Friday, August 05, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 23

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 2322

ஆர்வமிகுதியால் நானே படித்தேன். அதற்கு மயிலை மன்னார் பதம் பிரித்துச் சொன்னான்!

காளைக் குமரே சனெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைக் குழல்வள் ளிபதம் பணியும்
வேளைச் சுரபூ பதிமே ருவையே

காளைக் குமரேசன் எனக்கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே.

இது ஒரு விசேசமான பாட்டு! ஆளாளுக்கு ஒருவிதமா அர்த்தம் சொல்லுவாங்க! அப்பிடிக் குள[ழ]ப்பியிருக்காரு!


ஒரு வகையுல பாத்தியானா, ஒரே ஒரு சமாச்சாரத்தை மட்டுமே நாலு வரியுல சொல்லியிருக்கறமாரித் தோணும்!


முருகன் வள்ளிக்காக உருகி, அதைப் பத்தி சிலாகிச்சு அருணகிரியாரு சொன்னதா இது படலாம்!


ஆனா, கொஞ்சம் சிந்திச்சுப் பாத்தீன்னா, இதுவரைக்கும் அப்பிடிச் சொல்லாதவரு இப்ப ஏன் இப்பிடி சொல்லணும்னும் தோணும்!


அந்த வகையுல நான் இப்ப சொல்லப் போறேன்!


எனக்கென்னவோ, எப்பவும் போலவே மொத ரெண்டு வரியுல ஒரு விசயம், அடுத்த ரெண்டு வரியுல அதுக்குப் பொருத்தமா ஒரு சமாச்சாரம்னு சொன்னதுமாரித்தான் படுது!


எப்பிடீன்னு சொல்றேன் கேளு!

"காளைக் குமரேசன் எனக்கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா"

இனிமே உசிரோட இருந்து இன்னா பிரயோசனம்னு கோபுரத்தும் மேலேர்ந்து குதிக்கறாரு இவுரு!

கீளே[ழே] விள[ழ]றப்ப இவுரு முருகனோட கையுல!

அவன் இன்னாமோ சின்னப் பையன்னே இவுருக்கு நெனைப்பு இதுவரைக்கும்!

ஆனா, இப்பத்தான் புரியுது..... அவன் ஒரு காளைன்னு!

காளை மாரி ஒரு கட்டான துடிப்பான வெடலைப்பையன்!


'சொல்லற! சும்மா இரு"ன்னு ஒரு உபதேசமும் குடுக்கறாரு.

இவுரா... 'டபால்'னு அவுரு காலுல விள[ழ]றாரு.


இப்பிடி ஒரு தவப்பயனை எனக்குக் குடுத்த அதிசயத்தை இன்னான்னு சொல்லன்னு மலைச்சுப்போயி நிக்கறாரு!


நான் முன்னாடியே பல எடத்துல சொல்லிக் காமிச்சிருக்கேனே.. இந்த 'ஆ'ன்னு வந்தா அது ஒரு ஆச்சரியக்குறின்னு... அதும்மாரித்தான் இதுல வர்ற 'ஆ'வும்.


என்னியப் பிடிச்சவன், எனக்கு தன்னோட காலைக் காமிச்சுக் கும்பிடுன்னு சொன்னவனைப் பாக்கறதுக்கு நான் இன்னா தவம் பண்ணியிருக்கணும்னு அருணகிரியாரு ஆச்சரியப்படறாரு!

சரி, இப்ப இதுக்கும், அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்?

"பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளைச் சுரபூபதி மேருவையே"

ஆரு இந்த ஆளு?
சுர பூபதி!
இந்த ஒலகத்துக்கே சக்கரவர்த்தி!

அதுவும் இன்னாமாரி ஆளு?
மேருவையே!
ஒலகத்துலியே பெரிய மலையான மேருமலைக்கு நிகரான ஆளு!

அதும் மட்டுமா?
அவுரு 'வேளு'!
'வேள்'னா ஒலகத்துலியே பெரிய ஆளுன்னு அர்த்தம்!

அவுரு இன்னா பண்ணினாரு?
'பாளைக் குழல் வள்ளி பாதம் பணியும்'


ஒரு பொம்பளை காலுல போயி விளு[ழு]ந்து கெடக்கறாராம்!

ஆரு அந்தப் பொண்ணு?
இவுருதான் எனக்கு வோணும்னு தவங்கெடந்த பொண்ணு
வள்ளி!

பாளைக்குழல் வள்ளி!
குழல்னா தலைமயிரு.
அது தென்னம்பாளைமாரி சுருள் சுருளா வளைஞ்சு கெடக்குதாம்!


வள்ளி ஆரு!
இச்சா சக்தி!
நம்மளோட ஆசையெல்லாம் இப்பிடித்தான் சுருள் சுருளா நெறைஞ்சு கெடக்குது!

அந்த இச்சையையெல்லாம் அடக்கறதுக்காக, அதோட காலைப் பிடிச்சுக் காப்பாத்தற கடவுள்தான் கந்தன்!

மலைபோல க்கீற பெரிய சக்கரவர்த்தி, தானே எறங்கிவந்து, ஆசையை அடக்கறதுக்காவ, அதோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்காறாருன்னு இந்த வரி சொல்லுது!


அதும்மாரி, கெட்ட ஆசையோடவே திரிஞ்ச என்னைக் காப்பாத்தி, ஒன்னோட காலையும் குடுத்த அதிசயத்தை இன்னான்னு நான் சொல்றதுன்னு இந்தப் பாட்டுல சொல்லிக் கதறுராரு அருணகிரியாரு.

'என்னத்தை நான் சொல்றது? இப்படி ஒரு அர்த்தத்தைச் சொன்னியேடா மன்னார்! ' என வியந்தார் சாஸ்திரிகள்!

நாயரிடமிருந்து 'ஓம் சரவணபவ' ஓங்கி ஒலித்தது!

கபாலி கோயில் மணியோசை தூரத்திலிருந்து கேட்டது!
*****************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************
[ஆர்வமுடன் படித்து, ஆசி வழங்கும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

9 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Friday, August 05, 2011 10:22:00 PM  

ரொம்ப எளிதா புரியறாப்போல இருக்கும் இந்த வரிகளில் எவ்ளோ ஆழமான பொருள்!?மீண்டும் மீண்டும் படிக்க வச்சிட்டே மன்னாரு!

VSK Friday, August 05, 2011 10:29:00 PM  

தவறாமல் வந்து அருளாசி வழங்கும் அன்னைக்கு என் ஆடி வெள்ளித் திருநாள் வணக்கம்.

Lalitha Mittal Saturday, August 06, 2011 12:13:00 AM  

ஆடி வெள்ளி வாழ்த்துக்கு நன்றி!நேரமிருந்தால் என் வலையில் அபிராமித்தாய் பற்றிய பாட்டைக் கேட்டு பின்னூட்டம் அளிக்க வருகைதருமாறு வேண்டுகிறேன்.

jeevagv Saturday, August 06, 2011 8:23:00 AM  

நன்றி எஸ்கே சார்!

//இவுருதான் எனக்கு வோணும்னு தவங்கெடந்த பொண்ணு
வள்ளி!//
வள்ளியைத் தவம் செய் தொண்டர் எனக் கொண்டால் - தன்னை அடியார்க்கு அடியார் எனவும் கொண்டதாகவும் சொல்லலாம் அல்லவா!

jeevagv Saturday, August 06, 2011 8:36:00 AM  

தானாய் இரங்கிவந்து பாதம் வருடும் கிருபாகரா

மானதன் கண்ணில் பிறந்த வள்ளிக்கருளும் மணவாளா
ஏனோ எனைக்காக்க வேளையுனக்கு வரவிலையோ

நானாய் உன்பாதம் பணிகிறேன் அருள்வாயே.

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, August 06, 2011 9:15:00 AM  

//வள்ளி ஆரு! இச்சா சக்தி!
நம்மளோட ஆசையெல்லாம் இப்பிடித்தான் சுருள் சுருளா நெறைஞ்சு கெடக்குது!
அந்த இச்சையையெல்லாம் அடக்கறதுக்காக//

அன்பே உருவான வள்ளியை எதுக்கு "அடக்க" வேண்டும்?

VSK Sunday, August 07, 2011 9:05:00 AM  

//வள்ளியைத் தவம் செய் தொண்டர் எனக் கொண்டால் - தன்னை அடியார்க்கு அடியார் எனவும் கொண்டதாகவும் சொல்லலாம் அல்லவா!//


ஆமாம் ஜீவா சார்! அவன் அடியார்க்கும் அடியான் என்பதைப் பலமுறை காட்டியிருக்கிறானே! முமு

VSK Sunday, August 07, 2011 9:08:00 AM  

//நானாய் உன்பாதம் பணிகிறேன் அருள்வாயே.//

கேளாமலே அருள்பவன், இப்படி நீங்கள் கேட்கையில் அருளாமல் இருப்பானா என்ன!!

VSK Sunday, August 07, 2011 9:17:00 AM  

//அன்பே உருவான வள்ளியை எதுக்கு "அடக்க" வேண்டும்?//

அன்பே உருவானவள்தான் வள்ளி என்பதில் ஐயமில்லை ரவி.
ஆனால், இங்கே இச்சா சக்தியை எங்கும் ஓடிவிடாமல் இறுகப் பற்றியிருக்கும் வேள் எனச் சொல்லியிருக்கிறார் என்பது மன்னார் சொல்லும் கருத்து!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP