Wednesday, August 09, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!"

"இன்னாபா! நா நட்பை பத்தி சொன்னது புடிச்சுதா ஒன் ஃபிரன்டுங்களுக்கு?" என்ற பழக்கமான குரல் கேட்டு தெற்கு மாடவீதியில் போய்க்கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தால்...மயிலை மன்னார் ஒரு டீக்கடை வாசலில் நின்று கொண்டு ஒரு பீடியை வலித்துக் கொண்டிருந்தான்.

"உன்னைப் பாக்க இன்னிக்கு சாயங்காலம் வரலாம்னு இருந்தேன்! நீ இங்கேயே இருக்கியே" என்று அவன் அருகில் சென்றேன்.

" உன்னுடைய குறள் விளக்கம் ரொம்பப் பேருக்குப் பிடித்துத்தான் இருந்தது; ஆனால்,....." என்று இழுத்தேன்.

"இன்னா: இன்னா விசயம்? ஏன் பம்முற?" என்று அதட்டினான் மன்னார்.

"தயக்கம் எல்லாம் ஒன்றுமில்லை. நட்பைப் பற்றி நல்லாத்தான் சொன்னே நீ! இப்போ சில மக்களுக்கு ஒரு சந்தேகம். நட்பின் பெருமை எல்லாம் சரிதான். நல்ல நட்பு எது? தீய நட்பு எது? என்று எப்படி இனம் கண்டு கொள்வது? என்று கேட்கிறார்கள்" என்றேன்.

" இம்புட்டுதானே! இத்த சொன்ன அய்யன் அத்த சொல்லாமப் பூடுவாரா என்ன? அந்த புக்குல எம்பதாவது அதிகாரத்தை பொரட்டு! ஒண்ணொண்ணா ஒயுங்கா படி. நா சொல்றத எய்திக்கோ!" என்று அதிகாரமாய்ச் சொன்னான்.

நான் ஒன்றொன்றாகக் குறள்களைப் படிக்க அவன் சொன்னது பின் வருவது!


"நட்பாராய்தல்"

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. [791]


இதான் நீ மொதல்ல தெரிஞ்சுக்க வேண்டியது. கவனமாக் கேட்டுக்கோ!
இப்ப, நீ ஒருத்தராண்ட தோஸ்தாவறதுக்கு முன்னாடியே, இவன் யாரு, இந்த ஆளோட நட்பு வெச்சுக்கறது நமக்குத் தேவைதானான்னு யோசிச்சு முடிவு பண்ணணும். ஏன்னா, அப்படி ஆயிட்டேன்னு வெச்சுக்கோ; அதுக்கு அப்பால, நீ இன்னா பண்ணினாலும் ஒன்னால உடவே முடியாது.கால சுத்தின பாம்பு மாதிரி அது சுத்திக்கினே இருக்கும்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும். [792]


மேல சொன்ன மாரி, யோசிக்காம ஃப்ரென்சிப் வெச்சுக்கிட்டியோ, அது ஒன்னை சாவற வரைக்கும் வுடாது. ஒன்னியே போட்டுத்தள்ளாம போவாது! சொல்லிப்புட்டேன்...ஆமாம். அதுனால, நல்லா ஆராஞ்சு பாக்கணும்கறது ரொம்ப முக்கியம்.

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு. [793]


சரி! அப்பிடி இன்னாத்த ஆராயணும்னு கேக்கிறியா? அவன்ட்ட இருக்கற கொணம் இன்னா?, அவன் பொறந்த எடம் எப்பிடியாப்பட்டது?, அவன்ட்ட இன்னென்னா கெட்ட கொணம் இருக்குது, அவன் கூட இருக்கற சொந்தத்துல எவனாச்சும் கேப்மாரி இருக்கானா? இத்தெல்லாம் நல்லா விசாரிச்சுப் பாத்து அப்பாலதான் அவனோட தோஸ்தாவணும்!

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. [794]


நல்ல குடும்பத்துல ஒர்த்தன் பொறந்துருக்கான்னு வெச்சுக்க, அவன் இந்த பளி, பாவத்துக்கெல்லாம் அஞ்சறனா;..... அவனை கப்புன்னு புடிசுக்கோ! அதுக்கோசறம், அவன் இன்னா கேட்டாலும் மறுப்பு சொல்லாம கொட்த்துட்டு அவனோட சேந்துக்கோ! அவன் சிகரட் புடிக்கக் கூடாதுண்றானா, இல்ல, தெனம் கொறளைப் படிக்கணும்றானா, இது மாரி வேற எதுனாச்சும் கேக்கறனா, அல்லாத்துக்கும் சரி, சரின்னு சொல்லி செஞ்சிடு!

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். [795]


நீ எதுனாச்சும் ராங்கா செய்யணும்னு அவன்ட்ட போய் சொன்னவொடனே ஒன்னை பளாருன்னு அறைஞ்சி, ஒன் மொவத்துல காறித்துப்பி, "அடப் பேமானி! ஒனக்கு ஏன் இப்பிடி புத்தி எத்தையோ திங்கப் போவுது"ன்னு சொல்லி ஒன்னிய அள வெச்சுட்டு, கூடவே, ஒன் மோவாயப் புடிச்சுக்கிட்டு, "கண்ணூ! இத்தச் செஞ்சியின்னா இன்னா ஆவும் தெரியுமா? போலீஸ்காரன் வந்து அப்பிடியே கொத்தா அள்ளிக்கினு பூடுவான்"ன்னு ஒனக்கு நல்லதும் சொல்றானா ஒர்த்தன்! வுடாதெ அவனை! சும்மா கொரங்குக்குட்டி கணக்கா கெட்டியாப் புடிச்சுக்கோ!

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். [796]


இல்லியா; ஒன்னை கெட்ட வளிக்குத் திருப்பி ஒன்னிய மாட்டி வுட்டுட்டு அவன் அம்பேல் ஆயிட்டானா? கவிலிய வுடு! ஒண்ணுமில்லையின்னாலும் இப்ப அவன் யாரு, எப்பிடிப்பட்டவன்னாவுது தெரிஞ்சு பூடிச்சுல்ல! அந்த மட்டும் லாபம்னு எடுத்துக்க! வுடு ஜூட்டு அவன்ட்டேந்து!

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். [797]


அப்பிடிப்பட்ட ஒரு சோமாரிய, 'சனியன் வுட்டுது'ன்னு ஓடறெல்ல? அதான் ஒனக்கு அட்ச்ச லாட்டரி பிரைசுன்னு நெனச்சுக்கொ!

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. [798]


ஒன்ன ஒர்த்தன் சதா மட்டம் தட்டிக்கினே இருக்கானா? இன்னாடா இவன் இப்பிடி நம்மள பேஜார் பண்ணிக்கினே இருக்கானேன்னு நெனைக்க வெக்கிறானா ஒன்ன? அவனோட சேராத! அதேமாரி, ஒனக்கு ஒரு கஸ்ட காலம் வர்றப்ப, கண்டுக்காம அபீட்டு ஆறான் பாரு; அவுனையும் லிஸ்டுலேந்து தூக்கிடு!

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும். [799]


அப்பிடி ஒன்னோட கெட்ட நேரத்துல வுட்டுட்டு ஓடினான் பாரு, அவன் நெனப்பு நீ சாவற காலத்துலகூட வந்து ஒம்மனசைப் போட்டு வாட்டிரும். அப்ப வர்ற, அந்த நெனப்பு இருக்கே, அது அந்த சாவ வுட கலீஜா இருக்கும், மவனெ, ஒனக்கு!

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. [800]


இப்ப இதுவரைக்கும் சொன்ன கெட்ட கொணம் அல்லாம் இல்லாதவனாப் பாத்து அவங்கூட ஃப்ரென்ட்சிப் வெச்சுக்க! அப்பிடி இல்லியா! இன்னா துட்டு செலவானாலும் சரி; இல்ல அவன் இன்னாக் கேட்டாலும் சரி அந்தக் கஸ்மாலத்தக் குடுத்தாவுது, "ஆள வுடுப்பா சாமி"ன்னு அவனக் கட் பண்ணிரு!

இப்பப் புரிஞ்சுதா? ஆர சேத்துக்கணும்? ஆர வெட்டணும்னு?

சரி, சரி, நம்ம கோவாலபொரம் கோயிந்தன் "ஏதோ பிரச்சின மாமூ"ன்னு தகவல் சொல்லி அனுப்பிச்சிருந்தான். நீயும் வா! இன்னான்னு கேட்டுட்டு வருவோம்' என்று சொல்லி உரிமையுடன் என் தோளில் கை போட்டு அணைத்தவாறு வெள்ளையாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

பெருமையுடன் நானும் அவன் தோளில் என் கையைப் போட்டுக்கொண்டு கூட நடந்தேன்!

போங்க! நீங்களும் உங்கள் நண்பர்களைப் பற்றி ஒரு திறனாய்வு செய்யுங்கள் ஐயன் சொன்னபடி!

42 பின்னூட்டங்கள்:

SK Wednesday, August 09, 2006 1:26:00 AM  

வணக்கம்!
[சோதனை ஓட்டம்!]

கோவி.கண்ணன் Wednesday, August 09, 2006 10:21:00 AM  

// ஒருத்தராண்ட தோஸ்தாவறதுக்கு முன்னாடியே, இவன் யாரு, இந்த ஆளோட நட்பு வெச்சுக்கறது நமக்குத் தேவைதானான்னு யோசிச்சு முடிவு பண்ணணும். ஏன்னா, அப்படி ஆயிட்டேன்னு வெச்சுக்கோ; அதுக்கு அப்பால, நீ இன்னா பண்ணினாலும் ஒன்னால உடவே முடியாது.கால சுத்தின பாம்பு மாதிரி அது சுத்திக்கினே இருக்கும்//

sk .. சென்னைக் கச்சேரி ... நல்லா கலைகட்டியிருக்கிறது ... நட்புக்கு இலக்கணததை சும்மா வூடுகட்டி வெளயாண்டிருக்கிங்க ... கலக்கல் கானா !

நானும் ஒரு குறளை மாற்றிப் போடுகிறேன்.

குணம்நாடி குற்றம்நாடி அவற்றுள் இல்லா
பகைநாடி உறவு கெடேல் !

:) :)

SK Wednesday, August 09, 2006 10:28:00 AM  

பதிவு போட்டு பனிரண்டு மணி நேரம் ஆகிறது!
என்னடா யாருமே வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!
உங்கள் பாராட்டு வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது!
மிக்க நன்றி, கோவியாரே!

SK Wednesday, August 09, 2006 10:50:00 AM  

முதல் வருகைக்கும், முழுமையான பாராட்டுக்கும் மிக்க நன்றி, திரு. வளவன்!

சிறில் அலெக்ஸ் Wednesday, August 09, 2006 10:50:00 AM  

எல்லாரும் இப்பா ஆராய்ந்து பின்னூட்டம் போட ஆரம்பிச்சிட்டாங்க

:)

தொடரட்டும் குறள் பணி..

நானும் அடுத்து ஒண்ணு போட்டுரலாம்னு இருக்கேன்.

SK Wednesday, August 09, 2006 10:57:00 AM  

//எல்லாரும் இப்பா ஆராய்ந்து பின்னூட்டம் போட ஆரம்பிச்சிட்டாங்க//

ஆராய்ந்து ஒதுக்கிட்டாங்களோன்னு பயந்துட்டேன்!! :))

//நானும் அடுத்து ஒண்ணு போட்டுரலாம்னு இருக்கேன்.//

வாங்க! வாங்க, சிறில்! மாத்தி மாத்திப் போட்டு குறளைக் [குரலைக்?!] காட்டுவோம்!
:)

கப்பி பய Wednesday, August 09, 2006 11:07:00 AM  

மறுபடியும் தோஸ்து கலாசிட்டாம்பா..

அருமை எஸ்.கே..
தொடரட்டும் மன்னாரின் குறள் விளக்கம்..
நன்றி...

கோவி.கண்ணன் Wednesday, August 09, 2006 11:15:00 AM  

//பதிவு போட்டு பனிரண்டு மணி நேரம் ஆகிறது!
என்னடா யாருமே வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!//

வாத்தியாரே ... கொரலு உட்ட சத்தம் கேட்கவே இல்லை வாத்தியாரே !

கொரலு வுட்டா நம்பளாண்ட சொல்லிவுடுங்க ... அப்பால நம்ப ஆளுங்களை இட்டுனு வந்து ஒடனே எதிர் கொரல உட்டுடுவோம்.

அண்ணாத்தே உட்டது கொரலு இல்ல அண்ணாத்தே உரலு ... ! ஒன்னு ஒன்னு இடியா எறங்கிருக்கு... அடிச்ச சரக்கு எறங்கிப் போச்சு ... அப்பால சரக்கு அடிக்கிறத உட்டுன்னு மட்டும் என்னாண்டா ஸொல்லக் கூடாது ... ஆமாம் .. சொல்லிப்புட்டேன் ... ! :)

நானு மன்னாரை கண்டுகினேன்னு ஸொல்லு அண்ணாத்தே !

:)

SK Wednesday, August 09, 2006 11:31:00 AM  

அப்பாடா!
இப்பத்தான் மன்னார் முகத்தில் ஒரு சிரிப்பைப் பார்த்தேன், கப்பிப்பய!

நீங்களும் போய் நட்போடு ராக்கி கட்டுங்கள், ஆராய்ந்து பார்த்து!

SK Wednesday, August 09, 2006 11:35:00 AM  

நான் என்ன செய்வது கோவியாரே!

நீங்களெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த நேரமாய்ப் பார்த்து மன்னார் சொன்னதைப் போட்டது என் தவறுதான்!

:))

தேவ் | Dev Wednesday, August 09, 2006 11:37:00 AM  

கலக்கறீங்க எஸ்.கே.... தொடரட்டும் உங்கள் குறள் கூறும் பணி...

மன்னார் சோக்காத் தான் சொல்லிகீறப்பா

இராம் Wednesday, August 09, 2006 11:46:00 AM  

மன்னாருக்கு நம்ம வணக்கத்த சொல்லிறுங்க எஸ்கே சார்...

SK Wednesday, August 09, 2006 11:46:00 AM  

மன்னாரிடம் உங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன், தேவ்.

அவனும் சந்தோஷப்பட்டான்.

இருந்தாலும், " சும்மா இப்பிடி பொத்தாம் பொதுவுல பாராட்டுனாப் போறுமா!

அண்ணாத்த, பலானுது, பலானுது புடிச்சுது, இத்தினியாவது கொறளுக்கு நீ சொன்னுது நல்லா இருந்துச்சு, இல்ல இங்கன சொதப்பிட்ட"ன்னு சொன்னால் நல்லாருக்கும்ல"
என்று குறை பட்டுக் கொண்டான்!

அவன் சொன்னதை இங்கு சொல்லி விட்டேன்!
அதுதானே என் வேலை!

SK Wednesday, August 09, 2006 11:49:00 AM  

உடனே சொல்லி விட்டேன், ராம்!

"சாராண்டையும் நம்ம ரெஷ்பெட்டை சொல்லிருப்பா" என்று சொன்னான்!

கோவி.கண்ணன் Wednesday, August 09, 2006 11:59:00 AM  

//குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. [794]


நல்ல குடும்பத்துல ஒர்த்தன் பொறந்துருக்கான்னு வெச்சுக்க, அவன் இந்த பளி, பாவத்துக்கெல்லாம் அஞ்சறனா;..... அவனை கப்புன்னு புடிசுக்கோ! அதுக்கோசறம், அவன் இன்னா கேட்டாலும் மறுப்பு சொல்லாம கொட்த்துட்டு அவனோட சேந்துக்கோ! அவன் சிகரட் புடிக்கக் கூடாதுண்றானா, இல்ல, தெனம் கொறளைப் படிக்கணும்றானா, இது மாரி வேற எதுனாச்சும் கேக்கறனா, அல்லாத்துக்கும் சரி, சரின்னு சொல்லி செஞ்சிடு!

பலானுது, பலானுது புடிச்சுது, இத்தினியாவது கொறளுக்கு நீ சொன்னுது நல்லா இருந்துச்சு, இல்ல இங்கன சொதப்பிட்ட"ன்னு சொன்னால் நல்லாருக்கும்ல"
//

அண்ணாச்சி என்ன இப்படி சொல்லுதிய ... நம்ம வள்ளுவரு சொன்னது எல்லாமே நால்லாதேனே இருக்கு ... இருந்தாலும் கேட்டியலே ன்னு சொல்லுதேன் ..

சொல்லுதேன் கேட்டுக்கலேன்னு சொல்லி ... நல்ல குடும்பத்து ஆளங்களை பாத்தா இவன் தான் நம்ம ப்ரண்டுன்னு ... நல்லா கெட்டியா புடுச்சிகனும்லேன்னு போட்டிருக்கீக இல்லையா ... அது தான் எல்லாதுக்கும் மேல நெஞ்ச தொட்டுடுச்சி அண்ணாச்சி :)

இராம் Wednesday, August 09, 2006 12:00:00 PM  

மறுக்க இன்னோரு வணக்கம் அண்ணாத்தே.... உங்களுக்கு இல்லை எஸ்கே....:-) மன்னாருக்கு.

என்னாமா திங்க் பண்ணி சொல்லறாரு குறள் விளக்கம்.

SK Wednesday, August 09, 2006 12:12:00 PM  

நீங்க சொன்னதை மன்னாரிடம் காட்டினேன்!

பார்த்துவிட்டு, "சிரிக்கறதா, அய்வுறதான்னு தெரியல இவரு சொல்றதப் பாத்து!

அய்யன் கொரளு என்னிக்காவுது தப்பாப் போவுமா?

நா சொன்னதுல எதுனாச்சும் குத்தம் கொறை இருக்கப்பான்னு கேட்டா, இவுரு இப்பிடி சொல்றாரே!" என்றான்!!

இத்தனைக்கும் நடுவில் உங்களுக்கு நன்றி சொல்ல மறக்கவில்லை அவன்!

SK Wednesday, August 09, 2006 12:20:00 PM  

இன்னாபா! ராமுத்தம்பி! நல்லா இருக்கியா! ஒடம்ப கவனமாப் பாத்துகோப்பா! எதுனாச்சும்னா ஒரு கொரலு குடு, சரியா! வூட்ல அல்லாரையும் கேட்டேன்னு சொல்லு!

வெற்றி Wednesday, August 09, 2006 1:28:00 PM  

SK அய்யா,
வணக்கம்.

//குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு. [793]

சரி! அப்பிடி இன்னாத்த ஆராயணும்னு கேக்கிறியா? அவன்ட்ட இருக்கற கொணம் இன்னா?, அவன் பொறந்த எடம் எப்பிடியாப்பட்டது?, அவன்ட்ட இன்னென்னா கெட்ட கொணம் இருக்குது, அவன் கூட இருக்கற சொந்தத்துல எவனாச்சும் கேப்மாரி இருக்கானா? இத்தெல்லாம் நல்லா விசாரிச்சுப் பாத்து அப்பாலதான் அவனோட தோஸ்தாவணும்!//

இது நடைமுறைச் சாத்தியமா?

பி.கு:- வட்டார மொழிகள் அழியவிடாது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், குறளுக்கு உங்களின் வழமையான பாணியில் கவிதைத் தமிழில், நல்ல அழகு தமிழில் விளக்கம் தரக்கூடாதா? உங்களின் வட்டாரத்தமிழுக்கல்ல, உங்களின் அழகான தமிழுக்குத்தான் பலர் [என்னையும் சேர்த்து] இரசிகர்கள் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்கிறேன். மிக்க நன்றி.

நாமக்கல் சிபி Wednesday, August 09, 2006 2:27:00 PM  

SK,
இப்படி திடீர் அதிர்ச்சி எல்லாம் கொடுக்கறீங்க???

//குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு. [793]

சரி! அப்பிடி இன்னாத்த ஆராயணும்னு கேக்கிறியா? அவன்ட்ட இருக்கற கொணம் இன்னா?, அவன் பொறந்த எடம் எப்பிடியாப்பட்டது?, அவன்ட்ட இன்னென்னா கெட்ட கொணம் இருக்குது, அவன் கூட இருக்கற சொந்தத்துல எவனாச்சும் கேப்மாரி இருக்கானா? இத்தெல்லாம் நல்லா விசாரிச்சுப் பாத்து அப்பாலதான் அவனோட தோஸ்தாவணும்//

இந்த மாதிரி எதுவும் பார்க்காம வந்த கர்ணன் - துரியோதனன் நட்புதான் சிறந்ததுனு நான் நினைக்கிறேன்.

SK Wednesday, August 09, 2006 2:40:00 PM  

/இது நடைமுறைச் சாத்தியமா?//

அன்பு நண்பர் வெற்றி அவர்களே,

இவர் இன்னார் எனத் தெரிந்து கொள்ளல்தான் நட்பின் முதல் நிலை.

அப்படித் தெரிந்தவர்கள் எல்லாம் நண்பராவதில்லை; நாமும் நண்பராக்கிக் கொள்வதில்லை.

வள்ளுவப் பெருமான் என்ன சொல்கிறார் என்றால்,
அப்படித் தெரிந்து கொண்டபின், சிலரை உனக்குப் பிடித்துப் போகலாம்.
அவரோடு நட்பு வைத்துக் கொள்ளவும் நினைக்கலாம்.

அப்படியாயின், இன்னும் அவரோடு சற்று இணங்கிப் பழகி, அவரைப் பற்றிய மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

இதுஇரண்டாம் நிலை.

ஐயன் கூறியதற்கு இணங்க, குணநலன்கள் அமையுமாயின், பின்னரே அவரோடு 'நட்பு' என்னும் உறவைத் தொட[ர] வேண்டும்.

இது நடைமுறையில் கூடுமானவரை சாத்தியம் என்றே தோன்றுகிறது.

//குறளுக்கு உங்களின் வழமையான பாணியில் கவிதைத் தமிழில், நல்ல அழகு தமிழில் விளக்கம் தரக்கூடாதா?//

உங்களது பின்குறிப்பைக் கண்டு மனமுவந்தேன்.

வலைபதிய ஆரம்பித்த பின்னர் நான் இப்படி வட்டாரத்தமிழில் எழுதிய இரண்டாவது பதிவு என்பதை தங்களுக்கு அன்புடன் நினைவு கூருகிறேன்.

தொடர்ந்து கவிதைகளாகவே எழுத எண்ணித்தான், திருப்புகழைக் கூட அப்படியே சொல்லத் துணிந்தேன்.
அவ்வாறு எழுதியதன் மூலம்,

வழக்கமாக வந்து கொண்டிருந்த ஒரு சிலர் மறுமொழியிடாமல் சென்ற போனதாலும்,

அப்படி மறுமொழியிட்ட சிலரும், அருமை, அருமை என்ற அளவில் நிறுத்தியதாலும்,

சற்று நடையை மாற்றலாமே என்று இப்புதுப் பதிவை எழுதியபோது தோன்றியது!! :)

அதற்குக் கிடைத்த வரவேற்பும் கொஞ்சம் மயங்க வைத்ததும் உண்மையே!

இதனைத் தொடர்ந்து எழுத முதலில் நினைக்கவில்லை.
சில நண்பர்கள் இதில் கேள்விகள் கேட்டபோது, அதனைத் தொடர்ந்து இன்னொரு அதிகாரம் எழுத நினைத்த போது, மயிலை மன்னாரின் பானியிலேயே தொடரலாம் என முடிவு செய்தேன்.........
அதிகமான பேருக்கு இது பயன்படுகிறதே என நினைத்து!

அதில் கூட என்னுடைய உரையாடல்களை நல்ல தமிழில்தான் எழுதி வருகிறேன் என்பதைக் கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

மற்றபடி, இன்னமும் கவிதைகளும், திருப்புகழ் கவிதை விளக்கமும் தொடர்ந்து எழுதியே வருகிறேன்.
இன்னமும் எழுதுவேன்.

தங்களது மேலான பரிவுக்கும், நினைவூட்டலுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் விருப்பத்தையும் நினைவில் கொண்டு எழுதுவேன் எனவும் சொல்லிக் கொள்கிறேன்.

SK Wednesday, August 09, 2006 2:48:00 PM  

//SK,
இப்படி திடீர் அதிர்ச்சி எல்லாம் கொடுக்கறீங்க???

இந்த மாதிரி எதுவும் பார்க்காம வந்த கர்ணன் - துரியோதனன் நட்புதான் சிறந்ததுனு நான் நினைக்கிறேன்.//


இரண்டாவது குறள் விளக்கத்தைப் பார்க்கச் சொல்கிறான் மன்னார்!

இப்போது சற்று அவசர வேலையாகப் போய்க்கொண்டிருப்பதால், அதைப் படித்த பின்னரும் உங்கள் ஐயம் தீரவில்லையெனில், ஐயன் இப்படிச் சொன்னதின் விளக்கத்தை விரித்துச் சொல்வானாம்!

SK Wednesday, August 09, 2006 2:54:00 PM  

கூடவே திரு. வெற்றி அவர்களுக்கு எழுதிய பதிலையும் படிக்கச் சொன்னான்.!!

கோவி.கண்ணன் Wednesday, August 09, 2006 10:14:00 PM  

//இந்த மாதிரி எதுவும் பார்க்காம வந்த கர்ணன் - துரியோதனன் நட்புதான் சிறந்ததுனு நான் நினைக்கிறேன். //

வெட்டிப் பயல் அவர்களுக்கு ஒரு ஷொட்டு ... நீங்கள் சொல்லும் நட்புகள் நடைமுறையில் சாத்தியாமாகி இருக்கிறது ... நட்புக்கு குலம் கோத்திரம் இல்லை... உள்ளமும் அதில் அன்பும் இருந்தால் போதும். நல்லக் கருத்து.

//சற்று நடையை மாற்றலாமே என்று இப்புதுப் பதிவை எழுதியபோது தோன்றியது!! :)//

எஸ்கே..
சொல் நடை மாறி இருந்தாலும் பொருள் நடை மாறவில்லை என்பது நான் கண்டுகொண்ட உண்மை... ஆடிக் கறந்தாலும் , பாடிக் கறந்தாலும் சிலவேளைகளில் கறப்பது என்ற அளவில் சரி என்று நினைக்கிறேன்.

நாமக்கல் சிபி Thursday, August 10, 2006 4:32:00 PM  

//இரண்டாவது குறள் விளக்கத்தைப் பார்க்கச் சொல்கிறான் மன்னார்!
//
நீங்க சொன்ன குறள்
//
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும். [792]

மேல சொன்ன மாரி, யோசிக்காம ஃப்ரென்சிப் வெச்சுக்கிட்டியோ, அது ஒன்னை சாவற வரைக்கும் வுடாது. ஒன்னியே போட்டுத்தள்ளாம போவாது! சொல்லிப்புட்டேன்...ஆமாம். அதுனால, நல்லா ஆராஞ்சு பாக்கணும்கறது ரொம்ப முக்கியம்.
//

SK ஐயா,
பூமில பிறந்த எல்லாரும் சாகத்தான் போறாங்க...ஆனால் அவுங்க நட்பு சாகலை பார்த்தீங்கல்ல...
எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் துரியோதனனையும் - கர்ணனையும் தான் நட்புக்கு உதாரணமா சொல்றோம்!!!

எதையும் ஆராய்ந்து பார்க்காம வரதுதான் அன்பு, நட்பு எல்லாம்.

குமரன் (Kumaran) Saturday, August 12, 2006 11:09:00 PM  

எஸ்.கே. மயிலை மன்னார் ரொம்ப நல்லாத் தான் திருக்குறளுக்குப் பொருள் சொல்கிறார். அருமை அருமை. (ஓ. உங்களுக்கு இப்படி மட்டும் சொல்லிட்டுப் போனா பிடிக்காதோ? சரி சரி கொஞ்சம் விளக்கமாவே பின்னூட்டம் போட்டுடலாம்). :-)

குமரன் (Kumaran) Saturday, August 12, 2006 11:10:00 PM  

//தெற்கு மாடவீதியில் //

தெற்கு மாட வீதின்னா காய்கறி கடைகள் எல்லாம் இருக்குமே அந்தப் பக்கமா?

குமரன் (Kumaran) Saturday, August 12, 2006 11:12:00 PM  

//இத்த சொன்ன அய்யன் அத்த சொல்லாமப் பூடுவாரா என்ன?//

அய்யனா ஐயனா? ஐயன் வள்ளுவன்னு தெளிவாச் சொல்லுவாரே நம்ம மன்னாரு? நீங்க தான் சரியாக் கேக்கலியோ?

குமரன் (Kumaran) Saturday, August 12, 2006 11:13:00 PM  

//கால சுத்தின பாம்பு மாதிரி அது சுத்திக்கினே இருக்கும்.
//

இதப் படிச்சதும் 'ஒரு பக்கம் திருப்புகழ். ஒரு பக்கம் விஷம்' என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது எஸ்.கே. இந்தப் பொன்மொழியை நீங்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்னு நினைக்கிறேன். :-)))

குமரன் (Kumaran) Saturday, August 12, 2006 11:15:00 PM  

//ஒன்னியே போட்டுத்தள்ளாம போவாது! //

சில நேரம் முத்திரையும் போட்டுத் தள்ளும்.

குமரன் (Kumaran) Saturday, August 12, 2006 11:19:00 PM  

//சரி! அப்பிடி இன்னாத்த ஆராயணும்னு கேக்கிறியா? அவன்ட்ட இருக்கற கொணம் இன்னா?, அவன் பொறந்த எடம் எப்பிடியாப்பட்டது?, அவன்ட்ட இன்னென்னா கெட்ட கொணம் இருக்குது, அவன் கூட இருக்கற சொந்தத்துல எவனாச்சும் கேப்மாரி இருக்கானா? இத்தெல்லாம் நல்லா விசாரிச்சுப் பாத்து அப்பாலதான் அவனோட தோஸ்தாவணும்!
//

இத ஒத்துக்க முடியலையே. பொறந்த இடம் எப்படிப் பட்டதா இருந்தா என்ன, நல்ல குணம் எல்லா இடத்திலும் உள்ளது தானே. அதனைத் தானே முதலில் சொல்கிறார் ஐயன். அது தான் மிக முக்கியம்.

நேர்மறையும் எதிர்மறையும் இந்தக் குறளில் சொல்லியிருக்கிறார் ஐயன். குணன் நேர்மறை. நல்ல குணங்கள் என்ற பொருளில். குற்றம் எதிர்மறை. குற்றங்குறை என்ற பொருளில். குன்றா இனன் நேர்மறை. நீங்காத உறவினர் என்ற பொருளில். அப்படிப் பார்க்கும் போது குடிமை என்பதை நேர்மறை என்று சொல்வதா? எதிர்மறை என்று சொல்வதா? குற்றத்தைப் பார்த்து விலக்கச் சொன்னவர் குடிமையைப் பார்த்து விலக்கச் சொன்னாரா சேரச் சொன்னாரா?

குமரன் (Kumaran) Saturday, August 12, 2006 11:21:00 PM  

//பெருமையுடன் நானும் அவன் தோளில் என் கையைப் போட்டுக்கொண்டு கூட நடந்தேன்!
//

:-)))

குமரன் (Kumaran) Saturday, August 12, 2006 11:24:00 PM  

போன திருக்குறள் பதிவில் மற்றவர்களையும் இதே மாதிரி அவரவர் பாணியில் திருக்குறள் விளக்கத்தைச் சொல்ல அழைத்திருந்தீர்கள். நான் ஏற்கனவே இன்பத்துப் பாலுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கி ஒரு தனி வலைப்பூவே வைத்திருக்கிறேனே. அதில் தொடரலாம் என்று இருக்கிறேன். தற்போது வேலை அதிகமாக இருப்பதால் கொஞ்சம் நாளுக்கு பதிவுகள் இடுவதை நிறுத்திவைத்திருக்கிறேன். ஆகஸ்டு ஒன்றாம் நாளிலிருந்து பதிவுகள் இடவில்லை. பின்னூட்டங்களும் குறைவாகவே இடுகிறேன். ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகள் படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அடியேன் படிப்பதில்லை என்று வருத்தப் படாதீர்கள்.

SK Sunday, August 13, 2006 12:20:00 AM  

//தெற்கு மாட வீதின்னா காய்கறி கடைகள் எல்லாம் இருக்குமே அந்தப் பக்கமா? //

உங்கள் எல்லாப் பின்னூட்டங்களையும் படித்து மகிழ்ந்தேன்! திரு. குமரன்!

மன்னரிடமும் காட்டினேன்!

இதோ அவன் சொன்ன பதில்கள்!

இன்னாபா! இதுக்குத்தான் அடிக்கடி நம்ம ஊருக்கு வந்து போய்க்கினு இருக்கணுங்கறது!
காய்கறிக்கடையெல்லாம் இருக்கறது வடக்கு மாடவீதிபா!
நசநசன்னு ஒரே கூட்டம் புடிங்கித் தள்ளும்!
நாம அங்கனே எல்லாம் போனா ஆரையும் கன்டுக்க முடியாது!
மேக்கு வீதியும், தெக்கு வீதியும் கூட்ற ஜங்சன்ல ஒரு டீக்கடை கீது பாரு, அங்கன தான் எப்பவும் வயக்கமா நிக்கரது!
அடுத்த தபா வரும்போது மறக்காம வந்து கண்டுக்கினு போங்க இன்னா!

SK Sunday, August 13, 2006 12:23:00 AM  

//அய்யனா ஐயனா? ஐயன் வள்ளுவன்னு தெளிவாச் சொல்லுவாரே நம்ம மன்னாரு? நீங்க தான் சரியாக் கேக்கலியோ? //


நாம சொல்றது எப்பவுமே ஐயன்னுதான்!
இல்லேன்னா, இந்த ஐய்யரு பசங்களோட கன்ஃபூசன் ஆயிடும்ல!
நம்ம புள்ளையாண்டாந்தான் தப்பா எளுதிட்டான்!
மன்னிச்சு வுட்ருப்பா!
இனிமே இதுமாரி வராம எளுதச் சொல்றேன்!

SK Sunday, August 13, 2006 12:24:00 AM  

//இதப் படிச்சதும் 'ஒரு பக்கம் திருப்புகழ். ஒரு பக்கம் விஷம்' என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது எஸ்.கே. இந்தப் பொன்மொழியை நீங்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்னு நினைக்கிறேன். :-)))//

ஆக்காங்! இவங்கூட ரொம்ப வருத்தப்பட்டான், இதுமாரி சொல்ட்டாங்களேன்னு!
அதெல்லாம் சகஜம்தான்! நீ ரொம்ப ஃபீல் பண்ணாதேன்னு நாந்தான் தேத்தி அனுப்ச்சேன்!

SK Sunday, August 13, 2006 12:26:00 AM  

//சில நேரம் முத்திரையும் போட்டுத் தள்ளும்.//


அத்தெல்லாம் பத்தி கவலப்பட்டுக்கினு இருந்தா வேலைக்கு ஆவாது!

சும்மா போய்க்கினே இருக்கணும்!

SK Sunday, August 13, 2006 1:07:00 AM  

//இத ஒத்துக்க முடியலையே. பொறந்த இடம் எப்படிப் பட்டதா இருந்தா என்ன, நல்ல குணம் எல்லா இடத்திலும் உள்ளது தானே. அதனைத் தானே முதலில் சொல்கிறார் ஐயன். அது தான் மிக முக்கியம்.

நேர்மறையும் எதிர்மறையும் இந்தக் குறளில் சொல்லியிருக்கிறார் ஐயன். குணன் நேர்மறை. நல்ல குணங்கள் என்ற பொருளில். குற்றம் எதிர்மறை. குற்றங்குறை என்ற பொருளில். குன்றா இனன் நேர்மறை. நீங்காத உறவினர் என்ற பொருளில். அப்படிப் பார்க்கும் போது குடிமை என்பதை நேர்மறை என்று சொல்வதா? எதிர்மறை என்று சொல்வதா? குற்றத்தைப் பார்த்து விலக்கச் சொன்னவர் குடிமையைப்
பார்த்து விலக்கச் சொன்னாரா சேரச் சொன்னாரா?//

சர்யாத்தான்பா புரிஞ்சுக்கினு இருக்கே! நமக்கு இந்த உள்குத்து, வெளிக்குத்துல்லாம் ஒண்ணும் தெரியாது! நமக்கு எப்பவுமே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்! ஐயன் இன்னா சொன்னாரோ, அத்தத்தான் நா சொல்லியிருக்கேன்! அல்லாத்தயும் பாத்து, ஜட்ஜு பண்ணி ஒருத்தனோட சேருன்றாரு. நீங்கல்லாம் எதுர்மறையா எடுதுக்கிட்டாலும் சரி, நேருமரையா எடுத்துக்கிட்டாலும் சரி, ஒயுங்கா சூஸ் பண்ணுங்க! அவ்ளோதான்!

SK Sunday, August 13, 2006 1:12:00 AM  

//நான் ஏற்கனவே இன்பத்துப் பாலுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கி ஒரு தனி வலைப்பூவே வைத்திருக்கிறேனே. அதில் தொடரலாம் என்று இருக்கிறேன். தற்போது வேலை அதிகமாக இருப்பதால் கொஞ்சம் நாளுக்கு பதிவுகள் இடுவதை நிறுத்திவைத்திருக்கிறேன். ஆகஸ்டு ஒன்றாம் நாளிலிருந்து பதிவுகள் இடவில்லை. பின்னூட்டங்களும் குறைவாகவே இடுகிறேன். //

அருமையான சப்ஜெக்டு அந்த இன்பத்துப்பாலு! வாரம் ஒருதபாவாவது சொல்லுங்க நைனா!

தேவ் | Dev Monday, August 14, 2006 12:57:00 AM  

This post is featured in VVS parinthurai.

SK Monday, August 14, 2006 12:14:00 PM  

// Dev said...
This post is featured in VVS parinthurai.//


பரிந்துரைக்கு மிக்க நன்றி, திரு. தேவ்!

மன்னாருக்கும் குஷிதான்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP