட்டங்கள்:
//test!//
SK அய்யா,
கவிதையின் கரு நன்றாக உள்ளது. வழமைபோல் மிகவும் அழகாகவும், நேர்தியாகவும் படிக்கச் சுவையாகவும் எளிய தமிழ் நடையில் கவி புனைந்துள்ளீர்கள். கதையின் கருவைத் தந்த கோ. க அவர்களுக்கும் அவரின் கருவுக்கு கவி வடிவில் உயிர் கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு சின்னக் குழப்பம்.
//என் பெற்றோர் இவரெனவே ஏற்கெனவே தெரியுமெனக்கு! //
கவிதையில் வரும் நாயகனும் நாயகியும் தான் தனது உண்மையான பெற்றோரென இளாவுக்கு எப்படித் தெரிந்தது?
கதை கவிதை இரண்டும்
நன்றாக வந்துள்ளன.
இதுவும் தத்துக் கொடுத்த்தாகி விட்டது.
கோவி கண்ணன் கரு. நீங்கள் வடிவு.
தமிழ்மணத்தில் "உறவுகள் " சிறக்க இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்?
வெற்றிக்கு
வாழ்த்துக்கள்.
//valli Said ...இதுவும் தத்துக் கொடுத்த்தாகி விட்டது.
கோவி கண்ணன் கரு. நீங்கள் வடிவு...//
வள்ளி அவர்களே பெற்றால் தான் பிள்ளையா ?
கரு கொடுத்தது நான் என்றால் அதற்கு அழகாக உரு கொடுத்தவர் எஸ்கே அவர்கள். அவர் கவிதையில் நான் போட்ட விதையை நன்றாக பயிராக்கியிருக்கிறார். உறவுகளை விட மேன்மையானதும் மென்மையானதும், உறவுகளை உணர்த்துவதும் நட்புதான். இருவடரும் நன்றாகவே உணர்ந்திருகிறோம் !
வாழ்த்திய வள்ளிக்கும், நண்பர் எஸ்கேவுக்கும், வெற்றி அவர்களுக்கும் நன்றி ... கூடவே இந்திய விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்
என்னை கோவியார் 'எழுதுங்களேன்' எனச் சொன்னபோது, இதே கேள்வியைத்தான் இருவரும் பகிர்ந்து கொண்டு சிரித்தோம்!
அதுவே இதை எழுத வைத்தது என்றால் மிகையில்லை!
முதல் பின்னூட்டமே புரிதல் பின்னூட்டமாய் அமைந்தது குறித்து மகிழ்ச்சி.
நன்றி.வள்ளி அவர்களே!
தத்துக் கொடுத்தவர் யாரெனவே தெரிந்து கொள்ள முடியாத அயல் நாட்டுச் சூழ்நிலைக்கும், உறவிலே தத்துக் கொடுத்து ஒரே ஊரில் வாழும் நம் தமிழகச் சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு, வெற்றி அவர்களே!
முதலில் தெரியாமல் போனாலும், அக்கம்பக்கத்தார், உற்றார், சுற்றார் எப்படியாவது, எங்காவது போட்டு உடைத்துவிடுவார்கள்!
இளாவுக்கும் 15 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், அப்படி ஒரு சாத்தியக் கூற்றை வைத்தேன்!
இன்னொரு வேடிக்கை தெரியுமா?
நான் சொல்லாது போயிருந்தால், எதிர்மறைக் கேள்விகள் வந்திருக்கும்!
'என்னங்க! நம்ம ஊருல இதெல்லாம் தெரியாமப் போயிடுமா?' என்று!
ஒருவகையில், இக்கதையை இந்த நடையில் எழுத நீங்களும் ஒரு காரணம்!! :))
நன்றி!
வள்ளி அவர்களுக்கு விளக்கியதற்கு மிக்க நன்றி, கோவியாரே!
இது உங்கள் பிள்ளையும்தான்!
இப்போதுதான் தெரிந்து விட்டதே!
முடிந்தபோது உங்கள் கருத்துகளையும் கூற நான் ""அனுமதிக்கிறேன்""!!
:))!!
SK சார், கோவி கண்ணன்,
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆகக் கூடி எங்களுக்கு வாசிக்க
உற்ற கதை கிடைத்தது.
இது வசன கவிதையா கவிதை வசனமா?
கதை வடிவிலேயே தந்திருக்கலாம்?
ரெண்டுபேர் சேந்து ஒண்னா எழுதுற பழக்கத்த இன்னும் விடலியா..
:)
தலைப்பில் "கவிதை" என்று வந்ததாலும், ஒரு மாறுதலாய் எழுதலாமே என நினைத்ததாலும், அப்படி எழுதினேன்!
நன்றி, சிறில் அவர்களே!
'Too many cooks spoil the taste'அப்படின்னு ஒன்னு இருந்தாலும் இந்த கதை சுவையாகத்தான் இருக்கு. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
SK அய்யா,
கதை / கவிதை இரண்டும் "நல்லாயிருக்குதுங்க.."
//'Too many cooks spoil the taste'அப்படின்னு ஒன்னு இருந்தாலும் இந்த கதை சுவையாகத்தான் இருக்கு. இருவருக்கும் வாழ்த்துக்கள்.//
'Too many cooks spoil the taste' தான் கூடாதுன்னு சொல்லுவாங்க! ஆனா, இங்கே 2 [two]குக்ஸ் தானே!
அதான் சரியா வந்திருக்கு!!
:))
நன்றி, ஜெஸிலா!
இரண்டு பேரையும் பகைச்சுக்க வேணாம்னு டிப்ளமாடிக்கா சொல்லிட்டீங்க போல, சிபா!
:))
Post a Comment