Wednesday, August 17, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 24

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 24


23.

அடுத்தாப்பல வரப்போற பாட்டு கொஞ்சம் வித்தியாசமானது! வேடிக்கையாவும் இருக்கும் பாரு!


இப்ப, ஒரு கொள[குழ]ந்தை க்கீது. அதுக்கு ஒண்ணு வோணும்னு இருக்கு! ஆனா கெடைக்கலைன்னு வைச்சுக்கோ?
அது .இன்னா பண்ணும்?


கெஞ்சிக் கேட்டுப் பாக்கும்.
கெடைக்கலைன்னா, கொஞ்சம் அளுது மொரண்டு பண்ணும்.
அப்பவும் இல்லைன்னா, ஒடனே ஆத்தரம் வரும்.
'போ! போ! நீ மட்டும் இன்னா ஒயு[ழு[ங்கோ? நீ கூட அப்பிடித்தானே பண்ணினே'ன்னு நக்கலாக் கேக்கும். இல்லியா?
அதும்மாரி, இந்தப் பாட்டுலியும் கொஞ்சம் முருகனை சீண்டிப் பாக்கறாரு!
எப்பிடின்றத பாட்டைப் படிச்சதும் சொல்றேன்' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்.


பாட்டைப் படித்துக் காட்டினேன். அதை கிட்டத்தட்ட அப்படியே பதம் பிரித்து என்னாலேயே திருப்பிச் சொல்லவும் முடிந்தது.

அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமவேல் மகிபா! குறமின்
கொடியைப் புணருங் குணபூ தரனே

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல் மகிபா! குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே  [23]

'பரவாயில்லியே' என்பதுபோல் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, மன்னார் தொடரலானான்.


"அடியைக் குறியாது அறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ"

போன பாட்டுல சொன்ன சங்கதியேதான் இதுலியும்! ஆனா, கொஞ்சம் வேறவிதமா சொல்லிக் காமிக்கறாரு அருணகிரியாரு.


முருகன் தன்னோட பாதத்தை இவுருக்குக் காமிச்சுட்டாரு.
பார்த்திட்டாரே தவர, இன்னும் அதைச் சரியா, கெட்டியா புடிச்சுக்கற புத்தி இன்னும் வரலியாம் இவுருக்கு!
இப்பிடி புத்திகெட்டு சீரளி[ழி]யறேனே! இது ஒனக்கே சரியா க்கீதா?ன்னு மொதல்ல கெஞ்சிப்பாக்கறாரு., அளு[ழு]தும் பாக்கறாரு.
ஒண்ணும் நடக்கலை.
இவ்ளோ அருமையா தனக்கு கெடைச்ச திருவடி காணாமலியே பூடுமோன்னு இவுருக்கு ஒரே ஆத்தாமையா வருது!


கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீகூட படிச்சுக் காமிச்சியே, 'நீயே வரினும் காணவும் நாணுவனே'ன்னு ஒரு பாட்டு.......

[நின்னினைந் துருகுந்
தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங்
காணவும் நாணுவனே. (எண்ணப்பதிகம் - திருவாசகம்)]

......அதாம்ப்பா,  அவுரு எளுதினதுதான்!.........

அதுல வர்றமாரி, கண்ணெதுருல கெடைச்ச திருவடியை புடிச்சுவைச்சுக்காம பூட்டோமேன்னு குமுற்ராரு!


பாட்டு வரிய நல்லாக் கெவனி.
முடியக் கெடவோன்னு ஒரு கெஞ்சல்,
மொறையோ இதுன்னு ஒரு அளுகை
அப்பால, இன்னோரு தபா, மொறையோன்னு ஆத்தரமாக் கேக்கறாரு!


அதுக்காக, இன்னாத்த சொல்லி முருகனைக் குத்திக் காமிக்கறாருன்னு பாரு.!

"வடி விக்ரம வேல் மகிபா! குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே"

ஆத்தரம் கண்ணை மறைக்கறப்ப, இன்னான்னால்லாம் வாயுல வருதுன்னு பாரு.


மேலோட்டமாப் பாத்தேன்னா, இந்த வரி அப்பிடியே முருகனை உச்சாணிக்கொம்புல தூக்கிவைச்சுப் பாடறமாரி இருக்கும்.
ஆனாக்காண்டியும், அதுக்குள்ளாற, ஒரு லேசான கிண்டலும் கூடவே கீது!


'வடிவிக்ரம வேல் மகிபா'ன்றாரு.
வடிவேலுன்னா, கூர்ப்பான வேலுன்னு அர்த்தம்
விக்ரம வேல்னா வெற்றிவேல்னு அர்த்தம்
'மகி'ன்னா இந்த பூமி
மகிபன்னா பூமியை காப்பத்தற தலைவன்னு பொருளு.
கூர்ப்பான வெற்றிவேலைக் கையுல வைச்சுக்கினு இந்த ஒலகத்தையெல்லாம் காப்பாத்தற தலைவான்னு மொதல்ல சொல்றரு!


ஆச்சா?


இப்ப அடுத்தாப்புல, "குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே"ன்னு வருது!


கொ[கு]றக்கொலத்துல பொறந்த மின்னல்கொடிபோல இடுப்பு க்கீற வள்ளியைக் கட்டிப்புடிச்சுக்கறவனேன்னு சொல்லலாம்.
இல்லாட்டி, கொறக்கொலத்தைக் காப்பாத்தறதுக்கின்னு அங்க கொடி போல வந்து பொறந்த வள்ளின்னும் சொல்லலாம்.


இப்பிடி சொல்லிட்டு குணபூதரனேன்னு முடிக்கறாரு.
பூ'ன்னாலும் பூமிதான், இந்த ஒலகந்தான்!
தரன்னா, காப்பாத்தற தலைவன்னு அர்த்தம்.
இப்ப கங்கையைக் காப்பாத்தி தன்னோட தலையுலியே வைச்சுக்கினு க்கீற சிவனை, கங்காதரன்னு சொல்றோமில்ல, அதும்மாரி!
அப்போ, பூதரன்னா, பூமியைக் காப்பாத்தற தலைவனேன்னு ஆவுதுல்லியா?
பூதரம்னா மலைன்னும் ஒரு பொருளு க்கீது! அதுவும் இங்க வைச்சுக்கலாம்


அப்பிடிக் கேக்கறப்ப, குண பூதரனேன்னு சொல்றாரு.
நம்மளைப் பொருத்தவரைக்குந்தான் இந்த நல்ல கொணம், கெட்ட கொணம்னு பிரிச்சுப் பாக்கறதெல்லாம்!
சாமின்னு..... கந்தசாமின்னு.... வண்ட்டா, கொணம்னு ஒண்ணு இல்லாததுதான் அவரோட கொணமே~!


அதுனால, குணபூதரன்னா, ஒரு பெரிய மலைபோல அல்லாக் கொணங்களையும் வைச்சுக்கினுக்கீற ராசாவேன்னு சொல்லலாம்.


அதான், மகிபான்னு சொல்லிட்டாரே! இன்னொரு தடவையும் பூதரனேன்னு எதுக்கு சொல்லணும்? என நான் கேட்டேன்!


தன்னோட அறிவுக்கெட்டத்தனத்தால கெடைக்காமப் போயிறுமோன்ற அச்சத்துல,
இம்மாம் பெரிய ஒலகத்தியே காப்பாத்தற நீயே, .....பெரிய வெற்றிவேலைக் கையுல வைச்சுக்கினு க்கீற நீயே, .......வள்ளியம்மா காலுல வுளுந்து கெடக்கறேதானே, .....அப்ப, இந்த புத்திகெட்டவனுக்கும் கொஞ்சம் கருணை காட்டினா இன்னா கொறைஞ்சா பூடுவே'ன்னு செல்லமா சீண்டுறாரு!


இதான் இந்தப் பாட்டுக்குள்ளாற க்கீற டமாஷான சமாச்சாரம்' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்.

'கிட்டத்தட்ட இப்ப நீ சொல்லிண்டு வர்ற பாட்டுல்லாம் என்னமோ முருகனும், அருணகிரியாரும் நேரடியா பேசிக்கறமாதிரியே இருக்குடா மன்னார்!' எனச் சிலாகித்தார் சாம்பு சாஸ்திரிகள்.


'ஞான் பறய நெனைச்சு! ஆசானும் அதே பறஞ்சு!' என்றான் நாயர்!


ஒன்றும் பேசாமல், பாட்டின் நயத்திலேயே ஆழ்ந்தேன் நான்!
****************

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************
[ஆர்வமுடன் படித்து, ஆசி வழங்கும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

2 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Tuesday, August 23, 2011 3:47:00 AM  

பூதரன் =மலை என்று எடுத்துக்கொண்டாலும் அழகாகத்தான் இருக்கு;

குணபூதரன்=குணக்குன்று!குன்றிலமர்ந்து கருணைநதி பெருக்கும் குணக்குன்று!'பாட்டின் நயத்தில் ஆழ்ந்தேன்'...நானும்!

VSK Wednesday, August 24, 2011 10:51:00 AM  

பதிவு தவறாமல் வந்து, தரிசனம் தந்து, ஆசிவழங்கும் உங்களுக்கு என் வந்தனம் அம்மா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP