Tuesday, May 19, 2009

"சாதனையாளர் தாமு" [உண்மைக் கதை] - 2

"சாதனையாளர் தாமு" [உண்மைக் கதை] - 2


[முந்தைய பதிவு]


'நான் இப்ப வேலைக்குப் போகப் போறதில்ல. மேல படிக்கப் போறேன். மூச்சுக்கு மூச்சு ஆத்தா இதே நெனைப்பாத்தான் இருந்திச்சு. அதை நிறைவேத்தப் போறேன்.... சென்னைக்குப் போயி! ஆமா! இங்க இருந்தா எனக்கு படிப்பு ஓடாது. சென்னைக்குப் போகப் போறேன். உன்னால முடிஞ்சதை அனுப்பு போதும். மத்ததை நான் பார்த்துக்கறேன்'

தீர்மானமாகச் சொல்லிவிட்டு கிளம்பிய தாமுவை வியப்புடனும், கோபமாகவும் பார்த்த அப்பா, மறுபேச்சுப் பேசாமல் எழுந்து சென்றார்.

சென்னை நியூ காலேஜில் இடம் கிடைத்தது.

இளங்கலை தாவரவியல் .. பிஎஸ்ஸி
பாட்டனி!

பணத்தட்டுப்பாடு, ராகிங் பற்றிய பயம் எல்லாமாகச் சேர்த்து தாமுவை தரமணிக்கு அருகில் ஒரு சேரியில் கொண்டு தள்ளியது!
ஒருசில நண்பர்களுடன் அங்கு வாடகைக்கு ஒரு அறை எடுத்துக் கொண்டு குடியேறினார் தாமு.
பணப்புழக்கம் அதிகம் இல்லாத அதே காரணத்தினால், கல்லூரி முடிந்ததும் அறைக்கு வந்து தங்கிவிடும் வழக்கம்.

அப்போதுதான் கவனித்தார் அங்கு ஒரு உதவி மையம் இயங்குவதையும், அதில் சிறு குழந்தைகளுக்குப் படிக்கச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் வந்து போவதையும்.


பொழுதைப் போக்கணுமே என்னும் ஆர்வத்தில் அதன் பக்கம் கவ
னம் இவருக்குத் திரும்பியது இவரது அதிர்ஷ்டமா, இல்லை அந்தக் குழந்தைகளுக்கா என்னும் முடிவை உங்களிட்மே விட்டுவிடுகிறேன்!

தானும் உதவியாக இருப்பதாகச் சொல்லி அதில் இணைந்தவர் ஓராண்டுக்குள்ளேயே அந்தப் பகுதியில் மேலும் நான்கு மையங்களைத் தொடங்க துணையாய் இருந்தார்.

இப்படித் தொடங்கியதுதான் இவருக்கும் 'எய்ட் இந்தியா' என்னும் அமைப்புக்குமான உறவு!

'எய்ட் இந்தியா'வைத் தொடங்க மூல காரணமாக இருந்த திரு. பாலாஜி என்பவரின் முறையான வழிகாட்டலின் உதவியுடன், இன்று தமிழகமெங்கும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட 'மக்கள் பள்ளி இயக்க' மையங்களின் ஒருங்கிணைப்பாளராக திறம்பட சேவை செய்து வருகிறார்.

முதலில் பள்ளிகளுக்குச் சென்று, ஆசிரியர்களிடம் பேசி, ஒப்புதல் வாங்கி, அவர்கள் முன்னே தான் எப்படி பாடம் நடத்த முடியும் என அஞ்சி, உபரி வேலைகளைச் செய்துவந்த இவரை 'நீ இப்படியே இருந்தா, அப்புறம் ஜெராக்ஸ் காப்பி பண்ற ஆளாத்தான் போவே! நீ சாதிக்கணும்' எனச் சொல்லி ஊக்கப்படுத்திய பாலாஜியை எப்போதும் நன்றியுடன் நினைவு கூறுகிறார்!

இப்போது,...எண்ணூறுக்கும் மேற்பட்ட மைய ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மையம் இல்லாத கிராமங்களுக்குச் சென்று அங்கிருக்கும் ஊர்ப் பெரியவர்களைக் கூட்டி, அவர்களிடம் இதன் தேவையை எடுத்துச் சொல்லி, அவர்கள் உதவியுடன் தொடங்குவது என நாள் முழுதும் வேலை இவருக்கு!

வெம்பாக்கம் என்றொரு கிராமம். திருவண்ணாமலை அருகே.
மாலை நேரம்.

ஊர்ப்பெரியவர்களும் இளைஞர்களும் கூடியிருக்கிறார்கள்.

இவர் சொல்வதை ஒருவித அலட்சியத்துடன் விருப்பமில்லாதவர்போல் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர் அயரவில்லை.

சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்துவிட்டு, அங்கிருக்கும் குழந்தைகளின் பெற்றோரைப் பார்த்துக் கேட்கிறார்..'என்னம்மா, இது உங்க பசங்களுக்கு அவசியம்னு நினைக்கறீங்களா?'
'ஆம்' என்பது போலத் தலையசைக்கிறார்கள்.. பெரியவர்களை ஒருவித அச்சத்துடன் பார்த்துக் கொண்டே!

'அப்புறம் என்ன? ஆரம்பிச்சிரலாந்தானே?' என உற்சாகமாகக் கேட்கிறார்.

எவரும் முன்வரவில்லை.
கூட்டம் லேசாகக் கலையத் துவங்குகிறது.
சௌபாக்கியம் என்னும் ஒரு இளம்பெண் தன் முகத்தை நிமிர்த்தியபடி, 'நான் உதவி செய்ய விரும்பறேங்க' என்கிறார்!

எழுந்த கூட்டம் அப்படியே திகைத்து அமர்கிறது.

ஒரு சின்னப்பொண்ணுக்கு இருக்கற துணிச்சல் நம்மகிட்ட இல்லாமப்போச்சே என்னும் வெட்கம் உந்த ஒருவர் பின் ஒருவராக பலர் முன்வருகிறார்கள்.

'இப்படித்தாங்க அநேகமா எல்லா ஊரிலும்! நாம நல்லதுன்னு நினைக்கறதை செய்யாமப் போறதில்லைன்னு ஒரு வைராக்கியம்' எனச் சொல்லிச் சிரிக்கிறார் தாமு, எம்.ஏ எம்.ஃபில்!

ஆம்! பத்தாம் வகுப்பில் கணக்குத் தாளில் ஐந்து முறை தோற்ற அதே தாமுதான்!

எம்.ஏ. படிப்பை முடித்துவிட்டு, தொடர்ந்து எம்.ஃபில்[anthropology] தேறி, இன்று பாலர்களுக்கான பல புத்தகங்கள், கையேடுகள், பயிற்சி ஏடுகள் எனப் பல நூல்கள் எழுதியிருக்கிறார் இந்த இளைஞர்!

'இதுக்கெல்லாம் காரணம் பாலாஜி அண்ணாவோட வழிகாட்டலும், தூண்டலும்தான்' என அடக்கத்துடன் சொல்லிவிட்டு, 'இந்த ஊருல குழந்தைகளுக்கு ஏதாவது வகுப்பெல்லாம் எடுக்கறீங்களா? நான் வந்து ஒரு அரை மணி நேரம் பேசறேனே' என ஆர்வத்துடன் கேட்கிறார்.

'படிப்பும் இனிக்கும்' 'பாலர் பள்ளிக் கல்வி' எனப் பல திட்டங்களை உருவப்படுத்தி, செயல் வடிவம் ஆக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு.
2006-ம் ஆண்டுக்கான சிறந்த சாதனையாளர் விருது 'எய்ட் இந்தியா' அமைப்பினால் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது!


சமீபத்தில் திருமணம் ஆன இவர் மனைவியும் இதில் ஈடுபட்டு சேவை செய்துவருவதை ஒரு் பெருமையாகக் கருதும் இந்தச் சாதனையாளர் சொல்வது.....
'ஒரு கால கட்டத்தில் எங்க குடும்ப நிலை இருந்த இருப்புல, வீட்டுல சமைக்க ஆளில்லையேன்னு என்னோட பதினெட்டு வயசுத் தம்பிக்குக் கல்யாணம் பண்ணிவைச்சு ஒரு பெண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்தாங்க! எங்க அம்மா சொன்னது போல நான் படிச்சு வந்ததால இப்ப ஓரளவு நல்ல நிலைமையில் இருக்கிறோம். எல்லாப் பிள்ளைகளும் படிக்கணுங்க' என்னும் இவரது கனவு நனவாக நாமும் வாழ்த்தி இவருக்கு உறுதுணையாக இருப்போம்.

மேல் விவரங்களை யூரேகா குழந்தை என்னும் தளத்தில் காண

லாம்!

வாருங்கள்! வருங்கால இந்தியாவை வளப்படுத்துவோம்!
******************************

[இந்த வார இறுதியில் எங்களூரில் நடக்கவிருக்கும் எய்ட்-இந்தியா நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் திரு. தாமோதரனை நேற்று சந்தித்து உரையாடியதில் கிடைத்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கட்டுரை இது! இவருடன் வந்திருக்கும் திரு. தர்மிந்தர் சிங், திரு. பாலாஜி இவர்களைக் குறித்த கட்டுரையையும் கூடிய விரைவில் எழுத முயல்கிறேன்!]

1 பின்னூட்டங்கள்:

VSK Wednesday, May 20, 2009 12:19:00 PM  

இதில் கொடுத்திருக்கும் சுட்டிகளையும் பார்வையிட்டு, உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
பண உதவி இல்லை. சரீர உழைப்பும், அறிவுழைப்பும் கொடுத்தாலே போதும்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP