Saturday, May 16, 2009

"தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்!"

"தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மைகள்!"
[நடந்து முடிந்தபின், அப்பாவி பொதுஜனம் கருத்து!]


நடந்து முடிந்த தேர்தல் குறித்து பலர் பலவிதமாக எழுதினாலும்
பேசினாலும் இது பற்றிய ஒரு கருத்தை இங்கே பதிய விழைகிறேன்.

மின்னணு இயந்திரங்களில் மோசடி, பணப் பட்டுவாடா, அடியாள்
மிரட்டல், அதிகாரப் பயமுறுத்தல் என்ற எல்லாவற்றையும் வைத்து
ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியால் என்னவெல்லாம் செய்யமுடியும்
என்பதை இந்தத் தேர்தல் தெள்ளத்தெளிவாகக் காட்டியது என ஒரு
சாரார் சொல்லலாம்!

மக்கள் எங்களுக்காக மகத்தானதொரு தீர்ப்பை வழங்கி நல்லாட்சியைத்
தர வாய்ப்பளித்திருக்கிறார்கள் என வெற்றி பெற்றவர் மகிழலாம்!

இதில் எது உண்மை, பொய் என்பதை வரலாறு நமக்குச் சொல்லும்!

ஆனால், நடந்தது குறித்து, இன்னமும் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அப்பாவி பொதுஜனம் நினைப்பது???

மோசடி எதுவுமே நிகழவில்லை!

நம்புங்கள்!!

நேர்மையான தேர்தலே நிகழ்ந்தது!


மத்தியைப் பொறுத்தவரையில், ஒரு நிலையான ஆட்சி அமைய
வேண்டுமென ஒட்டு மொத்த இந்தியாவும் விரும்பியது!

கடந்த இரு பொதுத் தேர்தல்களில், மாநிலக் கட்சிகள் அந்தந்த
மாநிலங்களில் தங்களுக்குள்ள ஆதரவை மந்திரி பதவிகளாய் மாற்றி
அளவில்லாக் கொள்ளையில் ஈடுபட்ட அவலத்திலிருந்து இந்த நாட்டை
மீடக ஒவ்வொரு இந்தியனும் நினைத்தான்!

தேசீயக் கட்சிகள் மட்டுமே இந்த நாட்டுக்கு விமோசனம் என அவன்
உணர்ந்தான்!

காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா இரண்டுள் ஒன்றே அவன் தேர்வு!

மன்மோகன்சிங் மீது எந்தவிதமானா கெட்ட பெயரும் இல்லாதது அவனைக் கவர்ந்தது.
அவர் பின்னாலிருந்த இளைய தலைமுறை அவனுக்கு நம்பிக்கை அளித்தது.

இப்படி எதையும் அவனால் பிஜேபியிடம் அவனால் பார்க்க முடியாமல் போனது.

கூடவே, இங்கும் அங்குமாக தன் சுகத்துக்காக மட்டுமே கொள்கைகளை மாற்றி
ஆதாயம் தேடும் கட்சிகளை அறவே புறக்கணிக்க முடிவெடுத்தான்!

அதுதான் பாமக, மதிமுக, சமாஜ்வாடி, பிஎஸ்பி போன்ற பல மாநிலக்
கட்சிகளுக்கு அவன் அளித்த பாடம்!

திமுக? அதிமுக?

கடந்த சில பொதுத் தேர்தல்களைப் பார்த்தால், திமுக தான் உறவு கொண்ட
கட்சியுடன் மீண்டும் அடுத்த தேர்தலிலும் கூட்டு வைத்தது இதுவே முதல்
முறையெனச் சொல்லலாம்!

அதேபோன்ற ஒரு கூட்டணியைத் தெரிந்தெடுக்கத் தவறிய இன்னொரு பெரிய மாநிலக் கட்சி அதிமுக!

இன்னொரு பெரிய தேசீயக் கட்சியான பிஜேபியுடன் அது துணிச்சலாக
மக்களை சந்திருக்க வேண்டும்! செய்யவில்லை!

திமுக செய்த சரியான முடிவை அதிமுக செய்யத் தவறியது!

மாறாக மூன்றாவது அணி அமைத்து இருவரையுமே எதிர்ப்பதாக ஒரு
மாயையை உருவாக்கியது....... தான் எதிர்ப்பது அதிகாரத்தில் இருக்கும்
ஒரு மிகப் பெரிய சக்தியை எதிர்க்கிறோம் என்பதை உணராமலேயே!

அதன் பலனே இப்போது கிடைத்திருக்கும் முடிவுகள் தரும் பரிசு!

கிடைக்கும் பலனை விட, செல்லும் வழியே முக்கியம் எனச் சொல்லிய
மகாத்மா காந்தியின் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு,
கிடைக்கும் பலனைக் கருதி, செல்லும் வழியைப் பற்றிக் கவலைப்பட
வேண்டாம் என கட்சி நடத்தி கொண்டிருக்கும் காந்திகள் வாழும்
இன்றைய நிலையில்,


விஜய்காந்துடன் கூட்டணி வைத்து அதிகாரக் கூட்டணியை எதிர்த்திருக்க
வேண்டும்!

மூன்றாவது அணி என அலையாமல், ஆளும் அதிகார வர்கத்தை எதிர்க்கும்
பிரதான எதிர்க்கட்சியுடன் ஒரு கொள்கை உடன்பாடு கொண்டு மத்தியில்
எதிர்கொண்டிருக்க வேண்டும்!

இரண்டும் செய்யத் தவறிய அதிமுக தனது அரசியல் அறிவில் திமுகவிடம்
பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியதன் காரணம் இதுதான்!

பிஜேபியின் நிலை இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டது என்பதே உண்மை!

எப்படியோ, ஒரு நிலையான தேசியக் கட்சி மத்தியில் இப்போது ஆட்சியில்!

சென்ற முறை நிகழ்ந்ததில் பாடம் படித்த காங்கிரஸ் திறமையாகக் காய்களை நகர்த்தி, உதிரிக் கட்சிகளை ஓரம் கட்டியது பாராட்டத் தக்கது!

அதற்கு மக்கள் அளித்த பரிசும் வரவேற்கத்தக்கதே!

அனைத்துத் தமிழக எம்பிக்களும் ராஜிநாமா என்னும் நாடகத்தை இன்னும்
ஒருமுறை கருணாநிதியால் இந்தத் தடவை நிகழ்த்த முடியாது!

செய்தால் செய்துகொள்! எங்களுக்குக் கவலையில்லை! எனச் சொல்லும்
நிலையில்தான் காங்கிரஸை மக்கள் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள்!

அதனால்தான், வந்தவரைக்கும் லாபம் என ஒரு மூன்று மந்திரி பதவிகள்
கொடுத்தால் போதும்! எனக் கெஞ்ச கருணாநிதி டில்லிக்கு விரைகிறார் நாளை!

மாநிலக் கட்சிகள் அனைத்துக்கும் சாவுமணி அடித்த இந்தத் தேர்தலில்,
இந்திய மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காட்டிய துணிவு
போற்றத்தக்கது!

இப்போதாவது, இந்த மாநில உதிரிக் கட்சிகள் திருந்தட்டும்!

அவரவர் மாநிலங்களில் என்ன வேண்டுமானாலும் செய்து தொலையட்டும்!

இந்தியா என வரும் போது மட்டுமாவது, ஏதாவதொரு தேசீயக் கட்சியுடன்
சேர்ந்து பயணிக்கவில்லையெனில் இதுவே பரிசாகக் கிடைக்கும் என்பதை
மக்கள் இந்தத் தேர்தலில் காட்டியது போலவே அடுத்து வரும் தேர்தல்களிலும் காட்ட வேண்டும்..... இந்தியாவை ஒளிரச் செய்ய வேண்டும் என வாழ்த்தி வேண்டுகிறேன்!


[குறிப்பு: இந்தத் தேர்தலில் எந்தவொரு முறைகேடும் நிகழவில்லையென நினைக்கும் ஒரு அப்பாவி இந்தியனின் எண்ணம் இது எனக் கொண்டு மட்டும் இந்தப் பதிவைப் படியுங்கள்!!!! ஈழப் பிரச்சினை இந்த நேரத்தில் அடிபட்டுப் போனது ஒரு சோகம்! தமிழகம் தவிர வேறெங்கும் இது ஒரு முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கப் படாமல் போனதும், தமிழகத்திலேயே இது ஒரு குழப்பமான நிலைபாட்டைக் கொண்டதாக அமைந்ததும் மிகவும் வருந்தத் தக்கது. மாற்றுக் கருத்து கொண்டவர்கள் எண்ணத்தை நான் மதிக்கிறேன்!:)]

**************************

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP