Wednesday, February 24, 2010

"அ.அ.திருப்புகழ்" 37 -- "கள்ளக் குவாற் பை"

"அ.அ.திருப்புகழ்" 37 -- "கள்ளக் குவாற் பை"

திருப்புகழின் ஞான விளக்கங்களையெல்லாம் படிக்கிறபோது, மேலெழுந்தவாரியாக நான் எழுதிப் போகும் விளக்கம் எனக்குள் ஒரு அச்சத்தை தோற்றுவிக்கிறது! ஒவ்வொரு புகழுக்குள்ளும் ஓராயிரம் மறை பொருள் ஒளிந்திருக்கையில், நுனிப்புல் மேய்வது சரியோ என! 'உனக்குத் தெரிஞ்சதைத்தானே நீ செய்ய முடியும்!' என உள்ளேயிருந்து ஒரு குரல் வர, ராமர் பாலத்து அணில் போல என் பணியைத் தொடர்கிறேன். முருகனருள் முன்னிற்கும்!

அடுத்து என்ன எழுதலாம் எனப் புரட்டியபோது, முதலில் கணணில் பட்டது இந்த வள்ளிமலைத் திருப்புகழ்! சந்தம் இதுபோல எவரால் எழுத முடியும் என்பதுபோல அமைந்திருக்கிறது! பொருளோ அதற்கும் மேலே ஒரு படி போய், இவ்வுடம்பின் அநித்தியத்தைப் புட்டு வைக்கிறது. இதற்கு இடையில் ஒரு அருமையான உபதேசமும் இதில் ஒளிந்திருக்கிறது! எப்படி பக்தி செய்தால் முருக தரிசனம் கிட்டும் என அருணையார் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார்! முதலில், பாடலைப் பார்ப்போம்!

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த

தய்யத்த தாத்த ...... தனதான

......... பாடல் .........

கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச


அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே


வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

************************

-------- பொருள் --------
[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்திமாற்கும்
வெள் உ[ந்]த்திமாற்கும் மருகோனே

"தெள் அத்தி சேர்ப்ப"

செயலாக்கம் செய்வதற்கோர்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
கிரியா சக்தியின் வடிவமான
தெளிந்த நல்லறிவு மிக்க
தெய்வயானையின் தலைவரே!

"வெள் அத்திமாற்கும் மருகோனே"

வெள்ளையானையெனும் ஐராவதத்தைப்
பட்டத்துயானையாய்க் கொண்டிருக்கும்
தேவலோக அரசனான தேவேந்திரனின்
மகளை மணந்ததனால் மருமகனாகியும்,

"வெள் உ[ந்]த்திமாற்கும் மருகோனே"

வெண்ணிறம் பொங்கிப் பெருகும்
பாற்கடலிற் பள்ளிகொண்டதிருமாலின்
தங்கை மகனாய்ப் பிறந்ததனால்
அவருக்கு மருகனுமான முருகனே!


சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே

சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள்
அத்த மார்க்கம் வருவோனே

மனவிருப்பு மிகக்கொண்டு
தினைகாத்த குறமகளை
வண்டினங்கள் சூழ்ந்திருக்கும்
வனத்தினிலே நிறைந்திருக்கும்
புள்ளினத்தைக் கொல்கின்ற
வேடுவர்கள் வாழ்ந்திருக்கும்
நெடுங்காட்டில் நடந்துசென்று
தேடியலைந்து திரிந்திட்ட பெருமானே!

வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க
வல்லைக்குள் ஏற்றும் இளையோனே

"வள்ளிச் சன்மார்க்கம்"

மனங்கவர்ந்த மன்னவனை
வனவேடன் வடிவினனை
கிழவேடம் தாங்கிவந்து
தினையள்ளித் தின்றவனைத்
தீரா விக்கலினால் தொண்டைதிணறச்
சுனையள்ளிக் குடித்தவனை
ஆனையண்ணன் உதவிகேட்டு
அரவணைத்துக் கொண்டவனை
வானோர்க்கும் வல்லபிரானை
மனதினிலே எண்ணியெண்ணித்
தன்னை மறந்துத் தலைவன் தாளே
தலைப்பட்டு நின்றிருந்தக் குறமகளைத்
தானே தேடிவந்து ஆட்கொண்ட அருளாளன்
தன்னை இழந்து "அவனை" நினைந்தவரை
முன்னின்று ஆட்கொள்ளும் மார்க்கமே
வள்ளிச் சன்மார்க்கமெனும் மறைநெறியாம்!

"விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே"

குறவள்ளி கடைபிடித்த
சன்மார்க்க நெறிதன்னைச்
சிவனாரும் வேண்டிடவேத்
தந்தைக்கும் அந்நெறியைக்
கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
அவர் செவிக்குள் உபதேசம்
செய்திட்ட இளையவனே!

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

வள்ளிக் குழாத்து வள்ளி கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!

வள்ளிக்கொடி படர்ந்திருந்து
பக்கமெலாம் நிறைந்திருக்கும்
வள்ளிமலையெனும் மலைக்காட்டில்
தினைப்புனத்தைக் காக்கவந்து
தின்னவரும் புள்ளினத்தைக்
கவண்கல்லை வீசியெறிந்து
'சோசோ'வென ஆலோலம் பாடிய
வள்ளிக்குறத்திக்குக் கணவனாய்
வாய்த்திட்ட பெருமையுடையோனே!


கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

"கள்ளக் குவால் பை"

பொய்,சூது, வஞ்சனையெனும்
கள்ளத்தனங்களால் நிறைந்த பை

"தொள்ளைப் புலால் பை"

ஒன்பது ஓட்டைகளை வைத்த
மாமிசத்தால் ஆன பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை

"துள் இக்கனார் கயவு கோபம் கள் வைத்த தோல் பை"

இங்குமங்கும் அலைந்து திரிந்து
துள்ளுகின்ற கரும்புவில்லைக் கொண்ட
மன்மதனால் உண்டாகும் அயர்வு,
கோபமெனும் தீய கள்ளைத் தன்னுள்ளே
வைத்திருக்கும் தோலாலான பை

பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ......

"பொள் உற்ற கால் பை"

இங்குமங்குமாய் வெகுவேகமாய்
உள்ளுக்குள் அலைகின்ற
பத்து விதக் காற்றடைத்த பை

"கொள்ளை துரால் பை"

வீசுகின்ற காற்றினிலே
செத்தையென அலைகின்ற
சருகான இலைபோலக்
கூற்றுவன் கயிறுவீசிக்
கொள்ளை கொண்டுபோம் பை

பசுபாச

அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சா

"பசு பாச அள்ளல் பை"

பசுவென்னும் ஆன்மாவும்
பாசமென்னும் ஆணவமும்
சேர்ந்தடைத்த சேற்றுப் பை

"மால் பை"

ஆசை, காமமென்னும்
மயக்கங்கள் நிறைந்த பை

"ஞெள்ளல் பை"

பாவங்களும் குற்றங்களும்
நிறைந்திருக்கும் பை

"சீ பை"

சீழ் நிறைந்த பை

"வெள் இட்ட அசா"

தளர்ச்சி மிகுந்த பை

பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ

"பிசிதம் ஈரல் அள்ள சுவாக்கள் சள் இட்டு இழா
பல் கொள்ளப்படு ஆக்கை தவிர்வேனோ"

உயிரிழந்து போனபின்னே
சடலத்தில் மிகுந்திருக்கும்
இறைச்சி, ஈரல் எனும் உறுப்புகளை
அள்ளியுண்ணவரும் நாய்கள்
'சள்'ளென்று குலைத்தும், இழுத்தும்
பற்களால் கடித்துக் குதறும்
இவ்வுடம்பை ஒழிக்கமாட்டேனோ?
********************

அருஞ்சொற்பொருள்

குவால்= கூட்டம்
தொள்ளை= ஓட்டை
புலால்= மாமிசம்
இக்கன் = கரும்பு வில்லை உடைய மன்மதன்
கள்= மயக்கம் தரும் பானம்; கோபமும் மயக்கத்தைத் தரும்
பொள்= வேகத்தைக் குறிக்கும் சொல்
கால்= காற்று
துரால்= செத்தை, சருகு
மால்= மயக்கம்
ஞெள்ளல்= குற்றம்; சோர்வு; பள்ளம்
அசா= தளர்ச்சி
பிசிதம்= இறைச்சி
சுவா= நாய்
ஆக்கை= உடம்பு
தெள்= தெளிந்த அறிவு
அத்தி= யானை; தெய்வானை
உத்தி= உந்தி= கடல்
சிள்= சிள் வண்டு
கிரார்= கிராதகர்; வேடர்
புள்= பறவை
அத்தம்= காடு
மார்க்கம்= வழி
விள்= விளக்கிச் சொல்
ஐ= தந்தை
வல்லை= விரைவு, வேகம்
நோக்கம்= கண்ணிமைக்கும் நேரம்
************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

8 பின்னூட்டங்கள்:

அ. நம்பி Wednesday, February 24, 2010 7:09:00 AM  

//சந்தம் இதுபோல எவரால் எழுத முடியும் என்பதுபோல அமைந்திருக்கிறது! பொருளோ அதற்கும் மேலே ஒரு படி போய், இவ்வுடம்பின் அநித்தியத்தைப் புட்டு வைக்கிறது.//

எத்தனை முறை பயின்றாலும் பயிலுந்தொறும் விழிகளை விரியச்செய்து மலைப்பில் ஆழ்த்தும் தகைமையது அருணகிரிநாதரின் தமிழ்.

அவர்தம் அருந்தமிழுக்கு அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள். உங்களுக்கு என்றென்றும் திருவருள் துணைநிற்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, February 24, 2010 11:09:00 AM  

ரொம்ப நல்லா வந்திருக்கு SK ஐயா!

வள்ளிச் சன்மார்க்கம் என்பது தான் எத்தனை பொருத்தமான சொல்! எத்தனை பொருத்தமான பொருள்!

இதைப் படிச்சிட்டு,
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!
-ன்னு முனுமுனுத்துக்கிட்டே இருக்கேன்!

வள்ளிக் குழாத்து
வள்ளி கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!

கோவி.கண்ணன் Wednesday, February 24, 2010 9:39:00 PM  

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!

VSK Thursday, February 25, 2010 12:06:00 AM  

//எத்தனை முறை பயின்றாலும் பயிலுந்தொறும் விழிகளை விரியச்செய்து மலைப்பில் ஆழ்த்தும் தகைமையது அருணகிரிநாதரின் தமிழ்.

அவர்தம் அருந்தமிழுக்கு அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள். உங்களுக்கு என்றென்றும் திருவருள் துணைநிற்கும்.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள் நம்பி அவர்களே!
ஒவ்வொரு பாடலும் ஒரு புதுமையைக் காட்டி மலைக்க வைக்கிறது!
தங்களது மனமார்ந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி.

VSK Thursday, February 25, 2010 12:09:00 AM  

//ரொம்ப நல்லா வந்திருக்கு SK ஐயா!

வள்ளிச் சன்மார்க்கம் என்பது தான் எத்தனை பொருத்தமான சொல்! எத்தனை பொருத்தமான பொருள்!

இதைப் படிச்சிட்டு,
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!
-ன்னு முனுமுனுத்துக்கிட்டே இருக்கேன்!

வள்ளிக் குழாத்து
வள்ளி கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!//

ரவி வந்து சொல்லும்போது ஒரு இனம் புரியா மகிழ்வு வந்து பற்றிக் கொள்கிறது!

எல்லாம் இழந்த நலம் என்பதைக் காட்டும் சொல் இந்த வள்ளிச் சன்மார்க்கம்!

வள்ளிக்கு வாய்த்தவன் நமக்கும் வாய்க்க வேண்டுகிறேன்.

VSK Thursday, February 25, 2010 12:10:00 AM  

//அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!//

எனதருமைக் கோவியார் வந்து புகழும் அருணையார் புகழ் வாழ்க!
வடிவேலன் வருவான்!

மிக்க நன்றி!

Anonymous,  Friday, March 19, 2010 6:10:00 AM  

இவ்வளவு அழுக்குப் பைகளை அடுக்கிக் கொண்டு நாம் ஆடும் ஆட்டம் அப்பப்பாஆஆஆஆ.........
மாயையின் விளையாட்டே விளையாட்டு,

ஆழ்ந்த விளக்கத்திற்கு நன்றி ஐயா.

குமரன் (Kumaran) Thursday, June 24, 2010 9:59:00 AM  

மிக நல்ல பாடல். ஆனால் கொஞ்சம் கடினமான பாடல். பதம் பிரித்து விளக்கம் தராவிட்டால் புரியாது! அருணையார் பாடும் போது முருகனுக்கு எப்படி புரிந்ததோ? உங்களைப் போல் அருணையாரும் பதம் பிரித்து விளக்கியிருப்பார் என்று நினைக்கிறேன். :) (சும்மா.... கோவித்துக் கொள்ளாதீர்கள்).

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP