Wednesday, August 23, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [1]

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!"

முன்னுரை:


அதான் பெற்றாகிவிட்டதே! எங்களுக்கு எதுக்கு என்று கேட்காதீர்கள்! நான் சொன்னது குழந்தை பெற்றோருக்கு!

கடந்த சில நாட்களாக வலைத்தளத்தில் பல்வேறு பூக்கள் பாலியல் பற்றிய இதழ்களை விரித்திருந்தன! கை காட்டுதலும், அடுத்தவரைக் குறை சொல்லலாமோ என்ற எண்ணங்களும் அதில் மணம் வீசுவதைக் கண்டேன். நண்பர் கோவி. கண்ணனிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சில இதுபற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து இது குறித்து எழுதலாமோ என்றிருக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். ஆர்வ மிகுதியாலும், என் மேலுள்ள அன்பின் காரணத்தாலும் அவர் தன் பதிவில் இது பற்றிய அறிவிப்பை உடனே வெளியிட்டு விட்டார்! இப்போது உங்களுக்கு தப்பிக்க வேறு வழி இல்லை!

"பாலியல்" [Sexology] பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், 'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்னும் மனப்பான்மையே நம்மில் அதிகம் நிலவுகிறது என்ற உண்மையினை நாம் இங்கு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இது பற்றிப் பேச, கேட்க, பகிர்ந்து கொள்ள வெட்கமோ, அச்சமோ, அல்லது 'நம்மைத் தவறாக எண்ணி விடுவார்களோ?' என்னும் குற்ற உணர்வோ நம்மில் பலருக்கு ஏற்படுகிறது! அதனால், 'முயற்சித்துத் தவறுதல்' [Trial&Error], அல்லது 'தவறான இடத்தில் அறிவுரை கேட்டல்' [Seeking wrong advice] போன்ற வழிமுறைகளை நாடுகின்ற சோகம் நிகழ்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதைத் தவிர்ப்பதில் பெரும் பங்கு, பெற்றோர், ஆசிரியர், குடும்ப மருத்துவர், நண்பர்களுக்கு உண்டு. ஆனால், இந்த வரிசையில் அது நிகழ்வதில்லை! தலைகீழாகத்தான் நடக்கிறது! விளைவுகளும் தலைகீழாகத்தான் போகிறது!

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், ஒருமுறை என்னிடம் அவர்கள் 14 வயதுப் பையனை அவசரமாகக் கூட்டி வந்தனர். பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தப் போக்கு ஏற்படுவதாகத் தெரிவித்தனர். சிகிச்சை அளிக்கும் போது, முன் தோலின் அடிப்பாகம் [Frenum] அறுந்து ரத்தம் வருவதை உணர்ந்து சிகிச்சை அளித்தபின், என்னவென்று அந்தப் பையனிடம் கேட்டேன். தயங்கித் தயங்கி சொன்னான், 'இல்லை டாக்டர்! முன் தோல் [Foreskin] இருந்தால் கல்யாணம் ஆனபின் இன்பம் அனுபவிக்கக் கஷ்டமாயிருக்கும்' என என் நண்பன் ஒருவன் சொன்னான்; அதான்...கொஞ்சம் வேகமா ஆட்டிப் பாத்தேன்!' என்றான். இதை சொல்வதற்குள் அவனை வெட்கமும், அவமானமும் பிடுங்கித் தின்றது!

இதில் கவனிக்க வேண்டிய நிகழ்வு என்னவென்றால், தவறான ஆலோசனை வழங்கப் பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல! காதல், கல்யாணம் போன்ற நிகழ்வுகளை அவன் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறான், அதைப் பற்றி வீட்டிற்கு வெளியே பகிர்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் கூட!

இந்த எண்ணம் தவறா, சரியா என்பதற்கு பின்னர் வருவோம். அதற்கு முன், பாலியல் கல்வி [Sex Education] பற்றிய தேவையான அறிவு, புரிதல், நமக்கு இன்னும் வரவில்லை என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

நான் எழுத எண்ணியிருக்கும் இந்தத் தொடர், முக்கியமாகப் பெற்றோர்களைக் குறித்தே! அவர்கள் பங்கே இதில் பெரும்பான்மையானது! இது சிலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடும்! 'அது எப்படீங்க? நான் போய் என் மகன்கிட்ட , மகள்கிட்ட இதையெல்லாம் பற்றிப் பேச முடியும்? வாத்தியார் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கணும் இதையெல்லாம்! இல்லைன்னா, அரசப்பொரசலா தெரிஞ்சுக்க வேண்டியது தான்! நாங்கள்லாம் என்ன சொல்லிக்குடுத்தா வளந்தோம்? வந்துட்டாரு என்னமோ பெருசா! எதுக்கும் ஒரு முறை வேண்டாம்?' என்று பலர் சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன்.

'இணைய வசதிகளும், தேடல்களும் நிறைந்திருக்கும் இந்நாட்களில், இதற்கென்ன அவசியம்? வேணுமின்னா அங்கன போயித் தேடிக்கலாமே!' என்றும் சிலர் சொல்லக்கூடும்! ஒப்புக்கொள்கிறேன்! ஆனால், இணையத்தைப் போன்ற நண்பனும் இல்லை; அதைப் போன்ற விரோதியும் இல்லை என்பதே என் கருத்து! வளர்கின்ற பருவத்தில், எதைக் கொள்வது? எதனை விடுவது? எனத் தெரியாத மனநிலையில், அதில் நல்ல தகவல்களையும், கெட்ட தகவல்களையும், ஒரு சேரப் பெற்று குழம்பும் சிலருக்காகவே இத்தொடர்!

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, பெரும் பொறுப்பு வந்து விடுகிறது! எங்க அப்பா சொல்லுவார், 'மரம் வெச்சவன் தண்ணி வுடுவாண்டா' என்று. முதலில் சரி, சரி என்று கேட்டுவிட்டு, சற்று வளர்ந்த பின், கல்லூரி அப்ளிகேஷன் போடுவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது, அவர் இதைச் சொன்ன போது கேட்டேன், 'உங்களை சொல்றீங்களாப்பா?' என்று. என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், 'இப்பவாவது புரிந்து கொண்டாயே' என்பது போல! நான் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு அது! அது போல, குழந்தைகள் வளரும் போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்! எந்த வயதில் எதைச் சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியே இத்தொடர் அமையும். பெற்றவர்கள்தான் பாலியல் பற்றிய முறையான புரிதலைத் தர முடியும், வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்.

இதனைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்!

தயவு செய்து உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.... ஆரோக்கியமான முறையில். இதில் சில சமயம் வெளிப்படையான சில உண்மை நிகழ்ச்சிகளையும், கருத்துகளையும் சொல்ல வேண்டி வரும். அதன் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, அல்லது குற்றம் சாட்டுவதோ இல்லை என்னும் டிஸ்கியை இப்பவே போட்டுடறேன்! தொடரின் நோக்கம் திசை திரும்பினாலோ, திருப்பப்பட்டாலோ, உடனே நிறுத்தப்படும்! வாரம் இரு பதிவுகள் வரும்... வரணும்! பார்க்கலாம்... எப்படிப் போகுதுன்னு!

முருகனருள் முன்னிற்கும்!

இன்னிக்கு வெறும் முன்னுரை மட்டும்தான்! அடுத்ததாக.....

"நான் எங்கேருந்தும்மா வந்தேன்?" -- 3 வயதுக் குழந்தையின் கேள்வி!

57 பின்னூட்டங்கள்:

Sivabalan Wednesday, August 23, 2006 11:25:00 AM  

SK அய்யா

அரம்பமே அமர்களமாக இருக்கிறது..

மருத்துவரான நீங்கள் உங்கள் மருத்துவ அனுபவத்தை இந்த தமிழ் கூறும் நல் உலக்கு பகிர்ந்துகொள்தல், இந்த தமிழ் பதிவுகளின் உண்மையான நோக்கம் நிறைவேர ஆரபித்துவிட்டதாகவே நான் உணர்கிறேன்..

நிச்சயம் சமுதாயத்திற்கு பேருதவியான விசயம்.

பதிவை பற்றிய கேள்விகளுடன் மீன்டும் வருகிறேன்..

வாழ்த்துக்கள்.

VSK Wednesday, August 23, 2006 11:25:00 AM  

முருகனருள் முன்னிற்கும்!


தயவு செய்து உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.... ஆரோக்கியமான முறையில்.

Unknown Wednesday, August 23, 2006 11:34:00 AM  

amazing to read an article like this in Tamil. Please continue your good work.

VSK Wednesday, August 23, 2006 11:36:00 AM  

நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், சிபா!

ஆரம்பம் முதலே, ஆன்மீகத்தோடு கூட கொஞ்சம் அறிவியலும் எழுதலாமே என்று எனக்கு தார்க்குச்சி போட்டு வந்தது நீங்கள்தான்!

இப்போது இது தொடர்பாக ஒரு பதிவு போட்டதே என்னை எழுதத் தூண்டியது என்றால் மிகையில்லை!

இரட்டிப்பு நன்றி உங்களுக்கு!

பாராட்டுக்கும் சேர்த்துத்தான்!

VSK Wednesday, August 23, 2006 11:43:00 AM  

Thank you, Dr.Victoria for your comments.

Just dont stop with admiring alone!

I request you to share your thoughts as well!

You do have a very interesting perspective of life and hope your contributions will be of much value.

Thanks again!

Sivabalan Wednesday, August 23, 2006 11:53:00 AM  

SK அய்யா,

திசை திருப்பும் முயற்சியில் சில பேர் ஈடுபடக்கூடும். தயவு செய்து அதை பொருட் படுத்தாமல் தொடர்ந்து இச்சேவையை தந்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

நாமக்கல் சிபி Wednesday, August 23, 2006 11:56:00 AM  

நல்ல பயனுள்ள தொடர். வரவேற்பு நிச்சயம் இருக்கும்.

வாழ்த்துக்கள்.

//மருத்துவரான நீங்கள் உங்கள் மருத்துவ அனுபவத்தை இந்த தமிழ் கூறும் நல் உலக்கு பகிர்ந்துகொள்தல், இந்த தமிழ் பதிவுகளின் உண்மையான நோக்கம் நிறைவேர ஆரபித்துவிட்டதாகவே நான் உணர்கிறேன்..
//

சிவபாலன் அவர்களின் கூற்றை அப்படியே வழிமொழிகிறேன்.

சிறில் அலெக்ஸ் Wednesday, August 23, 2006 11:58:00 AM  

எஸ்.கே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆரம்பத்திலேயே ஒரு ப்ராக்டிக்கல் ப்ராப்ளத்த அலசியிருக்கீங்க. நிச்சயமா எழுதுங்க, தொகுத்து புத்தகமாப் போட முயலவும்.

எங்க பள்ளியில 1988/89 பாலியல் பாடம் நடத்தப்பட்டது பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது, அதனால் கிடைத்த தெளிவுகள் பல. மிச்சக் கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லுவீங்க.. :)

சரி, அந்த நுனித் தோல் பற்றிய கேள்விக்கு என்ன பதில்?

VSK Wednesday, August 23, 2006 12:05:00 PM  

நிறுத்தும் எண்ணம் இல்லை, சிபா.

இருப்பினும் முதலிலேயே சொல்லிவிடலாமே என்றுதான்!

:))

இலவசக்கொத்தனார் Wednesday, August 23, 2006 12:06:00 PM  

வாங்க வாங்க. இன்னிக்கு பிளாக்கில் உருப்படியா எதுவும் நடக்கறது இல்லை என்ற கருத்துக்கு பதிலா உங்க தொடர் அமையட்டும்.

நல்லா போகும். எந்த சந்தேகமும் இல்லை. வழக்கம் போல ஆதரவு உண்டு. வாழ்த்துக்கள்.

VSK Wednesday, August 23, 2006 12:06:00 PM  

நீங்களே வந்து சொன்னபின் அப்பீலேது, சிபி அவர்களே!

மிக்க நன்றி.

மா சிவகுமார் Wednesday, August 23, 2006 12:13:00 PM  

இன்றைய பொழுதுக்கான நிறைவு ஏற்பட்டு விட்டது ஐயா. உங்கள் வேலைகளுக்கிடையில் இந்தத் தொடரை திட்டம் செய்து எழுதி முடிப்பது எல்லோருக்கும் நல்ல பயன்களைக் கொடுக்கும். சிவபாலன் சொல்வதைப் போல தமிழ் வலைப்பதிவுகளின் நோக்கங்கள் நிறைவேற ஆரம்பிக்கும் பொற்காலம் இது.

அன்புடன்,

மா சிவகுமார்

VSK Wednesday, August 23, 2006 12:17:00 PM  

மிக்க நன்றி, சிறில்!

கொஞ்சம் பதிவு போகட்டும்! பிறகு யோசிக்கலாம்!

உங்களுக்குத் தெரிந்ததையும் அடிக்கடி வந்து பகிர்ந்து கொள்ளவும்.

//சரி, அந்த நுனித் தோல் பற்றிய கேள்விக்கு என்ன பதில்?//

நான் முன்னுரையில் சொல்ல விட்டுப்போன ஒன்றை நினைவு படுத்தியதற்கு நன்றி, மறுபடியும்!

பெற்றோருக்கான தொடராக இதை எழுத எண்ணியிருப்பதால், 3 வயதிலிருந்து ஆரம்பித்து ஒரு 21 வயது வரை கொண்டுபோகலாம் என்று எண்ணுகிறேன். அதுக்கப்புறம்....அவங்களுக்குத்தான் ஓட்டு போடற வயசு ஆயிடுச்சே! அவங்களே சிந்தித்து முடிவு பண்ணிப்பாங்க! :)

அதன்படி பார்த்தால், உங்கள் கேள்விக்கு 14 - ம் வயதில் பதில் வரும்!!
:))

VSK Wednesday, August 23, 2006 12:21:00 PM  

நீஙளெல்லாம் வந்து சொல்லுவதே பெரும் பலம்!
பிறகு எனக்கென்ன குறை!

இதற்கு 'உசுப்பிவிடும்' கருவிகளா இருந்தவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும் நான்.

உங்களையும் சேர்த்துதான் சொல்லுகிறேன், கொத்ஸ்!!

Thekkikattan|தெகா Wednesday, August 23, 2006 12:22:00 PM  

ஹய்யோ, பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கலக்கப் போறீங்கன்னு சொல்லுங்க.

டாக்டர். எஸ்.கே அய்யா, அப்புறம் லேடி டாக்டர் Delphine, அவங்க ஆங்கில இடுகைகளின் மூலமாக எழுதி வருகிறார் மருத்துவம் சார்ந்த விசயங்களை என்பது எனக்கு முன்னவே தெரியும்.

இப்பொழுது அவர்களும் இங்க... காத்திருக்கிறோம், புரிந்து கொள்ள.. நன்றி... நன்றி!!!

சிறில் அலெக்ஸ் Wednesday, August 23, 2006 12:24:00 PM  

14 வயதுவரைக்கும் காத்திருக்கணுமா..

அப்போ 16 வயதுல ஸ்ரீதேவி பத்தி சொல்லுவீங்களா?

என் பையன் பிறந்தபோது அவனுக்கு circumcission செய்யணுமா வேண்டாமான்னு ஒரு யோசனை இருந்தது..அத வச்சுக் கேட்டேன். (செய்யல)

கோவி.கண்ணன் [GK] Wednesday, August 23, 2006 12:28:00 PM  

எஸ்கே ஐயா ...!

பாலன் முருகன் புகழ் நாளும் பாடி,
பாலன் முருகனவனை தூங்கவைத்த நின் மதியில்,
பாலகர்களைப் பெற்றவர்கள் படிக்க ஒரு
பாலியல் அறிவுத் தொடர் தன்
பாலூறும் சுவைத் தமிழில்
பாலாற்று ஓட்டம் போல் படைப்பதிங்கே வாழ்த்துகிறேன் !

அன்புடன்
கோவி.கண்ணன்

VSK Wednesday, August 23, 2006 12:39:00 PM  

உங்கள் எண்ணங்களின், பொருளாதாரக் கட்டுரைகளின் ரசிகன் நான், திரு. சிவகுமார்!

உங்களின் பாராட்டு மெய்யாலுமே மகிழ்வளிக்கிறது.

"அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இன்னாற் சொல்"[198] போல!

நீங்கள் சொல்வது போல, திட்டமிட்டு எழுத எண்ணுவதாலேயே, வாரம் இரு பதிவு என வரையறுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆதரவுக்கு மிக்க நன்றி.

மங்கை Wednesday, August 23, 2006 12:41:00 PM  

Sk

மிக மிக நல்ல முயற்சி
Sex education என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளச் செய்ய சிரமமாக இருப்பதால்..இப்பொழுது அதையே Life Skills Education அளைக்கப்படுகிறது. இன்றைய தலைமுறையினரிடம் experimentation என்பது மிகச்சாதரணமான ஒன்றாக இருப்பதால், பெற்றோர் அதை புரிந்து நடந்து கொள்ளவேண்டிய அவசியம் இப்பொழுது உள்ளது. கண்டிப்பாக எல்லா பெற்றோருக்கும் இது அவசியம்.
வெளிப்படையாக பேசி, ஆலோசனை கூறும் பெற்றோர்களை விட நல்ல நன்பன் இருக்க முடியாது என்பது என் கருத்து.கோவையில் life skills education பயிற்சி கொடுக்க நாங்கள் கொடுக்க முற்பட்ட போது, ஆசிரியர்களிடம் இருந்து பலமான எதிர்ப்பு வந்தது..பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் பேசி பெற்றோரின் ஆதரவுடன் நடத்தினோம். பயிற்சியின் போது மாணவ மாணவிகள் கேட்ட கேள்விகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு மாணவி கேட்ட கேள்விகள் இதோ
which is the safe period to have sex?
can one have sexual intercourse during menstrual periods?
Wy cant a Man and man have sex?
இது போன்ற கேள்விகளுக்கு விடை தேட அவர்கள் நாடும் இடம் இன்று இணையதளம்.
அதானால் கண்டிப்பாக இது தேவை என்பது என் கருத்து.
நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்

கால்கரி சிவா Wednesday, August 23, 2006 12:47:00 PM  

சார் எனக்கு அவசியம் தேவையான பதிவு இது. (என் மகனின் வயது 16)

தொடரட்டும் உங்கள் நற்பணி

VSK Wednesday, August 23, 2006 1:30:00 PM  

ஆமாங்க, தெ.கா.!

டாக்டரம்மா வந்தது எனக்கும் மகிழ்வாகத்தான் இருக்கிறது!

என் வேண்டுகோளை ஏற்று அவர்களும் தன் கருத்துகளைச் சொல்வார்கள் என நம்புவோம்!

நன்றி.

G.Ragavan Wednesday, August 23, 2006 1:34:00 PM  

மிக நல்ல முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெறல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. எனது முன்வாழ்த்துகள்.

முறையான பாலியல் அறிமுகம் இல்லாத நிலை தவறான வழியில் கொண்டு விடும் என்பது கருத்து. ஆகையால் உங்களது இந்தத் தொடர் மிகவும் தேவையானது.

ஏதேனும் திசைதிருப்பல்கள் இருந்தால் கண்டு கொள்ளாமல் தொடரவும்.

முருகனருள் முன்னிற்கும். அருணகிரியும் அத்தனையையும் விளக்கமாகச் சொன்னவர்தார்.

VSK Wednesday, August 23, 2006 1:35:00 PM  

//14 வயதுவரைக்கும் காத்திருக்கணுமா..

அப்போ 16 வயதுல ஸ்ரீதேவி பத்தி சொல்லுவீங்களா?

என் பையன் பிறந்தபோது அவனுக்கு circumcission செய்யணுமா வேண்டாமான்னு ஒரு யோசனை இருந்தது..அத வச்சுக் கேட்டேன். (செய்யல) //

இல்லை, வேண்டாம். சிலர் வழக்கப்படி இந்த 'முன் தோல் நீக்கம்' இளவயதிலேயே செய்யப்படுவதால், இது பற்றி விரைவிலேயே தெரிந்து கொள்ளலாம்!
[இப்போ திருப்திதானே!]

ஸ்ரீதேவி பத்தி மட்டுமல்ல! ரஜினி, கமல் பத்தி கூட சொல்லுவேன்!

:)

VSK Wednesday, August 23, 2006 1:40:00 PM  

செய்வதையும் செய்து விட்டு
குழந்தையையும் கிள்ளி விட்டு
தொட்டிலையும் ஆட்டி விட்டு
மண்ணையும் தின்று விட்டு
பின் 'இல்லை'என்று சொல்லி விட்டு
வாய்திறந்து காட்டி அங்கு
உலகினையும் காட்டி விட்டு
இங்கு வாழ்த்தும் உம்மை
சிங்கை வந்து கவனிக்கிறேன்!

நன்றி கோவியாரே!

VSK Wednesday, August 23, 2006 1:44:00 PM  

வாழ்த்தோடு நின்றுவிடாமல், மேற்கொண்டு நல்ல பல கருத்துகளையும் கூடவே அள்ளித் தெளித்து, இதற்கு ஒரு தடம் அமைத்துக் கொடுக்கும் உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி, மங்கை!

இது போன்ற தவறான கருத்துகள் சிறியவர்கள் கொள்வது, பெரியவர்களின் அலட்சியத்தாலேயே என்பதை நீங்களும் உணர்ந்திருப்பது அறிந்து மகிழ்கிறேன்.

ஒவ்வொரு பதிவிலும் வந்து கருத்து சொல்லுமாறும் வேண்டுகிறேன்.

VSK Wednesday, August 23, 2006 1:47:00 PM  

ஒரு பொறுப்புள்ள தந்தையாக இதை நீங்கள் வரவேற்பது நிறைவாய் இருக்கிறது. சிவா!

திரு. சிறில் கேட்டது போல உங்கள் ஐயங்களையும் கேளுங்கள்.

முயற்சிக்கிறேன்.

மு.மு.

VSK Wednesday, August 23, 2006 1:52:00 PM  

நீங்கள் சொல்வது என்னவென்று நன்கு விளங்குகிறது, ஜி.ரா.

திருப்புகழ் விளக்கம் எழுதும் போது இங்கு இது வேண்டாம் என்று புரட்டிய சில பாக்களை இங்கு சொல்லிக் காட்டவும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்!

பொருத்தமாகவும் இருக்கும்!

நினைவூட்டியதற்கு நன்றி!

பாராட்டுக்கும் சேர்த்தே!

Unknown Wednesday, August 23, 2006 2:24:00 PM  

சுந்தரகாண்டத்தை சொன்ன தாங்கள் இந்த காண்டத்தையும் சொல்ல உங்கள் அப்பன் முருகனின் அருள் நிற்கும் வாழ்த்தி வரவேற்கிறேன் சந்தேகம் வந்தால் கேட்பேன். அய்யா மயிலை மன்னாரு , மயிலை மாமலை இன்னும் என்னவெல்லாம் வருமோ முருகா முருகா

VSK Wednesday, August 23, 2006 3:05:00 PM  

நல்லா கேளுங்க! மகி!

தெரிஞ்சா சொல்றேன்!

நன்றி!

ஓகை Wednesday, August 23, 2006 3:25:00 PM  

மருத்துவர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா இங்க மருத்துவரே எல்லாத்தையும் மறைக்காம சொல்லப்போறேன்னு சொல்றார். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

(மயிலை மன்னாருக்கு வேண்டியவர் ஒருத்தர் நம்ம பதிவில ஒரு கானா பாடியிருக்கிறார். இது விஷயம் அறியவும். ஏதாவது விட்டு போயிருந்தால் சொல்லவும்.)

துளசி கோபால் Wednesday, August 23, 2006 5:51:00 PM  

ஆரம்பமே அமர்க்களம். காலத்துக்குத் தேவையான பதிவு, பெற்றோர்களுக்குத்தான்.

இந்த விவரங்கள் எல்லாம் சரிவரத் தெரியாததில்தான் இங்கே வெளிநாடுகளுக்கு
வரும் பெற்றோர்கள், பிள்ளைகளின் நடவடிக்கை பார்த்து 'ஷாக்' ஆகி உக்காந்துடறோம்.
கலாச்சார மோதல் மனசுக்குள்ளேயே நடக்குதுங்க.

மா சிவகுமார் Wednesday, August 23, 2006 9:17:00 PM  

//இணைய வசதிகளும், தேடல்களும் நிறைந்திருக்கும் இந்நாட்களில், இதற்கென்ன அவசியம்? வேணுமின்னா அங்கன போயித் தேடிக்கலாமே!'

இணையத்தில் கிடைப்பதும் யாரோ எழுதி வைத்ததுதானே. நம்முடைய் குழந்தைகளுக்கு நம்முடைய மொழியில் நம்முடைய பெரியவர்கள் சொல்வதற்கு அது ஈடாகுமா?

அன்புடன்,

மா சிவகுமார்

VSK Wednesday, August 23, 2006 10:27:00 PM  

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி செய்யும் இந்த முயற்சி நல்லபடி நடக்க உங்கள் போன்றோரின் அன்பும், ஆதரவும் உறுதுணையாய் இருக்கும் என்பதுஇல் ஐயமில்லை, திரு. ஓகை!
நன்றி!

VSK Wednesday, August 23, 2006 10:29:00 PM  

மிகச் சரியாக நான் எண்ணியதை நீங்களும் பிரதிபலித்திருக்கிறீர்கள், துளசி !

பெற்றொர்கள் இன்னமும் பாராமுகமாய் இருத்தல் கூடாது.

VSK Wednesday, August 23, 2006 10:30:00 PM  

உங்கல் 'எண்ணங்களுடன்' ஒத்துப் போகிறேன், திரு. சிவக்குமார்!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) Wednesday, August 23, 2006 10:42:00 PM  

மிகவும் நல்ல விதயம் செய்திருக்கிறீர்கள். வாரமிருமுறை வரும் இந்தத் தொடரை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

3 வயதிலிருந்து தொடங்கியிருப்பது எனக்குப் பயனுள்ளதாகவிருக்கும். அக்கா+அண்ணா பிள்ளைகள் வந்து பேசும்போது என்ன சொல்லலாம் என்ற ஒரு தெளிவின்மை இருந்துவந்திருக்கிறது. அக்காவின் மகளுக்கு இங்கே (மான்ரியல்), கையேடு கொடுத்து அம்மாவுடன் அல்லது உறவினருடன் விவாதிக்கச் சொல்லியிருந்தார்கள். போனவருடம், பெரியம்மா சுகயீனப்பட்டு இறந்துபோனதால் அக்கா சில மாதங்கள் இங்கிருக்கவில்லை. அக்காவின் மகளுடன் அந்தக் கையேட்டில் இருந்த விதயங்களைப்பற்றி நானும் அண்ணாவும் விவாதித்தோம். அண்ணியிடம் இருவரும் நல்ல திட்டும் வாங்கினோம். :( :smile:

உங்களின் தொடரை டொராண்டோவிலிருந்து வரும் ஏதாவதொரு தமிழ்ப்பத்திரிகையில் வெளிவரச்செய்யலாமா என்று யோசிக்கிறேன்.நீங்கள் சரி என்று சொன்னால் நண்பர்களுடன் பேசுகிறேன்.

தமிழ்ப்பெற்றோரிடையே விழிப்புணர்வு வர உதவியாக இருக்கும்.

நன்றி.

-மதி

VSK Wednesday, August 23, 2006 11:42:00 PM  

எதிர்பார்க்கவே இல்லை மதி அவர்களே, உங்களிடமிருந்து ஒரு மடலை.

பொறுப்புடன் எழுத வேண்டும் என்னும் என் எண்ணத்தை மேலும் உறுதிப் படுத்தியுள்ளது இது.

நீங்கள் குறிப்பிட்ட அந்தக் காட்சி ஒன்றும் புதிதல்ல!

துளசி கோபால் சொன்னது போலவும், நீங்கள் குறிப்பிட்டுள்ளது போலவும், பெற்றொரின் கவனமின்மை மிகவும் கவலை அளிக்கிறது.

அதுவே என்னை எழுதத் தூண்டியது.

மற்றபடி, நீங்கள் சொன்ன நிகழ்வில் எனக்கு சம்மதமே.
இத்தொடர் நன்கு வருவதாக நீங்கள் கருதினால், இதனை வெளியிட எனக்கு மறுப்பேதும் இல்லை.

கரும்பு தின்னக் கூலியா?!

தொடர்ந்து வந்து பதியுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.

செல்வநாயகி Thursday, August 24, 2006 12:31:00 AM  

நல்ல முயற்சி இத்தொடர். அவசியமானதும்கூட. நன்றி.

VSK Thursday, August 24, 2006 1:05:00 AM  

வராதவங்க எல்லாம்...தவறு... இதுவரை பின்னூட்டம் இடாதவர்களெல்லாம் வந்து வாழ்த்தும் போது, பொறுப்புடன் செயல்பட வேண்டியதினை உணர்கிறேன்.

இது பலரின் வரவேற்பைப் பெறுவதிலிருந்தே இதன் முக்கியத்துவம் தெளிவாகிறது!

மிக்க நன்றி, செல்வநாயகி அவர்களே!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) Thursday, August 24, 2006 1:17:00 AM  

மிக மிக நல்ல முயற்சி, அதற்கு நல்ல ஆரம்பமும் கூட எதிர் பார்க்க வைத்து விட்டீர்கள்.

பொன்ஸ்~~Poorna Thursday, August 24, 2006 7:52:00 AM  

Kudos SK, நல்ல முயற்சி.. அப்பப்போ மன்னாரையும் இந்தக் களத்தில் இறக்கிவிடவும்..

துபாய் ராஜா Thursday, August 24, 2006 8:15:00 AM  

நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.முத்தமிழ்
முருகன் துணை எப்போதும் உண்டு.

தி. ரா. ச.(T.R.C.) Thursday, August 24, 2006 10:48:00 AM  

Good move. please do it.
A survey was conducted in England about the introduction of sex education in elementary school.Most of the persons interviewed told "yes" if the elders wanted to "update their knowledge."

VSK Thursday, August 24, 2006 11:13:00 AM  

//இந்த காண்டத்தையும் சொல்ல //

ஆரம்பிச்சுட்டாங்கையா... ஆரம்பிச்சுட்டாங்க!

காண்டம் அது இதுன்னு இப்பவே!

மகி, என்னைக் கொஞ்சம் எழுத விடறீங்களா?:))

VSK Thursday, August 24, 2006 11:16:00 AM  

இந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் அனைவரும் பகிர்ந்து கொண்டு செல்வோம், என்ன, திரு. குமரன் எண்ணம்!

நன்றி!

VSK Thursday, August 24, 2006 11:20:00 AM  

வாழ்த்திவிட்டு, மன்னாரையும் கொண்டுவா என்கிறீர்களே, பொன்ஸ்!

உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை!

அவன் கிட்ட தமிழ் கேக்கலாம்!

இது மாதிரி விஷயத்துல, ஏதாவது ஏடாகூடமா சொல்லிடுவான்! :)

அப்புறம் நம்ம மண்டைதான் உருளும்!

இது பற்றி தனிமடலில் உங்களிடம் ஆலோசிக்கிறேன்!!

VSK Thursday, August 24, 2006 11:22:00 AM  

வாழ்த்துக்கும், முருகனைத் துணைக்கழைத்ததற்கும் நன்றி, ராஜா!

கல்யாணம் எல்லாம் நல்லபடி ஆச்சா?

:))

VSK Thursday, August 24, 2006 11:24:00 AM  

Yes, Sri.TRC,

Parents lack some of the newer and current changes in values. They should learn to adapt to these with some essential compromises.
Thanks for your comments.

Anonymous,  Thursday, August 24, 2006 5:27:00 PM  

//Parents lack some of the newer and current changes in values. They should learn to adapt to these with some essential compromises.//
மிகவும் தெளிவான பக்குவமான கண்ணோட்டம் இந்த கருத்தைப் பேசுவது, பதிவது, பற்றி! கடைசி வரைக்கும் படிச்சிட்டேன் டாக்டர்! :) மறக்காம வந்து பாக்குறேன் தொடர்ந்து.

Muthu Friday, August 25, 2006 1:40:00 AM  

SK,

நல்ல முயற்சி. இது போன்ற செயல்கள் தமிழ் வலைத்தளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
வாழ்த்துக்கள்..


இதை தனி பிளாக் தொடங்கி எழுதவும்.முருகனை பற்றியும் கூடவே பாலியல் தொடரும் கொஞ்சம் குழப்பலாம்....என்ன சொல்றீங்க?

உங்கள் நண்பன்(சரா) Friday, August 25, 2006 9:27:00 AM  

என் அன்பு அண்பர் திரு.SK !

இந்தப் பதிவை வேறு யாராவது எழுதினால் நிச்சயம் அதை பொறுப்பான பெற்றோர்களும் சரி ,"உண்மையாகவே" பயன் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்ட வாலிபபதிவர்களும் சரி படிக்க யோசிக்கலாம்!ஆனால் எழுதப் போவது அனைத்துத் தகுதிகளும் கொண்ட தாங்கள் என்பது சந்தோசம்!

தமிழை நேசித்து அதை அனைவரும் பயனடையும் வண்ணம் தமிழ்பரப்பும் தமிழ் அண்பர்,மருத்துவர்,யார் மனதும் நோகாவண்ணம் பதிவுகளும் பின்னூட்டமும் போடும் ஒரு நல்ல நண்பர் என்ற பலமுகம் கொண்ட
தாங்கள் எழுதுவது சிறந்தது, நிச்சயம் உங்களின் இந்தத் தொடர் உங்கள் பதிவுகளில் ஒரு மைல்கல்,

ஆதரவு எந்தளவுக்கு உண்டோ அதே போல் கண்டிப்பாக எதிர்ப்பு பின்னூட்டங்களையும் தாங்கள் எதிர்கொள்ளவேண்டி இருக்கலாம்.
(நான் சொல்லுவது இந்தப் பதிவிற்கு மட்டும் அல்ல இனி வரும் உங்களின் தொடருக்கும் சேர்த்துத் தான் சொல்லுகின்றேன்)
அது போன்ற சமயங்களின் நாம் கண்டிப்பாக இந்தத் தொடரை தொடரவேண்டுமா? என்ற ஒரு சிறு எண்ணம் கூட வந்துவிட வேண்டாம்!கேள்விகளுடன் அடிக்கடி வருவேன்,தொடர்ந்து எழுதுங்கள்,
வாசிக்க! பயனடைய! காத்திருக்கின்றோம்!

அப்பன் முருகன் அருள் கண்டிப்பாக முன்னிற்க்கும், நானும் வேண்டிக்கொள்கிறேன்!


அன்புடன்...
சரவணன்.

VSK Friday, August 25, 2006 10:10:00 AM  

ஊக்கமளிக்கும் சொற்களால் நிரம்பிய உங்கள் பின்னூட்டம் உவகையளிக்கிறது, சரவணன்..

இது போன்ற நண்பரளுக்காக, நிச்சயம் இதனைத் தொடர்ந்து எழுதுவேன்.

மற்றபடி, தகுதி பற்றி நீங்கள் சொன்னது உங்கள் அன்பைக் காட்டுகிறது!

அதற்கு அருகதை எனக்கு இருக்கிறதா என்பது நான் எழுதுவதில் இருந்து தெரியவரும்....எனக்கும்!

மிக்க நன்றி.

ரவி Friday, August 25, 2006 10:13:00 AM  

வாழ்த்துக்கள் - எஸ்.கே..

அன்புடன்,.
செந்தழல் ரவி

VSK Friday, August 25, 2006 10:18:00 AM  

நன்றி, செந்தழல் ரவி!

VSK Friday, August 25, 2006 10:31:00 AM  

-பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி, முத்து[தமிழினி].

நீங்கள் சொல்வது நல்ல யோசனை.

செயல்படுத்த முயற்சிக்கிறேன்.

வெட்கமின்றிச் சொல்வதானால், இந்தப் பூவே ஒரு நண்பர் உதவியால்தான் அமைந்தது!

மறுபடியும் அவரைத்தான் நாட வேண்டும்!!

ஏ! பணக்காரரே! தொந்தரவு பண்ண வரப்போகிறேன்!

:)

VSK Friday, August 25, 2006 10:31:00 AM  
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா Friday, August 25, 2006 11:43:00 AM  

எஸ்.கே.,
மிக நல்ல முயற்சி. பேசுவதோடு நிறுத்தாமல் செயலில் இறங்கியதற்கு வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நான் இங்கு வேலையில் சேர்ந்த போது மிகவும் விளக்கமா செக்ஸ் குறித்து பாடம் எடுத்தார்கள். பல கேள்விகளுக்கு பதில் அளித்த பயற்சி அது. மேலும் தெளிவு அடைய உங்க பதிவு உதவும் என்று நினைக்கின்றேன்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP