Tuesday, May 11, 2010

"அ. அ. திருப்புகழ்" - 'வாசித்துக்....' - 38

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 'வாசித்துக்....' -- 38

எல்லாம் வல்ல வயலூர்க் குமரனை, அருகிலிருக்கும் திருசிராப்பள்ளியில் உறை தாயுமான சுவாமிக்கும் தலைப் பொருளாக வைத்து இந்த அழகிய திருப்புகழ் பின்னப்பட்டிருக்கிறது. பல உயர்ந்த விஷயங்கள் இந்தப் புகழிலே தெரிவிக்கிறார் அருணையார்! பலமுறை படித்துணர்ந்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய திருப்புகழ் இது! தேடித் தேடொணாப் பெரும்பொருள் எவருக்காகத் தானே இறங்கி வந்து ஆட்கொள்வான் என்பது இதனுள் இருக்கும் மறைபொருள்! ஓதுதற்கும் இனிமையான சந்த அமைப்பில் நம் மனம் கவரும் வகையில் இதனைப் படைத்திருக்கிறார் அருணகிரிநாதப் பெருமான்!

முருகனருள் முன்னிற்கும்!

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன ...... தந்ததான

......... பாடல் .........

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது

வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது

மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது

லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி

யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய

லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட

ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்

நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை

நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன ...... தந்ததான

......... பொருள் .........

[வழக்கம்போலவே, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]

"ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே"

[ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல்
ஆகிப் பொற்பாதமே பணி ...... கந்தவேளே ]


உளமார மனமாரத் தனைநினைந்து நெக்குருகி
உடல்வாட உளம்வாட மலைக்காட்டுத் தினைப்புனத்தில்

கவணாடக் கல்லெறிந்து புள்ளினங்கள் பறந்தோடக்
வண்டாடும் முகம்வாட வெய்யிலிலே தினம் வாடும்

வனநாட்டு வேட்டுவச்சி மலைக்குறத்தி வள்ளிக்கென
உடனாடும் துணைவிட்டுத் தனியாகக் கால்நடையாய்க்

கானகத்தே காதலியைத் தேடிவந்து அருள்செய்து
தனைநாடிக் கால்நொந்த தமிழ்மகளின் பொற்பாதம்

தனைக்காணப் பலவேடம் புனைந்திருந்து தொழுதாடி
வேடனாக வந்திருந்து வேங்கைமரம் தானாகி

விருத்தனாகிப் பசிதீரத் தினைமாவும் தேனுமுண்டு
நாவறண்டு மயிலாடும் கானகத்தே புனலாடத்

துணைநாடித் தமையனையும் கரியாக வரவேண்டி
வளையாடும் கைகளுக்கு வளையடுக்கும் செட்டியாகி

வஞ்சியவள் கைப்பிடித்து தம்வேடம் தனைக்காட்டிப்
கொஞ்சுமுகக் குறவள்ளியைக் கவர்ந்தங்கு செல்கையிலே

போரிட்டப் பெற்றவனைப் பொருதிநின்று முடிசாய்த்து
மீண்டுமவர் உயிர்ப்பிக்கக் குறவள்ளிக் கருள்செய்து

பொன்மயிலாள் பொற்பாதம் மையலுடன் தான்பணிந்து
தனைவேண்டிய அடியவளை ஆட்கொண்டக் கந்தவேளே!


"ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா"

[ஆலித்துச் சேல்கள் பாய் வயலூரத்தில் காளம் ஓடு அடர்
ஆரத்தைப் பூண் மயூர துரங்க வீரா]

மேடுயர்ந்த வயலினிலே மிகவாக வளங்கொழிக்க
ஓடுகின்ற நீரினிலே ஆரவாரம் மிகவெழுப்பி

ஆடுகின்ற மீன்கள்நிறை வயல்சூழும் வயலூரில்
சீறுகின்ற கொடுவிடத்தைக் கொண்டிருக்கும் நச்சரவம்

மாலையாகத் தானணியும் மயில்மீது தீரமுடன்
பரிதிமீது அமர்ந்திருக்கும் வீரனெனக் காட்சிதரும்

பெருமையுள்ள வயலூர்க் குமர வேளே!


"நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா"

[நாசிக்குள் ப்ராணவாயுவை ரேசித்து எட்டாத யோகிகள்
நாடிற்றுக் காண ஒணாது என நின்ற நாதா]


வலக்கால் பெருவிரலில் மூண்டெழும் இடைக்கலை

இடக்கால் பெருவிரலிம் தானெழும்பும் பிங்கலையும்

மேனோக்கிப் புறப்பட்டுக் கொப்பூழில் தாம் பிணைந்து

இடப்பக்கம் இடைகலையும் வலப்பக்கம் பிங்கலையுமாய்

முதுகு,பிடர்,தலைவழியே மூக்கினிலே முடிந்திருக்கும்


வலநாசித் துவாரத்தால் பிங்கலையும் வெளியேறும்

இடநாசித் துவாரத்தால் இடைகலையும் தான்செல்லும்

உள்ளிழுக்கும் சுவாசமோ பூரகம் எனப்படுமே

வெளியேறும் சுவாசமும் ரேசகம் எனப்படுமே

உள்நிறுத்தும் காற்றினையே கும்பகம் எனச்சொல்வர்


உட்கொள்ளும் சுவாசத்தை உச்சிக்குக் கொண்டுசென்று

ஸகஸ்ராரம் சேர்கையிலே அமுதமது உருவாகும்

இதுபுரியும் ஊட்டத்தால் உள்ளுணர்வு உனில்பிறக்கும்

ஆறுவகை ஆதாரமும் ஒருவருக்கு வசப்படுமே


முறையான குருமூலம் சரியாகக் கற்றவரே

இதன்சூக்குமம் அறிந்திடுவார் முறையான பலன்பெறுவார்!

ஆதார வாயுவினை இவ்வண்ணம் பயிலாத

யோகியரும் ஞானியரும் எத்துணைதான் விரும்பினாலும்

காணுதற்கு அரிதாகி அப்பாலுக் கப்பாலாகிக்

காணவொட்டாப் பரம்பொருளே! தனிப்பெரும் தலைவனே!


"நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே."

[நாகத்துச் சாகை போய் உயர் மேகத்தைச் சேர் சிராமலை
நாதர்க்குச் சாமியே சுரர் தம்பிரானே.]


ஓங்கி உயர்ந்திருக்கும் பெருமலையின் கிளைச்சிகரம்
நீண்டிருந்து மேலெழும்பி வானிருக்கும் மேகத்தைச்

சேர்ந்தடையும் வண்ணம்போல் சிறந்திருக்கும் சிராப்பள்ளி
மலையினிலே குடியிருந்து அடியவர்க்கு அருளிடவே

பெருவெள்ளம் தாண்டிவந்து தான்பெற்ற மகள்துடிக்கும்
நிலையினையே காணவொண்ணாத் தாயவளின் துயர்கேட்டுத்

தானேதாயாக அக்கரைசென்று மகப்பேறுத் தாதியாகச்
சென்றருளிய தாயுமான சுவாமிக்கு உயரியபொருளே!


"வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது"

[வாசித்துக் காண ஒணாதது பூசித்துக் கூட ஒணாதது
வாய்விட்டுப் பேச ஒணாதது]

எத்தனைநூல் கற்றாலென்ன எவையெவையோ படித்துமென்ன
அத்தனையும் பயன்தாரா அனுபவமே கைகொடுக்கும்

எத்தனைமலர் கொண்டிங்கே நானுன்னை அர்ச்சித்தும்
அத்தனையும் உன்தாளிணை சேர்ந்திடுமோ அறியேனே

எத்தனையோ பெருமைகளைச் சொல்லியுனைப் பாடினாலும்
அத்தனையும் நின்பெருமை சொல்லுதலும் கூடிடுமோ

"நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது"

[நெஞ்சினாலே மாசர்க்குத் தோண ஒணாதது நேசர்க்குப் பேர ஒணாதது
மாயைக்குச் சூழ ஒணாதது]


வெளிப்பார்வை வேடமிட்டு மனத்தினிலே மாசுவைத்து
ஒளித்திங்கு வாழ்வோர்க்கு பாலுள்ளேநெய்போல மறைந்திருக்கும்

தனைநினைந்து தினமுருகித் தணியாதக் காதலுடன்
மனமிருந்து நீங்காது என்றென்றும் வீற்றிருக்கும்

ஓயாது நிதமுழற்றி ஓராயிரம் உருக்காட்டும்
மாயையினால் வளைத்திடவே எந்நாளும் முடியாதது


"விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது"

[விந்துநாத ஓசைக்குத் தூரமானது மாகத்துக்கு ஈறு தான் அது
லோகத்துக்கு ஆதி ஆனது]

தத்துவங்கள் முப்பத்தாறில் முடிவான விந்துநாதம்
அத்தனையும் கடந்தங்கே தொலைவினிலே பொலிந்திருக்கும்

பூதவெளி கடந்திருக்கும் முடிவினிலே ஒளிர்ந்திருக்கும்
விண்வெளிக்கும் அப்பாலாய்த் தானிருந்து திகழ்ந்திருக்கும்

அண்டத்தில் நிலவுகின்ற எண்ணிறைந்த உலகங்கள்
அத்தனைக்கும் முதலாக விளங்குகின்ற மெய்ப்பொருளை


"கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ"

[கண்டு நாயேன் யோகத்தைச் சேருமாறு மெய்ஞ்ஞானத்தைப் போதி யாய்
இனி ஊனத்தைப் போடு இடாது மயங்கலாமோ]

நாயினேன் யானும் உள்ளுக்குள் கண்டுணர்ந்து
சிவயோகம் என்கின்ற பேருணர்வை அடையுமாறு

மெய்ஞ்ஞானப் பொருளதுவை உபதேசம் அருளிடுவீர்
பொய்யான மேனியிதை வெறுக்காமல் மயங்குவதோ?
[வாணாளை வீணாகக் கழிப்பதுவும் தகைமையோ?
மெய்யான தெய்வமே! இதுவுமுனக்கு முறைமையோ?]
***************

........ அருஞ்சொற்பொருள்..........

மாகம் = விண் முடிவு
ஊனம் = பொய்யான உடம்பு
போடு = வெறுத்து ஒதுக்குதல்
ஏனல் = தினைப்புனம்
மயல் = மையல் என்பதன் திரிபு
ஆலித்து = ஆரவாரம் செய்து
சேல் = மீன்
காளம் = விடம்
அடர் = நிறைந்த
ஆரம் = மாலை
ரேசித்து = வெளிவிடுத்து மீண்டும் பூரகம் செய்து சஹஸ்ராரப் பெருவெளியை எட்டுதல்
நாகம் = ஆகாயம்
சாகை = சிகரம், கிளை
சுரர் = தேவர்
*****************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***************

11 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, May 12, 2010 3:22:00 PM  

SK ஐயா, நீங்க கடேசியா திருப்புகழ் போட்டது பிப்ரவரி!
இனி மேல் மாசம் ஒரு திருப்புகழ் இங்கிட்டுப் போடுங்க! அப்ப தான் பதிவுக்கே வருவேன்! சொல்லிப் புட்டேன்! என்னவனும் ஏறுமயிலேறி அவ்வண்ணமே சொல்லிப்புட்டான் :)

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, May 12, 2010 3:32:00 PM  

//ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல்
ஆகிப் பொற்பாதமே பணி ...... கந்தவேளே//

:)
வள்ளியின் காலை என் முருகன் எத்தனை முறை பிடித்தாலும் சுகமே! ஏன் முருகன் வள்ளியின் காலைப் பிடிக்கிறான்? இதோ:

ஏனல் = தினை
இடவாகு பெயராத் தினைப் புனத்துக்கும் ஆகி வருது!

வள்ளி குறத்தி அல்லவா SK?
எதுக்கு வேடிச்சி என்று சொல்கிறார்? வள்ளி வேட்டையும் ஆடுவாளா?

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, May 12, 2010 5:47:00 PM  

//காளம் ஓடு அடர்
ஆரத்தைப் பூண் மயூர துரங்க வீரா//

பாம்பையே மாலையாக முருகன் பூண்டு உள்ளானா?
முருகனுக்கு நாகாபரணம் உண்டா SK? இல்லை மயிலார் பூண்டுள்ளாரா?

மயூர துரங்கம் = மயில் குதிரை!
அது என்னாங்க மயில் குதிரை? நர-சிம்மம் மாதிரி மிக்ஸா? :)

மயிலையே குதிரையாகப் பாவித்து அருணகரி இப்படி அடிக்கடிப் பாடுவாரு! குசை (கடிவாளம்) நெகிழா வெற்றி வேலோன்-ன்னு கந்தர் அலங்காரம்! சூர் கொன்ற ராவுத்தனே!

VSK Thursday, May 13, 2010 4:03:00 PM  

என்னை மிகவும் மன்னிச்சுக்கோங்க ரவி! தவறு என் மீதுதான். இனி மாதம் இரண்டு புகழ் நிச்சயம் வரும். முருகன் அருள் முன்னிற்கும்! நன்றி.

VSK Thursday, May 13, 2010 4:04:00 PM  

சுட்டிக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி ரவி!

வேடுவர் குலத்தில் பிறந்ததால்..... காட்டுவாசிகள் அனைவரும் வேடுவரே!.... அப்படி ஒரு பெயர் அவளுக்கு!

VSK Thursday, May 13, 2010 4:09:00 PM  

//சீறுகின்ற கொடுவிடத்தைக் கொண்டிருக்கும் நச்சரவம் மாலையாகத் தானணியும் மயில்மீது //

மயில் தான் நாகத்தை மாலையாகப் பூண்டிருக்கிறது என இப்புகழில் அருணையார் சொல்லியிருக்கிறார்!

//மயூர துரங்கம் = மயில் குதிரை!
அது என்னாங்க மயில் குதிரை? நர-சிம்மம் மாதிரி மிக்ஸா? :)//

ஓடும் குதிரையைப் 'பறக்கிறது' எனச் சொல்வார்கள் இல்லையா?
அதுபோல, பறக்கும் மயில் வேகமாகவும் செல்வதால்..... பொதுவாக மயில்கள் வேகமாகப் பறக்காது!..... மயூர துரங்கம் எனச் செல்லமாக அருணையார் அழைக்கிறார்!
செலுத்துபவன் அவனாச்சே!:))

VSK Thursday, May 13, 2010 4:20:00 PM  

நிறைய எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ப்ளாக்கில் போடத்தான் நேரம் கிடைக்கவில்லை! மன்னிக்கவும். :())))

குமரன் (Kumaran) Thursday, May 20, 2010 5:37:00 PM  

வள்ளி வேட்டுவிச்சியா குறத்தியா? இரண்டிற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா இல்லையா? வேறுபாடு இருப்பது போலும் தோன்றுகிறது; இல்லாதது போன்றும் தோன்றுகிறது.

கண்ணப்பர் திறத்தில் இந்த குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை; யாரும் அவரைக் குறவர் என்று சொல்லிக் கேட்டதில்லை; அவரை மிகத் தெளிவாக வேட்டுவர் என்று தான் சொல்கிறார்கள். வள்ளியம்மைத் திறத்தில் மட்டும் இக்குழப்பம் இருக்கிறதோ? இவன் வேடனாய் வந்ததால் குறத்தியான அவள் வேட்டுவிச்சி ஆனாளோ?

VSK Tuesday, June 08, 2010 9:09:00 PM  

//வள்ளி வேட்டுவிச்சியா குறத்தியா? இரண்டிற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா இல்லையா? வேறுபாடு இருப்பது போலும் தோன்றுகிறது; இல்லாதது போன்றும் தோன்றுகிறது.

கண்ணப்பர் திறத்தில் இந்த குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை; யாரும் அவரைக் குறவர் என்று சொல்லிக் கேட்டதில்லை; அவரை மிகத் தெளிவாக வேட்டுவர் என்று தான் சொல்கிறார்கள். வள்ளியம்மைத் திறத்தில் மட்டும் இக்குழப்பம் இருக்கிறதோ? இவன் வேடனாய் வந்ததால் குறத்தியான அவள் வேட்டுவிச்சி ஆனாளோ?//

காட்டுவாசிகள் வேடுவராகவும் இருப்பவராகவேக் கருத இடமிருக்கிறது. எனவே வள்ளியை வேட்டுவச்சி எனவும் சொல்லலாம் என்றே நினைக்கிறேன்!

நாடி நாடி நரசிங்கா! Wednesday, August 04, 2010 8:37:00 AM  

து = உணவுப் பொருள்,
பார் = அதை நல்கும் பூமி
அப்பு = நீர்
ஆடல் தீ = அசைகின்ற நெருப்பு
சொல் பா வெளி = சொற்களால் புகழப்படுகின்ற ஆகாய வெளி
துற்றாய = நெருக்கமாய் வைக்கப்பட்டுள்ள
பீறல் = கிழியல்::))

how to do this?
any book - please tell me

VSK Monday, August 16, 2010 2:55:00 PM  

//how to do this?
any book - please tell me//

தமிழ் அகராதி பார்த்தால் போதும் ஐயா. பெரும்பாலான சொற்களுக்கான பொருள் கிடைக்கும். அதைக் கொண்டு, பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வணக்கம்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP