Saturday, August 05, 2006

அ. அ. திருப்புகழ் -- 6 "புகரப் புங்கப்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 6

"புகரப் புங்கப் பகரக் குன்றில்"

மூவரும் அறியா முதன்மொழிப் பொருளாம் "ஓம்" எனும் பிரணவப்பொருளைத் தனக்கு உபதேசிக்க அருணையார் வேண்டும் அற்புதப் பாடல் இது.
இப்பாடலின் சந்தம் பாடி மகிழக்கூடிய ஒன்று. அருஞ்சொற்கள் நிறைந்த,.. ஆனால், எளிய பாடல்!

ராகம் -- ரஞ்சனி
தாளம் --ஆதி..திஸ்ர நடை

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ......தனதான

.......பாடல்........

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் பொலிவோனும்

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் புகல்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கத் திருமாலும்

திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
தெளிதற் கொன்றைத் தரவேணும்

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் துறைவோனே

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் றருள்வோனே

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே.

-------------------------------------------------------------------------------------

[பின் பார்த்து முன் பார்ப்போம்!]

"தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றித்
தட நல் கஞ்சத்து உறைவோனே"


வீடு பேறு பெற விழைவோர் வேண்டிடும் வித்தையொன்று
இதயமெனும் தாமரையின் உள்ளின்று ஒளிர்ந்திடும்
பரமான்வாவினைத் உணர்ந்து தெரிதலே !
தகராகாசம் எனும் அவ்வழகிய தாமரையின்
உயரிய சிகரத்தின் உச்சியில் உறைவோனே!

"தருணக் கொங்கைக் குறவிக்கு இன்பத்தையளித்து
அனபுற்று அருள்வோனே"


இளமுலை நாயகியாம் குற வள்ளிப் பிராட்டிக்கு
பேரின்பம் வழங்கி அன்புவைத்து அருள்பவனே !

"பகரப் பைம்பொன் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா"


பொன் போலும் ஒளி சிந்தும் உயரிய சிகரங்களை
ஆங்காரமாய்த் தான் கொண்ட கிரவுஞ்ச மலையினை
விட்ட வேலாயுதம் விடுத்து படபடவெனப் பொடிசெய்து
இப்பூமியில் விழுமாறு செய்திட்ட அதிதீரனே!

"பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே."


பவளம்போற் சிவந்து தூய்மையுடன் விளங்கும்
திருமதில்கள் சூழ்ந்து நிற்கும் திருச்செந்தூர்
எனும் பதியில் பெருமையுடன் எழுந்தருளி நிற்கின்ற
கந்தனெனும் பெருமை மிக்க தலைவனே!

"புகரப் புங்கப் பகரக் குன்றில்"

முறம் போலும் காதினிலும், அழகிய துதிக்கையிலும்,
புள்ளிகளைக் கொண்டு மற்றெல்லா உடல் முழுதும்
வெள்ளை நிறம் கொண்டு அழகுற மலைபோல் விளங்கும்
ஐராவதம் என்னும் யானை வாகனத்தின் மீதினிலும்,

"புயலில் தங்கிப் பொலிவோனும்"

மற்றொரு வாகனமாம் மேகத்தின் மேலும்
உலவுகின்ற விண்ணவர் கோமான் இந்திரனும்,

"பொருவில் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பில் புகல்வோனும்"


இணையற்றதும், அனைத்துக் கலைகட்கும் புகலிடமுமான
வேதத் தொகுதிகளின் சீர்மிகு பொருளை உணர்ந்து
சொல்ல வல்ல நான்முகனெனும் பிரமனும்,

"திகிரிச் செம் கட்செவியில் துஞ்ச
அத் திகிரிச் செங்கைத் திருமாலும்"


மலையினை ஒத்ததும், செம்மைப் பண்புகள் மிக்கதுமாய
ஆதி சேடன் எனும், கண்களே காதாய்க் கொள்ளும்
அரவத்தின் மேல் அறிதுயில் கொள்பவரும்,

"அத் திகிரிச் செங்கைத் திருமாலும்"

சக்கராயுதம் தாங்குவதால் சிவந்த கரமலருடைய
நாரயணன் என்னும் திருமாலும்,

"திரிய"

இவர்கள் அனைவரும் தமக்கிந்த உபதேசம்
கிடைத்திடவில்லையே என இங்கும் அங்குமாய்
அலைந்து திரிந்திடும் வேளையினில்,

"பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் தரவேணும்"


மனதினிலே உவகை பொங்கி, எண்ணமெனும் மாய அலைகள்
என் உள்ளத்தினின்று அகன்று செல்லுமாறும்
பேரின்பப் பொருளான சிவானுபூதியினை
யான் உட்கொண்டு, என் உள்ளம் தெளியும் வண்ணம்
அருள் மொழி ஒன்றினை அடியேன் எந்தனுக்கு
உபதேசித்து அருள வேணும்.
-------------------------------------------------------------------------------------

"அருஞ்சொற்பொருள்"

புகர = புள்ளிகளை உடைய
புங்க; துங்க = தூய்மையானது
பகர = அழகியது; ஒளி பொருந்தியது
பொரு இல் = இணையற்றது
சுருதிச் சங்கம் = வேதத் தொகுப்புகள்
திகிரி = மலை; சக்கரம்
கட்செவி = கண்+செவி= கண்ணையே காதாய் உடைய்து பாம்பு. பாம்புக்கு காதுகிடையாது. கண்களாலேயே உணரும் ஆதலின், கட்செவி எனப்படும்.
செங்கை = செம்+கை + சிவந்த கை
திரை அற்று = [எண்ண]அலைகள் நீங்கி
தகரம் = இதயத் தாமரை எனும் கோயில் = தகராலயம்; தகராகாசம் = தகரத் தடம் = எல்லையற்ற பரந்த ஆனந்த வெளி
கஞ்சம் = தாமரை
படி = பூமி
தொடு = விட்டு எறிந்த
புரிசை = மதில்
பெருமாளே = பெருமை மிக்கவரே
-------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!


********************************************************************

14 பின்னூட்டங்கள்:

Sivabalan Sunday, August 06, 2006 12:12:00 AM  

SK அய்யா,

அருஞ்சொற்பொருள் இந்த முறை அதிமாக கொடுத்திருகிறீங்க..

நல்லா இருக்குங்க...


நன்றி.

VSK Sunday, August 06, 2006 12:18:00 AM  

அமாங்க, சிபா!
பாடலைப் படித்தீர்களா!
நல்ல சந்தம்!
உடன் முதல் வருகைக்கு மிக்க நன்றி!

குமரன் (Kumaran) Sunday, August 06, 2006 12:18:00 AM  

இந்தப் பாடலை இதுவரை நான் படித்ததில்லை எஸ்.கே. இது தான் முதன்முறை. அதனால் வாய்விட்டுப் பாடிப் பார்த்தேன். இனிமேல் தான் பொருளினைப் படிக்கவேண்டும். படித்தப் பிறகு இன்னொரு முறை வாய்விட்டுப் பாடினால் இன்னும் அருமையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

Unknown Sunday, August 06, 2006 1:25:00 AM  

அருமையான பாடல்.பொருள் விளக்கம்.பிரணவத்தின் பொருளை அறிய ஆவலாக இருக்கிரேன்.அது அடுத்த பாடலில் வருமா?

கோவி.கண்ணன் Sunday, August 06, 2006 1:38:00 AM  
This comment has been removed by a blog administrator.
Unknown Sunday, August 06, 2006 1:47:00 AM  

அத் திகிரிச் செங்கைத் திருமாலும்"

சக்கராயுதம் தாங்குவதால் சிவந்த கரமலருடைய
நாரயணன் என்னும் திருமாலும்,/////

இந்த பொருள் விளக்கம் சரியா?

அத்திகிரி என்றால் ஒரு ஊர் என நினைக்கிறேன்.அத்திகிரி வரதா என காஞ்சி வரதனை ராமாநுஜ முனி அழைத்திருக்கிறார்.

அத்திகிரி என்றால் 'சக்கரம் தாங்கிச் சிவந்த கரமுடைய திருமால்' என்று பொருளா அல்லது 'அத்திகிரியில் இருக்கும் சிவந்த கரமலருடைய பெருமாள்' என பொருள் வருமா?

VSK Sunday, August 06, 2006 2:01:00 AM  

திகிரி செம் கட்செவியில் துஞ்ச,
அட் திகிரி செங்கைத் திருமாலும்"
என இருக்கிறது.
'அத்' 'திகிரி' எனத் தனித் தனியே தான் போட்டிருக்கிறார்.
சக்கரம் சுழல்வதால் கை சிவந்தது என்பது சரியாகத்தான் எனக்குப் படுகிறது.
இது அத்தி கிரி அல்ல.
அத் திகிரி.
நன்றி, செல்வன்!

கோவி.கண்ணன் Sunday, August 06, 2006 2:01:00 AM  

SK ஐயா,

பக்தி இலக்கியம் பல இருந்தும், பக்தன்
வேண்டுதல் பலனும் தரும் ஒரு,
முக்தி இலக்கியம் இதுவென்று உணர்ந்து
ஆண்டவன் இளங் குமரனவன் அன்பில்
முத்து மாலை திருப்புகழை முகர்ந்து
கண்டு கொண்ட நல்விளக்கம் இது !

தமிழ்மணப் பூவோடு சேர்ந்த இப்புகழ்
மாலை வீடுபெறும் இறைத் தமிழ்மாலை !
அமிழ்தெனப் பொருள் விளக்கம் ஆக்கிய
மாலை இது, நற்றமிழ் சேர்ந்த திருப்
புகழ் போற்றி அதன்புகழ் தேடுவோர் நாடும் நற்
சாலையிது ! பசுந்தமிழ் பொன் மாலையிது !

வாழ்க உம் இறைத்தமிழ் தொண்டு !

VSK Sunday, August 06, 2006 2:04:00 AM  

திகிரி செம் கட்செவியில் துஞ்ச,
அட் திகிரி செங்கைத் திருமாலும்"
என இருக்கிறது.
'அத்' 'திகிரி' எனத் தனித் தனியே தான் போட்டிருக்கிறார்.
சக்கரம் சுழல்வதால் கை சிவந்தது என்பது சரியாகத்தான் எனக்குப் படுகிறது.
இது அத்தி கிரி அல்ல.
அத் திகிரி.
நன்றி, செல்வன்!

VSK Monday, August 07, 2006 10:02:00 AM  

piraNavaththin poruLai aruNaiyaar viriththuk kURiyadhaaga eedheenum paadal uLLadhaa enath theedik koNdirukkiREn, selvan!

kidaiththadhum pOdugiREn.
-------------------------------------------------------------------------------------

-naRRamizhk kavimaalai niir thoduththu
navirssiyudan navinRittiir, naNbaree!
-naRsaalaiyil nada-ndhu naadhanadi seer-ndhu
-nalampeRa naanum naaduginREn!
-nanRi!
-------------------------------------------------------------------------------------
[Monday morning surathaavin paduththaL!]

G.Ragavan Monday, August 07, 2006 12:21:00 PM  

திருப்புகழுக்குத் திருச்செய்யும் விளக்கம். ஒவ்வொரு பாவும் உங்கள் விளக்கத்தோடு படிக்கையில் உள்ளம் முருகனை நோக்கிப் பாவும்.

தொடும் வேலா என்ற சொற்றொடரை அநுபூதியிலும் அருணகிரி பயன்படுத்தியுள்ளார்.

தேவருக்கும் மூவருக்கும் கிட்டாப் பொருள் தனக்குக் கிட்டப் பாடிய பாடல் அல்லவா! சொற்களின் அடுக்கு கடுக்குக் கடுக்கு என்றிருந்தாலும் படக்குப் படக்கு என்று படிக்கவும் பாடவும் சுகம். இதை இசைவாணர்கள் பாடிக் கேட்டால்!!!!!!!!!!!!!

VSK Monday, August 07, 2006 1:38:00 PM  

//இதை இசைவாணர்கள் பாடிக் கேட்டால்!!!!!!!!!!!!! //


முருகனை உணர்ந்திடும்,
உணர்ந்து உள்ளம் உருகிடும்
அடியவர் போற்றும் பாடலிதை
அறிந்து போற்றிட்ட
அனுபூதி சொல்லும் அருமை அடியவர்
நண்பர் ராகவன் அவர்களே,
நன்றிகள் பல!

ஆம், சும்மா படிக்கவே சுகம்!
அறிந்தவர் பாடினால்.....
ஆம்!கேட்கவும் வேண்டும்!![வேண்டுமோ அல்ல!!!]

குமரன் (Kumaran) Friday, August 18, 2006 7:14:00 AM  

//தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றித்
தட நல் கஞ்சத்து உறைவோனே"

வீடு பேறு பெற விழைவோர் வேண்டிடும் வித்தையொன்று
இதயமெனும் தாமரையின் உள்ளின்று ஒளிர்ந்திடும்
பரமான்வாவினைத் உணர்ந்து தெரிதலே !
தகராகாசம் எனும் அவ்வழகிய தாமரையின்
உயரிய சிகரத்தின் உச்சியில் உறைவோனே!
//

உபநிஷத்துகள் படிக்கும் போதும் பின்னர் ரமணரின் நூல்கள் படிக்கும் போது தகராகாசத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன். இந்த வரிகளுக்கு என்ன பொருள் என்பதனை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள் எஸ்.கே.

ஒவ்வொன்றாக இப்படி எடுத்துச் சொல்லலாம் தான். ஆனால் அதே கருத்தினைத் தான் சொல்ல வேண்டி வரும். எல்லாமே மிக அருமையாக எடுத்து எழுதியிருக்கிறீர்கள். இந்த விளக்கங்கள் இல்லாமல் இந்தப் பாடல் புரியாது.

VSK Friday, August 18, 2006 10:59:00 AM  

உங்கள் வருகைக்காகத்தான் காத்திருந்தேன் குமரன்!
ரொம்ப நன்றி!
அடுத்த திருப்புகழ்.... விரைவில்!!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP