Sunday, May 28, 2006

"ஜெயலலிதாவின் தப்பாட்டம்"

"ஜெயலலிதாவின் தப்பாட்டம்"



தேர்தலிலே தெரிவு செய்த மக்களைப் பாராட்டி
மன்றத்தில் பேசியதால் மனமகிழும் தொண்டர்களே!

அக்கறையாய்ச் சபைக்கு வந்து
வக்கணையாய்க் கேள்விகள் கேட்டு
முக்கால் மணி நேரம் பேசியதால்
முறுவலிக்கும் கண்மணிகளே!

முதல் நாளே முறையின்றிச் சண்டையிட்டு
முழுவதுமாய் வெளியேற்றப்பட்டு இன்று
முன்னாள் முதல்வரை மன்றத்தில் வரச் செய்து
முனைப்பாகப் பேசியதால் முகம் மலர்ந்தீர் நீவிர் இன்று!

தவறான திட்டங்களை
தவறான நேரங்களில்
தவறாக அறிவித்து- இன்று
தவறான "முடிவைத்" தந்தவர்
தங்கமான உங்கள் தலைவி!

தோல்வியினைச் சரியாக நேர்கொள்ள மனமின்றி
துவண்டிருக்கும் தொண்டரையும் நினைவில் கொள்ளாமல்
துவக்க நாள் முதலே வரமாட்டேன் என்றே
துச்சமாய் அறிவித்த நும் தலைவி
தம்மக்கள் இன்று, தவறான நடத்தையினால்
தம் தொகுதி சார்பதனை மன்றத்தில் காட்டாமல்
தள்ளி வைக்கப்பட்ட நிலையினைக் கண்டவுடன்
"தளராத மனத்துடனே வேதாளம் வருதற்போலே"
தன்னிகரில்லாத் தலைவியும் சபைக்கு வர மனமிசைந்தார்!

வந்தவரைக் கண்ணியமாய்ப் பேசவிட்டு
"சொந்தமெல்லாம் இல்லாமல் தனியாக நின்றவரை"
நிந்தனைகள் செய்யாமல் ஆளுகின்ற முதல்வருமே
பாந்தமாகவே பதிலிறுத்தார்! அவருக்கு நன்றி!

பேசுகின்ற நேரத்தில்
ஏசுகின்ற குணம் விட்டு
காசு பணம் பார்க்காத
மாசற்ற நம் மக்கள்
குறை கேட்கும் குணமின்றி
நேசமாகப் பேசிடாமல்
கண்ணியமற்று நடந்திட்டார்
முன்னாள் முதல்வருமே!

முதல்வர் வருகின்ற போதினிலும்
முதல்வர் பதிலிறுக்கும் போதினிலும்
மற்றவர்கள் அமர்ந்திருக்க வேண்டுமென்பது
மற்றவருக்கு வேண்டுமெனில் மற்ந்திருக்கக் கூடும்
முன்னாள் முதல்வருக்கும் கூடுமோ?

தன் பேச்சு முடிந்தவுடன்
தன் வழியே போகாமல்
'மார்ஷல்' வந்து வெருட்டும் வரை
முறையற்ற இடத்தினிலே
தன் கருத்தை முன் வைத்து
தனிப்பேட்டி கொடுத்ததுவும்
முறை சொன்ன 'மார்ஷலையும்'
முறையின்றிப் பேசியதுவும்
முன்னாள் முதல்வர்க்கு அழகாமோ?

முன்னாள் முதல்வர்கள்
கண்ணியம் காத்தவர்கள்,

[நான் கருணாநிதியையும்,
பன்னீர்செல்வத்தையும்
சொல்லவில்லை!!

காமராஜரையும்,
ராஜாஜியையும்,
ஓமந்தூராரையும்
பக்தவத்சலத்தையும்,
அண்ணாத்துரையையும்
சொல்லுகின்றேன்!]

முன்னாள் முதல்வர்கள்
கண்ணியம் காத்தவர்கள்
முகம் சுளிக்க செய்தீரே!

மீண்டும் நீவிர் சட்டசபைக்கு
வருவதாகப் பேசுகிறார்!
அதுபோல நடந்திடவே
நானும் விரும்புகிறேன்!
கண்ணியம் காத்து
கடமையை ஆற்றிட
கவலையோடு என் வேண்டுதல்கள்!

"ஆடாதீர் தப்பாட்டம்!"

நன்றி!
வணக்கம்!

13 பின்னூட்டங்கள்:

Unknown Sunday, May 28, 2006 6:06:00 PM  

அம்மையார் ஆட்சிகாலத்தில் தனிநபராக கலைஞர் சபைக்கு வந்து பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது ஊருக்கே தெரியும்.அந்த வகையில் சட்ட சபையின் கண்ணியம் காத்த கலைஞரை பாராட்டியே ஆக வேண்டும்.

அம்மையாரை விட பல மடங்கு பண்பட்ட அரசியல்வாதி கலைஞர் என்பதை இம்முறையும் கலைஞர் நிருபித்து விட்டார்.

வெற்றி Sunday, May 28, 2006 6:15:00 PM  

நல்ல எளிய தமிழ்நடையில் கவி புனைந்துள்ளீர்கள். படிக்கச் சுவையாக உள்ளது. தங்கள் கவிதையின் பொருள் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை.

//முன்னாள் முதல்வர்கள்
கண்ணியம் காத்தவர்கள்,

[நான் கருணாநிதியையும்,
பன்னீர்செல்வத்தையும்
சொல்லவில்லை!!

காமராஜரையும்,
ராஜாஜியையும்,
ஓமந்தூராரையும்
பக்தவத்சலத்தையும்,
அண்ணாத்துரையையும்
சொல்லுகின்றேன்!]
//

முன்னாள் முதல்வர் அமரர் கோ.இராமச்சந்திரன் அவர்களை நீங்கள் இரண்டு பட்டியலிலும் சேர்க்கவில்லையே?! என்ன காரணம்.

நியோ / neo Sunday, May 28, 2006 6:35:00 PM  

அன்பு் எஸ்கே,

இந்தப் பதிவுக்கு நன்றி! :)

(ஓரிரு சிரிய கருத்துவேறுபாடுகள் இருந்தாலும்!)

VSK Sunday, May 28, 2006 6:36:00 PM  

அதுதானே!
எப்படி அவரை மறந்தேன்!?
சுட்டியத்ற்கும், குட்டியதற்கும் நன்றி, வெற்றி!

சும்மா ஏதாவது கருத்து சொல்லுங்கள்!
நான் ஒன்றும் தவறாக எண்ணமாட்டேன்!

VSK Sunday, May 28, 2006 6:39:00 PM  

பண்பட்ட அரசியல்வாதி,
என்று சரியாகச் சொன்னீர்கள், செல்வன்!!

இந்தமுறை அவர் நடந்துகொண்ட விதம்,
நம்பிக்கையூட்டுவதகவே இருக்கிறது!

ஆனால், அவர் பே[ஏ]ச்சுகள்!!??
ம்ம்ம்ஹூம்!!

VSK Sunday, May 28, 2006 6:40:00 PM  

சொல்ல மறந்து போனேன்!
தொடர்ந்து வந்து பாராட்டுவதற்கு மிக்க நன்றி, வெற்றி!

VSK Sunday, May 28, 2006 6:44:00 PM  

நமக்குள்ளெ இருப்பதைச் சொல்லுகிறீர்களா?
இல்லை,
நான் எழுதியதில் சொல்லுகிறீர்களா?

:)))
எப்படி இருப்பினும்,
வந்து கருத்து சொன்னதற்கு நன்றி, நியோ!!

VSK Sunday, May 28, 2006 6:47:00 PM  

பொன்ஸ்,
கோபிக்க வேண்டாம்!
வார்த்தை தவறி விட்டேன்!


"வார்த்தை தவறி விட்டேன்"!!
:))))

வவ்வால் Sunday, May 28, 2006 6:50:00 PM  

வணக்கம் அய்யா எஸ்.கே!

இந்த அரசியல் கூட புரியுது ஆனா அரசியல் கவிதைகளும் ,அரசியல் பண்ணும் கவிதைகளும் சுத்தமா புரிய மாட்டேன்குது சாமி :-))நான் ஒரு வெண்குழல் விளக்கு அவ்வளவு சீக்கிரம் ஏறாது!

VSK Sunday, May 28, 2006 7:00:00 PM  

நீங்களா வெண்குழல் விளக்கு?

விளையாடாதீர்கள், வவ்வால் அவர்களே! :))

இதில் உள்குத்தெல்லாம் ஒன்றுமில்லை!

உணர்ந்ததை உள்ளபடி சொல்லியிருக்கிறேன்!

அவ்வளவே!

பொன்ஸ்~~Poorna Sunday, May 28, 2006 8:45:00 PM  

"வார்த்தை தவறி விட்டேன்"!!
:)))

நமக்குள்ள என்னங்க?::)

சந்தர் Sunday, May 28, 2006 9:18:00 PM  

பின்னிய சொற்களில் கண்ணியத்தை எடுத்துரைத்தீர்...

வாழ்க நீவீர்.

VSK Sunday, May 28, 2006 9:21:00 PM  

இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!
நன்றி, ப்ரதிமா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP