Wednesday, February 29, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 52 [47/2]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 52 [47/2]


[கந்தரநுபூதி 47 [இரண்டாம் பகுதி]

ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே.

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

“சீறா வரு சூர் சிதைவித்து இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே.”

ஒரு காலத்துல, இந்திரன் தன்னோட ஒலகத்துல அல்லா சொகத்தியும் மானாவாரியா அனுபவிச்சுக்கினு தன்னோட ஆளுங்களோட ரொம்பவே சந்தோசமா இருந்தான். ஆட்டமின்னா ஆட்டம், பாட்டமின்னா பாட்டம், அமிர்தத்தக் குடிச்சதால சாவே இல்லாம, மனம் போன போக்குக்கு வாள்[ழ்]ந்துக்கினு, ரொம்ப ஜாலியா இருந்தான்!

வந்தான் சூரன்னு ஒர்த்தன்!
ஓங்கிப் போட்டான் தலையுல ஒரு போடு!

அவ்ளோதான்! துண்டைக் காணும், துணியைக் காணும்னு பிடிச்சான் ஓட்டம் இந்திரன்!
பொண்டாட்டி புள்ளைங்களைல்லாம் வுட்டுட்டு, சீர்காளி[ழி]க்குப் பக்கத்துல க்கீற ஒரு மூங்கில் பொதருக்குள்ளப் பூந்துக்கினு, ஒரு மூங்கிலுக்குள்ளாற ஒளிஞ்சுக்கினான்!

பாவம் அவனோட பொஞ்சாதி! இந்திராணி!
அந்தம்மா மேரு மலைக்குள்ளாறப் போயி குந்திக்கினாங்க!

இவுரு காப்பாத்துவாருன்னு நம்பிக்கினு ஆட்டம் போட்டுக்கினு இருந்த அக்கினி, வாயு, சூரியன், சந்திரன், இன்னும் மத்த தேவருங்க பாட்டுல வுளுந்திச்சு மண்ணு!
மொத்தமா மூட்டை கட்டிக்கினு போயி, அல்லாரையும் ஜெயிலுக்குள்ள தள்ளி இம்சை பண்ணினான் சூரன்!

தேவருங்க, பிரம்மா, பெருமாளு இப்பிடி அல்லாரும் போயி மொறையிட்டதால மனசு இரங்கின சிவன், தன்னோட நெத்திக்கண்ணுலேர்ந்து ஆறு பொறிங்களை அனுப்பி, ஆறுமொகத்தப் படைச்சு, அவரு கையுல ஒரு வேலையும் குடுத்து, ‘நீ போயி இவங்க தும்பத்தத் தீரு’ன்னு அனுப்பி வைச்சாரு!

அவரும் அப்பன் சொல்லைத் தட்டாம அப்பிடியே செஞ்சு, சீறி வந்த சூரனை அளி[ழி]ச்சு, சூரசம்ஹாரம் பண்ணி, தேவருங்களுக்கெல்லாம் திரும்பவும் தேவலோகத்தக் குடுத்தாரு!

இப்ப நம்ம அரசியல்வாதிங்கல்லாம் அடிக்கடி சொல்லுவாங்களே!... ‘தமிள்[ழ்]கூறும் நல்லுலகம்’னு! அப்பிடீன்னா இன்னா?
தமிள[ழ]ங்கல்லாம் இருக்கற ஒலகத்துக்கு அப்பிடி ஒரு பேரு!

அதேமாரித்தான், ‘இமையோர் கூறு ஆ ஒ[உ]லகம்!
கூறா ஒலகம்னா, கூறு ஆ ஒலகம்னு புரிஞ்சுக்கணும்!

இந்த ‘ஆ’ன்னா இன்னா? அத்த எப்பிடி சொல்லுவாருன்னு முந்தியே பல தபா சொல்லியிருக்கேன். ஒனக்கும் நெனைப்பு இருக்கும்னு நம்பறேன்’ என்றான் மயிலை மன்னார்.

‘பிமரம் கெட மெய்ப்பொருள் பேசிய ஆ’ என நாயர் முணுமுணுத்தான்!

‘அதே, அதே! கரீட்டா சொல்லிட்டியே நாயரே!’ எனத் தட்டிக் கொடுத்தான் மன்னார்! வியப்புடன் நாயரைப் பார்த்தேன் நான்!

‘செத்து சுண்ணாம்பாக் கெடந்த தேவருங்களுக்கெல்லாம், அவங்களோட சொகமான ஒலகத்த மறுபடியும் மீட்டுக் குடுத்து, அவங்க மனசையெல்லாம் குளுரப் பண்ணின முருகா!’ன்னு இந்த வரியுல சொல்லிப் பாடறாரு அருணகிரியாரு!

இப்ப, இந்த மொத்தப் பாட்டையும் பார்த்தியானா, ஒரு முக்கியமான விசயத்த நீ கெவனிக்கணும்!

அஞ்சஞ்சாச் சேர்ந்து ஒரு இருபது வந்தாக்கூட, அத்தோட ஒரு நாலு, ஏளு சேர்ந்து முப்பத்தொண்ணு ஆச்சுன்னு முன்னாடி சொன்னேன்ல!

அத்தோட கடைசியா மறுபடியும் இன்னொரு அஞ்சு சேர்ந்துத்தான் அது முப்பத்தாறு ஆச்சு!

நமசிவாய’ன்னு பஞ்சாட்சரம் இருந்தாக்கூட, அது அந்த சிவனோட ஆறு பொறியுல கெளம்பி, ஒரு ஆறு [கங்கை] வளி[ழி]யாப் போயித்தான், அல்லாருக்கும் ஒரு நெரந்தரமான சொகத்தக் குடுத்துது !! அஞ்சுதான் ஆறைக் காட்டிச்சு! ஆறுதலியும் குடுத்துது!

அஞ்சு இல்லாம ஆறு இல்ல!
ஆனாக்காண்டிக்கும், ஆறுதான் அல்லாத்துக்கும் மேலான நெலையக் குடுக்கும்ன்றத இதுல ரொம்பவே தெளிவாப் புரிய வைக்கறாரு அருணகிரியாரு…. புரிஞ்சுக்க நெனைக்கறவங்களுக்கு…. அத்தத் தேடறவங்களுக்கு!

கெடைக்கறவங்களுக்குக் கெடைக்கும்! பாக்கறவங்களால பாக்க முடியும்! அவ்ளோதான் என்னால சொல்லவும் முடியும்!’ என நிறுத்தினான் மயிலை மன்னார்!

‘ஆஹா! எவ்ளோ அழகாச் சொன்னேடா! நீ சொன்னதைக் கேட்டதும் என் மனசுல ஒண்ணு பட்டுது!

தங்கிட்ட மறைஞ்சிருக்கற அந்த ஆறாவது முகமான ‘அதோமுகத்தைக்’ காட்டணும்னு திருவுள்ளம் பண்ணிண்டு, அந்த சக்தியை தன்னோட நெத்திக் கண்ணுலேர்ந்து வெளியே கொண்டுவந்து, அப்படி வந்த மஹாசக்தியை, அந்த லோகமாதா சர்வேச்வரியாலியே ஆறுமுகக் கடவுளாப் பண்ணி, அவனோட சக்தியை இந்த லோகமே அறியணும்னு, எல்லாத்துக்கும் ஆதியான அந்த சர்வேச்வரனே என்னமோ தனக்குத் தெரியாதுன்றமாதிரி, ப்ரணவத்துக்குப் பொருள் கேக்கறதுக்காக, அந்தக் கொழந்தை முன்னாடி மண்டி போட்டு, பயபக்தியாக் கேக்கறமாதிரி நடிச்ச உலக மஹா நடிகனான அந்தப் பரமசிவனோட திருவிளையாடல்கள்ல இதுவும் ஒண்ணுன்னுதான் நினைக்கத் தோணறதுடா!’ எல்லாம் அந்தக் கபாலீச்வரனோட அருள்தான்!’ என எதிரில் தெரிந்த கபாலி கோவிலைப் பார்த்து வணங்கினார் சாம்பு சாஸ்திரிகள்!

‘சரியாப் புரிஞ்சுக்கினு ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டீங்க சாமி! ஆறுக்கு அஞ்சுதான் ஆதாரம்! ஆனா, ஆறுதான் ஒரே வளி[ழி]!’ என அவர் காலில் விழுந்தான் மயிலை மன்னார்!

பங்குனி உத்திரப் பெருமான் கோவில் மணி பலமாக அடித்து ஆமோதித்தது!
**************
[தொடரும்]
 அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

2 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Sunday, March 04, 2012 8:02:00 AM  

"ஆறுதான் ஒரே வள(ழி)"என்மனமே!
அனவரதம் அவனைத் துதி !

VSK Sunday, March 04, 2012 8:26:00 PM  

ஆறு மனமும் ஆறும், அந்த ஆறுமுகன் பாலே நாடும்!

இந்தப் பதிவுகளைப் பலர் படித்து வந்தாலும், ஒரே ஒருவராக ஒவ்வொரு முறையும் வந்து, பின்னூட்டமிட்டு, உற்சாகம் தரும் அன்னைக்கு வந்தனம்! முமு.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP