Thursday, August 03, 2006

கூடா நட்பு!

கூடா நட்பு!


அனைவருக்கும் நட்பு வார வாழ்த்துகள்!

நட்பைப் பற்றி நண்பர் சிறில் ஒரு அருமையான பதிவிட்டிருந்தார்.
http://theyn.blogspot.com/2006/08/blog-post_03.html

அதைப் பார்த்ததும், கூடாநட்பைப் பற்றி ஐயன் சொன்னதை இங்கு போட்டிருக்கிறேன்!

விளக்கம் என்னவென்று என் நண்பன் மயிலை மன்னாரைக் கேட்ட போது அவன் உதிர்த்த முத்துகள் அடைப்புக்குறிக்குள்!!

கூடா நட்பு! [அதிகாரம் 83]

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. [821]


[நல்லா பதமா பழுத்த இரும்பை கரீட்டா அந்தக் கல்லுல அடிக்கற மாதிரி, மன்சுல வஞ்சம் வெச்சுக்கிட்டு வெளில ஃப்ரெண்டு மாரி இருக்கறவன் நட்பு, சமயம் பாத்து நம்மை அடிச்சுரும். உசாரா இருக்கணும்!
நம்ம வைகோவைக் கேட்டுப்பாரு, எப்பிடீன்னு சொல்லுவாரு!]

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். [822
]

[உள்ளே ஒண்ணு, வெளில ஒண்ணுன்னு சினேகம் பண்றது வேசி உம்மேல காதல்னு சொல்ற மாரிதான்.
நம்ம தந்திரியக் கேட்டா இன்னும் விளக்கமா சொல்வாரு!]

பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது. [823]


[உள்ளுக்குள்ள சுத்தமா இல்லைன்னா, நீ எத்தினி பொஸ்தவம் படிச்சாலும், உன்னால நல்ல மன்சோட பளக முடியாது.]

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். [824]


[உள்ளுக்குள்ளார கெருவம் வெச்சுக்கிட்டு, வெளில சிரிக்கறவனைப் பாத்தா பய்ந்து ஓடியே பூடு!]

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. [825
]

[மெய்யாவுமே உம்மேல நட்பா இல்லாதவன் சொல்றான்னு எந்த ஒரு காரியத்திலியும் எறங்காதே!]

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். [826]


[ஒன் எதிரி இன்னாதான் நைச்சியமாப் பேசினாலும், அதெல்லாம் ஆவாத கதைன்னு வெரசலாவே தெரிஞ்சுரும்!]

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். [827]


[வில்லு வளையறது ஒம்மேல அம்பு எறியறதுக்குத்தான்! அதுபோல, ஒன் எதிரி வளைஞ்சு 'அண்ணே, வணக்கம்'னு சொல்றது ஒன் காலை வார்றதுகுத்தான்னு புரிஞ்சுக்கோ!]

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. [828]


[அதே ஆளு, [827-ல சொன்ன அதே ஆளு,] கையக் கூப்பி வணக்கம்னு சொல்றப்போ, அதுக்குள்ளே ஒரு கத்தி வெச்சுருப்பான்! அவன் அளுது கண்ணிரு வுடறது கூட அத்தே மாரித்தான். நம்பிராதே!]

மிகச்செய்து தம் எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. [829]


[ஒங்கிட்ட மூஞ்சில சிரிப்பக் காட்டிக்கினு, உள்ளார பொருமிக்கிட்டு இருக்கறவன்ட்ட, நீயும் அதே மாரி, சிரிச்சுக்கினே, அதே சமயம் உள்ளார அவன் இன்னார்னு கவனம் வெச்சுக்கோ!]

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். [830]


[அதேக்காண்டி, அவனோட நட்பா இருக்கணும்னு ஒரு நேரம் வந்துச்சின்னா, பொறத்தால மட்டும் ஃப்ரெண்டா இரு! மன்சை அவன்ட வுட்டுறாதே!]

நா வர்ட்டா! அப்பால பாக்கலாம்! எதுனாச்சும் டவுட்டு வந்திச்சின்னா கூப்ட்டனுப்பு! சரியா!


[பி.கு.: இதுபோல வேறொரு அதிகாரத்தை எடுத்து ஒருவர் தொடரலாமே, அவருக்குப் பிடித்த பாணியில்!
திருக்குறளும் படித்த மாதிரி இருக்கும்!]

50 பின்னூட்டங்கள்:

பொன்ஸ்~~Poorna Thursday, August 03, 2006 6:00:00 PM  

சர்தாம்பா.. நல்லா மெர்சலாக்கீது.. நல்லா சொல்லிக்கினே..

அல்லாரும் மயிலை மன்னாருக்கு ஒரு ஓ போடுங்க!!!

Unknown Thursday, August 03, 2006 6:41:00 PM  

வள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்தார் என்பது உண்மைதான்.அதற்காக இப்படியா?

சிரித்து சிரித்து வயிறே புண்ணாயிடுச்சு:))))))

பொன்ஸ்..என்ன யானையை வித்துட்டு கப்பல் வாங்கிட்டீங்களா:)

Sivabalan Thursday, August 03, 2006 6:47:00 PM  

SK அய்யா,

//மெய்யாவுமே உம்மேல நட்பா இல்லாதவன் சொல்றான்னு எந்த ஒரு காரியத்திலியும் எறங்காதே //


கலக்கிடீங்க..

சென்னை அழைத்து போனதுக்கு டிக்கட் போட்டராதீங்க...

VSK Thursday, August 03, 2006 8:07:00 PM  

நீங்க பாராட்டினீங்கன்னு என் நண்பனிடம் சொன்னேன், பொன்ஸ்!

அதற்கு அவன்,
"மெய்யாலியுமா? அந்த அம்மாவா என்னையப் பாராட்டிச்சுன்றே?
பொதரகத்துலேர்ந்து வந்தவ்...வொடனெ நா ஒரு தபா வந்து டேங்ஸ் சொல்வேன்னு சொல்லு.
'மெர்செலா'ன்னு அல்லாம் சொல்லி நம்மளை டச் பண்ணிருச்சுப்பா"ன்னு சொல்லி
அப்படியே நெகிழ்ந்து போய்விட்டான்.

VSK Thursday, August 03, 2006 8:12:00 PM  

நீங்க நன்றி சொல்லணும்னா சிறிலுக்குத்தான் சொல்லணும், செல்வன்!

ஆனா, மயிலை மான்னாரு நிஜமாகவே சந்தோஷப்பட்டான்.
உங்களுக்கு நன்றியையும் சொல்லச் சொன்னான்!
அடுத்த வாட்டி மராஸ் வந்தா கண்டிப்பா சொல்லச் சொன்னான்!

பி.கு. இந்த சுட்டி கொடுக்கறதை கத்துக் கொடுக்காமலேயே யானை பறக்குது!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்1:(

Unknown Thursday, August 03, 2006 8:14:00 PM  

செய்வன திருந்த செய்யணும்

அவ்வை மொழி

நீங்க சூப்பரா இருக்குண்ணு சொன்னதை நான் நம்ம தோஸ்த் கிட்ட சொன்னன் பொன்ஸ்.அதுக்கு அவன் மெய்யாலியுமா? அந்த அம்மாவா நல்லாகீதுன்னுச்சுங்கறே?
பொதரகத்துலேர்ந்து வந்தவ்...வொடனெ நா ஒரு தபா வந்து டேங்ஸ் சொல்வேன்னு சொல்லு.
'மெர்செலா'ன்னு அல்லாம் சொல்லி நம்மளை டச் பண்ணிருச்சுப்பா"ன்னு சொல்லி
அப்படியே ஜுகுர்ரா போய்ட்டான்

VSK Thursday, August 03, 2006 8:17:00 PM  

டிக்கட் என்று சொன்னதும் ரொம்பவே வருத்தப்பட்டான் நம்ம மயிலை மன்னாரு!

"என்ன இவுரு டாலர் துட்டு இருக்குதுண்ணு இப்பிடியெல்லாம் சொல்றாரா?
சென்னைக்கி வந்தா என்னோட நாஷ்டா துன்னாமெ போயிரக்கூடாது"ன்னு
கண்டிஷனா சொல்லச் சொன்னான்!

VSK Thursday, August 03, 2006 8:21:00 PM  

திருந்தத்தான் செய்திருக்கிறேன், செல்வன்!

அவன் சொன்னதை அப்படியே போட்டுவிட்டு, நான் சொல்ல வந்ததை என் நடையில் சொல்லியிருக்கிறேன்!

இருந்தாலும் தனியா உங்களிடம் பாடம் படிக்க வருகிறேன்!

Unknown Thursday, August 03, 2006 8:27:00 PM  

//திருந்தத்தான் செய்திருக்கிறேன், செல்வன்!//

சொல்லின் செல்வரான முருகப்பெருமான் அல்லவா நீங்கள்?தப்பாகவா எழுதுவீர்கள்?நான் தான் குசும்புக்கு எழுதினேன்

Unknown Thursday, August 03, 2006 8:28:00 PM  

பொன்ஸ் அமெரிக்கா வந்ததும் கப்பல் வாங்கிட்டாங்களே?இந்த பகல் கொள்ளையை கேட்பாரில்லையா?:)))

கப்பி | Kappi Thursday, August 03, 2006 9:11:00 PM  

படா சோக்கா கீது நைனா..

திருக்குறள நம்ம பாசைல ட்ரான்சுலேட்டு பண்ணதுக்கு பெசல் தாங்க்சு...

கோவி.கண்ணன் Thursday, August 03, 2006 9:25:00 PM  

எஸ்கே,
சென்னை பாசை திருக்குறள் 'சோக்கா' வந்திருக்குக்கு. இந்தாங்க பிடிங்க பரிசு குரள்

முகமது நட்பது நட்பன்று, சதையும்
நகமுமாக நட்பதே நட்பு !

:)

VSK Thursday, August 03, 2006 9:25:00 PM  

"ஆரு? நம்ம கப்பிப்பயவா! ஏதோ நெய்யி, உருகுதுன்னு ஏதோ ஊர்ல இருக்கானே அவ்னா/ அவ்வ்ளதூரம் போயிருச்சா நம்ம பேரு! எப்ப ஊர் பக்கம் வரப் போறான்னு கேளு"ன்னு சொல்லி மாய்ந்து போய்விட்டான், மயிலை மன்னாரு!

என்னங்க, கப்பிப்ப்ய! சொல்லவே இல்லையே நீங்கள்! அவனைத் தெரியுமென்று!

VSK Thursday, August 03, 2006 9:39:00 PM  

என்ன செல்வன் இப்படி ஒண்ணும் புரியாமப் பேசுறீங்க!

வந்தவுடனே குக்கர்!

அப்புறமா யானை!

அப்புறம்... ஆங்! பீச் ரிஸார்ட், டெக்கோட!

நடுவுல ஒரு காஸ்ட்லி கேமரா!

இப்போ கப்பல்!

படகுன்னு அடக்கமா சொல்றாங்க!

சொத்து சேத்தவங்க யாரு உண்மையை சொல்லியிருக்காங்க!

நல்லபடியா போகட்டும்!!

Unknown Thursday, August 03, 2006 9:55:00 PM  

//வந்தவுடனே குக்கர்!

அப்புறமா யானை!

அப்புறம்... ஆங்! பீச் ரிஸார்ட், டெக்கோட!

நடுவுல ஒரு காஸ்ட்லி கேமரா!

இப்போ கப்பல்!

படகுன்னு அடக்கமா சொல்றாங்க!

சொத்து சேத்தவங்க யாரு உண்மையை சொல்லியிருக்காங்க!//


என்ன எஸ்.கே

இப்படி சொத்து மேல சொத்து சேந்துட்டே போவதை பார்த்தால் உ.பி.ச வை மிஞ்சி விடுவார் போலிருக்கு.கப்பல்,யானை,காமிரான்னு சொத்து சேந்துகிட்டே போகுது.

சிறில் அலெக்ஸ் Thursday, August 03, 2006 10:05:00 PM  

இன்னா எச். கே நாயினா..
நைனார் பாட்டுப் போட்டு தாக்கினுகீரீங்கோ..

நம்ம பாணிய பின்பற்றினா சும்மா வுட்டுருவோமா..

பாராட்டி பின்னூட்டம் போட்டுருவோம்ல..

:))

வாழ்க (நம்) நட்பு.

VSK Thursday, August 03, 2006 10:06:00 PM  

பீச் ரிஸார்ட்...பீச் ரிஸார்ட்.. அதை விட்டுட்டீங்களே... அதுவும் டெக்கோட!

ஃபோட்டோ பாக்கலை??

:))

VSK Thursday, August 03, 2006 10:19:00 PM  

குறள்தான் என்னிடமிருந்தது, நண்பரே!

உங்கள் பதிவைப் பார்த்ததும் அப்படியே மெய்மறந்து போனேன்!

நாமும் இது போல ஏதேனும் செய்ய வேண்டுமே எனத் தூண்டியதே அதுதான்!

நல்லவேளை! மயிலை மன்னாரு வந்தானோ, பிழைத்தேன்!!

....அவன் குரலால்!

பொன்ஸுக்கும் நன்றி!

சமயோசிதமாக நீங்கள் அங்கு போட்ட மறுமொழிக்கும் நன்றி!

குமரன் (Kumaran) Thursday, August 03, 2006 10:44:00 PM  

எஸ்.கே. அடுத்தத் திருப்புகழ் பதிவு எங்கே? வேலை அதிகமாகிவிட்டதா?

இலவசக்கொத்தனார் Thursday, August 03, 2006 10:56:00 PM  

செல்வன் நட்பு வேணும், சிறில் நட்பு வேணும் ஆனா "முகமது நட்பது நட்பன்று"

ஏன்ய்யா இப்படி இருக்கீங்க :)

VSK Thursday, August 03, 2006 11:09:00 PM  

இன்னும் இரு நாட்களில் வரும், குமரன்!
நினைவூட்டியதற்கு நன்றி!

மயிலை மன்னாரு ரொம்பவும் கோபித்துக் கொண்டான்!
" இன்னா நெனச்சுக்கினு இந்த மதுரக்காரரு என்னியப் பத்தி ஒரு வார்த்தை எளுதாம போவாரு!
இருக்கட்டும்....இந்தப் பக்கம் வாராமலா பூடுவாரு!
அப்ப வெச்சுக்கிறேன்"ன்னு

பெருசா சவால் விட்டுவிட்டு போயிருக்கிறன்!

எதற்கும் அடுத்த முறை தாயகம் செல்லும் போது, மதுரைக்கு நேர் விமானம் இருந்தால் அதில் செல்லவும்!

:))

கோவி.கண்ணன் [GK] Thursday, August 03, 2006 11:10:00 PM  

//இலவசக்கொத்தனார் said...
செல்வன் நட்பு வேணும், சிறில் நட்பு வேணும் ஆனா "முகமது நட்பது நட்பன்று"

ஏன்ய்யா இப்படி இருக்கீங்க :) //

முகமது நட்பது நட்பல்ல .... நட்பல்ல அது ஆண்டவன் கட்டளை :))

VSK Thursday, August 03, 2006 11:12:00 PM  

சொன்னது கோவியார்!
அவர் வரட்டும் உமக்கு பதில் சொல்லச் சொல்கிறேன், இ.கொ.!!
வெவகாரம் பண்றதுக்குண்ணே கிளம்புறீங்களே, சாமி!

கொத்தனாரே! இன்று உமக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா?!!
:))

பொன்ஸ்~~Poorna Thursday, August 03, 2006 11:12:00 PM  

//
பீச் ரிஸார்ட்...பீச் ரிஸார்ட்.. அதை விட்டுட்டீங்களே... அதுவும் டெக்கோட!

ஃபோட்டோ பாக்கலை??

:))
//
மன்னாரு, இன்னாபா இது?, உங்காளு புச்சா சொல்கினுகீறாரு..

நல்ல நேரமா பூட்சுபா.. மடிக்கிற கணினியும் டிவிடி ஓட்டுவானும் டாக்டர் கண்ல படாமயே தப்பிச்சிடிச்சி..

ஜயராமன் Thursday, August 03, 2006 11:12:00 PM  

அழகாக இருக்கிறது.

நானும் மயிலாப்பூர்காரன் தான். ஐயன், மன்னாரு எல்லாரும் நம்ம பேட்டை ஆளுங்கதான். மன்னாரை பார்க்கும் போது சொல்லிவைக்கிறேன்.

இன்னொரு குரலோவியம் எழுதலாம். அருமையாக இருக்கிறது.

நன்றி

VSK Thursday, August 03, 2006 11:19:00 PM  

மன்னாரு சொல்லித்தான் அதெல்லாமும் எழுதினேன், பொன்ஸ்!!

படித்துவிட்டு 'கெக்கெக்கே' என சிரித்தான்!

"பாத்துக்கினியா! இதான் போட்டு வாங்கறதுங்க்றது!

இப்ப இன்னால்லாம் வெளியே வர்து பாரு!

இன்னும் என்னெல்லாம் வரும்னு பாத்துக்கினே இரு!

மேட்டர் இனிமேத்தான் ஜூடு பிடிக்கும்"ன்னு
கெக்கெலிக்கிறான் மீண்டும்!
:))

பொன்ஸ்~~Poorna Thursday, August 03, 2006 11:23:00 PM  

//பாத்துக்கினியா! இதான் போட்டு வாங்கறதுங்க்றது!//
அடப் பாவி மன்னார்..

பாருங்க.. நான் இன்னும் அதே அறியாப் பொன்ஸாத் தான் இருக்கேன் என்பதற்கு இதே சாட்சி!!! :(((

சரி. இன்னும் ஷாப்பிங்க் பாக்கி இருப்பதால்.. எஸ்கேப்.. :-D

VSK Thursday, August 03, 2006 11:27:00 PM  

அட! நீங்களும் நம்ம ஊருதானா?

"ரொம்ப நாளா பாக்காத ஆளெல்லாம் கொண்டுவந்தாட்டிட்டியே"ன்னு பூரித்துப் போனான் மன்னாரு!

"சாருக்கு புட்ச்சுப் போச்சுல்ல! கவலிய வுடு! கொரளாக் கொண்டா"ன்னு வேரு ஆணையிட்டு விட்டான்!

அட்ரெஸ் கொடுத்தால் தனிமடல் இடுவதாகவும் சொன்னான்!

கம்ப்யூட்டர் வாங்கி ஒரு ஆளையும் ஹெல்ப்புக்கு வைத்திருக்கிறான், தட்டச்ச,!

தெரியுமா, ஜெயராமன், உங்களுக்கு!?

ஓகை Friday, August 04, 2006 12:20:00 AM  

இன்னடா இது! புச்சா கீதே! எங்க போயி எஸ்கே நம்ம பாஷயக் கத்துகினார்னு பாத்தாக்கா கட்சீல நம்ம மைலாப்பூரு! நமக்கும் அவருக்கும் கிஸ்னாம்பேட்டைக்கும் கண்ணம்மாபேட்டைக்கும் உள்ள தொலவுதான். சும்மா அட்ச்சி பூந்து வெள்ளாடு வாத்யாரே!
(கண்ணம்மபேட்டை தி.நகரில் இருக்கிறது.)

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. [828

தொழுத கையினுள் ஒரு துப்பாக்கி இருந்தது. தொல்லுலகும் தொழகூடிய தூயவர் ஒருவரின் இன்னுயிர் குடித்தது. இக்குறளைப் படிக்கும் போதெல்லாம எனக்கு உத்தமரின் நினைவு மேலோங்கும்.

இகோ, 'வதனமே சந்திர பிம்பமே' என்னும் புகழ் பெற்ற MKT பாடலை முதலில் முகமது சந்திர பிம்பமே என்று எழுதி பிறகு நீங்கள் குறிப்பிட்ட பொருள் வருவதால் மாற்றினார்களாம்.

VSK Friday, August 04, 2006 12:48:00 AM  

"பேட்டை ஆளுங்கள அல்லாம் இப்டி இஸ்த்துகினு வண்ட்டியே"ன்னு வாயெல்லாம் பல்லாய்ச் சிரிக்கிறான் மன்னாரு!

கிஸ்னாம்பேட்டை, கன்னம்மாபேட்டை ரெண்டும் இப்ப அவன் குத்தகையில் தான் இருக்கிறதாம்!

பிசினெஸ் நல்லாப் போகுது என மகிழ்ச்சியுடன் சொன்னான்!

ஆனால், நீங்கள் காந்தியைப் பற்றி சொன்னது அவனை ரொம்பவும் பாதித்து விட்டது, ஓகையாரே!

'இன்னா மன்சர்பா அவரு! மன்சனா...சேச்சே தெய்வம்!
மன்சன்னு சொன்னா நாக்கு அயுவிப்பூடும்!
அவரை மன்சுல வெச்சுக்கினு நா சொன்னத இந்தாளு கரீட்டா சொல்ட்டாரே!
ஒரு ஸ்பெசல் டேங்க்ஸ் நா சொன்னதா சொல்டுப்பா"ன்னு அழுது விட்டான்!

உங்கள் நண்பன்(சரா) Friday, August 04, 2006 1:44:00 AM  

மன்னாரு கலக்கீட்டபா....

இந்த SK தொல்லை தாங்கலைப்பா அப்போ அப்போ வந்து தோவாரம், திருவாசகம்,அருணகிரினு கலாய்க்கிருப்பா...
நீ அடிக்கடி வந்து அட்டென்டெஸ் கொடுத்தைனா ஒனக்கும் ஒன் பேட்டைக்கும் புண்ணியமாப் போகும் ,

ஆமா அந்த மத்திய அமிச்சுருக்கு "ஒண்டிக்கு ஒண்டி வர்ரீயானு" பாடம் சொல்லிக் கொடுத்தது நீதானா...?

அன்புடன்...
சரவணன்.

கப்பி | Kappi Friday, August 04, 2006 9:37:00 AM  

//ஆரு? நம்ம கப்பிப்பயவா! ஏதோ நெய்யி, உருகுதுன்னு ஏதோ ஊர்ல இருக்கானே அவ்னா/ அவ்வ்ளதூரம் போயிருச்சா நம்ம பேரு! எப்ப ஊர் பக்கம் வரப் போறான்னு கேளு"ன்னு சொல்லி மாய்ந்து போய்விட்டான், மயிலை மன்னாரு!

என்னங்க, கப்பிப்ப்ய! சொல்லவே இல்லையே நீங்கள்! அவனைத் தெரியுமென்று!//

அவன் நம்ம தோஸ்து தாம்பா...
மன்னாரு மொகம் அப்டியே கண்ணுலயே கீது...
இன்னும் நால்ஞ்சு மாசத்துல இங்கேர்ந்து எஸ்ஸாயிடுவேன்னு சொல்லிடுங்க..

இராம்/Raam Friday, August 04, 2006 10:39:00 AM  

ஐயா,

தங்களின் திருகுறள் தெளிவுரை கண்டு சொல்வெண்ணா பேரின்பம் கண்டேன்.... நன்றி.

(பி.கு:- கீசிட்டா போ நைனா)

VSK Friday, August 04, 2006 4:21:00 PM  

//இலவசக்கொத்தனார் said...
செல்வன் நட்பு வேணும், சிறில் நட்பு வேணும் ஆனா "முகமது நட்பது நட்பன்று"

ஏன்ய்யா இப்படி இருக்கீங்க :) //

சும்மா ஐஸ் வைக்கறதுக்காக 'அண்ணா! பிரிண்ட் எடுத்து டேபிள் மேல வெச்சுக்கறேன்'ன்னு ஒரு பதிவுல போய் சொல்ல வேண்டியது!

ஆனால், அதைப் படிக்காமலே விட்டுட்டு, இங்கே வந்து கோவியார் சொன்ன குறளுக்குக் கலாய்க்க வேண்டியது!

ஒழுங்காகப் படித்திருந்தால், கோவியார் தவறாக எழுதியிருக்கிறார், அது "முகமது நட்பது" அல்ல; "முகநக நட்பது" என்று திருத்தியிருப்பீர்கள், இ.கொ.!!!

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு." [786]

:))))

VSK Friday, August 04, 2006 4:28:00 PM  

//மன்னாரு கலக்கீட்டபா....

இந்த SK தொல்லை தாங்கலைப்பா அப்போ அப்போ வந்து தோவாரம், திருவாசகம்,அருணகிரினு கலாய்க்கிருப்பா...
நீ அடிக்கடி வந்து அட்டென்டெஸ் கொடுத்தைனா ஒனக்கும் ஒன் பேட்டைக்கும் புண்ணியமாப் போகும் ,

ஆமா அந்த மத்திய அமிச்சுருக்கு "ஒண்டிக்கு ஒண்டி வர்ரீயானு" பாடம் சொல்லிக் கொடுத்தது நீதானா...?

அன்புடன்...
சரவணன். //

மன்னாரு சொல்வது:

"அல்லாம்தான் ஒரு மன்சனுக்கு வேணும் 'ஒங்கநம்பா'! [இது 'உங்கள் நண்பனாம்'!!]

பட்ச்சிவையி அத்தையும், சர்வனா!
பிக்காலத்துக்கு ஒதவும், இப்ப ஒதவலைன்னு நீ நெனச்சாலும்! சர்ரியா!

அமிச்சரு என்ன சுண்டக்கா! அப்துல் கலாம் சாருக்கே சொல்லுவேன் தெர்யுமா?"

அவனோடு மேலே பேச முடியாமல் வந்து விட்டேன் நான்!
:))

VSK Friday, August 04, 2006 4:32:00 PM  

//எஸ் கே அண்ணாச்சி!
வைகோ; தந்திரி எல்லாம்; ஐயன் வாக்குக்கு உதாரணமாகிடாங்க! நல்லா இருக்கு! மன்னாரின் மொழிச் செறிவு.
யோகன் பாரிஸ்//

ஆமாமுங்க யோகன் தம்பி!

வள்ளுவன் வாக்கு இன்றைக்கும், என்றைக்கும் பொருந்துகிறது!

அதனால் தான் இன்னமும் நிற்கிறது!

மன்னாரிடம் அவசியம் சொல்லுகிறேன் நீங்கள் பாராட்டியதை!

VSK Friday, August 04, 2006 4:34:00 PM  

//அவன் நம்ம தோஸ்து தாம்பா...
மன்னாரு மொகம் அப்டியே கண்ணுலயே கீது...
இன்னும் நால்ஞ்சு மாசத்துல இங்கேர்ந்து எஸ்ஸாயிடுவேன்னு சொல்லிடுங்க.. //

கண்டிப்பா சொல்றேன்!

அவனும் ரொம்பவே மகிழ்வான்!

VSK Friday, August 04, 2006 4:38:00 PM  

//தங்களின் திருகுறள் தெளிவுரை கண்டு சொல்வெண்ணா பேரின்பம் கண்டேன்.... நன்றி.

(பி.கு:- கீசிட்டா போ நைனா)

"கட்ச்சில பி.கு.ன்னு ஒண்ணு போட்டு தாக்கிட்டியேப்பா நம்மளை" என்று சந்தோஷமாக சிரிக்கிறான் மன்னாரு!

நன்றி, திரு,.ராம்

கோவி.கண்ணன் [GK] Friday, August 04, 2006 11:58:00 PM  

sk,

கூடா நட்பு புறிகிறது ...! நன்பர்களிடம் எச்சரிக்கை.

நாம் மற்றவர்களுக்கு கூடா நட்பாக இருக்க்கிறோமோ என்பதை
எப்படி தன்(சுயம்) உணர்வது ?

வெற்றி Saturday, August 05, 2006 1:07:00 PM  

SK அய்யா,
குறள் விளக்கம் நன்றாக உள்ளது. ஆனால் கூடா நட்பை எப்படி இனம் கண்டு கொள்வது? ஒருவர் நெஞ்சில் வஞ்சம் வைத்துப் பழகும் போது அதை எப்படிக் கண்டறிவது? எல்லோரையும் சந்தேகக் கண்ணொடு பார்க்கவும் முடியாது.

VSK Saturday, August 05, 2006 6:25:00 PM  

கோவியாரே, வெற்றி அவர்களே,

நீங்கள் இருவரும் கேட்ட கேள்வியை மயிலை மன்னாரிடம் சொன்னேன்!
அதற்கு அவன்,
" இப்டி ஒரு கேய்வி வரும்னு எனக்குத் தெரியும்!
நாயமான கொச்சின் தான் இது.
இத்தப் பத்தி நம்ம அய்யன் என்ன சொல்றாருன்னா "
என்று ஆரம்பித்தான்!

அவன் சொன்னதை விரைவில் இங்கு பதிவிடுகிறேன்!!

Unknown Saturday, August 05, 2006 8:29:00 PM  

எப்போது பார்த்தாலும் தமிழ்மண முகப்பில் இந்த பதிவு இருப்பது போலவே ஒரு தோற்றம்.அது ஏன்?

Unknown Saturday, August 05, 2006 8:32:00 PM  

"இப்டி ஒரு கேய்வி வரும்னு எனக்குத் தெரியும்!
நாயமான கொச்சின் தான் இது.
இத்தப் பத்தி நம்ம அய்யன் என்ன சொல்றாருன்னா "
///////

கெழவி எப்ப கொச்சின் வந்து சேருவது?அய்யன் எப்போது அதை பற்றி சொல்லுவது?இது என்ன புது கரடி?:))))))

ENNAR Saturday, August 05, 2006 10:47:00 PM  

பிசிராந்தையாரும் எங்கள் உறையூர் மன்னன் கோப்பெருஞ் சோழனின் நட்புதான்
நட்புதான் உலகத்திலேயே சிறந்த நட்பு

VSK Sunday, August 06, 2006 12:07:00 AM  

//உலகத்திலேயே சிறந்த நட்பு //

"பளகின தோஸ்தாச்சேன்னு பிசுராந்தையாரு ராசாவை பாக்க வர்றாரு!
நல்ல பட பதக்கிற வெய்யிலு வேற!
ஆரும் ஒக்காரக்கூடத மொரசுக்கட்டில்ல போய் இந்தப் புலவரு 'சம்'முனு அசதியா படுத்துத் தூங்கிர்றாரு!
வேர்த்துக் கொட்டிக்கினே தூங்கறவருக்கு திடீர்னு சும்மா ஜில்லுன்னு காத்து வர்து!
இன்னாடா இதுன்னு முளிச்சிப் பாத்தா....
ராசா கட்டிலாண்ட நின்னுக்கிட்டு விசிறி எடுத்து வீசிக்கினு இருக்காரு!

நட்புன்னா, இதுல்ல நட்பு!
நம்ம என்னாரு ஐயா இத்தச் சொன்னதுக்கு ஒரு டேங்ஸ் சொல்லிடுபா!"ன்னு மன்னாரு சொல்லச் சொன்னான்!

VSK Sunday, August 06, 2006 12:12:00 AM  

//இது என்ன புது கரடி?:))))))//

கரடியெல்லாம் ஒன்றுமில்லை, செல்வன்!
அடுத்த குறள் அத்தியாயம் என்னவென நமது மயிலை மன்னார் சொன்னதைச் சொல்லியிருக்கிறேன், அவ்வளவுதான்!

//எப்போது பார்த்தாலும் தமிழ்மண முகப்பில் இந்த பதிவு இருப்பது போலவே ஒரு தோற்றம்.அது ஏன்?//

"தோற்றப்பிழை"யாய் இருக்கும்!!
:)))))))

நாகை சிவா Sunday, August 06, 2006 10:03:00 AM  

எஸ்.கே. அநியாய கூத்து அடிக்கிறீங்க

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

VSK Sunday, August 06, 2006 11:53:00 AM  

//நாகை சிவா said...
எஸ்.கே. அநியாய கூத்து அடிக்கிறீங்க//

நான் ஒன்றும் அடிக்கவில்லை, நண்பரே!

மன்னாரிடம் பொருள் கேட்டுப் போனதுதான் கூத்தாகி விட்டது!!

நான் இன்னும் அதே நல்ல பையன் தான்,
நாகை சிவா!!

அடுத்த திருப்புகழ் போட்டாகி விட்டது.!!

உங்களுக்கும் வாழ்த்துகள்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP