நாயும் நானும்!
நண்பர் பச்சோந்தி ஒரு அழகான கவிதையைப் பதிவிட்டிருந்தார்!
அதனைப் படித்துக்கொண்டு வரும் போதே எனக்குள் எழுந்த மாற்றுக் கவிதையை அவருக்கு அனுப்பினேன்!
இப்போது உங்கள் பார்வைக்கும்!
முதலில் அவரது மூலக் கவிதை!
பின்னால் வருவது என் எண்ணம்!
நான்கு தெருக்கள் மட்டும் அறிந்த நாய்!!
அறியாமையின் பயத்தால் விளைந்த
அடிமை எண்ணத்தில்
கதவைச் சுரண்டி கவனம் திருப்பும்
சுதந்திரம் என்பதன் பொருள் அறிந்த
என் வீட்டு நாய்
கவனம் கலைந்த நான் வியப்புடன்
பயத்தின் பொருள் யாது என்றேன்
பயத்தின் பொருள் அடுத்தவரை
அச்சுறுத்துவதில் உண்டு என்றது அந்நாய்.
அச்சுறுத்தும் செயலின் ருசி
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால் தான் தெரியும்
பயம் என்பதன் பொருளும்
அச்சுறுத்தலின் ருசியும்.
சிந்தனை வயப்பட்டு நான் திகைப்புடன்
சுதந்திரத்தின் பொருள் யாது என்றேன்
சுதந்திரத்தின் பொருள் அடுத்தவருக்கு
அடிமைப்படுவதில் உண்டு என்றது நாய்
அடிமைத்தனத்தின் சுகம்
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால் தான் தெரியும்
அடிமைத்தனத்தின் சுகமும்
சுதந்திரத்தின் வலியும்
இது கொடுமை என்று
நான் கூக்குரலிட்டேன்
இது நல்லொழுக்கம்
என ஊளையிட்டது நாய்
சோர்ந்து போய் நான்
எனக்குள் சொல்லிக் கொண்டேன்
பரிதாபம்..!
இந்தக் கொடுமையைச்
சொல்லிக் கொடுத்தது யார்?
அவமதிப்பும், புறக்கணிப்பும்
நிறைவென உணர வைத்தது யார்?
சிரிப்புடன் நாய் சொன்னது
நீ பேசுவது உனக்குச் சொல்லிக் கொடுத்தது.
நான் பேசுவது என் ஆன்மா அறிந்தது.
ஆனால் நீயும் நானும் வேறல்ல.
posted by Chameleon - பச்சோந்தி @ 10:57 PM
At 12:12 AM, SK said…
நாயும் நானும்!
மரியாதையின் காரணம் விளைந்த
அன்பு எண்ணத்தால்
கதவைச் சுரண்டி கவனம் திருப்பும்
சுதந்திரம் என்பதன் பொருள் அறிந்த
என் வீட்டு நாய்.
கவனம் கலைந்த வியப்புடன்
மரியாதையின் பொருள் யாது என்றேன்.
மரியாதையின் பொருள் அடுத்தவரை
அன்புசெய்தலில் உண்டு என்றது என் நாய்.
அன்பு செய்தலின் ருசி
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால்தான் தெரியும்
மரியாதை என்பதன் பொருளும்
அன்பு செய்தலின் ருசியும்.
சிந்தனை வயப்பட்டு நான் மகிழ்வுடன்
சுதந்திரத்தின் பொருள் யாது என்றேன்
சுதந்திரத்தின் பொருள் அடுத்தவருக்கு
நன்றியறிதலில் உண்டு என்றது என் நாய்.
நன்றியறிதலின் சுகம்
ஒருமுறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை
நாயாகப் பிறந்தால்தான் தெரியும்
நன்றியறிதலின் சுகமும்
சுதந்திரத்தின் சுவையும்.
இது அருமை என்று
நான் கூக்குரலிட்டேன்
இதுவே என் பெருமை
எனக் குரைத்தது என் நாய்.
வியந்து போய் நான்
எனக்குள் சொல்லிக் கொண்டேன்
அற்புதம்!
இந்த உண்மையை இதற்குச்
சொல்லிக் கொடுத்தது யார்?
அன்பும், நன்றியும்
சிறந்த பண்பென
மனிதன் உணராமல் போனது ஏன்?
பரிவுடன் நாய் சொன்னது
உன் இயல்பை மறந்து
உள்தேடுதலை விட்டு
ஊதாரியாய் சுற்றுவதால்
உணர முடியாமல் போயிற்று
உனக்கு.
"அன்பு செய்!
நன்றியுடன் இரு!
உனக்கும் புரியும்!"
34 பின்னூட்டங்கள்:
நல்லா இருக்கே போட்டி கவிதைகள், மாறி மாறி 'லொள்' லாமல் இருந்தால் சரி. நல்ல பொருள் சுவை
நண்பர் பச்சோந்தியின் நல்ல கவிதை இன்னும் நாலு பேரைச் சென்றடைய வேண்டியே இந்த 'மீள்பதிவு'.
பாராட்டுக்கு நன்றி, 'கோவிகண்ணன்'
ஆனால், அத்தனைக்கும் உரியவர் 'பச்சோந்தி'அவர்களே!
எஸ்.கே சார்,
நாய்களை பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை.நீங்கள் எழுதிய அடிமைத்தனத்தின் சுகமும்,சுதந்திரத்தின் வலியும் இக்கட்டுரையில் பிரதிபலிக்கிறது
http://holyox.blogspot.com/2006/04/72.html
'செல்வன் சார்',
நான் இதை வந்த போதே படித்து விட்டேன்!
அடிமைத்தனமும், அச்சுறுத்தலும்,
மரியாதையும், நன்றியும்
முறையே,
மனிதன் மறக்க வேண்டிய,
மறந்து போன பண்புகள்!
இதைத்தான் இருவரும் சேர்ந்து சொல்லி இருக்கிறோம்!
மூல ஆசானுக்கே முழுப் பெருமையும்!
வணக்கம் எஸ்.கே.
" நாய்க் கவிதை" அருமை.நான் கூட கவிதை எல்லாம் எழுதி இருக்கிறேன் ஆனால் இப்படி பட்ட ஜீவனுள்ள கவிதையை (ஜீவன்? நாய் வாய் இல்லாத ஜீவன் தானே!) படைக்க முடியவில்லையே என்று மனம் சோர்ந்து போய்விட்டது .உங்கள் செல்லப்பிராணி சாப்பிட்ட பொறை செரிமானம் ஆகாமல் பின்னிரவில் வயிற்று வலியில் சொன்ன கவிதையை பொருமையாய் மொழிப்பெயர்த்து பதிவிட்டு சரித்திரம்,பூகோளம் முதலியவற்றில் உங்கள் பெயரை பொன்னெழுத்துகளால் பொரித்து விட்டீர்கள்!.( ராமநாரயணின் படத்திற்கு இதற்கு முன்னர் கதை,வசனம் எழுதினீர்களா!)
கவிதை சொல்லும் நீதி:-
நன்றாக கவிதை எழுதும் கலை கைவரப்பெறாதவர்கள் உடனடியாக செல்லப்பிராணியாக ஒரு டாபர் மேனோ,அல்சேஷனோ (ஆதி சேஷன்,டி.என்.சேஷன் அல்ல) தவணை முறைத்திட்டதிலாவது வாங்கி விடுங்கள்.0 % வட்டி விகிதத்தில் கடன் தர பல வங்கிகளும் தயார்.கிரெடிட் கார்டுகளுக்கு சேவைக் கட்டணம் இல்லைங்கோ!
சரி, சரி என்னையும் உங்கள் ஆட்டையில் சேர்த்துக் கொள்ளுங்கள்
தமிழர் வீட்டு நாய் !
தன்னிலை எண்ணிப் பார்க்காமல்
தாழ்வு மனப்பான்மையால்
முதுகை செறிந்து முனிகியபடி, தன்
உயர்வை அறியாமல் முடங்கி இருந்தது
என் வீட்டு நாய்.
கவனம் சிதறியதும் கனிவுடன்
தாழ்வென்பதன் பொருள் யாது என்றேன்
தாழ்வென்பதன் பொருள் அடுத்தவரை
உயர்த்திபிடிப்பதால் வருவது என்றது என் நாய்.
தாழ்வு என்பதன் சுகம்
ஒரு முறை ஏற்பட்டால்
தெரியும் அதன் தீராத தாகம்
நாயாக பிறந்ததால்தான் தெரியும்
உயர்த்துதல் என்பதன் மோகமும்,
தாழ்வே வேண்டுமென்ற தாகமும்.
தூக்கம் கலைந்து நான் துடிப்புடன்
உயர்வு என்பதன் பொருள் யாது என்றேன்
உயர்வு என்பதன் பொருள் அடுத்தவரை
பாராட்டுவதில் உண்டு என்றது என் நாய்.
உயர்த்துவதில் தாழ்வில்லை எனக்கு
ஒருமுறை உணர்ந்தால்
தெரியும் அதன் தீராத மோகம்
நாயாக பிறந்தால்தான் தெரியும்
தாழ்ந்துபோனதன் சுகமும்
உயர்த்தியதின் பலனும்
இது மடைமை என்று
நான் கேலிசெய்தேன்
இதுவே என் பழக்கம்
என ஊழையிட்டது நாய்
வெறுத்துப் போனதும் நான்,
நாயே நீ செய்வது
தற்கொலை ஆகாதா ?
இந்த நிலையில் உன்னை
சிந்திக்க வைத்தது யார் ?
நீசன் நீ, ஈசன் நான்
என்றுரைத்த வெள் ஆடுகள் எது ?
தயங்கியபடி நாய் சொல்லியிற்று
உன்னிடம் இருப்பது என் விழி
நான் பேசுவது தமிழ்மொழி
அதனால் நீயும் நானும் வேறல்ல
கோவி.கண்ணன்
வவ்வால் அவர்களே!
இந்தப் பின்னூட்டத்தின் மூலம் உங்களின் கேலி செய்யும் மனப்பான்மையை வெளிப்படுத்தியதைத் தவிர வேறேதும் உருப்படியாய்ச் செய்ததாகத் தெரியவில்லை!
இருப்பினும், வந்து படித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி!
மரியாதை, நன்றியறிதல் இவையே மனிதப் பண்புகள்!
அருமையாக இருக்கு பச்சோந்தியின் கவிதையும் அதற்கான பதில் கவிதையும் நாலு பேருக்கு சென்றடைய வேண்டும் என நீங்கள் மீள்பதிவு செய்தமை பாராட்டப்படவேண்டிய செயல்...அந்த நாலு பேரில் நானும் ஒருவன்...
எஸ்.கே நானும் நாய்களைப் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளேன் படிக்க : நடுநிசி நாய்கள்
இது கூட ரொம்ப நல்ல கருத்துங்க, கோவிக்கண்ணன்!
'உயர்வும், தாழ்வும்
அவம்திப்பும், புறக்கணிப்பும்
மரியாதையும்,அன்பும், "
வேறு யாரேனும் உண்டா இந்த ஆட்டத்திற்கு!??
""குமரன், செல்வன், இராகவன், கொத்ஸ், ஜீவா, பொன்ஸ்"", இன்னும் மற்ற பலரும்!!
இதோ 'ப்ரியனின்' கவிதையும் இங்கே!
மிக்க நன்றி 'ப்ரியன்'!
ப்ரியன் கவிதைகள்
கவிதை...கவிதைகள்...என் கவிதைகள் அன்றி வேறில்லை...
வெள்ளி, டிசம்பர் 23, 2005
நடு நிசி நாய்கள்
இரவில் அப்படி இப்படி
திரும்பி புரண்டுப்
படுக்கையில் தூக்கம்
கலைந்து போகும்
சில நாட்கள்!
பக்கத்து வீட்டு
மரம் அசைதலில்
பேய் கண்டுபிடித்து
மனம் கிலி கொள்ளும்
சில நேரம்!
மாலையெல்லாம்
அமைதியாய்
கம்பம் தேடிய
நாய்கள் குரைத்துத் தொலைக்கும்;
அவ்வப்போது
குலை நடுங்க வைக்கும்!
சின்னதொரு வயதில்
இருட்டியப் பின் கடைக்கு
செல்லும் நாட்களில்
தூரத்தில் வரும் அப்பனை
அடையாளம் காணாமல்
பேய் வருதென பயந்து
பதுங்கியதும்;
டவுசரைப் பிடித்தப் படி
துணைக்கு சத்தமாய்
பாட்டை நடுங்கியபடி
கத்திச் சென்ற
நினைவுகளும்;
மனதில் நின்று ஊஞ்சலாடி
மெல்லியதாய் புன்னகை
பூக்கச் செய்யும்!
அது தொடர்ந்து
என்னைப் போல
எதைக் கண்டு
பயந்து கத்துகின்றனவோ
இந்நடு நிசி நாய்கள்! - என
எண்ணும் கணம்
இன்னும் பயங்கரமாக கத்தி
பயமுறுத்தி தொலையும்!
ஆனாலும்,
எந்த நாயும்
சொல்லியதில்லை என்னிடம்
இரவில் கத்தும் ரகசியத்தை;
ஏனோ நானும்
இதுநாள் வரை கேட்டதில்லை
அதுகளிடம் அவ்ரகசியத்தை!
- ப்ரியன்.
ஒரு கவி அரங்கமே நடக்கிறதே!!!
எண்ணங்களை தட்டி எழுப்பும் நல்ல படைப்புகள்.
ரசித்தேன்!!!
ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி, 'நன்மனம்'!
ஆஹா அருமையான கவிதை அணிவகுப்பே இங்கு நடக்கிறதே !!!
எஸ்கேவுக்கு என் நன்றி.
நடுநிசி நாய்கள் - பசுவய்யா என்ற பெயரில் (மறைந்த)சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு. எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
ப்ரியனுக்கு நன்றி.
என்ன இது .. கெமிலியான் பதிவு இரண்டு கிளைகளாக பிரிந்து விட்டது. :)
இதோ என் பதிவும்..
கோவி கண்ணனின் கவிதை பாதிப்பு..
என் வீட்டு நாய்
==============
காலையில் நடைபயில
நாய்க்குத் துணையாக
நானும் போனேன்
பூங்காவின் பாதையில்
வசதி படைத்த
வழிநடத்தும் நாய்களோடு
நகரும் மனிதக் கூட்டம்
என் நாட்டு நாயிடம் கேட்டேன்
வெளிநாட்டு வகையினருடன்
நடக்கையிலே நீ தாழ்வென்று
உணர்வாயா என்று
நாய் சிரித்தது
தாழ்வென்பது எது என்றது
எதிலும் சற்று குறைவாக
இருப்பது எனக் கொள்ளலாமென்றேன்
எதைவிடக் குறைவாக என்றது
உனக்கு உயர்ந்ததை பார்க்கிறாயே
அதோ அது..
அதைவிட என சுட்டினேன்
ஒரு அழகிய பெரிய நாயை
ஓ.. அது தான் உனக்கு உயர்ந்ததா..
சரி வா.. பேசிப் பார்க்கலாம் என்றது
அருகில் போய் நாய்த் துணையுடன் பேசினேன்
அதை விட அழகிய நாய் வாங்க கொண்டிருந்த அதன் ஏக்கம் புரிந்தது
சரியென சற்றே நகர்ந்து
என்ன சொல்ல வருகிறாய் என்றேன்
என் நாயை பார்த்து
'சுயம் உணர்' என்று
சொற்பொழிவாற்றியது
உயர்ந்ததெல்லாம் உயர்ந்ததல்ல
தன்னிலும் உயர்ந்ததைக் காணாத தோற்றப் பிழையது..
ஆனால்
உயர்ந்ததாக உணர்ந்தது உண்மையில் உயர்ந்தது.
உண்மையில்..
சுயம் எனும் மெய்யில்
உயர்வு தாழ்வும்..
சரி தவறும் ஏதுமில்லை
நாயறிவுக்கு ஈடுகொடுக்க
முடியாததால்
அது இழுத்த பாதையில்
சிந்தித்துக் கொண்டே நடந்தேன்.
"பச்சோந்தி" என்றால் நிறம் மட்டுமா மாறும்?
கிளையும் பிரியும், 'சுகா'!!
எனக்கென்னவோ, இந்த 'நாயும், நானும்' என்னும் தலைப்பு பொருளை நன்கு விளக்குவத்காக எண்ணுகிறேன்!
இது போல இன்னும் விளையாட முயற்சிக்கலாம்!
உண்மை தான் எஸ்கே.. தலைப்பு மிகப் பொருத்தமானது..
வேறு யாரேனும் உண்டா இந்த ஆட்டத்திற்கு!??
""குமரன், செல்வன், இராகவன், கொத்ஸ், ஜீவா, பொன்ஸ்"", இன்னும் மற்ற /////
எஸ்.கே சார்
எனக்கு கவிதை எழுத வராதே?கட்டுரை தான் எழுத வரும்.
//இன்னும் மற்ற பலரும்!! //
கவிதைதான் எழுதணும்னு யார் சொன்னாங்க செல்வன்!
கட்டுரையாகவே புகுந்து விளையாட வேண்டுகிறேன்!!
செல்வன் .. நீங்க கட்டுரையே எழுதுங்க .. ஆனா ஒரு வரில மூணு வார்த்தைக்கு மேல எழுதாதீங்க..
அப்புறம் நடு நடுவே ஆச்சர்யக் குறி போட்டுங்க.. அவ்ளவ்தான்...
நானெல்லம் அதைத் தான் பண்ணுறேன்.. ஹ ஹா :D
பச்சோந்தியும், நானும்
பலவித மனிதரின்
பரிகாச நிலையினை
படம்பிடித்துக் காட்டியது
பலபேரின் மனநிலையைப்
பாதித்ததென்றால்,
பாவம் நாங்கள் என்ன
செய்ய முடியும்?
அப்படியே இருந்து விட்டுப்
போகட்டும்!
பழி ஓரிடம்!
பாவம் ஓரிடம்! என்பது
தமிழுக்கும்,
தமிழனுக்கும் புதிதல்லவே!!
எஸ்கே,
பலருடைய எண்ணங்களைத் தூண்டி அவர்கள் நினைத்ததைச் சொல்ல பயன்பட்ட 'நாய்'க்கு என் நன்றி.
உண்மையில் நாய் படாத பாடு தான்.
:)
நாயென்றும், பேயென்றும்,
நல்லதொரு சாட்சியென்றும்
நாளெல்லம் சண்டையிட்டும்
நன்மதியும் வாராமல்,
நிதமிங்கே ஏசுகின்றார்
நேர்மையதை மறந்துவிட்டார்!
நாமெல்லாம் சேர்ந்திங்கு,
நோகாமல் ஒதுக்கி விட்டால்,
நல்லதே நடக்குமென
நிச்சயமாய் நம்பிடுவோம்!
நன்றி!
பச்சோந்திக்கு பின்னூட்டமிட்ட இன்றைய கவிதை,
விவாதங்களில் நீங்கள் எடுக்கும் நிலையையும், நீங்கள் அங்கு கவிதையாக எழுதுங்கள்.
வி.க பதிவில் பின்னூட்டமிட்டு நீங்கள் நொந்து போயிருப்பதாக மட்டும் தெரிகிறது
திசையை நோக்கி ...
காற்று அடிக்கும் திசையில் பயணிக்கும்
கட்டுமரம் போல் விவாதங்களில் நான் நுழைவேன்
புயலில் சிக்கிய பாய்மரம் போல்
விவாதக் கடலிலிருந்து மீள நினைப்பேன்
உருக்குலைந்த படகாய் வேறுவழியின்று
விவாதத்தை விட்டு வெளியே வருவேன்
எல்லாம் முடிந்தபின்பும் சரிசெய்து கொண்டு
மற்றொருநாள் அதே திசையில் பயணிப்பேன்
தினசரி காலையில்
எழுந்திருக்கும் வேளைகளில்
காலை சுற்றி வந்து வட்டமிடும்
உன் கண்களில் தெரிவது
பசிமட்டுமா? இல்லை
அது இன்னோர் சுகானுபவம்
காலில் கிடப்பதை கழட்டி
அடித்துதுரத்திவிடலாம் என்றே
சில
கோபமான தருனங்களில்
எண்ணுவதுண்டு
நீ மறுமுறை என் கால்தொட்டு
நுகருகையில் உன்
கண்கள் கேட்கும் கேள்விகளுக்கு
என் வார்த்தைகளால் பதில்சொல்ல
இயலாது போகுமே
அதுஎண்ணி சில நேரம்
நானும் பொருத்துப்போவதுண்டு
உன் சங்கடமான சில சந்தோஷங்கள்
என் கல்லடி பட்டு காயமாகி இருக்கும்
உனக்கு நல்ல வேளையாக
ஞாபகசக்தி அதிகமில்லை
ஆனால்
உனை வேறு யாரும்
கல்லெரிந்து விட்டால்
உனக்கு பதிலாய் நானே
அவர்களை கடித்து
குதறிவிடலாமா என்றிறுக்கும்.
சில மனிதத் தோல் போர்த்தி
உன் வேடமிட்டு வருபவர்கள்
நல்ல வேளையாக
எனை அதிகம்
நெருங்க வில்லை
ஒருவேளை அவர்கள்
உண்மையிலேயே
உன் இனமாய் இருக்கக் கூடும்
இப்படிக்கு.....
நன்றியுடன் நானே.
நல்ல கருத்துகளை நயம்பட எழுதியிருக்கிறீர்கள், மஹேந்திரன் !
கொஞ்சம் இந்த 'ர' , 'ற' வரும் இடங்களைப் பதிவுக்கு அனுப்புமுன் சரிபார்த்தால், சில நெருடல்களைக் குறைக்கலாம்!
தவறாக எண்ண மாட்டீர்கள் என நம்புகிறேன்!
நன்றி.
அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க!
"நாய்"க் கவிதைகளைத் தொகுத்தளிக்கும் முயற்சியில்[!!] இதோ இன்னுமிரு "நாய்"க்கவிதை!
முதலாவது 'திரு'வினுடையது!
பின்னது என் பதில் கவிதை!
நாய்கள்!
மனித பதர்களை விட
நாணயமானவை!
நாய்கள் தங்கள் இனத்தை
பிரித்து பழக்கப்பட்டதில்லை;
மனித பதர்கள் இனம் பிரிக்கும் வரை!
மானிட ஜென்மங்கள் அவதாரமெடுக்கும் வரை
நாய்களுக்குள் சண்டையில்லை!
பிரித்தே பழக்கப்பட்ட உனக்கு;
அடிபட்டு அலறும் நாயின் வலியும்,
அடிபட்ட கூட்டத்தின் பார்வையும்
புரியப் போவதில்லை!
எடுபடும் உந்தன் பரம்பரை வீரம்
அடிப்பட்ட நாய்கள் ஒன்றுபடும் வரை!
திரு
posted by திரு at 6:15 PM
7 Comments:
SK said...
நாய்....
மனிதப் பதரை விட நாணயமானவை!
ஆனால், '
நாய்கள்!
......??
ஒன்றுடன் ஒன்று குலைத்துக் குரைத்து
சன்டை போடும் கூட்டம்!
ஒன்றுக்கு மேல் நாயை வைத்து
ஓரடுக்கில் சோறு போட்டுப் பார்!
அப்புறம் தெரியும்
இந்த 'நாய்களின்' ஒற்றுமைக்குணம்!
எச்சில் சோற்றுக்கு
எனக்கு உனக்கென
இந்த நாய்கள் போடும்
சண்டைக் கணக்கை
சந்தியில் சொல்ல
சமுதாயம் சிரிக்கும்!
'நாய்கள்' என்று யாரும் இங்கில்லை!
'நாய்கள்' என்ச் சொல்லி
நாம் போடும் சண்டைகளை
'நாய்கள்' பார்த்தால்
நாணித் தலை குனியும்!
நாய்களை இங்கு இழுக்காதீர்!
நம்மைத் தெரிவு செய்வோம்!
நம்மைத் திருத்திக் கொள்வோம்!
நாய்களை இங்கு இழுக்காதீர்!
நாய்க்கு நாலறிவுதான்!
நமக்கோ ஆறறிவு!
நல்லதைச் சொல்லி
நலமுடன் வாழ்வோம்!
நன்றி! வணக்கம்!
Sk,
இதென்ன திடீர்ன்னு இந்த பதிவு தமிழ்மண முகப்பில் மறுபடி வருது?மறுபதிப்பா,இல்லை பிளாக்கர் சொதப்பலா?
தவறின்றிச் சொல்லி விட்டீர்!
ப்லாக்கர் சொதப்பலின்றி வேறேதும் பதிலுண்டோ!!
அப்போதே சொன்னேனா என்று ஞாபகம் இல்லை.. கவிதை மிகவும் நன்றாக இருந்தது... (இப்போதெல்லாம் நிறைய கவிதைகள் எழுதுகின்றீர்களா அல்லது நான் இப்போதுதான் கவனிக்கிறேனா?)
"நடுநிசி நாய்கள் - பசுவய்யா என்ற பெயரில் (மறைந்த)சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு. எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று."
ப்ரியனுக்கு நன்றி.
பச்சோந்திக்கு நன்றி!
ஆம்!பசுவய்யா எழுதிய கவிதைத் தொகுப்பின் தலைப்பின் அடிப்படையில் எழுதப் பட்டதுதான் இந்த கவிதை...இதை இங்கு எடுத்து இட்ட எஸ்.கே வுக்கு சிறப்பு நன்றிகள்...
பசுவையா என்ற பெயரில் சுந்தரராமசாமி எழுதிய சில கவிதைகள் படிக்க நடுநிசி நாய்கள்
சுட்டிக்கும், இட்ட நன்றிக்கும், எனது நன்றி, ப்ரியன்!
வலைப்பூக்களில் பலநாளாய் பின்னுட்டம் இட்டு வந்தாலும், தனிபதிவு எழுத ஆரம்பித்தது சமீபத்தில்தான்!
அதுவும் எல்லாமே கவிதையாக வந்து விழுந்துவிட்டது!
உங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி, 'முகமூடி'!
Post a Comment