Thursday, August 24, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!" --3

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!" -- 3

"இன்னாபா! கமல் கவிதயெல்லாம் ரசிச்சாங்க போலருக்கே!" என்று அட்டகாசமாகச் சிரித்தபடி வரவேற்றான், மயிலை மன்னார், என்னைப் பார்த்ததும்!

"ஆமாம், ஆமாம்! எல்லாரும் ரொம்பவே பாராட்டினார்கள்!" என்று சொன்னவாறே அவன் அருகில் சென்றேன்!

"ஆமா! இது ஆரு? புச்சா கூட ஒரு ஆள இட்டாந்திருக்க? புது ஃப்ரெண்டா?" என்று கொஞ்சம் பொறாமை கலந்த சந்தேகத்துடன் கேட்டான் மன்னார்.

"எனக்கே புதியவர்தான்! இப்போது தான் பழக்கமானார்! நீ தமிழ் சொல்லும் 'அழகை' பார்க்கணுமாம்! அதுக்கென்றே துபாயில் இருந்து வந்திருக்கிறார்! பெயர் சுல்தான்! சுல்தான் சார்! இவந்தான் நீங்க கேட்ட மயிலை மன்னார்!" என்று இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தேன்.

"வா சார்! இப்ப்டி வந்து குந்து சார்! வெளிநாட்டுலேந்தெல்லாம் நம்மளைப் பாக்கறதுக்கு பெர்ய பெர்ய மன்ஷாள்லாம் வர்றது நமக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார்! இன்னா சார் சாப்ட்றீங்க? மாஷ்டர்! இவுங்கல்லாம் நாம ஆளுங்க! சார் துபாய்லேந்து ஸ்பெசலா நம்மளப் பாக்கறதுக்கென்னே வந்துருக்காரு! நல்ல ஷ்ட்ராங்கா ரெண்டு டீ அப்புறம் ஒன்னோட ஸ்பெசல் மசால் வடன்னு ஏதோ சொல்வியெ அது ரெண்டு; சீக்கரம் கொண்டா" என்று தடபுடல் படுத்தினான்!

இருக்கட்டும், இருக்கட்டும்! நாம வரும் போதெல்லாம் வெறும் சிங்கில் டீயோட அனுப்பி விடுவான். இப்போ துபாய் ஆளுன்ன உடன் ஸ்பெஷல் டீ, ஸ்பெஷல் மசால்வடையா? உன்னைப் பிறகு கவனித்துக் கொள்கிறேன்' என்று மனதில் கறுவிக்கொண்டே, "சார் அதுக்கெல்லாம் வரவில்லை! நீ சொல்லும் குறள் விளக்கத்தைக் கேட்கணுமாம். எனவே சீக்கிரம் ஆரம்பி!" எனக் கத்தினேன்!

"இரு, இரு! இப்ப இன்ன ஆயிரிச்சி ஒனக்கு? ஏன் இப்டி கூவறே? இரு, சாரைக் கேப்போம். சார், சுல்தான் சார்! நீ சொல்லு சார்! இன்னா அதிகாரத்துக்கு பொருள் சொல்லட்டும் நா!" என்று அன்புடன் அவரைக் கேட்டான் மன்னார்.

சுல்தான் கொஞ்சம் சங்கோசப் பேர்வழி போலும்! இந்த வரவேற்பை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. முதல் முறையாக வாயைத் திறந்து. " நீங்க எது வேண்டுமானாலும் சொல்லுங்கள்! நான் கேட்கிறேன்." என்றார்!

ஐயய்யோ! இப்படிச் சொன்னால் வில்லங்கமாக ஏதாவது சொல்லிவிடுவானே என்றஞ்சி, நான், அவசர அவசரமாக, "வரும்போது பேசிக்கொன்டு வந்தோம். அப்போது "இல்வாழ்க்கை" என்னும் அதிகாரம் பற்றிச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று சொன்னார் எனச் சொல்லி சமாளித்தேன்!

"ஏன்? சாருக்கு கண்ணாலம் ஆவப்போவுதா? நல்ல தலப்பத்தான் கொடுத்துருக்காரு! சரி, பாட்டப் படி நீ!" என்று சீரியசானான் மன்னார்.

நான் பாடல் சொல்ல அவன் மடமடவெனச் சொல்லுவதை திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தார் சுல்தான்!

"இல்வாழ்க்கை"

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை." [41]


ஒலகத்துல நல்ல விசயம்னு நாலு சொல்லிருக்காங்க! ஒண்ணு, படிக்கறது. இன்னான்னா படிக்கணுமோ அத்தயெல்லாம் வேற நெனப்பில்லாம பட்சிக்கினே இருக்கறது.
ரெண்டாவது, வூட்டு சிந்தனையே இல்லாம இருக்கறது. சதா காலமும் வேல, வேல வேலதான்! ஊட்டக் கவனிக்க மாட்டான், பொண்டாட்டி புள்ளயக் கவனிக்க மாட்டான்; எதோ இவந்தான் இந்த ஒலகத்தயே தாங்கிப் புடிக்கிறவன் மாரி ரொம்ப பிஸியா இருப்பான். இத்த 'மனைதொறவு'ன்னு சொல்லுவாங்க!
மேல சொன்ன ரெண்டும் கிட்டத்தட்ட சன்யாசம் மாரித்தான்னு வெச்சுக்கியேன்!
இப்ப மூணாவது இன்னான்னு கேளு, அட, கேளு சுல்தான் சார்! என்றவுடன் திடுக்கிட்டு, என்ன? என்று அப்பாவியாய்க் கேட்டார் சுல்தான்!
ஆங்! இந்த மூணாவது தான் நெசமாலுமே சன்யாசம் வாங்கிக்கினு போயிடறது! சாமிய நெனச்சுக்கிட்டோ, இல்ல வூட்ல வெறுத்துப் போயியோ, தொறவு வாங்கிக்கறது.
நாலாவது, ஒன்னிய, என்னிய மாரி, கண்ணாலம் கட்டிக்கினு குடும்பத்தப் பாத்துக்கினு, ஒறவுசனத்தஎல்லாம் கெவனிச்சிக்கிட்டு ஒயுங்கா வாளறது.
நம்ம ஐயன் இன்னா சொல்ல வர்றாருன்னா, மத்த மூணு பேரும் ஒயுங்கா இருக்கறதுக்கு இந்த இல்லறத்துல இருக்கானே அவந்தான் ரொம்ப முக்கியம்னு! வெளங்கிச்சா? ம்ம் அட்த்தது" என்றான் மன்னார்.

"துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை." [42]


கண்ணாலம் கட்டிக்கினு, குடுமபத்துல இருக்கறவன், இந்த மேல சொன்ன மூணு விதமான துறவிங்களுக்கு மட்டுமில்ல; நம்மளப் போல ஏளை பாளைங்களுக்கும், ஆரும் தொண இல்லாம செத்துப் போறான் பாரு, அவனுவகளுக்கும் இவந்தான் ஒதவியா இருப்பான். துவ்வாதவன்னா ஒண்ணுமே இல்லாதவன்னு அர்த்தம்! மேல!" என்றான்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை." [43]


இதுதான் ரொம்ப முக்கியமான குறளு. ஆளாளுக்கு ஒருவிதமா சொல்லுவானுங்க! நான் சொல்றத கவனமாக் கேளு என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான் மன்னார்.

இப்ப குடும்ப வாள்க்கைல இருக்கேன்னா ஒன்னோட கடம இன்னான்னு தெரியுமா? ஒரு அஞ்சு பேரு இருக்காங்க! நீ ஆருக்கு இன்னா பண்றியோ, இல்லியோ, இந்த அஞ்சு பேர மட்டும் மறந்துறக் கூடவே கூடாது! ஆருன்னு கேக்கிறியா? இப்ப அல்லா ஊர்லியும் பாத்தேன்னா, தெக்கால ஒரு சனத்த ஒதுக்கி வெச்சுருப்பாங்க! ஊருக்குள்ள வராத, செருப்பு போடாதே, துண்ட இடுப்பில கட்டினியா, அப்டி இப்டின்னு ரவுசு பண்ணிருவாங்க இவங்கள! இவுங்களத்தான் ஐயன் மொதல்ல வெக்கறாரு! அப்பொறமா, நீ கும்புடற சாமி, அப்பால, ஒன்னியத் தேடிக்கினு வர்றவங்க, இப்ப நீ சுல்தான் சார இட்டாந்திருக்கியே அது மாரின்னு வெச்சுக்கியென், நாலாவதா ஒன் சாதிசனம், கட்சீல நீ, ஒன்னிய மறந்துறக் கூடாது! இந்த அஞ்சு பேரையும் எப்டி கவனிக்கணுமோ அப்டி கவனிக்கணும் நல்ல விதமா!
ஆனா, இன்னா ஆச்சு? ஐயன் சொன்னத ஆளாளுக்கு அவனவுனுக்கு புரியற மாரி பிரிஞ்சிக்கிட்டாங்க. ஐயனே சொல்லிட்டார்டான்னு சொல்லி, ஆளும், பாளும் பண்ணிட்டாங்க. இப்ப வர்ற சனங்களாவது இத்தையில்லாம் மொறையாப் புரிஞ்சு அல்லாரையும் நல்லவிதமா காப்பத்தணும்! இன்னா சார்! செய்வியா?" என்றவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் தலையாட்டினார் சுல்தான்!

"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். [44]


" ரெண்டே ரெண்டுதான்! பளிபாவத்துக்கு அஞ்சணும், நல்லமாரி சம்பாதிச்சு, அட்த்தவன மோசம் பண்ணாம துட்டு சேத்து, அத்த வேண்டப்பட்ட மன்ஷாளோட பங்கு போட்டு வாள்றது, இது ரெண்ட மட்டும் ஒர்த்தன் வுடாம செஞ்சுக்கிட்டு வந்தான்னு வையி, மவனே! அவன் மட்டும் இல்ல, அவன் வம்சமே ஒரு கொறயும் இல்லாம அமோகமா இருக்கும்.

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. [45
]

"இத்த நீ ரொம்ப எடத்துல கேட்ருப்பே! நம்ம அர்சியல் தலிவன்லாம் எந்தக் கண்ணாலத்துக்கு தலம தாங்கப் போனாலும் வுடாம சொல்லிக் காட்டிருவானுங்க! அட, இன்னா சார், அப்டி சிரிக்கிற நீ? நா சொல்றது சர்த்தானே!
இன்னா சொல்றாரு? புர்சன் பொஞ்சாதிக்குள்ல ஒர்த்தொருக்கொர்த்தர் அன்பா இருக்கணும்; தானதர்மம் பண்றது ரெண்டு பேரும்... இத்த முக்க்யமா மன்சுலவெச்சுக்கணும்.. ரெண்டு பேரும் சேந்தே பண்ணணும். அப்பத்தான் நீ வாள்ற குடும்ப வாள்க்கைக்கு ஒரு அர்த்தம், பிரயோசனம் இருக்கும். சரி, நேரமாவுது அட்த்தது?"

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன். [46]


நல்ல மாரி நடந்துக்கினு ஒன்னோட குடும்பத்த நீ நடத்துனியின்னா, அப்பால நீ வேற எந்த வளியிலியும் போவத் தாவில்ல! இதுலியே ஒனக்கு அல்லாம் கெட்சுரும்ன்றாரு ஐயன். இந்த பாட்டுல ஒரு தமாசு பாத்தியா? ரெண்டாவது அடில பாரு, அசால்டாப் பாத்தேன்னா ஒய்ஃப் ந்ற மாரி இருக்கும்! வள்ளுவர்க்கு அப்பவே இங்லீச்லாம் தெரியுமான்னு கேக்காத இன்னா! என்று சிரித்தவனைப் பார்த்து எழுதுவதை நிறுத்தி நானும், சுல்தான் சாரும் கடகடவெனச் சிரித்து விட்டோம்!

"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. [47]


மொத மொதலா சொன்னேனே ஒரு மூணு பேரு, அவங்கள்லாம் வேற ஏதோ ஒரு ஒலகத்தப்
புடிக்குறதுக்கு ஓடிக்கினே இருக்கறவங்க. ஆனா, ஒயுங்கா குடுத்தனம் பண்ணேன்னு வெச்சுக்கொ; அவுங்கள அல்லாம் வுட சீக்கரமா ஒனக்கு அது கெடச்சுருமாம்"

"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. [48]


இப்ப காட்ல ஒக்காந்துக்கினு, இல்ல எதுனாச்சும் மடத்துல இருந்து தவம் பண்றாங்க பாரு சாமியாருங்க, அவுங்க அல்லாரயும் வுட, அவர் அப்டி செய்றதுக்கு ஒதவி பண்றான் பாரு, இந்தமாரி ஒயுங்கான வளியில குடுத்தனம் பண்றவன், அவனோட தவசுக்கு வீரியம் சாஸ்தி!

"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று. [49
]

இத்தயும் நீ ஒரு ஆயிரம் வாட்டி கேட்டுருப்பே, இல்லியா? ரொம்ப சிம்பில்! இப்ப அறம், தருமம்னுல்லாம்சொல்றாங்களே, அது இன்னான்னா, கட்ன பொண்டாட்டியோட ஒயுங்கா குடுத்தனம் பண்றதுதான். அத்தையும் இன்னோர்த்தன் திட்றமாரி வெச்சுகலன்னா இது இன்னும் ஸ்பெசல் ஆயிடும்!

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [50]


இப்ப இதுவரைக்கும் சொன்னாமாரி நீ வாய்ந்தேன்னு வெச்சுக்க, மவனே! அப்பொறம் நீ இங்கே இல்ல; எங்கியோ போயிடுவே! எங்கேன்றியா? இப்ப நீ கும்புடுறியே சாமிங்க அதெல்லாம் ஒரு எடத்துல ஒசரத்துல இருக்கற மாரித்தானே நென்சுக்கினு இருக்கே! அங்க,.... டாப்புல கொண்டு போயி நிறுத்திறுமாம்! அதுக்காவ நீ செத்து கித்துப் பூடுவேன்னு நெனக்காத! "அதோ போறார் பாருடா! இன்னாமா குடும்பத்த தாங்கறார் தெரியுமா? மன்சன் இல்லடா அவரு!தெய்வம்டா!" அப்டீன்னு இங்கியே ஒன்னியக் கையெடுத்துக் கும்புடுவாங்க!

இன்னா சார் நல்லா கேட்டுக்கினியா? ஒன்னயும் அல்லாரும் சாமின்னு சொல்ற மாரி நடந்துக்கணும், செய்வியா சார்?" என்று சுல்தான் சாரின் தோளில் கை போட்டவாறு மயிலை மன்னார் கேட்டபோது, அல்லா மேல ஆணையா கண்டிப்பாக செய்வேன் மன்னார்!" என்று சொல்லிய சுல்தான் மன்னாரின் கையைப் பிடித்துக் குலுக்கினார். நிறைவாய் இருந்த அந்தக் காட்சியைப் பார்த்தவாறே, கையோடு கொண்டு சென்ற கணினியைத் தட்ட ஆரம்பித்தேன்!

மீண்டும் அடுத்த வாரம் பார்ப்போம்!

"முருகனருள் முன்னிற்கும்!"

10 பின்னூட்டங்கள்:

VSK Friday, August 25, 2006 7:18:00 AM  

இதுல முக்கியமா அந்த மூணாவது குறளில் "தென்புலத்தார்" என்னும் சொல்லுக்கு மயிலை மன்னார் ஒரு புது விளக்கம் கொடுத்திருக்கிறான்!

படிக்கத் தவறாதீர்கள்!

:)

VSK Friday, August 25, 2006 9:52:00 AM  

மிக்க நன்றி, போலிஸ்காரரே!

நான் அவ்வாறு செய்பவனல்ல என்பது தாங்கள் என் பதிவுகளைப் படித்து வந்திருந்தால் தெரிந்திருக்கும்.

அது முகப்பில் வருவதற்காகப் போட்ட பின்னூட்டம் அல்ல என்பதும் அதைப் படித்தால் விளங்கும்.

மொத்தப் பதிவில் அந்தக் கருத்து ஒரு சிலராலாவது பார்க்கப்பட வேண்டுமே என்ற என் ஆதங்கமே!

இருப்பினும், கயமைத்தனத்தைச் சுட்டிக் காட்டியதற்கும், இன்னொரு பின்னுட்டத்திற்கும், அதற்கு பதில் அளிக்க எனக்கு வாய்ப்பளித்து உதவியதற்கும் மிக்க நன்றி!!

என்ன... அப்படியே பதிவைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!
:)

நாகை சிவா Friday, August 25, 2006 10:31:00 AM  

எஸ்.கே!

இன்னும் பதிவை படிக்கவில்லை. போன பதிவிற்கு பின்னூட்டம் போட முயற்சித்து முடியாமல் இங்கு பார்க்க வந்தேன். மீண்டும் அங்கு போய் முயற்சி செய்கின்றேன்.

வந்துக்கு ஒரு சின்ன டவுட் கேட்டுட்டு போறேன்.

ரொம்ப நாள் கழித்து போலிஸ்காரன் வந்து இருக்கார் போல. டவுட் அது இல்ல

போலீஸ் என்பது சரியா? இல்ல போலிஸ் என்பது சரியா?

இராம்/Raam Friday, August 25, 2006 10:39:00 AM  

என்னா மன்னாரு சில குரளெ நல்லா நறுக்கா நாலுவார்த்தை'ல சொல்லமே இப்பிடி நீட்டி முழங்கி இருக்கிறே.....:-)

VSK Friday, August 25, 2006 10:57:00 AM  

அல்லாம் ஒனக்கு பிரியணுமேன்னுதான் ராமுத்தம்பி!

சும்மா, அஞ்சு பேரு, நாலு பேருன்னு சொன்னேன்னா, அப்பால நீ வந்து இன்னா ஏதுன்னு உசுர வாஙிடுவியே, அதுக்கொசறம்தான், வெலாவாரியா சொல்லிபூட்டேன்!

அவுரு வெறும் ஏளு சொல்லுல சொன்னதுக்குள்ள எத்தினி விசயம் இருக்குன்னு நீயில்லாம் தெரிஞ்சுக்க வேணாவா?

அத்தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, August 25, 2006 1:35:00 PM  

SK & மன்னாரு

ரொம்ப நல்லா கீதுபா உன் விளக்கம். குறளுக்கு அல்லா பாஷைலயும் விளக்கம் போட்டு, வொலகம் பூரா பரவிக்கீதுன்னு சொல்றாங்க...நீ வுன்னும் ஒரு படி மேல் போயி, மதறாஸ் விளக்கம், மருத விளக்கம், நெல்லை விளக்கம் என்னுட்டு ரொம்பவே பரப்புற வாத்யாரே! "வட்டார வள்ளுவம்" ந்னு புக்கு போடுப்பா! வாங்கிப் படிக்கிறோம்.

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" - எல்லா கல்லாணப் பத்திரிகைலயும், இதோட, உன் விளக்கத்த போட்டா, ஈசியா புரியும்பா! சிம்பிளா சொன்னா டக்குன்னு புரிய்து மா!

//இருக்கட்டும், இருக்கட்டும்! நாம வரும் போதெல்லாம் வெறும் சிங்கில் டீயோட அனுப்பி விடுவான். இப்போ துபாய் ஆளுன்ன உடன் ஸ்பெஷல் டீ, ஸ்பெஷல் மசால்வடையா? உன்னைப் பிறகு கவனித்துக் கொள்கிறேன்' என்று மனதில் கறுவிக்கொண்டே//

ஆமா, குமரன் "ஒளவியம்" கூடாதுன்னு பதிவு போட்டாரே...மறந்துக்கினியா?
"அழுக்காறாமை" பத்தியும் அப்பால எழுதும்மா...வரட்டா?
"தென்புலத்தார்" பத்தியும் பின்பு வந்து பேசுகிறேன்.

VSK Saturday, August 26, 2006 1:48:00 AM  

"இப்பிடி வெலாவாரியா பத்தி பிரிசி எளுதறதப் பாக்கறப்பொ எம்புட்டு சந்தொசமா இருக்கு!
என் ராசா!" என்று ரொம்பவே மகிழ்ந்தான் மன்னார்!

ஒரு மணித்துளி வந்ததென்னவோ உண்மைதான், ரவீந்திரன்!
ஆனால், உடனே போய் விட்டது!

நீங்க சொல்லிட்டீங்கள்ல!
அடுத்தது 'அழுக்காறாமை" பத்தியே மன்னாரைச் சொல்லச் சொல்லுகிறேன்!

Unknown Saturday, August 26, 2006 1:55:00 AM  

கற்க - படிக்க, கசடற - குற்றமில்லாமல், கற்பவை கற்றபின் - படிக்க வேண்டியவைகளை படித்ததன் பின்னே, நிற்க - ஒழுகுக, அதற்குத்தக - அதற்கேற்ற மாதிரி
அதாவது படிக்க வேண்டியவைகளை எந்தப் பிழையுமின்றிப் படித்து, பின்னர் படித்தது போல் நடந்து கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான். அடுத்த குறளுக்குத் தாவி விடுவார் எங்க தமில் வாத்தியாரெல்லாம்.
மன்னார் மாரி பிரியற மாரி சொன்னா தானே ஐயனையே பிரமிப்பா பாக்க தோணுது.
'அன்பும் அறனும் உடைத்தாயின்' குறளுக்கு இன்னா மாரி சொல்லப்போறாரோன்னு பாத்தேன். ஹும்...
கூட கொண்டு போன எஸ்.கே.க்கு ஒரு தாங்ஸ். சூப்பர் மன்னாருக்கு படா தாங்ஸுபா...
'இல்வாழ்க்கை' யில் 'ல'கரத்துக்கு புள்ளிய காணோம்ப்பா.

VSK Saturday, August 26, 2006 2:20:00 AM  

கூட வந்த ஆளு இன்னும் வரவில்லையே எனக் காத்திருந்தேன், திரு. சுல்தான்1

நீங்க கேட்டதப் பத்தி உங்கள் அனுபவத்தைச் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்!

அது போலவே சொல்லிவிட்டீர்கள்!

வந்ததில் உங்களுக்கு மகிழ்ச்சிதானே!

//'இல்வாழ்க்கை' யில் 'ல'கரத்துக்கு புள்ளிய காணோம்ப்பா.//

இ"ல்'லியே! "இப்ப" 'ல்" இருக்கிறதே!

மிக்க நன்றி!

கோவி.கண்ணன் [GK] Saturday, August 26, 2006 11:59:00 AM  

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். [50]

இப்ப இதுவரைக்கும் சொன்னாமாரி நீ வாய்ந்தேன்னு வெச்சுக்க, மவனே! அப்பொறம் நீ இங்கே இல்ல; எங்கியோ போயிடுவே//

எஸ்கே !

நல்லா விளக்கி எழுதியிருக்கிறீர்கள். குரள்களும், குரள்களுக்கு கொரளும் அமர்களம் !

மயிலாப்பூரில் இன்றும் திருவள்ளுவர் இருந்தால் ஒருவேளை மன்னார் போல் தான் பேசுவாரோ !!!!
:)

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP