a.a.thiruppugazh -- 7 "allasaladai-ndha"
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் [7] -- "அல்லசலடைந்த"
தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த தனதான
............பாடல்............
அல்லசல டைந்த வில்லடல/னங்கன்
அல்லிமல ரம்பு தனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமுது கிண்ட அணையூடே
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று முனியாதே
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு தரவேணும்
கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
கல்விகரை கண்ட புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை யருள்வோனே
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே.
********************************************************************
அகப்பொருள் துறையில் பாடப்பெற்ற அற்புதப் பாடல் இது.
நாயகனை விரும்பி, வேட்கை கொண்டு வாடி வருந்தும் தன் மகளைக் குறித்துத் தாய் இரங்கிப் பாடுகின்றாள் என்னும் வகையில் அமைந்துள்ளது.
துணையைப் பிரிந்தோ, அல்லது இணக்கமின்றியோ வருந்தும் ஒவ்வொருவரும் பாடி வேண்டக் கூடிய பாடல்.
இனி பொருளைப் பார்ப்போம்! பின் பாதி முதலில் கண்டு, முன் பாதி அடுத்து வரும்.
********************************************************************
"கல் அசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரைகண்ட புலவோனே"
அன்றொரு நாள் தேவரும், முனிவரும் கூடி
இன்றிங்கு வீற்றிருக்கும் புலவோரில்
முன்நின்று முதன்மை செய்யும்
நன்றான புலவர்க்கு விருதளித்து
சிறப்பொன்று செய்தல் வேண்டுமென
ஒன்றாக முடிவு செய்து,
நாமகளின் வடிவான ஔவைக்கே
பூமாலை சூட்டவெண்ணி
தாம்பூலம் பெற்று தயவு செய்கவென
வேண்டிக் கேட்டிடவே ஔவையும்,
"புலவரெனில் அது மற்றும்
தேவரையே குறித்தலாயின்
அவர்க்குத் தலைவனாம்
இந்திரனையே அது சாரும்
ஐந்திரமெனும் இலக்கண
நூலொன்று படைத்ததனால்"
எனப் புகல, அவ்வண்ணமே அவரும்
இந்திரனை நாடியே தாம்பூலம் நீட்ட,
இந்திரனும் நடு நடுங்கி
"ஒரு நூலைச் செய்ததினால்
நான் புலவன் ஆகமாட்டேன்!
பல நூலும் கற்றிட்ட
அகத்தியரையே இது சாரும்!
அவரிடமே தந்திடுக!" எனச் சொல்லி,
அகத்தியரிடம் நீட்டுங்கால்
அகத்தியரும் தான் நகைத்து,
"பலநூலைக் கற்றதினால்
நான் புலவன் ஆவேனோ?
எனக்கிதனைத் தந்தவளாம்
கலைவாணி அவர்க்கன்றோ
இவ்வருமை தரலாகும்!" என அனுப்ப,
வாணியோ தான் மறுத்து
"வேதத்தில் வல்லவராம்
என் கணவர்க்கே இது சேரும்" எனச் சொல்ல,
பிரமனோ மனம் கலங்கி,
"வாக்கிற்கும், அறிவிற்கும்
தலைவியாம் உமையவளே
இதைப் பெற்றிடும் தகைவுடையாள்!
அவரிடமே ஈந்திடுக! எனப் பணிக்க,
அவ்வாறே இவர்களும் உமையை நாடி வேண்ட,
வாகீச்வரியும் முறுவலித்து,
"நன்று, நன்று ! நான் இதற்கு
உரியவள் அன்று! என் குமரன்
ஞானஸ்கந்தன், ஞானபண்டிதன்
சிவகுருநாதன் குமரவேளேஇதற்குரியவன்!" என அருள,
"மூவர் முதல்வா! முத்தமிழ் வேளே!
வித்வத் தாம்பூலம் ஏற்றருள்க!" எனப் பணிய,
"நல்லது! அவ்வண்ணமே ஆகுக!" என
கந்தவேளும் தாம்பூலம் ஏற்றருளினார்!
இவ்வண்ணம் மலைமங்கை வரையில் போய்
அவ்வம்மையே "புலவன் என் குமரனே!"
எனச் சொன்னதனாலே 'புலவன்'
எனும் பெருமை படைத்த முருகோனே!
"கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று
கல்லல் அற ஒன்றை அருள்வோனே"
'நமசிவாய'வெனும் ஐந்தெழுத்தைக்
குறித்தாற்போல் ஐந்துஇதழ் கொண்டு
அதன் நடுவே வளைந்திருக்கும்
தோகையும் 'ஓம்'என்னும் பிரணவத்தைக்
காட்டுதல் போல் வடிவமைந்த
கொன்றையெனும் மலர் சூடி
அடியவர்க்கு அனைத்தையும் வழங்குதலால்
வள்ளலெனும் பெயர் கொண்ட
சிவன் பணிந்து கேட்டிடவே
அன்றவர்க்கு பிரணவத்தின் பொருள் சொல்லி
அவர் ஐயம் தீர்த்திட்ட அருள் மழையே!
"வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச
வல்லமை தெரிந்த மயில்வீரா"
பலம்கொண்ட அசுரர்படை அஞ்சி ஓட
நலமான விண்ணவரும் பிழைக்கும் வண்ணம்
திறம் காட்டிச் சமர் புரிந்த
மயில் மீதமர்ந்த பெருவீரனே!
"வள்ளி படர்கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே"
வள்ளிக்கொடி படர்கின்ற
வள்ளிமலை அடைந்து
வள்ளியெனும் குறமகளை
அள்ளி மணம் செய்த பெருமாளே!
"அல் அசல் அடைந்த வில் அடல் அனங்கன்
அல்லிமலர் அம்பு தனையேவ"
காரிருள் படரும் நள்ளிரவு வேளையினில்
வேறிடத்தினின்று வந்து வில்லேந்தி
அன்றங்கு சிவனால் உடல் எரிந்து போனதினால்
'அனங்கன்' எனும் பேர் படைத்த மன்மதனும்
தாமரை மலர்க்கணையைச் செலுத்தவும்,
"பிள்ளைமதி தென்றல் அள்ளி எரி சிந்த"
பிறை நிலவும், வீசு தென்றலும்
தன்நிலை மறந்து இயல்புக்கு மாறாய்
கொதிக்கின்ற நெருப்பினையே
அள்ளி வீசித் துயர் செய்யவும்,
"ஐயம் உது கிண்ட அணையூடே"
என் தலைவன் வருவானோ, வந்தருள் புரிவானோ
என்னுமொரு ஐயத்தை தன் மனதில் கொண்டு
மலர்ப்படுக்கையும் நொந்து போக
"சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று
தொல்லை வினை என்று முனியாதே"
தோழியர் சொல்லுகின்ற சொற்களால் மனம் வருந்தி
தாமரை மலர் வாழும் இலக்குமி போலும் இம்மங்கை
தனியே படுத்து தான் நோக உளம் வாடி
'யான் செய்த தீவினையால் இவ்வண்ணம் வாடுகிறேன்'
என வருந்தி, வெறுத்து, நொந்து போகா வண்ணம்,
"துய்யவரி வண்டு செய்ய மது உண்டு
துள்ளிய கடம்பு தரவேணும்"
சுத்தமான வரிகளைக் கொண்ட வண்டினங்கள்
உத்தமமான சிவந்த தேனை உன்டு
மதிமயங்கித் துள்ளிக் குதித்திடும்
கடம்ப மலர்களால் ஆன மாலையினை நீயிங்கு
நங்கையவள் துயர் தீரும் வண்ணம்
தந்தருளிக் காக்க வேணும்!
*****************************************************************************
அருஞ்சொற்பொருள்:
அல் = இரவு
அசல் = அயல்= வேறிடம்
அனங்கன் = உடல் எரிந்து போனதால், உடல் இல்லாதவன் = மன்மதன், காமன்
எரி = தணல், நெருப்பு
உது கிண்ட = கலக்கம் வந்து வாட்ட
அரவிந்தவல்லி = தாமரை மலர் மேல் வாசம் செய்யும் இலக்குமி, அலர் மேல் வல்லி
முனியாதே = வெறுக்காமல்
துய்ய வரி வண்டு = தூய்மையான வரிகளைக் கோண்ட வண்டுகள்
கல் அசல மங்கை = மலை மேல் வாழும் மலைமகள்
வள்ளல் = அனைத்தையும் குறைவறத் தரும் சிவபெருமான்
கல்லல் அற = குழப்பம் நீங்குமாறு
ஒன்றை = முழு முதற் பொருளான ஓம் எனும் பிரணவம்
சுரர் = விண்ணவர்
விஞ்ச = பிழைக்குமாறு
******************************************************************
முருகன் அருள் முன்னிற்கும் !
வேலும் மயிலும் துணை !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !
**********************************************************************
32 பின்னூட்டங்கள்:
முருகன் அருள் முன்னிற்கும் !
வேலும் மயிலும் துணை !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !
//அன்றொரு நாள் தேவரும், முனிவரும் கூடி
இன்றிங்கு வீற்றிருக்கும் புலவோரில்
முன்நின்று முதன்மை செய்யும்
நன்றான புலவர்க்கு விருதளித்து
சிறப்பொன்று செய்தல் வேண்டுமென
ஒன்றாக முடிவு செய்து,//
எஸ்கே ஐயா... !
இதைத் தொடர்ந்து சொல்லி புலவரை கண்டு கொண்ட கதை நன்றாக இருக்கிறது... உங்கள் தகப்பன் சாமி கதை நன்று !!!
முழுப் பதிவின் விளக்க வுறை நன்றாக இருக்கிறது என்று சொல்லும் தகுதி எனக்கு இல்லை.
அதற்கு திரு குமரனும், ஜிரா வும் வருவார்கள்.
நான் அவ்வபோது மீண்டும் வருவேன் !
இந்தத் திருப்புகழை நான் இதற்கு முன்பு கேள்விப் பட்டதில்லை. எடுத்துக் காட்டியமைக்கு நன்றி. படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.
அல் என்றால் இரவு. இந்த அல்தானா "அல்லில் நேருமின் அது தானும்"?
மொழிகளுக்கு அப்பால் நான் ரசிக்கும் பெயர்களில் ஒன்று அனங்கன். அங்கமற்றவன் அனங்கன். அணங்கொடு பொருதிடு அனுமதி தருகிற அனங்கன்.
அரவிந்தவல்லி மற்றும் கல்லசல மங்கை ஆகிய பெயர்களும் மிகப் புதுமையான வையாகத் தோன்றுகின்றன.
இன்னொன்று, வாரத்தின் என்று திருப்புகழ் பதிவு வருகிறது என்று தெரியவில்லை. ஒவ்வொரு செவ்வாயும் நான் அநுபூதி விளக்கம் இடுவது போல, இந்த நாளில் திருப்புகழ் கிட்டும் என்றால் அந்த நாளில் நாங்களும் குறிப்பாக வந்து படிக்க வசதியாக இருக்கும்.
எஸ்.கே. அருணகிரிநாதர் நாயகி பாவத்திலும் பாடியிருக்கிறார் என்ற செய்தி எனக்குப் புதிது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாயகிகளாகவும் நாயகிகளின் அன்னைமார்களாகவும் தங்களை எண்ணிக் கொண்டு பாடிய பதிகங்களையும் பாசுரங்களையும் படித்திருக்கிறேன். தங்கள் தயவால் அதே போன்று வள்ளி கணவன் மேல் ஒரு பெண் மயங்குவதைச் சொல்லும் இந்த திருப்புகழைப் பொருளுடன் படித்து இன்புற்றேன்.
வைணவ மரபில் அன்னை இலக்குமியை முதலில் சரணடைந்து பின்னர் அவள் சிபாரிசுடன் திருமாலவனை அடையவேண்டும் என்று சொல்வார்கள். ஆழ்வார்களும் விடாமல் எல்லா பாசுரங்களிலும் அன்னையைப் போற்றிவிட்டே பின்னர் மாலவனைப் போற்றுவார்கள். தானான பாசுரங்களில் அப்படி வருவது மட்டுமின்றி நாயகியான பாசுரங்களிலும் நாயகியின் தாயாரான பாசுரங்களிலும் கூட அந்த மரபு பின்பற்றபடுவதைப் பார்க்கலாம். அதே போல் அருணகிரியாரும் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. பெண் வாடுகிறாள்; உன் கடம்ப மாலையைத் தந்தருள வேண்டும் என்று பெண்ணின் தாய் வேண்டும் போதே 'வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே' என்று மும்முறை வள்ளியைக் குறித்துப் பாடுகிறாரே?! :-)
அது மட்டுமா? வள்ளிக் கிழங்குகள் படர்கின்ற வள்ளிமலையில் வாழ்ந்த வள்ளி தானாய் விரும்பி உன்னை அடையவில்லை. நீயாய் விரும்பிப் போய் உன் அண்ணன் உதவியால் பல குறும்புகள் செய்து அவளை மணந்தாய். என் மகளோ உன்னை விரும்பித் தவித்துக் கொண்டிருக்கிறாய். விரும்பாதவரை நீ விரும்பிப் போய் மணந்து கொண்டாய்; இங்கே விரும்பி நிற்கிறாளே இவளுக்கு உன் கடம்ப மாலையையாவது தந்தாட்கொள்ளக் கூடாதா என்று கேட்கும் குறிப்பும் இதில் இருப்பதாக எண்ணுகிறேன்.
புலவர் விருது (வித்வத் தாம்பூலம்) பற்றிய கதையை ஏற்கனவே எங்கோ படித்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன். ஆனால் இவ்வளவு விளக்கமாக இப்போது தான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. 'புலவன் என் குமரனே' என்று மலைமகளாலேயே உரைக்கப்பட்டவன் மால் மருகன். அருமை. அருமை.
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச என்று பிரித்துச் சொல்லியிருக்கலாம். நல்லசுரர் என்று எந்த அசுரரைச் சொல்கிறார் என்று ஒரு நொடி தடுமாறினேன். :-)
பாடலின் ஒவ்வொரு வரியும் அருமை. அதே போல் விளக்கம் சொல்லும் உங்கள் கவிதை வரிகளும் அருமை. மிக்க நன்றி. நல்ல சேவை.
திருப்புகழை பாடினால் நாவினிக்கும் என்பது போல் தங்கள் விளக்கவுரை படித்தால் மனது இனிக்கிறது. இந்த பாட்டுக்கு வாரியார் சாமிகள் எம்மாதிரி உரை நிகழ்த்தியுள்ளார்கள் என்று ஒப்பிட பார்த்தேன். என் புத்தகத்தில் கிடைக்கவில்லை. மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். என் நன்றி.
வாகீச்வரி என்றால் வாணி என்று நினைத்திருந்தேன். வாக்குக்கு ஈச்வரி என்று. உமையவள் என்றும் எழுதியிருக்கிறீர்கள். இதுவும் சுவையாகதான் இருக்கிறது. அம்மைக்கும் இது பொருத்தமாகத்தான் இருக்கிறது !!!
நன்றி
கரிநாக்கு உமக்கு! கோவியாரே!
சொன்னவுடன் அவ்விருவர்களும் வந்து மிக அழகுற நிறையச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்!
பிரிந்து, சேர்ந்த அனைவரும் இன்புற்றிருக்க வேண்டியே இப்பாடலை இன்று அளித்தேன்!
அனைவரும் எல்லா நலனும் பெற்று, இப்பாடலை தினம் ஓதி, இன்புற்று வாழ வேண்டுகிறேன்,, என்னப்பனை!
//அல் என்றால் இரவு. இந்த அல்தானா "அல்லில் நேருமின் அது தானும்"?//
நீங்கள் இப்படிச் சொன்னவுடன் என் மனதில் தோன்றிய சில எண்ணங்கள்!
அல் என்றால் இரவு!
இரவில் மலர்வதால் அல்லி!
மாலையில் மலர்வது மல்லி!
மாலைக்கு முன் மலர்வது முல்லை!
இரவு அற்ற வேளையான காலையில் மலர்வது அலர்= தாமரை= அல்+அர்
சரிதானே, ஜி.ரா.!?
நீங்கள் சொல்வது போல், முறையாகப் போடத்தான் எண்ணுகிறேன்!
கிடைக்கும் நேரம் குறைவாய் இருப்பதல், இப்படி ஆகிவிடுகிறது!
எனினும், உங்கள் கருத்துக்கு ஒப்பி, அவ்வாறே செய்ய முயலுகிறேன்.
பொறுத்தருள்க!
இதுதான்! இது... இது போன்ற விளக்கமான எண்ணங்களைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன், குமரன்!
நீங்கள் சொன்னபடி பிரித்து, பிழை திருத்தி, மறுபதிப்பு அளித்திருக்கிறேன்!
மிகவும் நன்றி!
ஆம்! "புலவன் எம் குமரனே!"
:)
வாருங்கள், திரு. ஜெயராமன்!
வாகீச்வரி என்று மலைமகளுக்கே பெயர்!
வாரியார் சுவமிகள் கூட இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்!
அடிக்கடி வந்து போகவும்!
நன்றி!
குமரவேளுக்கு எல்லாருமே உறவுதான்!
ஆகவே, பிரிவுத்துயரால் வாடும் எத்த்கையவரும் பாடக்கூடிய பாடல் இது!
பாடிப் பயனும் பெறலாம்!
அனைவரும் பாடவும்!
பத்து பாடல்கள் போட்டதும், ஒரு வினா - விடை நடத்தலாம் என எண்ணுகிறேன்!!
என்ன சொல்லுகிறீர்கள்?!
SK அய்யா,
நல்ல விளக்கம். பல புதிய தமிழ்ச் சொற்களைத் தெரிந்து கொண்டேன். குறிப்பாக அருஞ்சொற்பொருள் எனும் தலைப்பின் கீழ் பல சொற்களுக்கான பொருளைத் தந்திருந்தமையால் இலகுவாக திருப்புகழை விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. நல்ல பணி. மிக்க நன்றி.
SK அய்யா,
நல்ல பதிவு
இது நல்ல விசயத்திற்காக...1
பாடல் எனக்கு புதியது,சொல் புதியது,சுவைபுதியது,விளங்கவைக்கும் முயற்சியும் புதியது. ஆனால் உங்கள் உரையைப் படித்தவுடன் கந்தன் மட்டும் ஆதி அந்தம் இல்லாத பழமனாதி என்பது மட்டும் மனதில் நன்றாக பதியுது
எப்போதும் வந்து பாராட்டி, உற்சாகம் கொடுப்பது, மகிழ்வாய் இருக்கிறது, திரு.வெற்றி!
மயிலை மன்னார்தான் நீங்கள் வரமாட்டேன் என்கிறீர்களே என்று குறைப்பட்டுக் கொண்டிருக்கிறான்!
:))
இரு மறுமொழியால், மொத்தம் ஐந்து சொற்களால் பாராட்டியதற்கு நன்றி, சிபா!
இன்னும் சற்று அதிகம் எதிர்பார்த்தேன்!!
நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிறது!
ஆசை வைக்காதே! அவதிப் படாதே!
:)
சிவன் என்றால் பழைமை என்று பொருள் உண்டு!
அவனே சக்தியுள் அடக்கம்!
அவளாலே இயங்குகிறான்!
அல்லது, இயக்குகிறான்!
அந்த சக்தியே, "புலவன் என் குமரனே" எனச் சொல்லும் போது, 'இவன் தான் பழைமையானவன்' என்று அறிந்து சொன்னதற்கு மிக்க நன்றி, திரு. தி. ரா. ச.!
அதிலும், இப்பாடல் உங்களையும்[!!] வரவழைத்தது என்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சி!
நன்றி!
// SK said...
//அல் என்றால் இரவு. இந்த அல்தானா "அல்லில் நேருமின் அது தானும்"?//
நீங்கள் இப்படிச் சொன்னவுடன் என் மனதில் தோன்றிய சில எண்ணங்கள்!
அல் என்றால் இரவு!
இரவில் மலர்வதால் அல்லி!
மாலையில் மலர்வது மல்லி!
மாலைக்கு முன் மலர்வது முல்லை!
இரவு அற்ற வேளையான காலையில் மலர்வது அலர்= தாமரை= அல்+அர்
சரிதானே, ஜி.ரா.!? //
ரொம்பச் சரி ஐயா! மிக அருமையான ஆய்வும் முடிவும். நன்றாக விளக்கினீர். அல்லைப் பிடித்தேன். நீவில் மல்லைப் பிடித்து முல்லை பிடித்து அலர்ந்திருக்கிறீர். :-) ஆக...அடிக்கடி கிண்டி விட்டால் நிறைய எங்களுக்கும் தெரியும். :-)
// நீங்கள் சொல்வது போல், முறையாகப் போடத்தான் எண்ணுகிறேன்!
கிடைக்கும் நேரம் குறைவாய் இருப்பதல், இப்படி ஆகிவிடுகிறது!
எனினும், உங்கள் கருத்துக்கு ஒப்பி, அவ்வாறே செய்ய முயலுகிறேன்.
பொறுத்தருள்க! //
ஆகா...என்னால் பொறுக்க முடியும். ஆனால் அருள முடியாது. அது முருகன் செய்வது. நான் காத்திருக்கிறேன். கண்ணில் படுகையில் படிக்கிறேன்.
குமரன், இந்த புலவர்க்குத் தாம்பூலம் தந்ததை நான் வேறோர் இடத்திலும் செய்யுளாகப் படித்திருக்கிறேன். எங்கு எப்பொழுது என்றுதான் மறந்து விட்டது. வாரியார் சுவாமிகள் தொகுத்த புத்தகம். அதை பெங்களூரில் சென்று பார்த்து இடுகிறேன்.
SK அய்யா,
//வள்ளிக்கொடி //
மேலும் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்..
SK அய்யா,
// இன்னும் சற்று அதிகம் எதிர்பார்த்தேன்!! //
மீன்டும் வருவேன்...
SK அய்யா,
//அனங்கன் = உடல் எரிந்து போனதால், உடல் இல்லாதவன் = மன்மதன், காமன் //
மிக அருமையான விளக்கம்..
////வள்ளிக்கொடி //
மேலும் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்..//
நம்பிராஜன் வாழ்ந்த இடம்...காடு வள்ளிமலை என இப்போது அழைக்கப் படுகிறது.
வள்ளிக்கிழங்கு அதிகம் விளையும் மலைக்காடு அது.
வள்ளிக்கொடியின் வேரில் இருந்தே வள்ளிக்கிழங்கு வருகிறது.
கிழங்கு என்றாலே பூமிக்கு அடியில் இருந்து வருவது தானே!
அப்படி ஒரு நாள் நிலத்தை பண்படுத்திக் கொண்டிருந்த போது கிடைத்தது ஒரு பெண்மகவு!
அதனால்தான் அவருக்கு வள்ளி எனப் பெயர் சூடி மகிழ்ந்தான் நம்பிராஜன்.
குறவர் குலத்தில் பிறந்ததால் குறவள்ளி என்றும் அழைக்கப் படுவார்.
அத்தகைய வள்ளிக்கொடிகள் அதிகம் படர்ந்த மலை, வள்ளிமலை.
இதுவே நான் அறிந்தது.
வேறு எதேனும் விளக்கங்கள் இருந்தால், தெரிந்தால், வந்து சொல்லுமாறு தமிழ் வல்லோரை அன்புடன் அழைக்கிறேன்.
மிக்க நன்றி, சிபா!
பல உரைகளைப் படித்தே நான் இங்கு என் நடையில் சொல்ல விழைகிறேன்!
எனவே, பெருமையெல்லாம் போகட்டும் அந்த உரைஆசிரியர்க்கே!
முருகன் அருள் முன்னிற்கும் !
வேலும் மயிலும் துணை !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !
SK Sir,
You have not approved some of the comments..
Pls check...
I have published all the replies so far, SiBaa!
Is therre any specific reply you have in question?
Thanks.
//SK said...
கரிநாக்கு உமக்கு! கோவியாரே!
//
கோவிக்கு கோவி நன்றாக தெரியும்... !
கோவி என்னவென்று சொல்லுங்கள் !
இல்லையென்றால் மறுபடியும் வந்து சொல்கிறேன் !
:)))
என்ன சொல்லுகிறீர்கள், கோவியாரே!
இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி?
ஏதேனும் தடயம் [க்ளூ] கொடுக்கலாமல்லவா?
சரி, முயற்சிக்கிறேன்!
"கோபுர விளக்கு"??
அதுதான் உயரத்தில் இருந்து அனைத்தையும் பார்க்கும்!
அது போல நீங்களும் ஜி.ரா., குமரன் வருகையை எல்லாம் பார்த்து விட்டீர்களோ?
:)
வள்ளியைப் பற்றிய கருத்து மிகவும் சரி. "வள்ளிக்கிழங்கினை கிள்ளி எடுத்திட்ட பள்ளத்திலே கிடந்தாள்"பின்பு முருகன் மேல் மையல் கொண்டு, மணந்து உயரமான திருத்தணி மலைமேலமுருகன்் ் பக்கத்தில் அமர்ந்தாள். அதுபோல வாழ்க்கையில் பள்ளத்தில் இருக்கும் நாமும் முருகனனின் பாதங்களைப் பற்றினால் வாழ்க்கையில் உயரலாம்
சீரிய கருத்தினை சிறப்புறச் சொல்லியிருக்கிறீர்கள், தி.ரா.ச. அவர்களே!
நன்றி.
Post a Comment